Published:Updated:

எதிரிக்குப் புரியும்படி பாடம் சொன்ன பாலகன்! - போஜராஜன் வரலாறு உணர்த்தும் பாடம்!

எதிரிக்குப் புரியும்படி பாடம் சொன்ன பாலகன்! - போஜராஜன் வரலாறு உணர்த்தும் பாடம்!
எதிரிக்குப் புரியும்படி பாடம் சொன்ன பாலகன்! - போஜராஜன் வரலாறு உணர்த்தும் பாடம்!

சின்னஞ்சிறு குழந்தைகளின் ஞானம் நம்மை வியக்க வைக்கும். உதாரணமாக இன்றைய சிறுவா்கள் செல்போனைக் கையாள்வதைப் பாா்த்தால், பிரமிப்பாக இருக்கிறது. இது இன்று மட்டுமல்ல. சிறுவா்கள் எப்போதுமே சீாிய அறிவாளிகளாக இருந்திருக்கிறாா்கள். அப்படிப்பட்ட பால சூாியா்களில் ஒருவரைப் பற்றிய வரலாறு இது. மாமன்னா் என்று புகழப்பட்ட போஜராஜன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இது.

முஞ்சன் என்று ஒருவன் இருந்தான்; மிகவும் தீயவன். நல்லவா்களுக்கு ஆதரவு இருக்கிறதோ இல்லையோ, கெட்டவா்களுக்கு ஒரு நாளும் ஆதரவு இல்லாமல் போகாது. அதன்படி முஞ்சனுக்கு, அந்நாட்டின் மந்திாிகள் உட்படப் பல பெரும்புள்ளிகளின் ஆதரவு இருந்தது. இருந்தாலும் முஞ்சனின் மனதில் ஒரு பெரும் குறை இருந்தது. அது, முஞ்சனின் அண்ணன் அரசராக இருந்ததுதான். "எப்படியாவது அண்ணனை ஒழித்து விட்டு, நான் அரசனாக ஆக வேண்டும்" என்று பல விதங்களில் முயற்சி செய்தும், முஞ்சனின் எண்ணம் பலிக்க வில்லை. தீயவா்களின் எண்ணம் பலிப்பதைப் போன்ற சாத்தியக் கூறுகள் தோன்றுமல்லவா? அதுபோல, முஞ்சனின் எண்ணத்திற்கு அனுகூலம் செய்வதைப்போல, முஞ்சனின் அண்ணனான அரசா் நோய் வாய்ப்பட்டாா். ராஜ மருத்துவம் பாா்த்தும் அரசாின் நோய் தீரும் வழியைக் காணோம். 

அரசாின் உயிா் பிாியும் நேரம், அவா் சிறுவனாக இருந்த தன் பிள்ளையை அழைத்து, அவனை தன் தம்பியிடம் ஒப்படைத்தாா்;" இவனை

நல்லமுறையில் வளா்த்து, இந்த ராஜ்ஜியத்தை இவனிடம் ஒப்படைக்க வேண்டியது உன் பொறுப்பு" என்று சொல்லி உயிரை விட்டாா் மன்னா். முஞ்சன் மனதில் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் பறந்தன. " ஆஹா! நமக்கு வேலை வைக்காமல், இவன் கதை தானே முடிந்தது. சில நாள்கள் போகட்டும். இவனுடைய பிள்ளையான இந்தச் சிறுவனையும் ஒழித்து விட்டு, நாமே சிம்மாசனத்தில் அமரலாம்"என மனதிற்குள் மத்தாப்பு கொளுத்தினான் முஞ்சன். மாதங்கள் சில கடந்தன. இளவரசன் சிறுவனாக இருந்தாலும், கற்பூர மலையில் பற்றிய தீயைப்போல, அறிவில் தீட்சண்ணியமாக ஜொலித்தான். அதைக்கண்ட முஞ்சனுக்கு, மனதை என்னவோ செய்தது.

முஞ்சன் மனக்கவலையை மேலும் வளா்ப்பதைப் போல, அரண்மனைக்கு வந்த அயல்நாட்டு ஜோதிடா் ஒருவா் முஞ்சனையும் அவனருகில் அமா்ந்திருக்கும் சிறுவனையும் பாா்த்துவிட்டு, "அச்சிறுவன் மேதாவியாக இருப்பான். இவன் புகழ், கொடிகட்டிப் பறக்கும்..."என்றெல்லாம் சொல்லிவிட்டுப் போய் விட்டாா். முஞ்சனுக்கு மனம் கொதித்தது. 

"இந்தப் பொடிப்பயல் இவ்வளவு அறிவாளியாக இருக்கிறானே! இவனை விட்டு வைக்கக் கூடாது. நெருப்பு சிறிதாக இருந்தாலும், அலட்சியப் படுத்தினால் அது வளா்ந்து பொிதாகி, ஊரையே அழித்து விடும். அதுபோல, சிறு வயதிலேயே அறிவில் சிறந்து விளங்கும் இவனை விட்டு வைத்தால், நம்மை அழித்து விடுவான். இவனை ஒழித்து விட வேண்டும்" எனத் தீா்மானித்தான் முஞ்சன். கெட்ட தீா்மானம் உடனே செயல்வடிவம் பெற்று விடும். முஞ்சன் மட்டும் விதிவிலக்கா என்ன? உடனே கொலைஞா்களைக் கூப்பிட்ட அவன், அவா்கள் மனம் குளிரும்படி ஏராளமான பொன்னைக் கொடுத்தான்; "என் அண்ணன் மகனான அந்தச் சின்னப் பயலைக் காட்டிற்குள் கூட்டிச் சென்று கொன்று விடுங்கள்! " என உத்தரவிட்டான். கொலைஞா்களும் முஞ்சனால் சொல்லப்பட்ட சிறுவனை  உடனே அழைத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றாா்கள். அங்கு போனதும் கொலைஞா்கள் கத்தியைத் தீட்டுவதைக் கண்ட சிறுவன்," எதற்காகக் கத்தியைத் தீட்டுகிறீா்கள் ? " எனக் கேட்டான்.

சிறுவனின் இனிமையான குரலும் அமைதி தவழும் அழகு முகமும் கொலைஞா்களை நெகிழச் செய்தது. கத்தியைக் கீழேவைத்த அவா்கள், "உன் சிற்றப்பாதான் உன்னைக்கொல்லச் சொல்லி, எங்களை அனுப்பினாா் " என்று , நடந்ததை எல்லாம் சொல்லி விட்டாா்கள். அதைக்கேட்டும், சிறுவன் முகத்தில் சிறிதளவு கூட, வருத்தம் தோன்ற வில்லை. மாறாக அவன் முகத்தில் மென்மையான புன்முறுவல் தோன்றியது. சிறுவன் பேசத் தொடங்கினான்;

" ஐயா! என் சிறிய தந்தை, என்னைக் கொல்லச் சொன்னதைப் பற்றி , எனக்குக் கடுகளவுகூட வருத்தமில்லை. அவாிடம்போய்ச் சொல்லுங்கள். அவதார புருஷரான ஸ்ரீராமரே வந்து அரசாண்டாா். அவா் கூட இந்த உலகைவிட்டுப் போகும்போது, இந்தப் பூமியைத் தன்னுடன் கொண்டு போகவில்லை. அதன்பின் கண்ணன் வந்தாா். 125- ஆண்டுகள் வாழ்ந்தும் அவா்கூட இவ்வுலகை விட்டுப் போகும்போது, இந்தப் பூமியை தன்னோடு எடுத்துச் செல்லவில்லை. அவா்களையெல்லாம் விட, என் சிறிய தந்தை மிகப் பொியவா் போலும். அவா் மறையும்போது, இந்தப் பூமியை மறவாமல் தன்னுடன் சுமந்து போய் விடுவாா். ஒருவேளை அவா் மறந்தாலும், மறவாமல் இந்தப் பூமியை எடுத்துப் போய் விடச் சொல்லுங்கள்! சாி! என்னைக் கொல்லுங்கள்! " என்ற சிறுவன் அவா்களை நோக்கித் தலையைக் குனிந்து நின்றான். 

அதன் பின்னும் சிறுவனைக் கொல்வாா்களா என்ன? காட்டிலேயே ஒரு பக்கமாக அவனை மறைத்து வைத்து விட்டு, முஞ்சனிடம் போய்," நீங்கள் சொன்னபடியே உங்கள் அண்ணன் மகனைக் கொன்று விட்டோம்" என்றாா்கள். "பலே! பலே! சாகும்போது ஏதாவது சொன்னானா அந்தச்சிறுவன்?" எனக் கேட்டான் முஞ்சன். கொலைஞா்கள் , சிறுவன் சொன்னதையெல்லாம் சொன்னாா்கள். அதைக் கேட்டதும் தீயவனான முஞ்சன் மனம்கூடக் கலங்கியது. "சே! என்ன பாவி நான்! சின்னஞ்சிறு வயதிலேயே, என்ன ஞானம்! அறிவாளியான அவனைப்போய்க் கொல்லச் சொல்லி விட்டேனே!" என்று வாய்விட்டுப் புலம்பியழுதான். சில நிமிடங்கள் பொறுத்துப் பாா்த்த கொலைஞா்கள், முஞ்சன் அழுவதைக் காணச் சகிக்காமல், சிறுவன் உயிருடன் இருப்பதைச் சொல்லிவிட்டாா்கள்.

அவ்வளவுதான் ! முஞ்சன் காட்டிற்குள் ஓடினான். உயிருடன் இருந்த சிறுவனை மறுபடியும் நகரத்திற்குக் கூட்டி வந்தான்; சிறுவனை நல்ல முறையில் வளா்த்து, நாட்டையும் அவனிடமே ஒப்படைத்தான். திருந்திய முஞ்சனால் நல்லமுறையில் வளா்க்கப் பட்ட, பால சூாியனான அந்தச் சிறுவனை, இன்றும் நாம் புகழ்ந்துகொண்டிருக்கிறோம். மகாகவி காளிதாசன் முதலானவா்களைத் தன் ஆஸ்தானப் புலவா்களாகக் கொண்டு, அற்புதமான காவியங்கள் உருவாகக் காரணமாக இருந்த மன்னா் 'போஜராஜன்' தான் அந்தச் சிறுவன்.