Published:Updated:

சூடிக்கொடுத்த சுடர்கொடி, கோதிலாக் கோதை நாச்சியார், ஆண்டாள் கொண்டாடிய மார்கழி நோன்பு! #Margazhi

சூடிக்கொடுத்த சுடர்கொடி, கோதிலாக் கோதை நாச்சியார், ஆண்டாள் கொண்டாடிய மார்கழி நோன்பு! #Margazhi
சூடிக்கொடுத்த சுடர்கொடி, கோதிலாக் கோதை நாச்சியார், ஆண்டாள் கொண்டாடிய மார்கழி நோன்பு! #Margazhi

வைணவச் சோலையில் அன்றலர்ந்த மலராக, திருத்துழாயின் அருகாமையில் தேவியின் அம்சமாகத் தோன்றியவள் ஆண்டாள். முச்சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரே ஆண்டாளின் பிறப்பிடமாகும். ஆடிமாதத்துப் பூரம் நட்சத்திரத்திலே அவதரித்ததால் திருஆடிப்பூரம் நன்னாளாயிற்று. இந்த நாளை, 'இன்றே திருவாடிப்பூரம்; எமக்காகவன்றோ ஆண்டாள் இங்கு அவதரித்தாள்' என்று வைணவ ஆச்சார்யரான ஶ்ரீமணவாள மாமுனிகள் பொன்னான நாளாகக் கொண்டாடியிருக்கிறார். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் என்ற பெருமை, பக்தையான ஆண்டாளுக்கு என்றுமே உண்டு.

தேவர்களுக்கு ஒரு வருடம் என்பது ஒருநாளுக்குச் சமமானது. தை முதல் ஆனி மாதம் வரையிலுள்ள ஆறுமாதங்கள் உத்தராயனம், அதாவது தேவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடிமாதம் முதல் மார்கழி வரையிலுள்ள ஆறுமாதங்கள் தட்சிணாயனம், அதாவது தேவர்களுக்கு இரவாகவும் கணக்கிடப்படுகிறது. அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறுமணி வரை, 'பிரம்ம முகூர்த்தம்'. எனவே தேவர்களுக்கு மார்கழிமாதம் முழுவதும் பிரம்மமுகூர்த்தம். ஆகையால்தான் மார்கழி மாதம் மாதங்களில் தலைசிறந்து விளங்குகிறது. இத்தகைய சிறப்புகள் பொருந்திய மார்கழியில், நாட்டுக்கும், வீட்டுக்கும், தன்னைப்போன்ற அனைத்துப் பெண்களுக்கும் நன்மை ஏற்படும் விதமாக ஆண்டாள் கடைப்பிடித்த நோன்பே, மார்கழி நோன்பாக இன்றளவும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் கடைபிடிக்கப்பட்டு போற்றுதலுக்கு உரியதாயிற்று. 

நோன்பினை நோற்கும் மகளிர், சில விதிமுறைகளைக் கடைபிடித்து ஒழுகினர் என்பதை, ஆண்டாள் அருளிய சங்கத் தமிழ் மாலையாம் திருப்பாவையின் வாயிலாக அறியமுடிகிறது. பொழுது விடிவதற்குரிய அறிகுறிகளாக கீழ்வானம் வெளுப்பதும், பறவைகள் ஒலிப்பதும், கோழி கூவுவதும், முனிவர்களும் தேவர்களும் துயிலெழுந்து எம்பெருமானின் பெயரை முழங்குவதாகவும் விடியல் பொழுதின் அடையாளங்களாகக் குறிப்பிடும் ஆண்டாள், அதற்கெல்லாம் முன்பாகவே எழுந்து விரத நியமத்தை முடிக்கவேண்டி, ஆயர்பாடிப் பெண்களைத் துயிலெழுப்புகிறாள்.

மலருக்குள் ஒருங்கே மணமும், தேனும், அழகும் இருப்பது போல கோதையின் மனதுக்குள் கண்ணன் மீது பக்தியும், அன்பும், ஞானமும், வைராக்கியமும், பரிவும் ஒருங்கே அமையப்பெற்ற, ஞானப்பைங்கொடியாய் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, தன் தந்தை விஷ்ணுசித்தரை விட புலமையிலும், பக்தியிலும் விஞ்சி நிற்கிறாள்.


பூமிப்பிராட்டியின் வடிவமான ஆண்டாளை சீராட்டி, பாராட்டி. கண்ணும், கருத்துமாய் வளர்க்கும் ஒப்பற்ற பெரும்பேறு பெற்றவர் விஷ்ணுசித்தர். அனுதினமும் அரங்கனுக்காக புத்தம்புதிய, நறுமணம் கமழும் பல வகையான மலர்களைக் கொய்து, அழகிய பெரிய மாலைகளாகத் தொடுத்து எம்பெருமனுக்குச் சாத்துவதை கைங்கர்யமாகச் செய்துகொண்டிருப்பவர். அவ்வாறு மலர் மாலைகளைத் தொடுக்கும்போது தன் அன்பு மகள் கோதையிடம், அரங்கனின் திருவிளையாடல்களை கதைகளாக அவளது நெஞ்சில் பதியும் வண்ணம் கூறிக்கொண்டே தொடுப்பது விஷ்ணுசித்தரின் வழக்கம் ஆகும். 

அக்கதைகளை கேட்கக் கேட்க, கோதையின் மனதில் அரங்கனின் நினைவு பசுமரத்தாணிபோல பதிய ஆரம்பித்தது. அவள் வளர வளர, ஓங்கி உலகளந்த உத்தமனின் மீது கொண்ட அன்பு என்னும் விதை, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விருட்சமாக வளரத்தொடங்கியது. அரங்கனின் மேல்கொண்ட அன்பானது ஆண்டாளை முழுமையாக ஆக்கிரமித்தது. சாதாரண மானிடர் போல உடலால், உணர்ச்சியால் இல்லாது, ஞானம், வைராக்கியம், பக்தி போன்றவற்றால் நன்கு முதிர்ந்து வளர்ந்து வந்தது. 

அரங்கனுக்குத் தொடுத்த மாலைகளை, தான் சூடி, அகமகிழ்ந்து, அதரத்தில் புன்னகை தவழ, அழகுப் பார்த்தாள். இறைவனுக்காக தொடுக்கப்பட்ட பூமாலைகளைச் சூடி மகிழ்ந்தவள், பின்னாளில் இறைவனுக்காகப் பல பாமாலைகளை உள்ளன்போடு, அருளியவள். 'திருப்பாவை', 'நாச்சியார் திருமொழி' என்னும் இரண்டும் தேனினும் இனிய சுவை மிக்கப் பாமாலைகளாகத் திகழ்கின்றன.
பலப் பல திருப்பெயர்களால் பரந்தாமனைப் போற்றிப் பாடும் ஆண்டாள், எப்போதும் கண்ணனின் நினைவாகவே இருந்தாள். எப்போதும் கொஞ்சும் விழிகளை உடைய, நீலநிறக் கண்ணனின் நினைவாகவே இருந்ததால், ஆண்டாளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாய்ப்பாடியாகவும், அவளின் தோழிமார்கள் கோபியர்களாகவும், வடபெருங்கோயிலுடையான் திருக்கோயிலே நந்தகோபாலனுடைய திருமாளிகையாகவும் விளங்கியது. ஆலிலைப்பள்ளியானாகிய எம்பெருமானே கண்ணனாக காட்சி நல்குவதாகத் தோன்றியது. இத்தகைய காரணங்களால் திருப்பாவையைப் பாடி தன் உறுதியான விருப்பத்தை, வைராக்கியமாக்கி நிறைவேற்றிக் கொண்டாள். இப்படித்தான் திருப்பாவை பிறந்தது என்று சில வைணவப் பெரியோர்களும், உரையாசிரியர்களும் கூறுகின்றனர்.

 
'மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில்லேன் கண்டாய்...'

என்று தன் உடல், பொருள், ஆவி யாவும் பகவானுக்குச் சமர்பிக்கப்பட வேண்டிய அவியுணவே என்பதாக, தனது நாச்சியார் திருமொழியில், தெளிவாக மனஉறுதியுடன் தெரிவிக்கிறாள். தனது உள்ளம் என்றுமே திருவரங்கனின் திருமலர்கரங்களைக் கைப்பிடிக்க, கனாக்கண்டு காத்துக் கொண்டிருப்பதாக நினைத்து ஏங்குகிறாள். எனவேதான் அனைத்திலும் சிறந்த மாதமான மார்கழியில், முழுநிலவு தினத்தன்று நோன்பினைத் தொடங்கி,  இறைவனைப் பாடி இறையருளைப் பெற்றதாக ஆண்டாள் வாழ்வின் வழியாகவும், வாக்கின் மூலமாகவும் அறிய முடிகிறது. ஆண்டவனையே ஆள நினைத்து, ஆண்டதால் 'ஆண்டாள்' என்றும், இவள் சூடிக்கொடுத்த மாலைகளையே அரங்கன் விரும்பி அணிவதால் 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்றும், இறைவனைக் குறித்து நாச்சியார் திருமொழி இயற்றியதால் 'கோதிலாக் கோதை நாச்சியார்' என்றெல்லாம் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுபவள் பக்தி நெறி ஒழுகிய ஆண்டாள்

'திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே
 திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
 பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
 பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
 ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
 உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
 மருவாரும் திருவல்லி வள நாடி வாழியே
 வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே'

என்று கோதை நாச்சியாராகிய ஆண்டாளை வாழ்த்தி வணங்குகிறது வைணவ உலகம். நாமெல்லாம் உய்யும்படி நல்வழி காட்டிய கோதை நாச்சியாரின் திருவடிகளைப் போற்றுவோம்.