Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பிறந்த வேளையில் (லக்னம்) இருந்து 7ம் வீட்டில் வெப்ப கிரகம் அமைந்து இருக்கிறது. அதாவது பாப கிரகம் அமைந்துள்ளது. அதை (வெப்ப கிரகம்) ஒரு பாப கிரகம் முழுமையாக 7ம் பார்வையாகப் பார்க்கிறது. இந்த அமைப்பு பெண் ஜாதகத்தில் தென்பட்டால், அவள் தனது கணவனை இழப்பாள் அல்லது தாம்பத்தியத்தின் சுவையை இழப்பாள்; குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்காது என்கிறது ஜோதிடம். 

கணவனின் தகுதி இழப்பு அல்லது அவனது பிரிவு, இழப்பு  இதில் ஏதாவது ஒன்று அனுபவத்துக்கு வரலாம். அத்துடன், மனைவியின் ஒத்துழைப்பு இன்மையும், உடல் சுகாதாரம் இல்லாமையும், சிந்தனை மாற்றமும் இணைந்துவிடும். சுகத்தை உணர்வது மனம். அது, உணரும் தகுதியை இழந்தும் இருக்கலாம். தாம்பத்தியம் சிறக்காத தம்பதிகளில் மனப்பிணியும் காரணமாக இருப்பதை அறிவோம். வேலை நிமித்தமாகப் பிரிவு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் சிந்தனை மாற்றத்தால் விவாகரத்து நிகழ்வதும் உண்டு. அவளது கர்மவினை திருமணத்தில் இணையச் செய்து, தாம்பத்தியத்தில் இணைய வைக்காமல் செய்துவிடும்!

முன்னோர்கள் சொன்னார்கள்

உதாரணம் 1: இங்கு சூரியன் பாப கிரகம். லக்னத்தில் இருக்கும் சனி. 7ல் இருக்கும் சூரியனை, சனி (பாப கிரகம்) 7ம் பார்வையாக பார்க்கிறான். இது, தாம்பத்திய இழப்பை நடைமுறைப்படுத்திவிடும். லக்னத்தில் இருந்து 7ம் வீடு மேஷ ராசி; வரப்போகும் கணவனின் பிறந்த வேளை (லக்னம்). அதில் வெப்ப கிரகமான சூரியன் இருக்கிறான். அவன் 7ம் பார்வையாக பெண்ணின் லக்னத்தைப் பார்ப்பான். பெண்ணின் லக்னத்தில் பாப கிரகமான சனி அமர்ந்திருக்கிறான். இரண்டு லக்னங்களிலும் (ஆண்பெண் இருவரிலும்), ஒரு பாப கிரகம் இருந்து, ஒரு பாப கிரகம் பார்ப்பதால், அந்த ஆண்பெண் இருவரும் தாம்பத்திய சுகத்தைச் சுவைக்கும் தகுதியை இழந்துவிட்டார்கள். இந்தத் தகவலை அப்படியே ஒதுக்கி, ஜனரஞ்சகமான விளக்கங்களை அளித்து, பாமரர்களிடம் மாறுபட்ட கருத்தைத் திணிக்கும் ஜோதிட பிரபலங்களும் உண்டு.

முன்னோர்கள் சொன்னார்கள்

பிறந்த வேளையில் லக்னத்தை வைத்து உருவான பாவங்களை அப்படியே ஒதுக்கி, சந்திரனை வைத்து பாவங்களை உருவாக்கி ராசி பலனை விளக்கும் பிரபலங்களும் உண்டு. வராஹமிஹிரர் போன்றவர்களின் சட்டதிட்டங்களை அலட்சியப்படுத்தி, மக்களுக்கு உகந்த முறையில்  மாறுபட்ட பலன்களை வெளியிடும் ஜோதிட பிரபலங்களும் உண்டு. ரிஷிகள் முனிவர்கள் போன்றோர் நன்றாக ஆராய்ந்து, உரிய சான்றுகளுடன் பலனை இறுதியாக நிர்ணயம் செய்து தந்த விஷயங்களை ஆராய்ச்சி என்கிற பெயரில், தேவையற்ற விளக்கங்ளுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கு பிரபலங்களிடம் இருக்கக் கூடாது. அவர்கள் யாவரும் அறுசுவை உணவை தயார் செய்து விட்டார்கள். நாம் அவற்றைப் பகிர்ந்தளித்து, சுவைத்தால் போதும். சமைத்த உணவை திரும்பவும் சமைக்கவேண்டிய அவசியம் இல்லை.

லக்னத்தில் இருந்து 7ம் வீட்டுக்கு உடையவன் 8ல் அமர்ந்து இருக்கிறான். அவனை ஒரு பாப கிரகம் 7ம் பார்வையாகப் பார்த்தால், கணவனின் இழப்பு இருக்கும். அல்லது கணவனின் இணைப்பால் கிடைக்கவேண்டிய இன்பம் இருக்காது என்கிறது ஜோதிடம். இங்கு 7க்கு உடையவன் பாப கிரகமாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அவன் சுப கிரகமாகவும் இருக்கலாம்.

8ல் அமர்ந்த கிரகம் தனது இயல்பைச் செயல்படுத்தும் தகுதியை இழந்துவிடுவான். அமர்ந்த இடத்தின் பலனை அளிப்பதற்கு ஒத்துழைப்பவனாக மாறிவிடுவான்.

முன்னோர்கள் சொன்னார்கள்

எட்டு' ஆயுளை வரையறுக்கும்; தாம்பத்தியத்தின் உயிரோட்டத்தை முடக்கிவிடும். லக்னத்தின் இரண்டாம் வீட்டில் இருக்கும் பாப கிரகம் 7ம் பார்வையாக எட்டைப் பார்ப்பதால், அந்தக் கிரகமானது முழுத்தகுதியை இழந்து விடுகிறது. 7க்கு உடையவன் தவறான இடத்தில் இணைந்துவிடுகிறான். அவனுக்கு பாப கிரகத்தின் பார்வையும் சேர்ந்துவிடுகிறது. அவனது இயல்பு மாற்றத்துக்கு எட்டாம் வீடும், பாவ கிரக பார்வை யும் இடம் அளித்துவிடுகிறது. முடிவு கணவனை இழக்க நேரிடுகிறது.

முன்னோர்கள் சொன்னார்கள்

உதாரணம் 2: இங்கு 7க்கு உடையவன் 8ல் இருக்கிறான். இரண்டில் இருக்கும் சனி (பாப கிரகம்) தனது 7ம் பார்வையாக சுக்கிரனை (7க்கு உடையவனை) பார்க்கிறான். 7க்கு உடைய சுக்கிரன் தப்பான இடத்தில் (8ல்) அமர்ந்து இருக்கிறான். அவன் தனது தகுதியை இழந்துவிட்டான். தகுதி இழந்தவன், 7ம் பார்வையாக அவளது (லக்னம்) மாரக ஸ்தானத்தை (இரண்டை) பார்க்கிறான். அந்த இரண்டில் மாரக ஸ்தானத்தில் பாப கிரகம் சனி இருந்துகொண்டு சுக்கிரனை  ஏழாம் பார்வை யாகப் பார்க்கிறான். இங்கு 7க்கு உடையவன் தப்பான இடத்தில் இருந்து கொண்டும், இரண்டில் இருக்கும் பாப கிரகம் சுக்கிரனைப் பார்ப்பதும் தாம்பத்திய இன்பத்தை அழித்துவிடுகிறது.

முனிவர்களும் ரிஷிகளும் சொல்லும் பலன்கள் எப்படி நடைமுறைப் படுத்தப்படுகிறது என்று விளக்குவார்கள்.

முன்னோர்கள் சொன்னார்கள்

ஒரு நட்சத்திரத்தின் மிருகம் அதாவது யோனி பாம்பு. ஒரு நட்சத்திரத்தின் மிருகம் (யோனி) கீரி. பாம்புக்கும், கீரிக்கும் இருக்கும் பகை அந்த இரண்டிலும்தான் இருக்கும். அந்தப் பகை நட்சத்திரத்தில் இணைந்து, அந்த நட்சத்திரங்களை உடைய ஆண்  பெண்களிடமும் அவர்களிடையே பகையை உருவாக்கிவிடும். எனவே, திருமணம் கூடாது' என்று விளக்கமளிக்கும் பிரபலங்கள் பலரும், மிருகங்களின் இயல்பு எப்படி அவர்களிடம் (ஆண்  பெண்) எப்படி தென்படுகிறது என்பதை விளக்க மறுந்துவிடுகிறார்கள்.

ஆயில்ய நட்சத்திரம் கொண்ட பெண்ணை  மணந்தால் மாமியாருக்கு ஆகாது என்பார்கள். பெண்ணின் ரத்தபந்தம் கணவனோடு நின்றுவிடும்; மாமியாருக்கும் மருமகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மருமகளை வைத்துதான் மாமியார் என்ற பெயரை ஏற்கிறோம். ஆயில்யம் ரத்தபந்தம் இருக்கும் கணவனையும் தாண்டி, மாமியாரைத் தாக்குவது எப்படி என்ற விளக்கத்தை அளிக்கவும் எவரும் முற்படுவது இல்லை.

ஒரு மாமியாருக்கு இரண்டு மருமகள்கள். ஒருத்திக்கு ஆயில்யம். மற்றொருத்திக்கு வேறு நட்சத்திரம் என்று வைத்துக்கொள்வோம். ஆயில்ய நட்சத்திரம் கொண்ட மருமகள் மாமியாரை அழிப்பாளா அல்லது ஆயில்யம் அல்லாத மருமகளால் அந்த மாமியார் காப்பாற்றப்படுவாளா என்பதையும் அவர்கள் விளக்க வேண்டும்! பத்துப் பொருத்தத்தை வைத்துக்கொண்டு ஆடும் பகடை எங்கு இழுத்துச் செல்லும் என்று தெரியவில்லை!

27 நட்சத்திரங்களுக்கும் மிருகப் பொருத்தம் (யோனி) உண்டு. எல்லோரிலும் மிருக இயல்பு உண்டு. அப்படியிருக்க, மாமியார் மருமகளிடம் மட்டும் அது வெளிப்படும் என்ற விளக்கம் எப்படி பொருந்தும்? இதுகுறித்தும் நமக்கு விளக்கம் அளிப்பது இல்லை! மின்சாரம் தொடர்பில்தான் செயல்படும்; ஆயில்யம் நட்சத்திரமோ தொடர்பின்றி செயல்பட்டு விடும். அதுவும் மாமியாரில் மட்டும்! இதெல்லாம், நமது துரதிர்ஷ்டமே! தேவையில்லாத விஷயங்களில் எல்லாம் சீறி எழும் மக்கள் இதில் மெளனமாகி விடுகிறார்கள்!

முன்னோர்கள் சொன்னார்கள்

லக்னத்தில் இருந்து 7ல் செவ்வாய் இருந்தால் கணவன் இழப்பு இருக்கலாம் என்கிறது ஜோதிடம். கணவனின் ஆயுள் திடமாக இருந்தால், அதற்கு இழப்பு இருக்காது; தாம்பத்தியத்தில் இழப்பு இருக்கும். கணவனை இழக்கும் நிலை ஏற்பட, அவனது பிறக்கும் வேளையில் அற்பாயுள் யோகம் இருக்கவேண்டும். அதை அவனது ஜாதகம்தான் இறுதி செய்யவேண்டும். இணையும் பெண்ணின் ஜாதகம், தீர்க்காயுள் யோகம் கொண்ட புருஷனை அற்பாயுள் கொண்டவனாக மாற்ற இயலாது. கணவனின் ஆயுள் இழப்பை அவனது கர்மவினையே நிர்ணயிக்கும். அவனுடன் இணைந்த பெண்ணின் கர்ம வினையானது, அல்பாயுள் கொண்ட கணவனை ஏற்கவைத்து, கணவனின் இழப்பை நடைமுறைப்படுத்திவிடும். ஆக, பெண்ணானவள் தனது கர்மவினையின் பலனாக கணவன் இழப்பைச் சந்திக்கிறாளே தவிர, அது கணவனின் குறை இல்லை.

பண்பாட்டை தாறுமாறாக மாற்றினால், அதைப் புரட்சி என்பார்கள். விதவைக்குத் திருமணம் வாயிலாக வாழ்வளிப்பவரை, புரட்சியாளர் என்கிறார்கள். தற்போது அது சாதாரணமாகி விட்டது. தாலியைக் கழற்றி எறிந்தவளை

முன்னோர்கள் சொன்னார்கள்

இன்றைய மங்கை' என்று புகழ்ந்தார்கள். அந்தப் பெருமையும் தற்போது போய்விட்டது. சம்பிரதாயத் திருமணத்தை ஒதுக்கிவிட்டு, திருமணம் புரிந்தார்கள். அதுவும் புரட்சிப்பட்டம் பெற்றது.  ஆனால் இவற்றையெல்லாம், தற்போதைய சமுதாயம் பதிவுத் திருமணத்தைக் கட்டாயமாக்கி, செல்லாக் காசாக்கிவிட்டது.

பண்பை மீறிக் கிடைத்த புரட்சிப் பட்டம் அற்பாயுளில் முடிந்துவிடும். கற்பைப் புகழ்ந்து பாடியவர்கள், அது விவாகரத்துகளில் மறைந்ததை உணர்ந்து, அதை நினைவில் இருந்தே அகற்றிவிட்டார்கள். செவ்வாய் தோஷத்தில் கணவனை இழந்தவளுக்கு, மீண்டும் மறுமணமாக செவ்வாய் தோஷம் இருக்கும் கணவனை இணைத்துவைக்கும் ஜோதிட பிரபலங்களும் இருக்கிறார்கள். குற்றம் புரிந்த ஒருவன் தண்டனையை அனுபவிக் கிறான். அவன் அனுபவித்து முடித்தபிறகு மீண்டும் ஒருமுறை அவனை தண்டனைக்கு உட்படுத்த முடியுமா?

செவ்வாய், கணவனை இழக்கும் பலனை அவளுக்கு அளித்து அதை அவள் அனுபவித்த பிறகு, மீண்டும் அதே செவ்வாய் இரண்டாவது கணவனையும் அழிக்கத் துணியாது. ஒருமுறை நெருப்பை உருவாக்கி அணைந்துபோன தீக்குச்சி, மீண்டும் நெருப்பை வரவழைக்காது. ஆகவே, செவ்வாய் தோஷத்தால் விதவை யான பெண்ணுக்கு, மீண்டும் செவ்வாய் தோஷத்தைக் கவனத்தில் கொண்டு அதே தோஷம் கொண்ட கணவனைத் தேடி சேர்த்துவைப்பது தேவையற்றது. பரிசு விழுந்த சீட்டுக்கு மீண்டும் பரிசு விழாது.

ராஜ யோகம் ஒருவரை முதலமைச்சராக்கி வெளிவந்த பிறகு, மீண்டும் முதலமைச்சர் ஆக்காது; ஒருவேளை கவர்னராக மாறலாம்!

ஜோதிடம் இரண்டுவிதமான பலன்களைச் சொல்லும். ஜீவ பரமான பலன்கள், பொருள் சம்பந்தமான பலன்கள். அதாவது உணர்வு பூர்வமான பலன்கள், ஆடம்பரப் பொருள்களின் சேர்க்கையில் ஏற்பட்ட பலன்கள். எது திரும்பத் திரும்ப வரும்; எது ஒரு தடவையோடு நின்று\விடும் என்பதை ஆழமான ஜோதிட அறிவால் அறிய இயலும். இவற்றையெல்லாம் கையேடுகளால் விளக்க இயலாது. கையேடுகளை நம்பியவர்களே புரட்சி செய்வார்கள்! பண்டைய நாளில் முதல் மனைவி மறைந்த பிறகு, இரண்டாம் தாரத்துடன் நீண்ட நாள் வாழ்ந்தவர்கள் உண்டு.

உதாரணம் 3: கணவனின் லக்னமான ரிஷபத்தில் செவ்வாய் இருக்கிறான். அதன் 7... மனைவியின் லக்னம் (விருச்சிகம்). அதை செவ்வாய் 7ம் பார்வையாகப் பார்க்கிறான். அது கணவனின் மாரக ஸ்தானம். அதோடு கணவனின் ஆயுள் ஸ்தானம் 8 (தனுசு). அதையும் 8ம் பார்வையாகப் பார்க்கிறான். அது அவனது இழப்பை முடிவுக்குக் கொண்டு வருகிறது. செவ்வாயின் பார்வை வலுப்பெற்றது. அவனுக்குக் க்ரூரத்ருக் (குடூரப்பார்வை) என்று பெயர் உண்டு. 7ல் இருந்தால் கிடைக்கும் பலன் 7ஐ பார்த்தாலும் கிடைத்துவிடும்.  மனைவியின் லக்னத்தையும், தனது ஆயுளையும் (8) ஒருங்கே பார்ப்பதால் இடையூறின்றி இழப்பை ஏற்படுத்தி விடுகிறான். இது அவனது கர்ம வினையின் தாக்கம். அதேபோல், அந்தப் பெண்ணைப் பொறுத்தவரை யிலும் கணவனின் அன்பை இழக்கவைத்தது அவளது கர்மவினை.

ஒருவரது கர்ம வினை மற்றவரிடம் தென்படாது. தாலி பாக்கியம் கணவனின் உயிரைக் காப்பாற்றும் என்று விளக்குவர். தாலி கட்டாத திருமணங்களும் உண்டு.அங்கெல்லாம் பாக்கியம் எங்கிருந்து வரும்?! வீட்டையும் வாகனத்தையும் மாற்றுவது போல், விவாகரத்தில் மனைவிகளின் மாற்றத்தில், எந்த தாலி பாக்கியத்தை ஆராய

இயலும்? கணவனைத் துறந்தவுடன் தாலியும் இறங்கிவிடும்; புதுக் கணவனின் புதுத்தாலி ஏறி விடும். அந்தக் கணவனும் நிரந்தரம் இல்லை.

இப்படியிருக்க தாலி பாக்கியம் எப்படி நிரந்தரமாகும்?!

ரஜ்ஜு தட்டினால் தாலி பாக்கியம் இருக்காது என்று சொல்வார்கள். விவாகரத்தில் தாலியே தடுமாறும்போது ரஜ்ஜுப் பொருத்தம் ஏட்டுச் சுரைக்காயாக மாறிவிட்டது. இந்த ரஜஜுவை வைத்து எத்தனை திருமண இணைப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன?! ஆனால்,

முன்னோர்கள் சொன்னார்கள்

ரஜஜு' என்ற பொருத்தத்துக்கு விளக்கம் அளிக்க மாட்டார்கள். கையேட்டில் தென்படும் பலனை ஒப்புவிப்பார்கள். மற்றவர்களையும் அந்தக் கையேடுகளின் விளக்கங்களை வேத வாக்காக ஏற்கவைப்பார்கள்!

இப்படியெல்லாம் மாசு படிந்துபோன ஜோதிடம் தெளிவு பெற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு, முறையான ஜோதிட விளக்கத்தைக் கையாளுபவர்களும் தற்போது பெருகி வருகிறார்கள். அவர்கள், வருங்கால கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறார்கள்.

தொடரும்...