Published:Updated:

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு..!

சபரி மலை யாத்திரை

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு..!

சபரி மலை யாத்திரை

Published:Updated:

பரிகிரிவாசன் ஐயன் ஐயப்பனைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், நேரே சபரிமலை சென்று ஐயனைத் தரிசித்துவிட்டு, அப்படியே திரும்பிவிடுகிறார்கள். ஆனால், ஐயனைத் தரிசிப்பதற்கு முன்பாக, சபரிமலைக்குச் செல்லும் வழியில் ஐயன் தொடர்புடைய மற்ற புனிதத் தலங்களையும் அவசியம் தரிசிக்க வேண்டும். இந்தப் புனிதத் தலங்கள் பெரும்பாலும் பெருவழிப் பாதையில்தான் அமைந்திருக்கின்றன. 

ஆனால், பெருவாரியான பக்தர்கள் பம்பை சென்று, அங்கிருந்து சபரிமலை செல்வதால் இந்தப் புனிதத் தலங்களை தரிசிக்க முடியாமல் போய்விடுகிறது. அவை ஒவ்வொன்றும் ஐயனின் அருளாடல்களின் பின்னணியில் அமைந்தவை ஆகும். அவற்றின் மகிமைகள் குறித்து விவரிக்கிறார் தீவிர ஐயப்ப பக்தரும், பிரபல பக்திப் பாடகருமான வீரமணி ராஜு.

'கார்த்திகை பிறந்தாச்சு! ஐயப்ப பக்தர்கள் எல்லாம் மாலை போடுகிற காட்சியை அங்கங்கே நாம் பார்த்துப் பரவசப்பட முடிகிறது. இங்கே முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது, இருமுடி சுமந்து ஐயன் ஐயப்பனை தரிசிக்கச் செல்பவர்கள், பெருவழிப் பாதையில் ஐயன் தொடர்பாக அமைந்திருக்கும் கோயில்களைத் தவிர, வேறு எந்தக் கோயிலுக்கும் செல்லக்கூடாது. ஐயப்பனை தரிசித்து இருமுடியில் கொண்டு செல்லும் நெய்யை ஐயப்பனிடம் சேர்ப்பித்த பிறகே மற்ற தலங்களுக்குச் செல்லவேண்டும். அதற்கேற்ப நம்முடைய பயணத் திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு..!

காட்டுப் பாதை என்று சொல்லப்படும் பெருவழிப் பாதையில் இருந்தே ஐயன் ஐயப்பனின் சந்நிதிக்கு புனிதப் பயணம் தொடங்குவோம். முதலில் நாம் சேரும் தலம் பந்தளம்.

•  பந்தளம்:

ஐயப்பன் வளர்ந்த இடம்தான் இந்தப் பந்தளம். செங்கனூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது. பெரும்பாலான பக்தர்கள் பந்தளத்தைத் தவிர்த்துவிட்டு, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் வழியாக சபரிமலைக்கு வந்து செல்கிறார்கள்.

பந்தளத்தில் அமைந்துள்ள சந்நிதியில், புலியுடன் நிற்பதுபோல் காட்சி தருகிறார் மணிகண்டன். பந்தள மகாராஜாவிடம் வளர்ந்தபோது, தாம் கடவுளின் அவதாரம் என்று தெரியாமலேயே, சுமார் 12 ஆண்டுகள் ஓடி ஆடி விளையாடி புனிதம் சேர்த்த இடம் இது. மணிகண்டனாக வளர்ந்த அரண்மனையும், அவர் படித்துப் பயன்படுத்திய ஓலைகளும் இன்னும் அங்கு உள்ளன. அங்குள்ள குளமானது, ஐயப்பன் குளிப்பதற்காகவே ஏற்படுத்தப் பட்டதாகும். அந்தக் குளத்தின் நீர் எப்போதுமே வெதுவெதுப்பாக, இதமாக இருக்கும் என்பது தனிச் சிறப்பு.

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு..!

•  புலிகுன்னூர்    (புலிகுன்று):

பந்தளத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் புலி குன்னூர் அமைந்திருக்கிறது. புலிப்பால் கொண்டு வருவதற்காக, ஐயப்பன் சுமார் ஆயிரக்கணக்கான புலிகளுடன் வந்ததும், பின்னர் அந்தப் புலிகளைத் திரும்பக் கொண்டு சென்று விட்டபோது, ஒரு புலி இந்திரனாகவும், ஒரு புலி வாயுவாகவும்... இப்படி ஒவ்வொரு புலியும் ஒவ்வொரு தேவனாக மாறி மறைந்த இடம்தான் இந்தப் புலிகுன்னூர். மணிகண்டன், புலியுடன் வந்து கீழே இறங்கிய போது, அவரது வலது பாதமும், புலியின் பாதமும் பதிந்திருப்பதே இந்த இடத்தின் சிறப்பு.

•  குருநாதன் முகடி:

புலிகுன்னூரில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது குருநாதன் முகடி. ஐயப்பன் குருகுலத்தில் படித்துப் பல வித்யைகளைக் கற்றுக்கொண்ட இடம். முக்கியமாக, குருநாதரின் வாய் பேச முடியாத குழந்தையைப் பேச வைத்து சாஸ்தா ஆசி வழங்கிய இடம் இதுதான். இந்த இடத்துக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றால், குழந்தைகளுக்குக் கல்வி ஞானம் வளரும் என்பது நிச்சயம். மணிகண்டனுக்குக் கல்வி கற்றுத் தருவதற்காகவே, அந்த குருநாதர் மதுரையில் இருந்து அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

•  பொன்னம்பல மேடு:  

ஐயப்பன் ஜோதியாய் இருக்கும் இடம்தான் இந்த பொன்னம்பல மேடு. இங்கு கண்ணுக்குத் தெரியாத பொற்கோயில் இருப்பதாகவும், இங்கு சாஸ்தா தியானத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. பொன் என்றால் தங்கம்; அம்பலம் என்றால் கோயில்; மேடு என்றால் மலை. பரசுராமர், இங்கு ஐயப்பனைக் கற்சிலையாக வடித்து ஆவாஹனம் செய்து பூமிக்கடியில் வைத்ததாக புராணக்கதைகள் கூறுகின்றன. சாஸ்தா சிலையை ஆவாஹனம் செய்யும்போது, பரசுராமர் பாடிய பாடல்தான் 'லோகவீரம் ஸ்லோகம்’. அதனால், இங்கே 'லோகவீரம் ஸ்லோகம்’ சொல்லி நாம் எது வேண்டினாலும், அது நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கடந்த இரண்டு வருடங்களாக இந்த இடத்துக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு..!

•   எருமேலி:

சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள், எருமேலியிலிருந்து காட்டுவழிப் பாதையாக நடந்து செல்வதையே ஆதியில் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த வழியிலேயே பந்தளராஜா, மணிகண்டனைக் காண சபரிமலைக்குச் சென்றதால், பக்தர்களும் அந்த வழியையே பின்பற்றி

வருகிறார்கள். இவ்வழியாக நடந்து சென்றால் உடலும் மனமும் தூய்மை அடைவதை அனுபவபூர்வமாக உணரலாம். மணிகண்டன், மகிஷியோடு போரிடும்போது, முதல் அம்பை இங்கிருந்து எய்ததால், அதை நினைவுபடுத்தும் விதமாக மலைக்கு வரும் சாமிமார்கள் நடத்தும் 'பேட்டைத்துள்ளல்’ வைபவம், இங்கே விசேஷம்! இங்குள்ள சாஸ்தா கோயிலில், வேட்டைக்குச் செல்வதுபோல் அம்பும் வில்லும் ஏந்தி நிற்கும் உருவில் தர்மசாஸ்தா காட்சி தருகிறார்.

எருமேலியில் தர்மசாஸ்தாவுக்கு இரண்டு கோயில்கள் உள்ளன. மகிஷியின் தலைமையிட மாகக் கருதப்படும் இந்த எருமேலியில்தான், தர்மசாஸ்தா காட்டுவாசி கோலத்தில் சென்று, மகிஷியை வதம் செய்தார். எருமைத் தலை உடைய மகிஷியை வதம் செய்ததாலும், ஊரைச் சுற்றிலும் எருமையைக் கொண்டு வேலி அமைத்ததாலும், இவ்வூருக்கு எருமேலி என்று பெயர் வந்தது.

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு..!

•   காளைகட்டி:

எருமேலியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காளைகட்டி. மணிகண்டன், மகிஷியை வதம் செய்யும் காட்சியைக் காண சிவன் வந்தபோது, தனது வாகனமான காளையைக் கட்டிப்போட்டதால், இவ்வூருக்கு காளைகட்டி எனப் பெயர் வந்தது.  இங்கு சிவனுக்காக ஒரு கோயில் இருப்பது சிறப்பு.  

•  அழுதாநதி:

காளைகட்டியிலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது அழுதாநதிக் கரை. மகிஷியை வதம் செய்ய மணிகண்டன் எய்த அம்பு அவள் மீது பட்டதும், அவளிடமிருந்த தீய குணங்கள் எல்லாம் நல்ல எண்ணங்களாக உருமாறின. அதனால், தான் அதுவரை செய்த பாவங்களுக்காகத் தன்னை மன்னிக்கும்படி மணிகண்டனிடம் மண்டியிட்டு அழுதாள் அவள். அப்படி மகிஷி அழுத கண்ணீர்தான் அழுதா நதியாகப் பெருக்கெடுத்து ஓடுவதாக ஐதீகம். அதனால், அழுதா நதியில் நீராடினால், நாம் செய்த பாவங்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை. அழுதாமலை உச்சியில், இஞ்சிப்பாறைக்கோட்டை என்னும் இடத்தில், தேவன் வியாக்ரபாதன் என்னும் திருநாமத்துடன் ஐயப்பன் அருள்பாலிக்கிறார்.

•  கல்லிடங்குன்று:

ஐயப்பன், மகிஷியை வதம் செய்து தூக்கி எறிந்தபோது, அந்த உடல் விழுந்த இடம்தான் கல்லிடங்குன்று. விழுந்த உடல் பூதாகரமாக வளரத் தொடங்கியது. அதை மேலும் வளராமல் தடுக்க, ஐயப்பன் கல்லொன்றை எடுத்து அவ்வுடல் மீது எறிந்தார். அதன் நினைவாகவே, அழுதா நதியில் குளிக்கும் பக்தர்கள், கல்லொன்றை எடுத்துக்கொண்டு இங்கே கல்லிடுகிறார்கள். இங்குள்ள தலத்தில், பரசுராமர் பிரதிஷ்டை செய்த ஐயப்பனின் விக்கிர கங்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றையும் தரிசித்து ஐயப்பனின் பரிபூரண அருளைப் பெற்றுச் சிறக்கலாம்.

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு..!

இதற்குப் பிறகே பக்தர்கள் கடிமான கரிமலை  மீது ஏறி இறங்குவார்கள். கருணைக்கடலாம் ஐயனின் துணையுடன் கரிமலை ஏறி இறங்கியதும்   பம்பை நதி நம்மை வரவேற்கும்.

•  பம்பை ஆறு:

தர்மசாஸ்தா இம்மண்ணுலகில் மணிகண்ட னாக அவதரித்த இடம் இதுதான். இந்த இடத்துக்கு 'பம்பா சக்தி’ என்று இன்னொரு பெயரும் உண்டு. மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்ச மலைப் பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆறு  ஆலப்புழா, பந்தனம்திட்டா மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்தோடி, வேம்பநாட்டு ஏரியில் கலக்கிறது. எருமேலி யிலிருந்து பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர் களும், சாலக்காயம் வழியாக வரும் பக்தர்களும் பம்பா நதிக் கரையில்தான் சங்கமிக்கிறார்கள். இந்த நதிக் கரையில் இரவு முழுவதும் தங்குவதையும், உணவு சமைத்து உண்பதையும் பக்தர்கள் சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். முக்கிய மாக இங்குள்ள ஆஞ்சநேயர், சபரிமலை ஐயப்பனை நோக்கியே எழுந்தருளி இருக்கிறார். ராம அவதாரத்தில், பிற்காலத்தில் தாம் இங்கு வரப்போவதாகவும், அப்போது தன்னைக் காண வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்படியும், ஆஞ்சநேயருக்கு ராமர் அறிவுறுத்தியதாகப் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள கணபதி மற்றும் ராமர் கோயில்களில் வழிபட்டு, நீலிமலை ஏறலாம்.

•  நீலிமலை:

இந்த மலையில் வசித்த மாதங்க மகரிஷி, தன் மகள் நீலியுடன் சிவனை நோக்கித் தவம் மேற்கொண்டார். அதனால் அவளது பெயரைக் கொண்டே இந்த மலை, 'நீலிமலை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த மலைமீது ஏறுவது சற்றுக் கடினம்தான்! என்றாலும், நமது முழு பாரத்தையும் ஐயப்பன் மேல் போட்டுவிட்டு நாம் மலை ஏறத் தொடங்கினால், மிக எளிதாக ஏறிவிடலாம். இங்கிருந்து வலப்புறமாகப் பிரிந்து செல்லும் பாதைக்கு 'சுப்பிரமணியர் பாதை’ என்று பெயர். இந்த வழியில்தான், ஐயப்பன் கோயிலுக்குத் தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு..!

•  சபரி பீடம்:

நீலிமலையின் உச்சியில்தான் இந்தச் சபரி பீடம் இருக்கிறது.  அன்பு மிகுதியால் அண்ணல் ராமனுக்கு எச்சில் கனி தந்து, அவனருளால் ஏற்றம் பெற்றவள் சபரி அன்னை. அவள் இந்த மலையில் தங்கித் தவம் மேற்கொண்டு, ராமனின் தரிசனத்துக்காகப் பல ஆண்டுகள் காத்திருந்தாள். பரம பக்தையான சபரியின் அன்பை ஏற்று அவருக்கு மோட்சம் தந்தார் ராமபிரான். பின் னாளில், அந்த பக்தையின் பெயரே சபரிமலைக்கு நிலைத்துவிட்டது. இங்கிருந்து ஐயப்பனின் சந்நிதானம் வரை சமதளமான பாதைகள் இருக் கின்றன.  

•  ஐயப்பன் அம்பு எய்த மரம்:

நீலிமலையைக் கடந்து சபரிமலையில் நுழைந் ததும், 18ம் படி ஏறுமுன் தரிசிக்க வேண்டிய ஒன்று ஐயப்பன் அம்பு எய்த மரம். நெய்த் தேங்காயைச் சமர்ப்பிக்கும் குண்டத்தின் அருகில் உள்ளது இந்த மரம். இந்த மரம்தான் ஐயப்பன் அம்பு எய்த மரம். தமக்குக் கோயில் எழுப்ப ஐயன் அம்பு எய்தபோது, இந்த  இடத்தில்தான், இந்த மரத்தில்தான் அந்த அம்பு விழுந்தது. அதன்பிறகுதான், பரசுராமர் அங்கு ஐயப்பனைப் பிரதிஷ்டை செய்து, 18 படிகளை உருவாக்கினார்.

•  பதினெட்டாம் படி:

கோயில் சந்நிதானத்தை அடைந்ததும், நாம் முதலில் தரிசிப்பது  அங்கே கம்பீரமாக எழுந்து காட்சி தரும் பதினெட்டு படிகளைத்தான். இந்தப் படிகள் அனைத்தும் தங்கத் தகடுகளால் வேயப் பட்டுள்ளன. இந்தப் பதினெட்டு படிகளையும் நாம் ஏறும் முன்பு, அங்குள்ள கருப்பசாமியை வணங்கி, எல்லா தீய எண்ணங்களையும் அகற்றி, தேங்காய் உடைத்து, சரண கோஷத்துடன் ஏறத் தொடங்க வேண்டும். நாம் செய்த பாவங்கள் விலகி, ஆணவம் அகன்று, ஐயப்பனின் தரிசனம் நமக்குக் கிடைக்க வேண்டும் என்கிற அடிப்படை யில்தான், படி ஏறும் முன் தேங்காய் உடைத்து வழிபடுகிறோம். தலையில் இருமுடி சுமந்து செல்கிறவர்கள் மட்டுமே இந்தப் பதினெட்டு படிகளில் ஏறமுடியும்.

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு..!

•  மணி ரூபத்தில் ஐயப்பன்:

பதினெட்டாம் படி ஏறியதும் இரண்டு விசேஷங்களை நாம் தரிசிக்கவேண்டும். ஒன்று கொடிமரத்தில் அமைந்திருக்கும் குதிரை. மற்றொன்று 18ம் படிக்கு இடப்புறம் உள்ள ஆலய மணி!

ஆதியில் சபரிமலையில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் சிலை (பஞ்சலோக விக்கிரகம்), காலப் போக்கில் இயற்கைச் சீற்றத்தால் சற்று சேதமானது. 1950ம் ஆண்டு அந்தச் சிலை மேலும் சேதமடைந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அந்தச் சிலையை உருக்கி, மணியாக வடிவமைத்தனர். 18ம் படி இருக்கும் இடத்தில், வலம் இடம் என இருபுறமும் அங்கு மணிகள் இருக்கும். அதில், இடப் பக்கமாக உள்ள மணிதான், ஆதிகாலத்தில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பனின் திருஉருவச் சிலை.

•  கொடிமரம்:

18 படிகளையும் கடந்தால், நம் எதிரே தென்படுவது கொடிமரம்.  பரசுராமர் காலத்தில் இங்கே கொடிமரம் கிடையாது. பிற்காலத்தில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, பரசுராமரால் ஐயப்பன் அருகில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு இருந்த குதிரை, கொடிமரத்தின் மேல் வைக்கப்பட்டது.

18படிகள் ஏறி வந்ததும், முதலில் நாம் தரிசிக்க வேண்டியது இந்தக் கொடிமரத்தைதான்!

•  மூலஸ்தானமும் தவக்கோல தரிசனமும்:

ஐயப்பனுக்காக நாம் விரதம் இருக்கிறோம் என்று நாம் நினைப்பதே தவறான அபிப்ராயம். மாறாக, ஐயப்பன்தான் நமக்காக சபரிமலையில் தவம் இருக்கிறார். தனது மூன்று விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக்கொண்டு 'சின்முத்திரை’ காட்டுகிறார். 'சித்’ என்றால் 'அறிவு’ எனப் பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி 'சின்’ என மாறியது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான், இந்த 'சின்’முத்திரையாகும்.

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு..!

'சின்’ முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனைக் கண்குளிரத் தரிசிப்பது என்பது, பிறவிப் பயனை அடைந்த சந்தோஷத்தைத் தருகிறது. இந்தியாவில் உள்ள மற்ற கோயில்களைப் போல், சபரிமலை ஐயப்பன் கோயில் வருடம் முழுவதும் திறக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள் மாலை 5 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு, அடுத்து வரும் மலையாள மாதத்தின் 5வது நாளன்று நடை சாத்தப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் நடை பெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் இங்கு மிகவும் விசேஷமானவை.

ஒவ்வொரு மாதமும் நடை சாத்தும்போது, ஹரிவராசனம் பாடிவிட்டு, கிலோ கணக்கில் பசுமையான திருநீற்றை ஐயப்பன்மேல் சாத்துவார்கள். அத்துடன், ஐயப்பனின் சின் முத்திரையின் மேல் ஒரு ருத்திராட்ச மாலையைப் போடுவார்கள்.  இதற்கு தவக்கோலம் என்று பெயர். அப்போது, ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள். அந்த விளக்கானது, மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்கும் அதிசயம், தவறாமல் அரங்கேறுகிறது. கோயில் கதவு திறந்து, உலகத்தின்

பார்வை அந்தக் கோயிலுக்குள் நுழைந்ததும், ஐயப்பனின் தவக்கோலம் கலைந்துவிடுகிறது. அடுத்த நிமிடமே, அந்த விளக்கும் அணைந்து விடுகிறது. சின்முத்திரையின் மேல் போடப்பட்ட ருத்திராட்ச மாலையும் கை மாறி இருக்கும். இந்த அதிசயத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.

•  சங்கராந்தி நாள்:

ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகர சங்கராந்தி அன்று மட்டும், தியானத்திலிருந்து சாஸ்தா கண் திறப்பதாக ஐதீகம். அதன் தொடர் நிகழ்வாக, ஜோதி தெரிவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பு வரை, வானில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கும். ஆனால், ஜோதி தெரியும் வைபவத்தின் போது எல்லா நட்சத்திரங்களும் மறைந்து, ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் ஒளிரும். அப்படி ஒளிரும் நட்சத்திரமே சாஸ்தாவாக நம்பப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 15ம் நாள், இந்த ஜோதி நிகழ்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு..!

•  மஞ்சள் மாதா சந்நிதி:

ஐயப்பன் சந்நிதிக்குப் பின்புறம் மாளிகாபுரத் தம்மன் சந்நிதி உள்ளது. இந்த தேவியை மஞ்சள் மாதா என்றும் அழைப்பது உண்டு. மகிஷியின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி, ஐயப்பன் முன் மண்டியிட, அவளுக்கு மாளிகாபுரத்தம்மன் என்று ஐயன் பெயர் சூட்டி அருளினார் ஐயன். அதனைத் தொடர்ந்து அந்த தேவி, இங்கு மாளிகாபுரத்தம்மனாக எழுந்தருளினாள். மேலும், ஐயப்பனை மணக்கக் காத்திருக்கும் கன்னித் தெய்வமாகவும் திகழ்கிறாள். இங்கு மஞ்சள்பொடி தூவி, தேங்காய் உருட்டி வலம் வந்து கற்பூரம் ஏற்றி, பூஜை செய்ய வேண்டும். இந்த மாளிகாபுரத்தம்மன்  சந்நிதியில் வேண்டிக் கொண்டால், திருமண பாக்கியம் கைகூடும். இந்தச் சந்நிதியில் வைத்து பூஜிக்கப்பட்ட ஜாக்கெட் துணியை, திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் தைத்து அணிந்துகொண்டால், உடனடியாகத் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

•  நவகிரக சந்நிதி:

இந்தச் சந்நிதி, மஞ்சள் மாதா சந்நிதிக்குப் பின்புறம் உள்ளது. இங்குள்ள நவகிரகங்கள், பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை. ஜாதக ரீதியாக கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். தோஷம் உள்ளவர்கள், இந்தச் சந்நிதியில்  கொடுகொட்டிப் (ஒருவகையான மேளம் இசைத்து) பாடல் பாடி வழிபடுவது வழக்கம்.

•  மணிமண்டபம்:

மஞ்சள் மாதா சந்நிதியின் பின்புறத்தில் மணிமண்டபம் உள்ளது. இந்த இடத்தில்தான், ஆதிகாலத்தில் அகத்தியர் லலிதா சரஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தால், அல்லது ஸ்லோகம் சொன்னால், நாம் வேண்டியது நடக்கும்.

சபரிமலைக்கு மணி கட்டுவது என்று சொல்லு வது உண்டு. தாம் சபரிமலைக்கு வந்த நோக்கத்தை வேண்டுதலாகச் சொல்லி, இந்த மண்டபத்தில்தான் ஒவ்வொரு பக்தரும் மணி கட்டுகிறார்கள். இந்த மணியிலிருந்து எழும் ஓசையானது, நமது வேண்டுதல்களை எடுத்துச் செல்லும் ஓசையாக ஐயப்பனிடத்தில் மாறுவதாகவும்,  அதனால் குறைகள் தீர்ந்து வேண்டுதல்கள் யாவும் உடனுக்குடன் நடைபெறுவதாக நம்பிக்கை. சபரிமலையில் பிற இடங்களில் மணி கட்டுவதை விட, இந்த மணி மண்டபத்தில் கட்டுவதே சிறப்பு!

•  பிற கோயில்கள்:

இங்கிருந்து திருஆரன்முலா பார்த்தசாரதி கோயிலுக்குச் செல்லலாம். இங்கு தை அமாவாசை  மிகவும் விசேஷமாக கொண்டப்படுகிறது. அங்கிருந்து திருவல்லா வல்லப க்ஷேத்திரம் (கிருஷ்ணர் கோயில்) சென்று வழிபடலாம். அல்லது, பந்தளத்தில் இருந்து நெல்லை வழியாகத் திரும்பி னால், அங்குள்ள  ஆரியங்காவு, அச்சங்கோவில், குளத்துப்புழை ஆகிய தலங்களுக்குச் சென்று, சாஸ்தாவை தரிசித்துவிட்டு ஊர் திரும்பலாம்.  

•  ஆரியங்காவு:

கேரளாதமிழ்நாடு எல்லைப் பகுதியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. பரசுராமர் நிறுவியதாகக் சொல்லப்படும் மிக முக்கியமான ஐந்து தலங்களில் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலும் ஒன்று! சபரிமலையில் பிரம்மசாரியாகக் காட்சி தரும் ஐயப்பன், இத்திருக்கோயிலில் புஷ்கலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்தவராக மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இந்த மணக்கோல ஐயப்பனை தரிசித்தால், திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இக்கோயிலின் பூஜை முறைகள் கேரளா மற்றும் தமிழ்நாட்டு முறைப்படி நடைபெறுவது சிறப்பு.

•  அச்சங்கோவில்:

ஐயப்பன் படை வீடுகளில் ஒன்றாகத் திகழும் அச்சங்கோவில் தலத்தில், அரசனாகக் காட்சி தருகிறார் ஐயப்பன். கேரள மாநிலத்தில் இவ்வூர் அமைந்திருந்தாலும், நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.  மண்டல மகோற்ஸவ விழா, இத்தலத்தின் முக்கிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

ஐயப்பன் பயன்படுத்திய 'வாள்’ இத்திருத்தலத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு சிவன், பார்வதி சந்நிதிகளும் உள்ளன. இந்தச் சந்நிதிகளுக்குப் பின்னால், சுவாரஸ்யம் மிகுந்த பல கதைகள் உண்டு. இத்திருக்கோயில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.  

இவ்வூரில் விஷ ஜந்துக்கள் கடித்தால், யாருமே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவது இல்லை. மாறாக, இங்குள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று மணி அடித்தால், அந்தக் கோயிலில் உள்ள தந்திரி, மந்திரித்த தீர்த்தமும், சந்தனமும் தருவார். அவைதான் விஷக்கடிக்கான மருந்து. அதை அருந்தினால், உடலில் இருந்து முற்றிலுமாக விஷம் இறங்கி, உடல் பூரண குணமடைகிறது. இந்த நடைமுறை இன்றும் அந்த ஊரில் நடைமுறையில் உள்ளது.

•  கோட்டை கருப்பணசாமி:

அச்சங்கோவிலில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கோட்டை கருப்பணசாமி கோயில். இந்தக் கருப்பணசாமி, சிவனின் அம்சத்திலிருந்து வந்தவர். ஐயப்பனின் படைத் தளபதிகளில் முக்கியமானவர். இந்தச் சந்நிதிக்கு வந்து  கருப்பணசாமியிடம் நாம் எந்த வேண்டுதல் வைத்தாலும், அதை ஐயப்பனின் முன் வைத்ததற்குச் சமம்!

•  குளத்துப்புழை:

பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இத் தலத்தில் ஐயப்பன், குழந்தை வடிவமாகக் காட்சி தருகிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்தச் சந்நிதிக்கு வந்து வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. இங்கு உள்ள குளம், மிகவும் விசேஷமானது. இந்தக் குளம் ஐயப்பனால் உருவாக்கப்பட்ட குளம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் குளத்தில் உள்ள மீன்கள் எல்லாம் தேவர்களாகக் கருதப் படுகின்றன. நமது வேண்டுதல்களைச் சொல்லி, இந்தக் குளத்தில் உள்ள மீன்களுக்குப் பொரி போட்டால், நமது வேண்டுதல்கள் யாவும் நிச்சயம் பலிக்கும் என்பது நம்பிக்கை!

இத்தகு மகிமைமிகு சபரிமலை ஐயப்பனையும், ஐயனின் தொடர்பான அத்தனை கோயில்களையும் நாமும் தரிசிப்போம்; சாஸ்தாவின் பரிபூரண அருளுக்குப் பாத்திரமாவோம்!

தொகுப்பு: ரா.வளன்

படங்கள்: வீ.சக்தி அருணகிரி, எல்.ராஜேந்திரன்

நடை திறக்கும் நேரம்...

மண்டல பூஜை காலங்களில் கோயில் காலை 4.00 மணிக்குத் திறக்கும். நண்பகல் 12.30க்கு உச்சிக்கால பூஜை. பகல் 1.00 மணியிலிருந்து 4.00 வரை நடை சாத்தப்படும்.

மாலை 6.30க்கு தீபாராதனை. இரவு 10.30 மணிக்கு அதழ பூஜை. 10.50க்கு ஹரிவராசனம் (சுவாமி பள்ளி கொள்ளுதல்).

மகர விளக்கு தரிசனம்

இந்த மாதம் மண்டலபூஜைக்காக 16.11.15 மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். 27.12.15 இரவு 10 மணிக்கு நடை சாத்துவர்.

மகர விளக்கு வைபவத்துக்காக 30.12.15 மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். பிறகு 20.1.16 அன்று நடை சாத்தப்படும்.

மகர விளக்கு தரிசனம்: 15.1.16

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism