மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 5

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சோழர் கண்ட அற்புதம்!

றதி, மெளனம், காலம் ஆகிய மூன்றையும் உலகில் உயர்ந்தபட்ச பிரச்னைகளுக்கும் துயரங்களுக்குமான அருமருந்தாகச் சொல்லிவைத்திருக்கிறார்கள் பெரியோர்கள். ஆனால், முந்தைய நாள் பின்னிரவில் நடந்த சம்பவமும், பேராபத்து சூழ்ந்து கிடக்கும் சோழ மண்டலத்தின் தற்போதைய பிரச்னைகளும் எளிதில்  மறக்கடிக்கப்படக்கூடியவையா? அதிலும், இந்த தேசத்தையும் மக்களையும் உயிர்மூச்சாகக் கருதிக்கொண்டிருக்கும் சோழ மண்டலாதிபருக்கு இப்போது மறதி எனும் மாமருந்து  கைகொடுக்காதுதான்.

ஆனால் காலம் எனும் ஒளஷதம் இருக்கிறதே, அது அலாதியானது; தான் நிகழ்த்தும் அற்புதங்களால் எத்தகைய மனப் புண்களையும் ஆற்றிவிடும் வல்லமை படைத்தது. ஆனால், மணிமுடிச் சோழரோ, அதையும் புறந்தள்ளிவிட்டு இரண்டாவதான மெளன மருந்தை அல்லவா கையாள்கிறார். அது பலனளிக்கும் என்பதில் சிறிதும் உடன்பாடு இல்லை இளவரசி மானிக்கு.

மெளனம் என்பது எத்தகையது என்பதைப் பொறுத்தே அதன் பலன்களும் மாறுபடும். வெளியே வெகு ஆர்ப்பாட்டத்தையும் உள்ளுக்குள்ளே ஆழ்ந்த அமைதியையும் கொண்டது சமுத்திர மெளனம். அது ஆபத்தில்லாதது; சீற்றம் கொண்டாலும் பேரலைகளாய் தனது ஆக்ரோஷங்களை கரை தள்ளி தணித்துக் கொள்ளும். ஆனால் வெளியே அமைதி காட்டி, உள்ளுக்குள் அகோர ஆரவாரத்தை பொதிந்துவைத்திருக்கும் எரிமலை மெளனமோ அதிஆபத்தானது. அது எப்போது எப்படி வெடித்துச் சீறும் என்பது எவருக்கும் தெரியாது. தன்னையும் சுற்றத்தையும் எரித்துச் சாம்பலாக்கிவிடும் இத்தகைய மெளனத்தையே தன் தந்தையார் கைகொண்டிருக்கிறார் எனில், அதிலிருந்து அவரை மீட்கவேண்டியது வெகு அவசியம் என்பதை  மானி உணர்ந்தாள்.

சிவமகுடம் - 5

ஆகவே, முந்தையநாள் பின்னிரவில் பயங்கரமான அந்தச் சம்பவம் நடந்தது  முதற்கொண்டு விடியல் துவங்கிவிட்ட இந்த தருணம் வரையிலும், மணிமுடிச் சோழரை மட்டுமின்றி அந்த அறை முழுவதையும் வியாபித்துக்கொண்டிருந்த ஒட்டுமொத்த மெளனத்தையும் கலைக்க முடிவெடுத்தாள் இளவரசி மானி.

சட்டென்று தனது இடைக்கச்சை முடிப்பில் இருந்த சங்கத்தை எடுத்து தன் செம்பவள வாயினில் பொருத்தி வெகுஆரவாரமாக சங்கநாதம் எழுப்பினாள்.

`பூம் பூம்...' என்ற அதன் நாத ஒலியாலும், மன்னர்பிரானின்  அறையில் திடுமென சங்கொலிப்பதைக் கேட்டு, என்னவோ ஏதோவென்று பதைபதைப்புடன் காவல் வீரர்கள் விரைந்து அறைக்குள் புகுந்ததனால் உண்டான அரவத்தாலும் நிசப்தம் முற்றிலுமாகக் கலைந்துபோக,  ‘‘மானி... என்ன இது?’’ என்று சற்று சீற்றத்துடனேயே வினவினார் மணிமுடிச் சோழர்.

ஆனால், அவரது அந்தச் சீற்றத்தை சற்றும் கண்டுகொள்ளாமல் பெரிதாக நகைத்தவள், அந்த நகைப்பின் நிறைவாக தன்னிதழில் முறுவலிப்பு காட்டி, ‘‘ம்... திருப்பள்ளி எழுச்சி தந்தையே’’ என்றாள் கேலி பாவனையுடன்.

மணிமுடிச் சோழர் சலித்துக்கொண்டார். ‘‘குழந்தையே, விளையாடும் தருணமா இது?’’

இப்போது மானியின் முகம் சட்டென்று இறுகியது. சோழர் முதலில் தன் குரலில் சீற்றம் காட்டினாலும், மறுகணமே அவர் குரலில் வாஞ்சை இழையோடியதையோ, மிக்கப் பரிவுடன் அவர் தன்னை ஏறிட்டதையோ அவள் பொருட்படுத்தியதாகத் தெரிய வில்லை. இறுக்கம் தளராமல் பதிலுரைத்தாள்.

‘‘தருணத்தின் தீவிரத்தை தாங்கள்தான் உணரவில்லை தந்தையே’’

‘‘என்ன... நான் உணரவில்லையா?’’

‘‘ஆம்! நடப்பின் தீவிரத்தை தாங்கள் உணர்ந்து கொண்டிருந்தால், இப்படி நீண்ட நெடுநேரமாக காஷ்ட மெளனத்தில் ஆழ்ந்திருக்க மாட்டீர்கள்.’’

‘‘காஷ்ட மெளனமா?’’

‘‘ஆம்! எந்தக் கணத்தில், என்ன நிலையில் மெளனம் ஆட்கொள்கிறதோ, அதே நிலையில்... விழிகள் எதைப் பார்த்தனவோ அதையே வெறித்தபடி இருக்க... அவயவங்கள் எந்த நிலையில் இருந் தனவோ அப்படி அப்படியே சமைந்துபோக,   நாட்கணக்காக நீண்டு நிலைத்துவிடும் மெளனம்  அது என்பார்கள் துறவிகள். நல்லவேளையாக தங்களைப் பொறுத்தவரையிலும் எனது சங்க நாதம் அதற்கு இடம்கொடுக்காமல், உங்களை உசுப்பிவிட்டுவிட்டது.’’

சோழருக்குப் புரிந்தது. நேற்றைய நாளின் பின்னிரவில் எதிர்பாராத தருணத்தில் மானி இந்த அறைக்குள் பிரவேசித்ததும், தான் யூகித்த விஷயங்கள், திட்டங்கள் அனைத்தையும் ‘அஸ்திர வியூகம்' எனும் ஒற்றை வார்த்தைப் பிரயோகத்தால் பொடிப்பொடியாக்கி, அவை அனைத்தும் வீண்தான் என்று உணர்த்தியதும் அவர் நினைவுக்கு வந்தன.

சிவமகுடம் - 5

வார்த்தையை மட்டுமா பிரயோகித்தாள்? எவரும் எளிதில் கையாள முடியாத *சுழற்படை யையும் அல்லவா பிரயோகித்தாள்! அந்தப் படை சுழன்று சென்று, சாளரத்தின் திசையில் இருந்து பாய்ந்து வந்த குறுவாளுடன் மோதி அதை தரையில் வீழ்த்தியதும், பின்னர் மீண்டும் சுழன்று
சென்று மானியின் கரத்திலேயே அது அடைக் கலம் புகுந்ததும் அவரின் மனத் திரையில் நிழற் காட்சியாக விரிந்தன!

மானியின் சுழற்படை தாக்குதலும், அதைத் தொடர்ந்து மாதண்ட நாயகர்கள் சாளரத்தின் அண்டை பாய்ந்ததும், அடையாளம் காண முடியாத கரிய உருவம் ஒன்று காவிரியில் குதித் ததும் நினைவில் இருக்கிறது. ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என்பதை அனுமானிக்க இயலவில்லை அவரால். அப்படியே இருக்கையில் சாய்ந்தவர்தான். அவருடைய சிந்தனைகள் அவரை எங்கெங்கோ அழைத்து சென்று அலைக்கழிக்க ஆரம்பித்துவிட்டன.

காவிரியில் குதித்த சண்டாளன் யார்? யாரைக் குறிபார்த்து பாய்ந்தது அவன் வாள்? எதிரிகளைச் சேர்ந்தவன் எனில், உறையூர் வரையிலும் நீண்டுவிட்டதா பாண்டியனின் கரங்கள்? ச்சே...

ச்சே... அப்படி இருக்காது. பகைவன் என்றாலும் கூன்பாண்டியன் உன்னதமான வீரன். ஒருபோதும் இப்படி கோழைத்தனமாக முதுகில் குத்த எண்ணமாட்டான். அப்படியென்றால் அந்தப் பாவி யார்?

எல்லாவற்றுக்கும் மேலாக, மானி வேறு ‘அஸ்திர வியூகம்’ என்றாளே... பாண்டியனின் அந்தத் திட்டம் அவளுக்கு எப்படித் தெரிந்தது? ஒற்றறிவதற்காக இவளே பகைவர் தேசத்துக்குள் ஊடுறுவினாளா? அப்படி அவள் பாண்டியநாடு சென்றது உண்மையெனில், அங்கு அவளுக்கு ஏதேனும் ஆபத்து விளைந்திருந்தால் என்  நிலை என்ன ஆவது? சென்றது உண்மைதான் என்றால் மீண்டது எங்ஙனம்?

இப்படி, அடுக்கடுக்காக எழுந்த கேள்விகளும் அவற்றுக்கான பதிலைத்தேடிக் குழம்பிய தமது சிந்தனைகளுமே, தன்னை வெகுநேரம் ஆழ்ந்த மெளனத்தில் ஆழ்த்திவிட்டது என்பதைத் தெளிவாக உணர்ந்தார் சோழர் பிரான்.

பாவம் மானி! தனது இந்த நிலை, அவளையும் ஓய்வெடுத்துக் கொள்ளாதபடி செய்துவிட்டது போலும். உடுப்புகளையும் மாற்றிக்கொள்ளத் தோன்றாமல், எந்த கோலத்தில் பிரவேசித்தாளோ அதே கோலத்தில், தன்னருகிலேயே அவள் தங்கிவிட்டதையும் உணர முடிந்தது அவரால்.

தன் மேல் அவள் கொண்ட பாசத்தையும், தாய்நாட்டின் மீது அவள் கொண்டிருக்கும் நேசத்தையும், அதற்காக எந்தவித அபாயத்துக்கும் தன்னை ஆட்படுத்திக்கொள்ளத் துணிந்து விட்ட அவளின் தியாக உணர்வையும் எண்ணிய சோழரின் கண்களில், அவரையும் அறியாமல் நீர் துளிர்த்தது. நீர் திரையிட்ட கண்களோடு மகளை ஏறிட்டபோது, அவருடைய திருமுகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது.

ஒருவாறு சுதாரித்துக்கொண்டவர், கண்களின் நீரை துடைத்துவிட்டுக்கொண்டார். பின்னர்  கம்பீரமாக எழுந்து நின்று, மகள் மானியின் தோள்களை இறுகப் பற்றியபடி கேட்டார்.

‘‘சொல் மகளே... பாண்டியனின் அஸ்திர வியூகம் குறித்து எப்படித் தெரிந்துகொண்டாய். திருநாகைக்காரோணத்துக்குச் சென்றவள் அங்கிருந்து நம் காவலர்களும் அறியமுடியாதபடி மாயமாய் மறைந்துபோனதாக தகவல் வந்தது. பதறிப்போய்விட்டேன் நான். அங்கிருந்து எங்கு சென்றாய்? இவ்வளவு குறுகிய காலத்தில் சுழற்படை வித்தையை யாரிடம் கற்றுக் கொண்டாய். பட்டர்பிரானை எங்கு சந்தித்தாய்? இப்போது அவர் எங்கே?’’

சோழர் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக, அவரை கையமர்த்திய மானி, வெகு நிதானமாகப் பேசத் துவங்கினாள்.

தானும், தனக்கு மெய்க்காவலாக வந்த படைத் தலைவன் கோச்செங்கணும், அவனுடைய சகாக்களும் பகைவர் தேசம் புகுந்ததையும்,  கோச்செங்கணை ரிஷபகிரிக்கு அனுப்பிவிட்டு தான் தென்பாண்டி நாட்டின் கிழக்குக் கடற்கரை வரை சென்று மீண்டதையும், அங்கே தான் சந்தித்த அனுபவங்களையும், விஷயங்களைச் சேகரித்த விதத்தையும் அவள் சொல்லச் சொல்ல... எல்லாவற்றையும் கேட்டு பெரிதும் மலைத்துப்போனார் மணிமுடிச் சோழர்.

அதுமட்டுமின்றி, தான் வகுத்து வைத்திருக்கும் போர்த் திட்டங்களையும் இளவரசி தன் தந்தையிடம் விவரித்ததோடு, அவருடைய வலக்கரத்தைப் பற்றியிழுத்துக்கொண்டு அந்த மாளிகையின் மேல் தளத்துக்கு அவரை அழைத் துச் சென்றாள்.  

பகலவன் இன்னும் தன் கிரணங்களை பாய்ச்சவில்லை ஆதலால், அந்த வைகறைப் பொழுதில் ஒளிமங்கித் திகழ்ந்தது, மாளிகையின் மேல்தளம். அதன் ஒரு மூலைக்கு தந்தையை அழைத்துச் சென்று நிறுத்திய இளவரசி, மேல்தளத்தின் மையத்தில் அமைந்திருந்த தென்றல் மண்டபத்தின் சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த பந்தம் ஒன்றை கையில் எடுத்து வந்தாள். அதை மணிமுடிச் சோழரிடம் கொடுத்து, அந்தத் தீப்பந்தத்தை தலைக்கு மேலாக உயர்த்தி  இருமுறை அசைக்கச் சொன்னாள். அத்துடன் தூரத்தில் ஓர் இடத்தையும் அவருக்குச் சுட்டிக்காட்டினாள்.

மானி கூறியபடி மணிமுடிச்சோழர் தீப்பந்தத்தை அசைத்த மறுகணம், அவள் சுட்டிக்காட்டிய திசையில் ஓராயிரம் தீப்பந்தங்கள் எழுந்து அசைந்தன. அதைக்கண்ட மணிமுடிச்சோழரின் கண்கள் அகன்று விரிந்தன; வாய் அவரையும் அறியாமல் முணுமுணுத் தது... ‘‘அற்புதம்... அற்புதம்!’’

நீரில் எழுந்த உருவம்!

காவிரி நதியில் பிரிந்த கிளையாகத் திகழ்ந்த அந்தக் கால்வாய் ஆழமும் அகலமும் மிக்கதாக இருந்தது. பாசனப் பயிர்கள் செழிக்க நுங்கும் நுரையுமாக சுழித்தபடி காவிரியின் நீரைக் கொண்டு வரும் அந்தக் கால்வாயின் கரையில் ஒரு குடிசை. அதன் திண்ணையில் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தான் நம்பி.

வெயில் சுள்ளென்று உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்த அந்த முற்பகல் பொழுதில், அண்ணியார் மரவையில் இட்ட பழையமுதும், அதற்குத் தொட்டுக்கொள்ள வெஞ்சினமாக வைக்கப்பட்டிருந்த கானப் பருப்பு துவையலும் அமிர்தமாக இருந்தது நம்பிக்கு. கடைசிக் கவளத்தையும் திருப்தியாக விழுங்கி பெரிதாக ஏப்பமிட்ட நம்பி, அண்ணியிடம் கேட்டான்.

‘‘சோழப் படைகளுக்கு மாதண்ட நாயகராகப் பொறுப்பேற்கும் அனைத்துத் தகுதிகளும் கொண்டிருக்கும் அண்ணாருக்கு, உறையூரிலேயே மாளிகை அளிக்கத் தயாராக இருக்கிறார் மன்னர். அப்படியிருக்க, இந்தக் குடிசை வாசம் அண்ணாருக்குத் தேவைதானா...’’

அவன் மேற்கொண்டு வேறு விஷயங்களைக் கேட்பதற்குள், கலயம் ஒன்றில் நீராகாரம் எடுத்துக்கொண்டு திண்ணைப் பகுதிக்கு வந்துவிட்ட பொன்னி பதிலுரைத்தாள்.

சிவமகுடம் - 5

‘‘சோணாட்டவர் சுக-போகத் தில் நாட்டம் செலுத்தும் நேரம் இதுவல்ல என்பது அவரது எண்ணம். அதுபோக, சோழம் இப்போதிருக்கும் சூழலில் எப்போது வேண்டுமானாலும் போர் மூளலாம். நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் அல்லவா? எந்தவொரு நிலைமையையும் சமாளிக்க உகந்த இடம் இதுதான் என்பது அவரது சித்தம். கட்டளையும் கூட!'' என்று புன்னகைத்த பொன்னி, நீராகாரத்தை நம்பியிடம் நீட்டினாள்.

அதை வாங்கிப் பருகி முடித் தவன், ‘‘அண்ணார் வரட்டும் அவரிடம் பேசிக்கொள்கிறேன்'' என்றபடி கையலம்பும் நோக்கு டன் கால்வாயின் கரையை அடைந்தான். கால்வாயில் இறங்கி கை கழுவி, கரங்களால் நீரை மோந்து பருகி வாய்க் கொப்புளிக்க எத்தனித்தவனின் கண்களில் பட்டது, அந்த விசித்திரக் காட்சி!

நீரில் இருந்து கரைக்குத் தாவும் பெரும் முதலையைப் போன்று, திடுமென நீருக்குள் இருந்து வெளிப்பட்ட திடகாத் திரமான ஒரு மனித உருவம், தள்ளாடியபடி கரையை நோக்கி வந்தது. ஆனால் கரை சேர்வதற்குள் மயங்கிச் சரிந்தது!

நம்பி அருகில் சென்று பார்த்தபோது அந்த மனிதன் அரை மயக்கத்தில் இருப்பதும் அவன் வாய் ஏதோ முனகுவதும் தெரிந்தது. குனிந்து அவன் முனகலைச் செவிமடுத்த நம்பி அதிர்ந்துபோனான்!

- மகுடம் சூடுவோம்...

* சுழற் படை - பூமராங் போன்றதொரு படைக்கலன். வளரி, வளை தடி ஆகிய பெயர்களிலும் அழைப்பது உண்டு.

இலக்கைத் தாக்கிவிட்டு மீண்டும் ஏவியவரிடமே வந்துசேரும்.

``சக்தி விகடன் நமக்குப் பரிசளித்த அற்புதமான தொடர் சிவ மகுடம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு அமரர் கல்கியின் எழுத்து நடையை  வாசித்த உணர்வு. சொல் ஆளுமை யும், தொய்வு இல்லாத கதையின் போக்கும் வியக்கவைக்கிறது.

சிவமகுடம் - 5

அரசியலும் ஆன்மிகமும் இரு வேறு துருவங்கள். இரண்டும் ஒருங்கிணைந்து பயணித்தால், அது எவ்வளவு அற்புதமான விஷயம். அந்த அற்புதத்தை இந்தக் கதையில் சாத்தியப்படுத்துகிறார் ஆலவாய் ஆதிரையான். நேர் மின் முனையும் எதிர் மின் முனையும் மின்விளக்கை ஒளிரச் செய்வது போல், சமயம் சரித்திரம் இரண்டையும் இணைத்து சிவ மகுடத்தை ஒளிரச் செய்திருக்கிறார்.

ஒற்றை வார்த்தயில் சொல்வ தானால், ஆன்மிகமும் ராஜரீகமும் இணைந்த மணிமகுடம் - சிவமகுடம்!''

- ஆன்மிகச் சொற்பொழிவாளர்
சொல்லின் செல்வன்
பி.என்.பரசுராமன்