அப்பர் சுவாமிகளுக்கு தெப்பத் திருவிழா! எஸ்.கண்ணன்கோபாலன்
நெல்லையப்பரிடமும் காந்திமதி அம்பிகையிடமும் பூரண பக்தி கொண்டிருந்த வடமலையப்ப பிள்ளை குறித்தும், திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருந்த விலை உயர்ந்த ஆபரணங்களையும் ஐம்பொன்னால் ஆன செந்திலாண்டவரின் விக்கிரஹங்களையும் டச்சுக்காரர்கள் கொள்ளை அடித்துச் சென்றுவிட, வடமலையப்ப பிள்ளை அந்தச் சிலைகளை எப்படி மீட்டு வந்து ஆலயத்தில் சேர்த்தார் என்பது குறித்தும் சிலிர்ப்புடன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் சங்கரன்.
''டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் கோயிலைக் கொள்ளை அடித்த செய்தியைக் கேள்விப்பட்ட திருமலைநாயக்கர், அப்போது திருநெல்வேலியில் தன்னுடைய பிரதிநிதியாக இருந்த வடமலையப்ப பிள்ளையை அழைத்து, டச்சுக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, திருச்செந்தூர் கோயிலில் இருந்து அவர்கள் கொள்ளை அடித்துச் சென்ற ஆபரணங்களையும், செந்திலாண்டவரின் விக்கிரஹங்களையும் மீட்டுக் கொண்டு வருமாறு சொல்லி அனுப்பினார். அவர் வருவதற்கு முன்பே டச்சுக்காரர்கள் அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர்.
திடீரென்று கடல் கொந்தளிப்பு ஏற்படவே, டச்சுக்காரர்கள் சென்ற கப்பல் கவிழ்ந்து, அவர்கள் கவர்ந்து சென்ற பஞ்சலோக விக்கிரஹங்கள் கடலில் விழுந்து மூழ்கிவிட்டன.
தான் வருவதற்கு முன்பே டச்சுக்காரர்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டதால், அவர்களிட மிருந்து விக்கிரஹங்களை எப்படி மீட்பது எனப் புரியாமல் மனம் வருந்திய வடமலையப்ப பிள்ளை, வேறு விக்கிரஹங்களைப் பஞ்சலோகத்தில் செய்து எடுத்துக்கொண்டு திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தார். டச்சுக்காரர்கள் கவர்ந்து சென்ற விக்கிரஹங்கள் கடலில் மூழ்கிவிட்டது பற்றி அவருக்குத் தெரியாது. இந்நிலையில், அவருடைய கனவில் செந்திலாண்டவன் தோன்றி, தான் கடலில் மூழ்கி இருப்பதாகவும், தான் மூழ்கி இருக்கும் இடத்தில் ஒரு எலுமிச்சைப் பழம் மிதக்கும் என்றும், மேலும் அந்த இடத்துக்கு மேலாக கருடன் வட்டமிடும் என்றும் கூறினார்.

மறுநாள், வடமலையப்ப பிள்ளை கடற் கரைக்குச் சென்று பார்த்தபோது, கனவில் முருகப்பெருமான் சொன்னது போலவே அடையாளங்கள் காணப்பட, தகுந்த ஆட்களுடன் சென்று, அந்த இடத்தில் கடலில் மூழ்கி இருந்த விக்கிரஹங்களை மீட்டெடுத்து கோயிலில் சேர்த்தார் பிள்ளை.
வென்றிமாலைக் கவிராயர் எழுதிய திருச்செந்தூர் தல புராணத்திலும், பிள்ளையைப் புகழ்ந்து எழுதப்பட்ட 'வடமலை வெண்பா’ என்ற நூலிலும் இந்த தெய்விகத் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன'' என்றார் சங்கரன்.
அடுத்து, 100 தூண்களுடனும் மத்தியில் நீராழி மண்டபத் துடனும் அமைந்த வசந்த மண்டபத்தின் பக்கம் வந்தோம். இங்கே நடைபெறும் அப்பர் சுவாமிகளைப் பற்றிய ஒரு சிலிர்ப்பூட்டும் தகவலை சங்கர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
''அப்பர் சுவாமிகளைக் கல்லில் பிணைத்துக் கடலில் எறிந்தபோது, 'கற்றுணைப் பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயமே’ என்று அப்பர் சுவாமிகள் பாடியதும், சிவபெருமான் அருளால் அந்தக் கல்லே தெப்பமாக மாறி அவரைக் கரை சேர்த்ததும் நமக்குத் தெரியும். அந்த அருள்நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் மாசி மகத்தன்று இங்குள்ள நீராழி மண்டபத்தில் அப்பர் தெப்பத் திருவிழா நடைபெறும்'' என்றார்.
அடுத்ததாக, நம்மை நெல்லையப்பர் சந்நிதிக்கு அழைத்துச் சென்ற சங்கர், சந்நிதிக்கு முன்பாக உள்ள மணி மண்டபத்தில் அமைந்திருக்கும் தூண் கூட்டங்களைக் காட்டி, ''இந்த மணிமண்டபம் நின்றசீர் நெடுமாற பாண்டியரால் கட்டப்பட்டது. இந்தத் தூண்கள் ஒவ்வொன்றும் ஒரு பெரிய தூணைச் சுற்றி உருவத்திலும் உயரத்திலும் வேறுபட்ட 48 தூண்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தூண்களைத் தட்டினால் சப்த ஸ்வரங்களும் ஒலிக்கும் என்பதால், இதற்கு இசைத் தூண்கள் என்று பெயர்'' என்று கூறிய சங்கர், அடுத்தபடியாக நம்மை அழைத்துச் சென்றது பொள்ளாப் பிள்ளையார் சந்நிதிக்கு. இந்தப் பிள்ளையார் சந்நிதியில் சாளரம் (ஜன்னல்) ஒன்று உள்ளது. அதை நம்மிடம் காட்டிய சங்கர், ''குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் இதன் வழியாக நுழைந்து வந்தால், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்'' என்று தெரிவித்தார்.

அடுத்து, அவர் நம்மை கயிலாய மலையை ராவணன் தூக்குவது போன்ற சிற்பம் இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். அதன் மேலாக சோமாஸ்கந்த மூர்த்த மாக இறைவன் திருக்காட்சி தருகிறார். ''இங்குதான் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரர், சேரமான் பெருமான் கயிலைக் காட்சி நடைபெறும்'' என்றார் சங்கர்.
''இந்தக் கோயிலில்தான் சுவேதகேது மகாராஜாவுக்கு யம பயம் நீக்கி, சிவபெருமான் அருள்புரிந்தார்'' என்று கூறிய சங்கர், சுவேதகேது மகாராஜாவின் சிலை இருந்த இடத்துக்கு நம்மை அழைத்துச் சென்றதுடன், சுவேதகேது பற்றிய புராண வரலாற்றையும் கூறினார்.
''சூரிய குலத்தில் தோன்றி யவன் சுவேதகேது. வயது முதிர்ந்த நிலையில் அரசுப் பொறுப்பை பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு, மனைவி யுடன் வானப்பிரஸ்தம் மேற் கொண்டான். பல தலங்களை தரிசித்தபடி வந்தபோது, வழியில் மனைவி மரணம் அடைந்தாள். அங்கேயே மனைவிக்கு உரிய கிரியைகளைச் செய்துவிட்டு, தன்னுடைய யாத்திரையைத் தொடர்ந்தான் சுவேதகேது.

ஆனாலும், மரணத் தறுவாயில் மனைவி பட்ட வேதனையை அவனால் மறக்கவே முடியவில்லை. தனது துன்பம் நீங்க வழி தெரியாமல் தவித்த சுவேதகேது, சுக்ராச்சார்யரிடம் வழி கேட்டான். அவரிடம் இருந்து மிருத்யுஞ்சய மந்திரம் உபதேசம் பெற்று, அதை ஜபித்தவாறு ஒவ்வொரு சிவத் தலமாக தரிசித்தபடி வந்து கொண்டிருந்தான்.
நெல்லையப்பர் கோயிலைத் தரிசிக்க வந்தபோது அவனு டைய ஆயுள் முடிய இருந்த தால், யமன் அவனுக்கு எதிரில் தோன்றி பாசக் கயிற்றை வீசினான். சுவேதகேது மன உறுதியுடன் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜபித்து, சிவ பெருமானை தியானித்தான். அப்போதும் யமன் சுவேத கேதுவை விடவில்லை. உடனே, நெல்லையப்பரின் லிங்கத் திருவுருவத்தில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான், யமனைக் காலால் உதைத்து, சுவேதகேதுவை தன் திருவடிகளில் சேர்த்துக் கொண்டார். நெல்லையப்பர் சுவேதகேதுவுக்கு அருள்புரிந்த திருவிளையாடல் வைகாசி மாதம் பூரம், உத்திரம், ஹஸ்தம் ஆகிய நட்சத்திரங்களில் மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது'' என்றார் சங்கர்.
பின்னர், ஆலயத்தின் மேற்குப் பிராகாரத்தில் ஆறுமுக நயினார் சந்நிதிக்கு நம்மை அழைத்துச் சென்று, அங்கிருந்த ஒரு தாள சக்கரத்தைக் காண்பித்து, விளக்கம் கூறினார்.

''இந்த தாளச் சக்கரம் நெல்லை மாவட்டம் பசுவந்தனையைச் சேர்ந்த பரத வித்வான் பிச்சாண்டி அண்ணாவி என்பவரால் நிறுவப் பட்டது. தாமரை வடிவத்திலான இந்தச் சக்கரத்தில் தாமரை இதழ்களில் தாளத்தின் ஆறு அங்க அடையாளங்களும், ஜதி பேதங்களால் உண்டான 35 தாளங்களும் செதுக்கப்பட்டுள்ளன'' என்றார். தாளச் சக்கரம் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்ததும், 'நம்முடைய முன்னோர்கள்தான் இசை மற்றும் நாட்டியக் கலைகளில் எந்த அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருந்தார்கள்’ என்ற பெருமிதத்தில் பூரித்துப் போனோம். நம்முடைய பூரிப்பை அதிகப்படுத்துவதுபோல் இருந்தது, அடுத்து நிறைவாக அவர் நம்மை அழைத்துச் சென்ற இடம்.
நெல்லையப்பர் கோயிலுக்கே சிகரம் போல் அமைந்திருப்பதும் ஆடல்பெருமானின் ஐந்து சபைகளில் ஒன்றாக அமைந்திருப்பதுமான தாமிரசபை, ஒரு பெரும் சிற்பக் கூடமாகவே திகழ்கிறது. இதன் மேற்கூரை முழுவதும் செப்புத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இந்தத் தாமிரசபையில்தான் பல சிற்பங்கள் அழகுறக் காட்சி தருகின்றன. ஒவ்வொரு சிற்பமும் மரத்தில் நுட்பமாகச் செதுக்கப்பட்டு, கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமை சேர்ப்பதாக உள்ளது.
தாமிரசபைக்குப் பின்புறத்தில் நடராஜப் பெருமானின் சிலா வடிவ சந்நிதி அமைந்திருக்கிறது. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்புடனே காட்சி தரும் நடராஜப் பெருமானின் திருவுருவத்தை மார்கழி மாதத்தில் ஆருத்ரா விழாவின்போது நடைபெறும் அபிஷேகத்தின்போது மட்டுமே தரிசிக்க முடியுமாம். அபிஷேகம் முடிந்ததுமே மறுபடியும் சந்தனக் காப்பு இடப்பட்டுவிடுமாம்.

தண்பொருநையாம் தாமிரபரணி தவழ்ந்தோடி செழுமை சேர்க்கும் திருநெல்வேலி காந்திமதி அம்பிகை உடனுறை நெல்லையப்பர் கோயிலில் தான் எத்தனை எத்தனை சிறப்புக்கள்! இவையும், இன்னும் இதுபோன்ற எண்ணற்ற ஆலயங் களில் பொதிந்திருக்கும் சிறப்புகளும் பலருக்கும் தெரியவேண்டுமே என்ற தவிப்புடனும் ஆதங்கத்து டனும் நெல்லையப்பர் ஆலயத்தில் இருந்து கிளம்பினோம்.
படங்கள்: எல்.ராஜேந்திரன்