மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அருட்களஞ்சியம்

பி.ஸ்ரீ. ,ஓவியம்: கேட்டை, சித்ரலேகா

திருவுடையாள்!

சென்னைக்கு வடக்கே, திருவொற்றியூரில் இருந்து பொன்னேரி செல்லும் பாதையில், 12 கி.மீ. தொலைவில் உள்ளது மேலூர். இங்கே, அன்னை திரிபுரசுந்தரி, திருவுடையம்மனாகத் தென்புலம் நோக்கித் தனிக்கோயிலில் அருளாட்சி செலுத்திக்கொண்டிருக்கிறாள். மேற்கரங்களில் பாசாங்குசத்துடனும், கீழ் வலக்கரம் அபய முத்திரையாகவும், இடக்கரம் வரதஹஸ்தமாகவும் திருக்கோலம் கொண்டு, கருணை வடிவமாக நம் உள்ளத்தைக் குளிர்விக்கிறாள்.

கல்வெட்டுகளில் இவ்வூர் ‘வல்லூர்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில், ‘திருமணங்கள் உடையார் கோயில்' என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஊரையும் ‘திருமணங்கா’ என்றும் அழைத்து வந்திருக்கிறார்கள். 1715-ல் பொறிக்கப் பட்ட கல்வெட்டு ஒன்றில் இவ்வூரை மேலையூர் என்றும், சுவாமியைத் திருமணங்கீச்வரர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். முதலில் செங்கல் கட்டட மாக இருந்த இந்தக் கோயில், சோழர் காலத்தில் கருங்கல்லால் மாற்றியமைக்கப்பட்டது.

அம்பாள் சந்நிதிக்கு முன்புறமுள்ள மண்டபத்தை ‘மிளகு மாற்றியான் மண்டபம்’ என்று அழைக்கிறார்கள். நாயக்கர்கள் காலத்தில் மிளகுக்கு சுங்கம் வசூலிக்கும் வழக்கம் இருந்தது. இந்தப் பகுதியில் மிளகு விற்க வந்த வியாபாரி ஒருவர், சுங்க வரிக்கு பயந்துபோய் அதிகாரிகளிடம், தான் கொண்டு வந்திருக்கும் மூட்டையில் இருப்பது பயறு என்று தெரிவித்தாராம். அதிகாரிகளும் அவர் கூறியதை நம்பிவிட்டார்கள். பிறகு, வியாபாரி மூட்டையை அவிழ்த்துப் பார்த்தபோது, மிளகுக்கு பதிலாக பயறு நிறைந்திருந்ததைக் கண்டு திடுக்கிட் டார். பொய் சொன்னதற்காக அம்பிகையிடம் அவர் மன்னிப்பு வேண்ட, பயறு மீண்டும் மிளகாக மாறியதாம். அதைத் தொடர்ந்து அந்த வியாபாரி சுங்க பணத்தை கோயிலுக்கே வழங்கி, இந்த மண்டபத்தை கட்டிக் கொடுத்ததாகக் கூறுகிறார்கள்.

அருட்களஞ்சியம்

ஸ்ரீ திருமணங்கீச்வரர் சந்நிதி, அம்பிகை ஆலயத்துக்கு மேற்கே தனிக்கோயிலாக அமைந்துள்ளது.

திருவுடையம்மன் ஆலயத்துக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவ்வப்போது வருவதைத் தவிர, பௌர்ணமி தினங்களில் டூரிஸ்டுகள் நிறைய வருகின்றனர். ஆடி, தை மாதங்களில் வெள்ளிக்கிழமை வரும் பௌர்ணமி தினத்தன்றும், சித்ரா பௌர்ணமி தினத்தன்றும், மூன்று தேவியரை ஒரே நாளில் தரிசிப்பதைப் பெரும் புண்ணியமுடையதாகக் கருதும் பக்தர்கள் காலை யில் திருவுடையம்மன் கோயிலுக்கு வருகிறார்கள்.

அடுத்து, திருவொற்றியூர் வடிவுடையம்மனையும், அதற்கடுத்தபடி திருமுல்லைவாயில் கொடியிடை நாயகியையும் தரிசிக்கிறார்கள். இந்த வழக்கத்துக்கு தல புராணத்தில் ஆதாரம் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட தினத்தில் இந்த மூன்று தேவியரைத் தரிசிப்பதற்கு ஒரு விளக்கமும் தரப்படுகிறது.

மேலூர் திருவுடையம்மனை இச்சா சக்தியாக முதலில் வழிபட்டு, அடுத்து ஞான சக்தியாகத் திருவொற்றியூர் திரிபுரசுந்தரியைத் தரிசித்து, கிரியா சக்தியாக முல்லைவாயில் லதாமத்யாம்பா என்ற கொடியிடையம்மனைத் தரிசிப்பதன் மூலம் ஒரே நாளில் அம்பிகையை மூன்று சக்திகளாக ஆராதிக்கும் பலனைப் பெறுகிறார்கள்.

** 1980 ஆனந்த விகடன் பொன்விழா மலரில் இருந்து...

சித்திர ராமாயணம்

ஸ்ரீரங்கத்தின் பெருமை

சீதையின் கண்வட்டத்திலிருந்து மறைந்து போன ராமன், தம்பி லக்ஷ்மணனோடும் விச்வாமித்ர முனிவரோடும் அரண்மனைக்குள்ளே போய் ஜனக மகாராஜாவைக் கண்டான். ஜனகன் இவர்களைச் சிறிது தூரத்தில் கண்டதும் சந்தோஷத்துடன் எதிர்கொண்டு உபசரித்து, ஒரு வசதியான மாளிகையில் அமரச் செய்தான். அங்கே மகாராஜாவின் புரோகிதரும் அகலிகை புத்திரரும் ஆகிய ஸதானந்த முனிவர் வந்தார்.

தன்னை வணங்கிய ராமனுக்கு ஆசி கூறிய ஸதானந்தருக்கு விச்வாமித்திரர் ராமனை அறிமுகப்படுத்துகிறார்:

“வடித்த மாதவ!

கேட்டி: இவ் வள்ளல்தான்,

இடித்த வெங்குரல்

தாடகை யாக்கையும்,

அடுத்(து)என் வேள்வியும்,

நின்அன்னை சாபமும்

முடித்(து), என் நெஞ்சத்(து)

இடர்முடித் தான்” என்றார்.

இந்த ஒரு சிறு பாட்டில் வடித்தெடுத்துத் தருகிறார் விச்வாமித்திரர், இதுவரை ராமன் செய்த துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனங்களை. இந்த மஹரிஷியின் நெஞ்சிலே மூன்று துயரங்கள் இருந்தனவாம். தாடகை அநியாயமாக உயிர்களை வதைத்து வருகிறாளே என்பது முதலாவது துயரம்; அது உலகத்தைப் பற்றிய கவலை. அடுத்த கவலை தன்னுடைய யாகத்தைப் பற்றியது; இதுவும் தேவர்களின் பிரீதிக்காக உலக நன்மையை முன்னிட்டுச் செய்த வேள்விதான். இதற்குச் சமமாக மூன்றாவது  கவலையும் இருந்ததாம். ‘அதுதான் உம்முடைய தாயாரின் துயரக் கதை’ என்று ஸதானந்தரை நோக்கிச் சொல்லுகிறார்.

அப்படிச் சொல்லி, “இந்த ராமன்தான் அந்தத் துயரங்களை யெல்லாம் முடித்தத் தந்த வள்ளல்” என்று அறிமுகப்படுத்தி வைக்கிறார் “தாடகை உடம்பையும், என் வேள்வியையும், உம்முடைய தாயாரின் சாபத்தையும் ஒருங்கே முடித்து, என் நெஞ்சத்திலிருந்த மூன்று இடர்களையும் முடித்தான்” என்று சாதுர்யமாகப் பேசுகிறார் விச்வாமித்திரர்.

அருட்களஞ்சியம்

“மாட்சிமை தங்கிய தசரத சக்கரவர்த்தியின் புதல்வர்கள்” என்று ராம லக்ஷ்மணர்களை அறிமுகப்படுத்திய விச்வாமித்திரர் அந்தச் சூரிய வம்சத்தின் மகிமையையும் ஜனக மகாராஜனுக்குச் சொல்லத் தொடங்கினார். குலம் சொல்லிக் கோத்திரம் சொல்லித்தானே கொள்வினை கொடுப்பினை?

மூல புருஷர்

முதல் முதல் அந்தக் குலத்தின் ஆதி புருஷனும் நீதியின் மூல புருஷனும் சூரிய புத்திரனுமாகிய மனுவை, ஆதித்தன் குலமுதல்வன் மனுவினை, யார் அறியாதார்?
என்று குறிப்பிடுகிறார். பிறகு அந்த வம்சத்திலே தோன்றிய பிருது சக்ரவர்த்தி தன் பெயரால் பூமியே ‘பிருதிவி’ என்று பெயர் பெறும்படி ஜனங்களுக்குப் பணி செய்தான் - என்கிறார்.
ஆட்சி செலுத்திய அந்த மகோபகாரியும் இந்த ராம லக்ஷ்மணர்களுடைய குலத் திலே தோன்றினவன்தான் - என்று உத்ஸாஹமாய்ச் சொல்கிறார். இக்ஷ்வாகு என்ற ராஜ சிரேஷ்டனைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவன்தான் சூரிய வம்சத்தின ரின் குலதெய்வமான ஸ்ரீரங்க நாதனை அயோத்தியில் பிரதிஷ்டை செய்தவன் - என்று ஸ்ரீரங்கத்துக்கும் பெருமை கொடுத்து விச்வாமித்திரரைப் பேச வைக்கிறான் கம்பன்:

பிணி அரங்க, வினை அகலப்

பெருங்காலம் தவம்பேணி,

மணிஅரங்க நெடு முடியாய்!

மலர் அயனை வழிபட்டுப்,

பணி அரங்கப் பெரும்பாயன்

பரஞ்சுடரை யாம்காண

அணிஅரங்கம் தந்தானை

அறியாதார் அறியாதார்!

புலியும் மானும் ஒரு துறையில் பொதுவாக,  ராமனுடைய முன்னோர்களின் பெருமையைத் தம்மாலும் அளவிட்டுச் சொல்ல முடியாது என்கிறார், தம்முடைய தவ வலிமையை நன்றாக உணர்ந்திருக்கும் விச்வாமித்திரரும். இப்படிச் சொல்லிவிட்டு, அரும்பெருங் குணங்கள் வாய்ந்த அரசர்களுக்கிடையே மாந்தாதாவின் தருமத்தையும் நீதி பரிபாலனத்தையும் நினைப்பூட்டுகிறார்:
கருதரிய பெருங்குணத்தோர்,

இவர்முதலோர், கணக்கிறந்தோர்,

திரிபுவனம் முழுதாண்டு

சுடர்நேமி செலநின்றார்

பொரு(து)உறைசேர் வேலினாய்!

புலிப்போத்தும் புல்வாயும்

ஒருதுறையில் நீருண்ண

உலகாண்டோன் ஒருவன்காண்!

புலியும் மானும் ஒரு துறையில் நீர் அருந்தும்படி அரசாண்டானாம் மாந்தாதா. இதன் பொருள் என்ன? வலியவர் எளியவரை வாட்டாமல், ஆக்ரமிப்பும் ஆதிபத்திய வெறியுமில்லாமல், பகை, பயம் அறவே ஒழிந்து, அன்பும் அருளும் தலையெடுத்து நிற்கும்படி இந்தச் சக்ரவர்த்தி யின் ஆட்சி முறை அமைந்திருந்தது என்பது குறிப்பு.

தியாகம்-வீரம்-காதல்

வீரர்களுக்கும் மேலான வீரர்களான ஜீவகாருண்ய மன்னர்களின் ஞாபகம் வருகிறது, ரகுவம்ச குல முறை சொல்லும்போது, விச்வாமித்திரருக்கு. அந்த மன்னர்களில் சிபிச் சக்ரவர்த்தி ஜீவகாருண்ய உலகத்திற்கும் தியாக உலகத்திற்கும் கூடச் சக்ரவர்த்திதான் என்கிறார்:

  இன்உயிர்க்கும் இன்உயிராய்

   இருநிலங்காத் தார்என்று,

   பொன்உயிர்க்கும் கழலவரை

   யாம்போலும் புகழ்கிற்பாம்?

  மின்உயிர்க்கும் நெடுவேலாய்!

இவர்குலத்தோன், மென்பறவை -   

  மன்னுயிர்க்கும் தன்உயிரை

 மாறாக வழங்கினனால்.

கருணை விளைத்த தியாகம்

மன்னுயிரைத் தன்னுயிராக மதித்து அரசாண்டார்கள் என்பது மற்ற அரசர்களுக்குப் புகழாயிருக்கலாம்; ஆனால் இந்த அரசர்களை அப்படிப் புகழ்வது சரியன்று என்கிறார் முனிவர். உயிர்கள்மீது சூரிய குலத்தரசர்கள் கொண்டிருந்த அன்பை அப்படியெல்லாம் மதிப்பிட்டால் போதாதாம். அவர்களைப் புகழ்வதற்குக்கூட நமக்குத் திறமை கிடையாது என்று ஒப்புக் கொள்கிறார் ஜனகராஜ ஸபையிலே. இப்படி ஒப்புக்கொள்கிறவர் யார்? “என்னைப் போன்ற முனிசிரேஷ்டர்களும்” என்று தசரத ராஜ ஸபையிலே அவ்வளவு தவச் செருக்கோடு பேசும் அதே விச்வாமித்திரர் தான். இப்போது எவ்வளவு தூரம் மாறிப் போய்விட்டார் ராமனோடு பழகிய பின்பு.

ராமனுடைய முன்னோர் களிலும் சிபிச் சக்ரவர்த்தியின் ஞாபகம் வந்ததும் ஒரே அடியாகத் தாழ்ந்து பேசுகிறார். - ‘‘எந்தத் தபஸ்விக்குத்தான் அத்தகைய தியாக புத்தி வரக் கூடும்” என்று எண்ணிப் பார்த்தவர் போலே. ஒரு புறாவுக்காகத் தன் உயிரையே கொடுக்கத் துணிந்த அந்தத் தியாகமூர்த்தியின் கதை அவ்வளவு தெளிவாக மனக்கண்முன் ஓடிவருகிறது.

அருட்களஞ்சியம்

ஒரு சிறு புறாவைப் பெரும் பருந்து ஒன்று துரத்தி வருகிறதாம். சக்ரவர்த்தி புறாவுக்கு அபயம் அளிக்க, ‘‘எனக்கு இரை வேண்டாமா?” என்று பருந்து வழக்காடுகிறதாம். உடனே சக்ரவர்த்தி அந்தப் புறாவின் எடை அளவிற்குத் தன் உடம்பிலிருந்து சதையை அறுத்துக் கொடுப்பதாக உடன்படுகிறான். ஆனால், என்ன ஆச்சரியம்! - உறுப்புக்களை எல்லாம் ஒவ்வொன்றாக அறுத்து வைத்தும் தராசுத் தட்டு சமமாக வில்லை. முடிவில், சக்ரவர்த்தி தானே அந்தத் தட்டில் ஏறி நின்று எடையை நிறைத்துப் பருந்துக்கு விருந்தாக்கத் துணிகிறானாம்.

இந்த மகத்தான தியாகக் கதை நமது ஜனங்களின் உள்ளத்தை வசீகரித்துவிட்டது. வலது பக்கத்திலிருந்து சதையை அறுத்து வைக்கும்போது, இடது கண்ணில் நீர் பெருகியதாகவும், ‘‘நீ அழுகிறாய்; சந்தோஷமாய்க் கொடுக்கவில்லை” என்று பருந்து மறுத்ததாகவும், உடனே சிபி, ‘‘வலது பக்கத்திற்குக் கிடைத்த பாக்கியம் தனக்குக் கிடைக்கவில்லையே என்றுதான் இடது பக்கம் கண்ணீர் வடிக்கிறது!” என்று பதில் சொன்னதாகவும் இந்தக் கதையை மேலும் வளர்த்திருக்கிறார்கள்.

இத்தகைய ஒப்பற்ற கதை கம்பனுள்ளத்தை விசேஷமாக வசீகரித்திருக்க வேண்டும்.
எனவே, கம்பருடைய விச்வாமித்திரர் சிபிச் சக்ரவர்த்தியின் தியாகத்தைப் பணிந்து பாராட்டி, ‘‘அவனும் இவர் குலத்தோன்!” என்று பெருமையுடன் பேசுகிறார்.

பெரு முயற்சியும் பெருவீரமும்

பிறகு லோகோபகாரமான பெருஞ் செயல்கள் செய்த பேரரசர்களில் சமுத்திரத்தைத் தோண்டியதாகப் புராணம் கூறும் சகர குமாரர்களைக் குறிப்பிடுகிறார். பகீரதப் பிரயத்தனம் என்று பெருமுயற்சிக்கு வரம்பாகச் சொல்லுகிறோமே, அந்தக் கங்கை கொணர்ந்த செயற்கருஞ் செயலையும் ஞாபகப்படுத்துகிறார்.

மறுபடியும் வீர மன்னர்களின் ஞாபகந்தான். சந்திரனையும் வென்ற திலீபன் முதலான மன்னர்களைக் குறிப்பிடுகிறார். வீராதி வீரனும், சூரியவம்சம் ‘ரகு வம்சம்’  என்றுபெயர் பெறும்படி ஆட்சி புரிந்தவனுமான ரகு மஹா ராஜாவின் புகழைக் குறிப்பிடுகிறார். ரகுவின் பெயரால்தானே ராமனுக்கும் ராகவன் என்று பெயர் பிரசித்தமாயிருக்கிறது!

அருட்களஞ்சியம்

 காதல் விளைவித்த வீரம்

அப்பால், ராம லக்ஷ்மணரின் பாட்டனான அஜ மஹா ராஜாவுக்கே வந்து விடுகிறார். ‘‘அந்தப் பேரரசனுடைய வீரம் பெரிதா? அதிர்ஷ்டம் பெரிதா?” என்ற சந்தேகமும் வந்து விடுகிறது. மந்தரமலையால் பாற்கடலைக் கலக்கியது போல அஜனும் தன் வில் என்ற மலையால் வேந்தர்களாகிய கடலை ஒரு கலக்குக் கலக்கிவிட்டானாம்.

பாற்கடலைக் கலக்கியதும் மகா விஷ்ணுவுக்கு மஹாலக்ஷ்மி கிடைத்தாள் அல்லவா? அவ்வளவு அதிர்ஷ்டம் இந்த அஜனுக்கும் கிடைத்துவிட்டதாம்.

வில்லென்னும் நெடுவரையால் வேந்(து) என்னும் கடல்கலக்கி,

எல்என்னும் மணிமுறுவல் இந்துமதி என்னும்திருவை,

அல்என்னும் திருநிறத்த அரிஎன்ன அயன்என்பான்

மல்என்னும் திரள்புயத்துக்(கு) அணியென்ன வைத்தானே!

அந்த ஹரியைப் போல் இந்த அஜனுக்கும் ஒரு திருமகள் கிடைத்தாளாம். இந்த லக்ஷ்மிக்கு இந்துமதி என்று பெயர். திருமகளைத் திருமால் தன் மார்பிற்கு அணியாகக் கொண்டான். அஜனோ தன் வீரத்தோளுக்கு அணியாக வைத்துக் கொண்டானாம் இந்துமதி என்னும் திருவை.

இந்துமதியின் சுயம்வரம் காளிதாஸ மஹாகவியின் ‘ரகுவம்சம்’ என்ற காவியத்தில் கூறப்படுகிறது. அந்தப் பெண்மணி சுயம்வர காலத்திலே பிற அரசர்களை இகழ்ந்து அஜ மஹாராஜாவுக்கே மாலை சூட்டினாள் என்பதும், பொறாமை கொண்ட அரசர் கூட்டம் அஜனைச் சூழ்ந்து கொண்டு போர் விளைத்தது என்பதும், அந்தப் போரில் அஜன் அரசர்களையெல்லாம் ஜயித்துவிட்டான் என்பதும் கதைச் சுருக்கம்.

அந்தக் கதையின் ஸாரத்தைக் கிரகித்துக் கொண்டு பாற்கடல் கடைந்து அமுதம் தந்தது போல் கம்பனும் ‘ஒரே பாட்டில் ஒரு காவியம்” தந்திருக்கிறான். இந்த அஜ மஹாராஜாவின் புதல்வர்தான் இவர்களுடைய தந்தையாகிய தசரத சக்ரவர்த்தி என்கிறார் விச்வாமித்திரர்.

** 24.12.44, 14.1.45, 21.1.45 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...