Published:Updated:

சிற்பம்... பயிற்சி இலவசம், 5,000 ரூபாய் ஊக்கத்தொகை! - கலை வளர்க்க கரம் கோர்க்கும் தமிழக அரசு

சிற்பம்... பயிற்சி இலவசம், 5,000 ரூபாய் ஊக்கத்தொகை! - கலை வளர்க்க கரம் கோர்க்கும் தமிழக அரசு
சிற்பம்... பயிற்சி இலவசம், 5,000 ரூபாய் ஊக்கத்தொகை! - கலை வளர்க்க கரம் கோர்க்கும் தமிழக அரசு

பிரபல ஸ்பானிய ஓவியரும் சிற்பியுமான பாப்லோ பிக்காஸோ, `சிற்பம் என்பது அறிவுக்கூர்மையின் கலை’ என்று வரையறுக்கிறார். அந்த வகையில் நம் மூதாதையரின் அறிவுக்கூர்மை வியக்கவைக்கும் ஒன்று. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் சிற்பக்கலையில் சிகரம் தொட்டிருக்கிறார்கள். பல்லவர்களின் மாமல்லபுரம் சிற்பங்கள், சோழர்களின் தஞ்சைப் பெரிய கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பாண்டியர்களின் பல ஆலயங்கள் அதற்குச் சான்றாக இன்றைக்கும் இருக்கின்றன. ஆனால், அத்தனை சிறப்பு மிக்க இந்தக் கலை உலகமயமாக்கல், தாராளமயமாக்கலாலும், அதிவிரைவு வாழ்க்கை முறையாலும் மெள்ள மெள்ள நம் கைநழுவிப் போய்க்கொண்டிருக்கிறது; அதைக் கண்டுகொள்வாரே இல்லை என்பதே யதார்த்தம். இந்தக் கலையை ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள வரும் மாணவர்களின் எண்ணிக்கையேகூட அருகிவருகிறது என்று சொல்லலாம். இந்தச் சூழ்நிலையில்தான் தமிழக அரசு இதற்காக ஒரு புது முயற்சியைச் செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறது.

சிற்பக்கலை உள்ளிட்ட அழிந்துவரும் கலைகளை இளைஞர்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் ஊக்கத்தொகையுடன் கூடிய இலவசப் பயிற்சியை அளித்திருக்கிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 18 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்திருக்கிறது தமிழக அரசு. பழந்தமிழரின் நாகரிகங்களை, அவர்களின் கலைத்திறமையை நாம் தெரிந்துகொள்ள பெரிதும் உதவியாக இருப்பது, நாம் பொக்கிஷங்களாகப் போற்றி பாதுகாத்து வரும் சிற்பங்களே. அப்படிப்பட்ட சிறப்புமிக்க சிற்பக்கலையை ஊக்குவிக்கும்விதமாகவும், கடைக்கோடி மக்களும் சிற்ப நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு இந்தத் துறையில் வல்லவர்களாக வர வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழக அரசு சிற்பக்கலை உள்ளிட்ட கலைகளை மாணவர்களுக்கு இலவச பயிற்சியளித்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில், சிற்பக்கலைக்கான பயிற்சி வகுப்புகள் முதன்முறையாகக் கடந்த அக்டோபர் மாதம் முதல் நடந்துவருகிறது.

“கல்லூரிப் படிப்பை முடிச்சவங்க மட்டுமில்லை... கலையின் மேல ஈடுபாடுகொண்ட யார் வேணும்னாலும் ‘தமிழக அரசு’ நடத்தும் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துக்கலாம். ஆனா, இது முழு நேரப் பயிற்சி வகுப்பு. அதனால பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கலந்துக்க முடியாது’’ என்கிறார் மாணவர்களுக்குப் பயிற்சியளித்துவரும் வேலு ஸ்தபதி. சிற்பக்கலை கடல் போன்றது; அது உடனே கத்துக்கக்கூடிய விசயமில்லை. நாங்க மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரியில எட்டு வருடம் சிற்பக்கலைப் படிப்பை முடிச்சிட்டு, மாணவர்களுக்குச் சிற்பம் செய்வது எப்படிங்கிறது குறித்து பயிற்சி வகுப்பு நடத்திட்டிருக்கோம். இப்போ, அரசாங்கம் நடத்துற இந்த வகுப்புல, அவங்க கொடுத்திருக்கிற கால அவகாசத்தையும், மாணவர்களுடைய ஆர்வத்தையும் மனசுலவெச்சுக்கிட்டு, மூணு மாசத்துல மாணவர்களுக்கு ஓரளவுக்குப் பயிற்சி கிடைக்கிற மாதிரி இந்தத் திட்டத்தை வடிவமைச்சிருக்கோம்.

பொதுவாக சிற்பங்களை நாலு வகையில செய்வாங்க. கல், மரம், உலோகம் மற்றும் மண்... இந்த நாலுலயும் சிற்பம் வடிக்கலாம். நாங்க இங்கே உலோகம் மற்றும் மரச்சிற்பங்களை வடிப்பதற்கு பயிற்சி கொடுக்கிறோம். சிற்பம் செதுக்கணும்னா, அதுக்கு முதல்ல ஓவியம் வரையத் தெரிஞ்சிருக்கணும். அதுல இருந்துதான் படிப்படியாக சிற்பங்களை உருவாக்கக் கத்துக்க முடியும். அதனால முதல்ல மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி கொடுத்தோம். அப்புறம் மெழுகுல சிலைசெய்யப் பயிற்சி கொடுத்தோம். மெழுகுல ஓவியம் வரைஞ்சு, பிறகு அதை சிற்பமாக மாத்துவாங்க. உலோகத்துல சிற்பம் செய்யப் பயிற்சி கொடுப்போம். பொதுவாக ஐம்பொன்லதான் சாமி சிலைகள் செய்வாங்க. நாங்க இங்கே மாணவர்களுக்குக் கத்துக்கொடுக்குறப்போ அலுமினியத்தைவெச்சு செய்யப் பயிற்சி கொடுக்குறோம். அலுமினியத்துல பயிற்சி செஞ்சா, ஐம்பொன்லயும் சிற்பம் செய்யலாம். இதை முடிச்சதுக்கு அப்புறம் மரச்சிற்பங்கள் செய்யப் பயிற்சி கொடுப்போம். இங்கே மாணவர்களா வந்திருக்குற எல்லோருமே வெவ்வேற துறைகளைச் சேர்ந்தவங்க. கலையின் மேல இருக்குற ஈடுபாடு காரணமா, இங்கே பயிற்சிக்கு வந்திருக்காங்க’’ என்கிறார் வேலு ஸ்தபதி.

மற்றோர் ஆசிரியரான ராமகிருஷ்ணன், “இங்கே மரபுவழி ஓவியங்களை வரையவும், சிற்பங்கள் செதுக்கவும் கத்துக்கொடுக்குறோம். மாணவர்கள் ஆரம்பத்துல கொஞ்சம் சிரமப்பட்டாங்க. இப்போ சிறப்பாகவே ஓவியங்கள் வரைய ஆரம்பிச்சுட்டாங்க’’ என்றபடி சில மாணவர்கள் வரைந்துகொண்டிருந்த ஓவியங்களை எடுத்துக் காண்பித்தார். “இங்கே பயிற்சியை முடிச்சுட்டு இவங்களாகவே சின்னச் சின்ன சிலைகளைச் செய்யலாம். அதை அரசாங்கத்தோட பூம்புகார் விற்பனை நிலையங்களுக்கு விற்பனைக்குக் கொடுக்கலாம். இந்தப் பயிற்சிக்கு அப்புறம் பேங்க்ல கடன் வாங்கி, தனியா சுயதொழில் நடத்தலாம். இந்தப் பயிற்சி ஒருத்தரோட சிற்பக்கலைத் திறமைக்கான அஸ்திவாரமா இருக்கும்’’ என்கிறார் ராமகிருஷ்ணன்.

தமிழக அரசு நடத்தும் இந்தச் சிற்பக்கலைப் பயிற்சி வகுப்பில், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருக்கும் மாணவர்கள் உற்சாகமாகப் பயிற்சி பெறுகிறார்கள். இவர்கள் பெறும் மூன்று மாத காலப் பயிற்சிக்கு, ஒவ்வொரு மாணவருக்கும் உதவித்தொகையாக மாதம் 5,000 ரூபாய் வழங்குகிறது அரசு!