மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 4

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

குரூரப் புன்னகை!  

ஊதலும் கூதலுமாய்... வைகையில் தோய்ந்து தண்ணென எழுந்து வீசிய காற்று, கோச்செங்கணைப் பெரிதும் அலைக்கழித்தது. பாசறைப் பாறையில் இருந்து விழுந்ததாலும், பாண்டிய வீரர்களோடு கைகலத்ததாலும் உண்டான காயங்கள் யாவும் அந்தக் குளிர்காற்றின் தீண்டலில், தீயால் சுட்டதுபோல் திகுதிகுவென எரிந்து, அவன் மேனியை வருத்தின.

பாண்டிய வீரர்களை நசுக்கிவிடும் முடிவுடன் கோச்செங்கண்பெரும்பாறை ஒன்றை உருட்டிவிட, சற்றும் எதிர்பாராதவிதமாக யானையின் மீது அங்கு தோன்றிய கூன்பாண்டியர், தமது யானையின் உதவியால் மற்றொரு பாறையை உருட்டி, முதல் பாறையைத் திசை மாற்றியதுடன் தமது வீரர்களையும் பத்திரமாகக் காத்தருளிவிட்டார். அடுத்து நடந்ததைக் கேட்கவா வேண்டும்! சில கணப்பொழுதுகளில் கோச்செங்கணைச் சூழ்ந்துவிட்டார்கள் பாண்டிய வீரர்கள். இவனும் தன்னால் இயன்ற அளவு போராடிப் பார்த்தான். எனினும், பகை வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், வெகு சீக்கிரமே அவர்களிடம் சிறைப்பட நேர்ந்துவிட்டது.

சிவமகுடம் - 4

அந்த நள்ளிரவிலேயே பாண்டி யரிடம் இருந்து உத்தரவும் கிடைத்து விட்டது... கோச்செங்கணை மதுரைக் குக் கொண்டு செல்லும்படியும், அவன் மீதான நீதி விசாரணையும் தீர்ப்பு அருளலும் மறுநாள் பகல் பொழுதில் நடைபெறும் என்றும்!

வேறொருவராக இருந்திருந்தால் குதிரையில் கட்டி இழுத்துச் சென்றிருப்பார்கள். கள்ளிலும் முள்ளிலும் உடம்பு கிழிபட்டும் ரணப்பட்டும், போகும் வழியிலேயே பிராணனை விடவேண்டியதுதான். கோச்செங்கணைப் பொறுத்தவரை, ஒற்றறிய வந்த எதிரியே ஆனாலும் அவனொரு படைத்தலைவன் என்பதால், ஓரளவு மரியாதையுடனேயே நடத்தப்

பட்டான். குதிரையில் அமர்த்தியே அழைத்துச் சென்றார்கள். அவனது கரங்கள் பின்புறமாகச் சேர்த்துப் பிணைக்கப்பட்டிருந்தன. அவன் அமர்ந்திருந்த குதிரையின் கயிற்றுப்பிடி முன்னால் மற்றொரு குதிரையில் அமர்ந்து வழிநடத்திச் சென்றுகொண்டிருந்த தலைமைக் காவலனின் வசம் இருந்தது. கோச்செங்கணின் குதிரைக்குப் பின்னாலும் இரண்டு குதிரைகள், ஆயுதபாணிகளான இரண்டு வீரர்களைச் சுமந்தபடி தொடர்ந்து சென்றன.

அடர்ந்த வனப்பகுதி ஆதலால், மெள்ளவே நடைபோட்டன குதிரைகள். இதே வேகத்தில் சென்றாலும், இன்னும் இரண்டொரு நாழிகைப் பொழுதில் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருந்தது வைகைக்கரை. எவருமே எதிர்பாராதவிதமாக அப்போது நிகழ்ந்தது அந்த அதிசயம்!

கோச்செங்கணின் குதிரைக்குப் பின்னால், இணையாகத் தொடர்ந்து வந்த குதிரைகள் இரண்டும் மெள்ள விலகி, சிறிது வேகமெடுத்து முன்னால் வந்தன. அவற்றில் ஒன்று, கோச்செங் கணுக்கு வலப்புறமாக அவனையும் தாண்டி, தலைமைக் காவலனின் குதிரையை நெருங்கியது. மற்றொன்று, இடப்புறமாக இவனது குதிரையை நெருங்கியது.

தலைமைக் காவலனை நெருங்கிய குதிரை வீரன் சட்டென்று தனது குதிரையில் இருந்து துள்ளியெழுந்து காவலன் மேல் பாய்ந்தான். இருவரும் தரையில் விழுந்து புரண்டார்கள். சுதாரித்து எழுந்தபோது, தலைமைக் காவலன் குதிரை வீரனின் இரும்புப் பிடியில் இருந்தான். அவனுடைய கழுத்தில் தனது குறுவாள் அழுந்தும்படி இறுக்கிப் பிடித்திருந்தான் குதிரை வீரன். அதேநேரம், கோச்செங்கணை நெருங்கிய வீரன், தன் கண்களால் சமிக்ஞை செய்தபடி, சடுதியில் அவனது கட்டுக்களை அறுத்தெறிந்தான்.

அந்த வீரர்கள் இருவரும் தன்னைச் சேர்ந்த வர்கள் என்பதைச் சடுதியில் புரிந்து கொண்ட கோச்செங்கண், பிணைப்புகள் விடுபட்டதும், சட்டென்று தான் அமர்ந்திருந்த புரவியைத் தட்டி விட, புயலென வேகமெடுத்துப் பறந்தது அந்தக் குதிரை. அக்கணமே தலைமைக் காவலனை மீண் டும் தரையில் தள்ளிவிட்டுவிட்டு, அந்த வீரனும் தனது புரவியில் தாவி ஏறிக்கொள்ள, இருவரின் குதிரைகளும் கோச்செங்கணைப் பின்தொடர்ந்து பாய்ந்து சென்றன.

தலைமைக் காவலன் ஒருவாறு சுதாரித்து எழுந்து நின்றான். அவர்கள் மூவரும் வெகு தூரத்தில் புள்ளிகளாகத் தெரிந்து மறையும் வரையில், அவர்கள் போன திசையையே வெறித் துப் பார்த்தபடி வெகுநேரம் நின்றிருந்தான்.

சிவமகுடம் - 4

இப்படியான ஒரு தருணத்தில்... மிக முக்கிய மானதொரு கைதியைத் தப்பிக்க விட்டுவிட்டதால் இயல்பாகவே உண்டாகும் பதற்றம், பெரும் போர்களில் எல்லாம் எதிரிகளை நிலைகுலையச் செய்த தனது வீரதீர பராக்கிரமங்கள் எல்லாம் என்னதான் ஆயின என்கிற கவலை, இந்த விஷயம் மட்டும் கூன்பாண்டியரின் காதுகளுக்குப் போனால், தன் கதி என்னவாகுமோ என்கிற கலக்கம்... இதையெல்லாம் அந்தத் தலைமைக் காவலனிடம் நாம் எதிர்பார்ப்பது இயற்கைதான்!

ஆனால், இதற்கெல்லாம் நேர்மாறாக, அவனு டைய தடித்துச் சிவந்த இதழ்களில் ஒரு  குரூரப் புன்னகையே எழுந்தது! இந்தப் புன்னகைதான்... அவன் ரிஷபகிரியின் அடிவாரத்தில் அமைந்த பாசறைக்குத் திரும்பி, கூன்பாண்டியரிடம் நடந்ததை விவரித்தபோது, அவரிடம் அந்தப் பிராந்தியத்தையே அதிரச் செய்த பெரும் சிரிப் பாகப் பரிணமித்தது.

எல்லாம் அவர்களின் திட்டப்படியே நடந்தத னால் எழுந்த சிரிப்பு அது!

சோழர்களைச் சேர்ந்த ஒற்றர் குழு ஒன்று, பாண் டிய தேசத்துக்குள் புகுந்திருப்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தார் கூன்பாண்டியர். அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. பரந்துபட்ட பாண்டிய தேசத்தில் ஓர் அணு அசைந்தாலும் பாண்டியருக்குத் தெரியாமல் போகாது. அப்படி ஊடுருவிய எதிரிகள், நிச்சயம் தனது பாசறை வரையிலும் வருவார்கள்; போர்த் திட்டங்களை, வியூக ரகசியங்களை அறிய முற்படுவார்கள் என்பதையும் அவர் யூகித்திருந்தார்.

அவர்கள் வரவேண்டும், தனது திட்டத்தைப் பரிபூரணமாக அறிந்துகொள்ளவேண்டும், எந்தத் தடங்கலும் இன்றி அதை அப்படியே  மணிமுடிச் சோழரிடம் எடுத்துச் செல்லவும் வேண்டும் என்றே எதிர்பார்த்திருந்தார் கூன்பாண்டியர். அதற்காகவே, பாசறைக் குகையின் பின்புறத்தில் காவலை மட்டுப்படுத்தவும் செய்திருந்தார். அவர் எதிர்பார்த்தபடியே கோச்செங்கண் வந்தான்; ரகசியத்தை அறிந்தான்; 'தப்பித்தும்’ சென்று விட்டான்.

அவனுக்கு முன்னதாகவே பாண்டியப் படை களில் கலந்துவிட்டிருந்தார்கள் அவனுடைய நண்பர்கள். அவர்களையும் கூன்பாண்டியர் அடையாளம் கண்டுகொள்ளவே செய்திருந்தார். ஆனால், எதுவுமே தெரியாதவர்போல், அவர் களையே கோச்செங்கணுக்குக் காவலர்களாகச் செல்லத் தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்்தார். அதே நேரம், அவர்களுக்குச் சற்றும் சந்தேகம் எழாதபடி, தங்களில் ஒருவனைத் தலைமைக் காவலனாகவும் நியமித்திருந்தார்.

பாவம், அந்த அப்பாவிகள்..! இத்தனையும் கூன்பாண்டியரின் சூழ்ச்சி என்பதை அறியாமல், கடவுள் தந்த வாய்ப்பாகவே கருதி, பெரும் ரகசியத்தைச் சுமந்து செல்வதாகப் பெருமித எண்ணம் கொண்டவர்களாய், சோழ மண்டலத் துக்குப் பேராபத்தையே சுமந்து சென்றார்கள்!

சோழர் குலக்கொழுந்து!

உறையூர் கோட்டைக்குள், அதன் மதிலை ஒட்டி அமைந்திருந்த புறமாளிகையில், மணிமுடிச் சோழரின் அந்தரங்க அறையானது பெரும் நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தது.

அந்த அறையில் எடுக்கப்பட்ட முடிவுகள் யாவும் வெற்றியையே அளித்திருந்தபடியால், மிக முக்கியமான தீர்க்காலோசனைகள் நடத்துவ தென்றால், மன்னர்பிரானும் அவருடைய மந்திரிப் பிரதானிகளும் அங்குதான் ஒன்றுகூடுவது வழக்கம். இந்த முறையும் அங்கே சபை கூடியிருந்தது.  

ஒரு தீர்க்கமான முடிவுக்கு வராதபடி பெரும் குழப்பங்களால் சூழப்பட்டு ஊசலாடிக் கொண் டிருந்த மணிமுடிச் சோழரின் சிந்தனைப் புலன்களைப் போன்றே, அவருக்கு இடப்புறம் அமைந்திருந்த சாளரத்தின் வழியே உட்புகுந்த காற்றினால் சஞ்சலம் கொண்டு அசைந்தாடிக் கொண்டிருந்த தீபச்சுடர்களும் தங்களின் ஜோதியைத் தொடர்ந்து ஒளிரச் செய்யாமல், விட்டுவிட்டுப் பிரகாசித்தன. அதனால் சொற்ப வெளிச்சமே நிரம்பியிருந்த அந்த அறைக்குள் மங்கலாக ஆறு உருவங்கள் தென்பட்டன.

சிவமகுடம் - 4

ஆசனத்தில் பெருத்த சிந்தனையுடன் அமர்ந்திருந்தார் மணிமுடிச் சோழர். அவருக்கு எதிரே வேலைப்பாடுகள் மிகுந்த மரப்பீடம். அந்தப் பீடத்தின் மற்ற மூன்று புறங்களிலும் முறையே பிரதான மந்திரியும், மாதண்ட நாயகர்களும் நின்றிருந் தார்கள். ஆக, நான்கு பேரை அடையாளம் தெரிகிறது. மற்ற இரண்டு உருவங்கள்?

அவை உயிரற்ற உருவங்கள்! என்றாலும், சோழச் சிற்பிகள் தங்கள் கலைத்திறன் முழுவதையும் வெளிப்படுத்தும் விதமாக, பெரும் தோற்றப் பொலிவுடன் உருவாக்கியிருந்த அந்த வெண்கலப் பாவைகளின் உயிரோட்டமான கண்களும், அவற்றின் அவயவங்களில் மிகத் தத்ரூபமாகக் காட்டப்பட்டிருந்த நாடி வரிகளும், பார்ப்போர் அவற்றை உயிருள்ள மங்கையர் என்றே எண்ணும்படி செய்திருந்தன. வெவ்வேறு தூண்களோடு பொருந்தி நின்ற அந்தப் பாவைகளின் ஒரு கரம் அறையின் விதானத்தைத் தாங்குவது போன்று அமைந்திருக்க, மற்றொரு கரம் அகல் விளக்கை ஏந்தியிருந்தது. அந்தப் பாவை விளக்குகளில் ஏற்றப்பட்டிருந்த தீபங்கள் விட்டுவிட்டு வீசிய ஒளியில், மரப் பீடத்தில் விரிக்கப்பட்டிருந்த மஞ்சள் பட்டு விரிப்பு தெளிவாகத் தெரிந்தது. அந்த விரிப்பில் மணிமுடிச் சோழர் வகுத்திருந்த அதிஅற்புதமான போர்த் திட்டம் பரந்து கிடந்தது!

பட்டு விரிப்பின் ஒரு புறத்தில் பெரிய புள்ளி ஒன்று; அதைச் சுற்றிலும் ஒரு வட்டம். அதன் தென்கிழக்கில் சிறிய புள்ளி ஒன்று தெரிந்தது. அந்தச் சிறிய புள்ளியைப் பெரிய புள்ளி இருக்கும் திசைநோக்கி வளைத்தபடி அர்த்த சந்திர வடிவம். அதேபோல், புள்ளிகள் இரண்டுக்கும் இடையிலான பரப்பில் மேலும் இரண்டு இடங்களில் அர்த்த சந்திர வடிவங்கள்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், கிரகணத்துக்கு ஆட்பட்ட சந்திரன், படிப்படியாக விடுபட்டுப் பின்னர் பூரண சந்திரனாக ஒளிரும் காட்சியாகத் தோன்றியது.

பெளர்ணமியாய் ஒளிரும் பெரிய வட்டத்துக்குள் இருக்கும் புள்ளி உறையூர் என்பதும், அர்த்த சந்திரனால் வளைத்துக் காக்கப்படும் சிறு புள்ளி புலியூர் என்பதும், பெரிய வட்டமும் அர்த்த சந்திர வடிவங்களும் மணிமுடிச் சோழர் அமைக்கப்போகும் வியூகங்கள் என்பதும் தெள்ளத் தெளிவாகப் புரிந்தன, போர் அனுபவம் மிக்க அந்த மாதண்ட நாயகர்களுக்கு.

தற்காப்பு வியூகம்தான் என்றாலும், இதைக்காட்டிலும் வேறொரு சிறந்த மார்க்கம் இல்லை என்பது புரிந்ததால் உண்டான திருப்தி அவர்கள் ஒவ்வொருவரின் முகத் திலும் தெரிந்தது. தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்த அவர்கள்  மாமன்னரை ஏறிட்டபோது, அவர் பெரும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது புலப்பட்டது. சோழரின் சிந்தனைக்கும் காரணங்கள் இருந்தன.

ஒன்று, திருநாகைக்காரோணத்துக்குக் கடலாடச் செல்வதாகக் கூறிச் சென்ற இளவரசி, அங்கு இல்லை என்று வந்து சேர்ந்த தகவல்; மற்றொன்று, பாண்டியனின் போர்த் திட்டங்கள் குறித்துக் கிடைத்த செய்தி.

இந்த இரண்டு காரணங்களின் பொருட்டு, தனது போர்த் திட்டங்கள் குறித்து மேற்கொண்டு ஆலோசனைகளைக் கவனியாமலும், மாதண்டநாயகர்களின் கருத்துகளைக் கேட்க வொண் ணாமலும் மணிமுடிச்சோழர் பெரும் சிந்தனை வயப்பட்டிருந்த அந்தத் தருணத்தில்தான், கோட்டை வாயிற்புறத்தில் பெரும் சப்தத்துடன் முழங்கின விஜய பேரிகைகள்.

சிந்தனையில் இருந்து மீண்டார் மணிமுடிச் சோழர். அந்தச் சூழலைச் சாதகமாக்கிக்கொண்ட மாதண்ட நாயகர் ஒருவர் வாய்திறந்தார்... ''அரசே... பாண்டியன் எந்தவிதமான வியூகம் சமைத்திருந்தாலும், அதைத் தடுத்து நிறுத்தும் வல்லமை கொண்டதாகத் திகழ்கிறது தங்களின் இந்தத் திட்டம்.''

அவரை இடைமறித்தார் மணிமுடிச் சோழர். ''இனி, எந்த வியூகம் என்று நாம் குழம்பத் தேவை யில்லை, மாதண்ட நாயகரே! பாண்டியன் வகுத்திருப்பது சதுர்ச் *சக்கர வியூகம். சதுர்ச் சக்கரங்களில் ஒன்று, நம் உறையூரிலேயே சுழலப் போகிறது என்றும் செய்தி கிடைத்திருக்கிறது!''

இதைக் கேட்டதும், பெரிதும் அதிர்ச்சிக்குள்ளா னார்கள் அங்கிருந்தவர்கள். அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரும் விதமாக, மன்னர் பிரானின் வலப்புறம் இருந்த அந்த அறையின் பெரும் கதவுகளைத் திறந்துகொண்டு வேகமாக உள்ளே நுழைந்தன இரண்டு உருவங்கள். ஒன்று, கரும்புரவி வீரன்; மற்றொருவர், பரமேசுவரப்பட்டர்.

சிவமகுடம் - 4

உள்ளே நுழைந்ததும், தலைப்பாகையைக் கழற்றிய கரும்புரவி வீரனைக் கண்டதும் சிரம் தாழ்த்தி வணக்கம் தெரிவித்தார்கள் பிரதான மந்திரியும், மாதண்ட நாயகர்களும்.  

''மானி, நீயா?'' என்று இரைந்தார் மன்னர்.

ஆம்... அந்தக் கரும்புரவி வீரன் வேறு யாருமல்ல;

அவர்களின் இளவரசிதான்! சோழர் குலக் கொழுந்து!

இளவரசியும் மிகச் சத்தமாகவே சொன் னாள்... ''பாண்டியனின் வியூகம் நீங்கள் நினைப்பதுபோல் சதுர்ச் சக்கரங்கள் அல்ல, தந்தையே! அஸ்திர வியூகம்!''

அந்தத் தகவலை அவர்கள் உள்வாங்கி மீள்வதற்குள், மற்றோர் அதிபயங்கர சம்பவமும் அங்கே நிகழ்ந்தது. சாளரம் வழியே சீறிக்கொண்டு வந்தது குறுவாள் ஒன்று!

மன்னர் பிரானோடு உரையாடிக்கொண்டே இருந்த இளவரசி மானி, சட்டென்று தனது இடையில் இருந்த விநோத ஆயுதத்தை உருவி, அதை மன்னர்பிரான் இருக்கும் திசை நோக்கி வீசவும் செய்தாள். அது வேகமாகச் சுழன்றபடி மன்னரை யும் தாண்டிச் சென்று, சாளரத்தில் இருந்து வீசப்பட்ட அந்தக் குறுவாளைத் தடுத்துக் கீழே விழச் செய்ததோடு, அதே வேகத்தில் திரும்பிச் சுழன்று வந்து இளவரசியில் கைகளில் தஞ்சம் அடைந்தது.

சுதாரித்துக்கொண்ட மாதண்ட நாயகர்கள் மூவரும் ஓடோடிச் சென்று சாளரத்தின் வெளியே எட்டிப் பார்க்க, சாளரத்தின் மறு பக்கமான மாடப் பகுதியில் இருந்து, மதிலுக்கு அப்பால் பொங்கிப்பெருகி ஓடிக் கொண்டிருக்கும் காவிரி நதியில் குதித்தது ஒரு கரிய உருவம்!

மகுடம் சூடுவோம்...

இதுவரை...

சிவமகுடம் - 4

7ம் நூற்றாண்டின் மத்தியில், சோழ தேசத்துக்கு பாண்டியர்கள் மூலம் பேராபத்து சூழந்திருந்த சூழலில், எல்லை கிராமமான புலியூரில் புகுந்தான் கரும்புரவி வீரன் ஒருவன். அவன் யார் என்பதை அறிந்த பரமேசுவரப் பட்டரும், சோழ படைவீரர்களும் அதிர்ச்சியடைந்தார்கள்!

சிவமகுடம் - 4

பாண்டியரின் படைவலிமை குறித்து ஒற்றறிய ரிஷபகிரிக்குச் செல்லும் சோழர் படைத்தலைவன் கோச்செங்கண், அங்கே பேராபத்தில் சிக்கிக்கொள்கிறான்!

சிவமகுடம் - 4

புலியூரில் இருந்து உறையூருக்கு வந்து சேர்கிறார்கள் கரும்புரவி வீரனும்,பரமேசுவரப் பட்டரும். அதேநேரம், ரிஷப கிரியில் கோச்செங்கண் நிகழ்த்திய சம்பவம், கூன்பாண்டியரை பெரும் நகைப்புக்கு ஆளாக்கியது!

சிவமகுடம் - 4

''பாடல்கள் என்றாலும் சரி, படைப்புகள் ஆனாலும் சரி... பழைமைக்கு என்றுமே தனி மரியாதை உண்டு. அந்த வகையில், தமிழகத்தின் பழம்பெருமையை நம் கண் முன் விரிக்கும் 'சிவ மகுடம்' தொடரும் தனி மகத்துவத்தோடு திகழ்கிறது. எழுத்து நடையும், திடீர் திருப்பங்களைத் தரும் கதையின் போக்கும் வியக்கவைக்கின்றன!''

இறை இசைப் பாடகர் வீரமணி ராஜு