மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

பஞ்சாங்க விளக்கங்களை நம்பலாமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? சமீபத்தில் அதீத மழைப் பொழிவு குறித்த பஞ்சாங்கம் ஒன்றின் விளக்கம் சமூக வலைதளங்களில் அதிகளவு பகிர்ந்துகொள்ளப்பட்டது. அதில் சொல்லப்பட்டது போன்றே பெருமளவு மழை பொழிந்ததைச் சுட்டிக்காட்டி சிலர் வியக்க, வேறு சிலரோ 'இது காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை’ என்று நகைக்கிறார்கள்.  நீங்கள் சொல்லுங்கள்... விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இன்றைய காலத்தில், பஞ்சாங்க விளக்கங்களை நம்பிக்கொண்டிருக்கலாமா? 

சுபாஷ் கண்ணன், சென்னை - 17

ஐம்பெரும் பூதங்களில் ஒன்று ஆகாசம். ஆகாசம் எந்தப் பொருளோடும் ஒட்டாது. ஆனால், அத்தனைப் பொருள்களும் ஆகாசத்தில் தன்னை இணைத்துக்கொண்டுவிடும்.

நாம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்கி றோம். குடியிருப்பில் இருக்கும் ஆகாசத்தைப் பயன்படுத்துகிறோம். சுவர்களோ, நிலமோ கூரையோ பயன்பாட்டுக்கு உதவாது. அந்த இடைவெளியே (ஆகாசம்) அத்தனை அலுவல் களுக்கும் பயன்படுகிறது.  கோப்பையில் இருக்கும் காப்பிக்கு ஆகாசம் ஆதாரம்; கோப்பை யின் கொள்ளளவை ஆகாசம் வரையறுக்கும். காப்பியை அருந்துவோம். ஆனால், கோப்பையில் இருக்கும் ஆகாசத்தை அருந்த முடியாது. ஆகாசத்தில் நிகழும் அதிசயங்களை வான சாஸ்திரம் வரையறுக்கும்.

? அப்படியென்ன அதிசயங்களை விளக்குகிறது வானவியல் சாஸ்திரம்?

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், தூமகேதுக் கள், வால் நட்சத்திரம், பெயரிடப்படாத ஒளிப்பிழம்புகள் ஆகியன ஆகாசத்தில் வளைய வந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் செயல்பாடு கள் உலக அமைதியை நிலைநிறுத்துகின்றன. ஒளி லேசான பூதம் ஆதலால், அந்தரத்தில் வளைய வந்துகொண்டிருக்கிறது.

கேள்வி - பதில்

மழைக்கு ஆதாரமான மேகங்களும் அங்கு வளைய வருகின்றன. அவை, காற்றின் தூண்டுதலில் மழையாக மாறி மனிதர்கள் வாழ வழி வகுக்கின்றன. சூரியன் தனது கிரணங்கள் வாயிலாக நிலத்திலிருக்கும் நீரை உறிஞ்சி மேகமாக மாற்றுகிறான். மேகம், அதை தூய்மையான நீராக்கி பன்படங்கு பெருக்கி உயிரினங்கள் வாழ ஒத்துழைக்கிறது. அதேபோல், சூரியன் கிரணம் வாயிலாக சந்திரனில் இணைந்து ஆறு பருவ காலங்களைத் தோற்று வித்து, உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியை எட்டுவதற்கு உதவுகிறான். நிலத்தில் விளையும் அத்தனை செல்வங்களுடனும் மழைக்கு நேர டித் தொடர்பு உண்டு; சூரியனுக்கு மறைமுகத் தொடர்பு உண்டு.

? இவையெல்லாம் இயற்கையான விஷயங்கள்தானே?

அந்த இயற்கையில் நிகழும் சீற்றங்களை வான சாஸ்திரம் அடையாளம் காட்டும். 'மனிதர்களின் அறத்துக்குப் புறம்பான செயல்பாடுகளால் சூழல் மாறும்போது சூரியன் வெகுண்டு அதிகமான மழை அல்லது சுட்டெரிக்கும் வெப்பத்தை உருவாக்கி தண்டனையை ஏற்கவைக்கிறான்’ என்று சரகர் கூறுவார். இயற்கைச் சீற்றத்துக்கு அதர்மம் காரணம் என்பார் (தஸ்யமூலமதர்மா). ஒளிப்பிழம்புகள் இயல்பை மாற்றவைக்கின்றன. சூரியனும் சந்திரனும் ஒருநாள்கூட ஓய்வு எடுக்காமல் முறையாக தங்களது செயல்பாட்டில் நிலையாக இருக்கிறார்கள்.

ஆறாவது அறிவு பெற்றவன், ஆறாத துயரத்தை தானே வரவழைத்துக் கொள்கிறான். ஆனால், அதற்கான காரணத்தை இயற்கையின் மீது சுமத்தி, தன்னை தூய்மையானவனாகப் பிரகடனப்படுத்திக் கொள்கிறான்.

இயற்கைச் சீற்றம் எப்போது உருவாகும் என்பதை வானவியல் விளக்கும். வேதத்தில் வானவியல் தகவல்கள் நிரம்பியிருக்கின்றன. புயல், அடைமழை, வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம், சுனாமி, வறட்சி, எரிமலை போன்ற இயற்கைச்சீற்றங்களை அது அடையாளம் காட்டும், முதலில் காற்று, பிற்பாடு மழை, காற்றுடன் இணைந்த மழை. ஆலங்கட்டி மழை, இடியுடன் கூடிய மழை,

மின்னல் பளிச்சிடும் மழை, வெயிலோடு இணைந்த மழை ஆகிய அத்தனை விளக்கங்களையும் வேதம் சொல்லும் (புரோவாதோ வர்ஷன் ஜின்வராவ்ருத்...).

? எனில், ஜோதிட சாஸ்திரத்தின் பங்களிப்பு என்ன?

வேதத்தின் அங்கமான ஜோதிடம் மூன்று பிரிவுகளில் விரிவடைந்திருக்கிறது. கணிதம், ஸம்ஹிதை, ஹோரை என்று குறிப்பிடுவார்கள். கிரகங்களின் போக்கை வரையறுப்பது கணிதம். மழை, வெயில் போன்றவற்றை வரையறுப்பது ஸம்ஹிதை. தனி மனிதனின் சுக துக்கங்களை மதிப்பீடு செய்வது ஹோரா.

வான சாஸ்திரத்துக்கு ஜோதிடம் என்று பெயர். அது, நாம் செயல்படும் சடங்குகளுக்கு நல்ல காலத்தைச் சுட்டிக்காட்டும். பஞ்சாங்கமும், முகூர்த்த சாஸ்திரமும் உரிய காலத்தை வரையறுத்துக் கூறும். அது நமது வாழ்க்கையில் இடையூறு இல்லாமல் முன்னேற ஒத்துழைக்கும். இயற்கைச் சீற்றங்கள் உதயமாகும் வேளையை சுட்டிக்காட்டும். அதை ஏற்று முன்னெச்சரிக்கையுடன் சீற்றத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பும் அளிக்கும்.

நூறு யோஜனை உயரமும், 60 யோஜனை பருமனும் கொண்ட மரக்கால் அளவில், 10 பங்கு கடலிலும், 7 பங்கு மலைகளிலும், 2 பங்கு சமவெளியிலும் மழை பொழியும் என்று சொல்லும் (தசபாகான் ஸமுத்ரேபர்வ தேஷூசஸப்தச. த்வெளபாதெளபுவிபர்ஜனய: ஏவம் வர்ஷதிசத்ரிதா). குறிப்பாக இந்த வருஷத்தில் நிருரிதி திக்கில் தோன்றிய வருண மேகம் அதிகமான மழையைத் தரும் என்று பஞ்சாங்க விளக்கம் தென்படுகிறது. அது, நம் அனுபவத்துக்கு வந்து அதன் தாக்கம் நம்மை நிலைகுலைய வைத்தது.

'ஹோரா’ என்ற பகுதி தனிமனிதனின் சுக துக்கங்களை வரையறுக்கும். அது உண்மையில் ஜோதிடம் அல்ல. அதாவது வானவியல் தகவல் அல்ல. வானவியல் தகவல்களை ஆராய்ந்து, அதன் தாக்கத்தில் மனித சிந்தனையின் மாற்றத்தை விளக்கி, அதன் பலாபலன்களை நிர்ணயிக்கும் ரிஷிகளின் சிந்தனையில் விளைந்த மதிப்பீடு; பலன் சொல்லும் பகுதி. அதற்கு ஆதாரம் வானவியல் ஆதலால் பலன் சொல்லும் பகுதியையும் ஜோதிடம் என்று சொல்கிறோம். காலப்போக்கில் அதுவே ஜோதிடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏடுகளில் இவை வெளிப்படுமே தவிர, வானவியலில் வெளிப்படாது.

கேள்வி - பதில்

? அப்படியென்றால் பஞ்சாங்கத் தகவலுக்கு வானவியல்தான் ஆதாரமா?

பஞ்சாங்கம் வானவியல் தகவல்களைத் தாங்கி வருகிறது. புது சிந்தனையாளர்கள், விஞ்ஞானத்தில் ஏற்பட்ட ஈர்ப்பில் பஞ்சாங் கத்தை 'பழைய பஞ்சாங்கம்’ என்று ஏளனமாகப் பார்க்கிறார்கள். விஞ்ஞானம் அறிமுகமாவதற்கு முந்தைய காலங்களில் பஞ்சாங்கமே நமக்கு வழிகாட்டியாக இருந்தது. விஞ்ஞானம் ஒருநாள் மாறுபாட்டை சந்திக்கும். பஞ்சாங்கம் என்றைக்கும் உண்மையான வானவியலையே வெளியிடும்.

பண்டைய பண்பின் வாசனையற்ற சிந்தனைகள் அதை ஏற்க மறுக்கும். அந்த அறியாமையை அகற்றி, ரிஷிகள் மதிப்பீடு செய்த பஞ்சாங்கங்களை ஏற்று, இயற்கைச் சீற்றங்களில் இருந்து நம்மைக் காப்பற்றிக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது கோணம்...

விஞ்ஞானத்தின் துணையில் வானவியல் விரிவாக்கம் பெற்று, ஒவ்வொரு நொடியிலும் வானவியல் மாற்றத்தை பகிர்ந்து அளிக்கிறது. பழைய பஞ்சாங்கத்தால் இயலாததை அது அளித்து வெற்றி கண்டு இருக்கிறது. விஞ்ஞானத்தில் நாட்காட்டி (காலண்டர்) உருவானவுடன் பஞ்சாங்கம் மறைந்துவிட்டது. கைபேசி மூலம் வானவியல் தகவல்களை நொடியில் தெரிந்து கொள்ளலாம்.

? பஞ்சாங்கம் மறைந்துவிட்டது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

உலகளாவிய முறையில் வளர்ந்தோங்கிய வானசாஸ்திரத்தின் மூலம் உலகச் சுற்றுச்சூழலின் மாற்றத்தை உடனே அறிந்து நிவாரணம் தேட முடிகிறது. ஆகாசம் உலகளாவிய பூதம். அதன் தாக்கத்தையும் ஆக்கத்தையும் விஞ்ஞான வழியில் அறிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது உலகம். அதை பஞ்சாங்கத்தால் ஈடு செய்ய இயலாது. தற்போது, கணனம் அறிந்து பஞ்சாங்கம் கணிப்பவர்களை விரல்விட்டு எண்ணலாம். அவர்களும் கணனத்தை ஒதுக்கிவிட்டு கணினி யின் உதவியை நாடுகிறார்கள். விஞ்ஞானம் தந்த (எபிமரிஸ்) விளக்கத்தை ஏற்று பஞ்சாங்கத்தை உருவாக்குபவர்களும் உண்டு. கணனத்தில் தேர்ச்சி பெற்றவர்களும் விஞ்ஞானத்தின் துணையோடு செயல்படவே விரும்புகிறார்கள். பஞ்சாங்கத்தை ஒப்புக்கு வாங்கி வைத்துக்கொண்டிருப்பார்கள்.

இன்னும் சிலர் பஞ்சாங்கத்தைப் பார்க்க புரோஹிதரின் உதவியை நாடுகிறார்கள். புரோஹித வர்க்கமும் கைப்பேசியில் பஞ்சாங்க விளக்கங்களை ஏற்று செயல்படுகிறார்கள். நேரம் காலம் குறிப்பிடுவதற்கும், கைபேசியைப் பார்த்து செயல்படுகிறார்கள். இன்றைய சூழலில் பஞ்சாங்கத்தைப் பார்த்து தெரிந்துகொள்ள விஷயங்கள் ஒன்றும் இல்லை. நாட்காட்டியும் கைபேசியும் போதும். அத்துடன், அத்தனை சானல்களும் பஞ்சாங்க விளக்கங்களைத் தந்து கொண்டிருக்கின்றன. ஆக, வளர்ந்துவிட்ட வானவியல் விஞ்ஞானத்தைத் தெரிந்து கொண்ட புதுத் தலைமுறையை, பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பஞ்சாங்க விளக்கங்களை ஏற்கச் செய்வது கடினம்.

? 'பஞ்சாங்க குறிப்பு பலித்துவிட்டது’ என்று சமூகவலைதளங்களில் பெருமையுடன்  பகிர்ந்துகொள்பவர்களில்  பெரும்பான்மையினர் புதுத் தலைமுறையினரே என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒருசில விஷயங்களில் வேண்டுமானால் பஞ்சாங்கக் குறிப்புகள் அவர்களைக் குதூகலப் படுத்தியிருக்கலாம். ஆனால், அதில் நிறைய குறைபாடுகள் உண்டு.

மாத தேதிகளைப் பொறுத்தவரையிலும் 32 என்றும் 31, 30 அல்லது 29 தேதிகள் என்றும் பஞ்சாங்கம் மாறுபாட்டை ஏற்கும். இத்தகைய குறிப்புகளும் பஞ்சாங்கத்துக்குப் பஞ்சாங்கம் மாறுபடும். ஒரு பஞ்சாங்கம் ஒரு மாதத்துக்கு 32 தேதியைக் காட்டினால், இன்னொரு பஞ்சாங்கம் அதே மாதத்துக்கு 31 தேதிகளைக் காட்டும். ஒரு பஞ்சாங்கத்தில் இன்று மாதப் பிறப்பு என்று சுட்டிக் காட்டினால், மற்றொரு பஞ்சாங்கம் அடுத்த நாளை மாதப் பிறப்பாகக் காட்டும். இதுகுறித்து கேட்டால், பலதரப்பட்ட விளக்கங்களை அளித்து தனது முடிவு சரியானது என்பார்கள். மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்து தவிப்பார்கள்.

ஒரு பஞ்சாங்கத்தில் இன்று கரிநாள் என்று இருக்கும்; மற்றொன்றில் மறுநாள் கரிநாளாகக் குறிக்கப்பட்டிருக்கும். வானவியல் மதிப்பீடு ஒன்றாகத்தான் இருக்கமுடியும். ஆனால் பஞ்சாங்கம் இரண்டாகச் சொல்லும். மொத்தத் தில் பஞ்சாங்கத் தகவல்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன. பண்டைய பண்பாட்டை பாதுகாக்க விரும்பும் மகான்களும் தங்களுக்காக ஒரு பஞ்சாங்கத்தைத் தேர்வு செய்கிறார்கள். ஆகாச பூதம் ஒன்று, வானவியல் ஒன்று, அதன் கணக்கு ஒன்று என்பது பொருந்தும். ஆனால், நடைமுறையில் வானவியலை விளக்கும் பஞ்சாங்கமானது சந்தேகமற்ற முடிவை தெரியப்படுத்துவதில் முன்னேறவில்லை. அதில் எங்கு குறை என்று ஆராயவும் முடியவில்லை.

கேள்வி - பதில்

இப்படி தெளிவற்ற பஞ்சாங்கத்தை கட்டிக் காப்பதை விடவும் விஞ்ஞான விளக்கங்களை நம்புவது சிறப்பு. நாளை மழை வரும், புயல் தோன்றலாம், விட்டுவிட்டு மழை பொழியும் போன்ற தகவல்களை நொடிக்கு நொடி விளக்கும் விஞ்ஞான ரீதியிலான வானவியல் தகவல்கள் தான் நாம் எச்சரிக்கையாக இருப்பதற்கு உதவுகின்றன.

மூன்றாவது கோணம்...

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தின் விளக்கம் பஞ்சாங்கம். நமது செயல்பாடுகள் வெற்றிபெறுவதற்கு உகந்த காலத்தை வரையறுக்க இந்த ஐந்தும் தேவை. நமக்குத் திறமை இருந்தாலும், காலத்தின் பங்கும் சேரும்போது முழு நிறைவை எட்டும். இந்த ஐந்தும் வானவியல் விளக்கம்.

நம் முன்னோர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே வான சாஸ்திரத்தைக் கையாண்டவர்கள். பரம்பரை பரம்பரையாக குரு சிஷ்ய வடிவில் பஞ்சாங்க கணனம், அதன் பொலிவு குன்றாமல் தொடர்கிறது. விஞ்ஞானம் பிறப்பதற்கு முன்பே நம்மூர் வானவியல் பண்டிதர்கள் பஞ்சாங்கத்தைக் கணித்து உதவி புரிந்திருக்கிறார்கள். இயற்கைச் சீற்றங்களை அன்றைய நாளிலேயே கணித்து அறிவித்தவர்கள் அவர்கள்.

? ஆனாலும்... விஞ்ஞானம் தரும் துல்லியம் அவர்களின் விளக்கங்களில் இருக்குமா?

விஞ்ஞானம் தோன்றாத நாளிலேயே நுணுக்கமாகக் கணித்து உண்மையைக் கண்டு உலகுக்கு அளித்திருக்கிறார்கள். குத்து விளக்கின் பிரகாசத்தில் சோழிகளைக் கையாண்டு, நொடிப் பொழுதில் கணனம் செய்து வானவியல் அதிசயங்களை எடுத்துக் கூறுவார்கள். அவர்களது புத்திகூர்மையானது எல்லாவற்றிலும் ஊடுறுவி அத்தனை விஷயங்களையும் அறிந்து மூளையில் சேமித்துவிடும். தருணம் வரும்போது, அதை உள்ளது உள்ளபடியே வெளியிட்டு உலகத்துக்கு உதவுவார்கள்.

விஞ்ஞானம் புத்திகூர்மையை உருவாக்காது. அதற்கு மாறாக யந்திரக் கருவிகளை அளித்து, அதன் முடிவை ஏற்கவைக்கும். பண்டிதன் ஒருவன் வாயிலாக உண்மைத் தகவலை அறிந்து அந்தக் கணினிக்கு ஊட்ட வேண்டும். ஊட்டிய விஷயத்தை மட்டுமே அந்தக் கணினி வாந்தியெடுக்கும். பழுதுபட்டால் வாந்தியும் பழுதுபடும்! மனித மூளைதான் கணனத்தைச் செய்ய வேண்டும். அதை வாங்கி திருப்பி அசைபோடும் தகுதிதான் கணினிக்கு உண்டு. அதற்கு சைதன்யமோ மூளையோ இல்லை. சுயமாகச் சிந்தித்து நீக்குபோக்கோடு அலசி ஆராயும் திறனை இன்று வரையிலும் எவரும் கணினிக்கு ஊட்டவில்லை. தீர்மானமான தகவல்களை மட்டுமே அது ஏற்கும்; சூழலுக்கு உகந்தபடி தெரிந்து கொள்ளும் தகுதி இருக்காது. மனித மன வளம் செய்யவேண்டிய காரியத்தை விஞ்ஞானம் செய்யாது. விஞ்ஞானக் கருவிகளும் விஞ்ஞானத்தின் சித்தாந்தமும் காலத்தில் மாறுபாட்டை சந்திக்கும். அது என்றும் நிரந்தரமில்லை. புதிய கண்டுபிடிப்பெல்லாம் விஞ்ஞானத்தின் சாதனையல்ல. இதுவரையிலும் அதுபற்றி தெரிந்துகொள்ளாத குறை இப்போது நிறைவானது என்றுதான் பொருள். விஞ்ஞானம் எதையும் உருவாக்காது. உருவாக்கியதை சுலபமாக விளக்கும்.

? விஞ்ஞானத் தகவல்கள் மாறுபடும் என்று எதைவைத்துச் சொல்கிறீர்கள்?

நம் முனிவர்களின் அறிவாற்றலில் விளைந்த பஞ்சாங்கத்தைப் பற்றி தெரியாதவர்களின் மதிப்பீடு ஏற்கத்தக்கது அல்ல. எரிபொருளானது விறகில் இருந்து மாறுபட்டு கியாஸ் (ரீணீs) வரையிலும் படிப்படியாக மாறி இருக்கிறது. விஞ்ஞானத்தின் வெகுமதியான கியாஸ் மூலம் எத்தனை விபரீதங்கள் நிகழ்கின்றன. பொருளாதாரச் சுமையையும், சுகாதாரமின்மையையும் நாம் ஏற்க வேண்டியிருக்கிறது. இப்படி மாற்றுக் கருவிகளை ஏற்கும்போது, பல இடையூறுகளையும் பொறுத்துக்கொள்ள வேண்டியது இருக்கிறது. இப்படியான விஞ்ஞான உபகரணம் ஒருநாள் மறைந்துவிட்டால் வேறு வழியின்றி விறகுக் கட்டையை ஏற்கவேண்டி வரும்; இயற்கை தந்த விறகை ஒதுக்க இயலாது. மின்சாரம் பறிபோனால் அகல்விளக்கு பயன்படும். கணினியில் வைரஸ் தாக்கினால் அதில் சேமித்த தகவல்கள் அனைத்தும் அழிந்துவிடும். பிறகு, அதில் மீண்டும் கணிதத்தை ஊட்ட வானவி யல் பஞ்சாங்க பண்டிதன்தான் கைகொடுக்க வேண்டும்.

மெய்ஞ்ஞானத்தில் இருந்து வெளிவந்த வானவியல் தகவலில் உருவானது இந்திய கணிதமுறை. அது என்றும் அழியாதது. பஞ்சாங்கம் எப்போது எழுதத் துவங்கினார்கள் என்பது நமக்குத் தெரியாது. வேத காலத் திலிருந்தே தொடர்ந்து வரும் பஞ்சாங்க கணிதத்தை கையாளுபவர்கள் அபூர்வம். பஞ்சாங்க கணிதத்தில் பரிச்சயம் இல்லாத ஒருவன் அதை மதிப்பீடு செய்வது தவறு. விஞ்ஞானத்தை நம்புபவர்கள் பெரும்பாலும் பழைய சித்தாத்தங்களின் பெருமை தெரியா தவர்கள். இவர்களது மதிப்பீடுகள் புதிய தலைமுறைக்கு உண்மையாகப்படும்.  அதை வைத்துக் கொண்டும் பழம்பெரும் பொக்கிஷத்தை குறை கூறுவது தகாது.

கேள்வி - பதில்

பஞ்சாங்கத்தில் மழையின் அளவு, பயிர்களின் அளவு, விலைவாசியின் ஏற்றம். இயற்கைச் சீற்றங்கள் அத்தனையும் விளக்கப்பட்டு இருக்கும். இன்றைய நாகரீகம் பெற்றவர்கள் பஞ்சாங்கத்தைப் பார்க்கமாட்டார்கள். அதில் அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை.

கணினியில் ஏற்றி செயல்படும் விஞ்ஞானம் சில வருடங்களிலேயே தோல்வியைச் சந்திக் கும். அவர்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்க பழைய பஞ்சாங்க கணன முறை செழிப்பாக இருக்கவேண்டும். அதைப்பார்த்து தெரிந்து கொள்ளாவிட்டாலும், வான சாஸ்திரத்தின் பெருமை குன்றாமல் இருக்க பஞ்சாங்கம் வேண்டும்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

வானவியல் விளக்கவுரையாக பஞ்சாங்கம் திகழ்கிறது. அதற்கு மாற்றாக விஞ்ஞான வழியில் அதன் விளக்கவுரையை தெரிந்து கொள்ள முற்பட்டாலும் அது நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்காது.

மனித மனவளம் கணித்து இறுதி முடிவை எட்டுவது நம்பிக்கைக்கு உகந்தது. விஞ்ஞானம் தலை எடுக்காத நாட்களில் கிரஹணத்தை அறிந்துகொண்டோம், செயல்பட்டோம். இன்றும் பஞ்சாங்கத்தில் தென்படும் கிரஹண விளக்கம் நமக்குப் பயன்படுகிறது. மழை வருவதை முன்னமேயே கணித்து விவசாயத்தை செம்மையாகப் பயன்படுத்தினோம். இப்படி பண்டைய நாளில் இடையூறின்றி வெற்றிபெற பயன்பட்டது. இன்றும் பயன்படுகிறது. நாளையும் பயன்படும். விஞ்ஞானத்துக்கு அந்தப் பெருமை கிடைக்காது. சிந்தியுங்கள், தெளிவுபெறுவீர்கள்.

பதில்கள் தொடரும்...