Published:Updated:

கலகல கடைசி பக்கம்

எது நமக்குச் சொந்தம்?தெனாலி, ஓவியம்: மகேஸ்

ந்த உலகத்தில் நமக்குன்னு சொந்தமானது எது? கார், பங்களா, சொத்து, சுகம், மாடு, கன்னு, மகன், மகள்னு யாருமே, எதுவுமே நமக்குச் சொந்தமானதில்லை. இதை விளக்க வாரியார் சுவாமிகள் ஒரு குட்டிக் கதை சொல்லுவார்.

ஒரு முனிவர் இருந்தார். பொய், புரட்டு இல்லாமல் பக்தி நெறியோடு வாழ்க்கையை நடத்துகிறவர் எவரோ, அவர் வீட்டில் மட்டும்தான் இவர் உணவு புசிப்பார்.

அப்படி ஒருநாள் தேசாந்தரமாக இந்த முனிவர் ஓர் ஊருக்குப் போனபோது, அந்த ஊரின் முக்கியப் புள்ளி ஓடோடி வந்து இவரை வரவேற்று, தன் வீட்டில் எழுந்தருளப் பண்ணி, உணவு உண்டு, சிரம பரிகாரம் செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஊர் மக்களிடம் விசாரித்ததில் அந்தப் புள்ளி உண்மையாகவே பெரிய தர்மவான் என்றும், பரோபகாரி என்றும், பக்தி நெறி பிறழாமல் வாழ்கிறவர் என்றும் சொன்னார்கள்.

முனிவர் அந்தப் பெரிய மனிதரிடம், “உங்களிடம் இப்போது எவ்வளவு பணம் இருக்கிறது?” என்று கேட்டார்.

“என் கணக்கில் இருபதாயிரம் ரூபாய் இருக்கிறது சுவாமி!” என்றார் அந்தப் பெரிய மனிதர்.

“உங்களுக்கு எத்தனை வாரிசுகள்?” என்று கேட்டார்.

“ஒரே ஒரு புத்திரன்தான் சுவாமி!” என்றார் பணக்காரர்.

“உமக்கு இப்போது என்ன வயதாகிறது?”

“நாலு வருஷம், ஏழு மாசம் ஆகிறது சுவாமி!”

அவ்வளவுதான்… முனிவருக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. “ஏதேது, பெரிய பொய் பித்தலாட்டக்காரராக இருக்கிறீரே! உம்மைப் பார்த்தால் குறைந்தபட்சம் அறுபது வயதாவது இருக்கும் போலிருக்கிறதே!” என்றார்.

கலகல கடைசி பக்கம்

“உண்மைதான் சுவாமி! நான் பிறந்து அறுபது ஆண்டுகள் ஆகின்றன. ஐந்து வயதிலிருந்து இறைவனைப் பூஜை செய்துகொண்டிருக்கிறேன். ஆனாலும் படிப்பு, வேலை, குடும்பத்துக்காக உழைப்பது போன்ற காரணங்களால் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்ய முடிகிறது. இறைவனின் புகழைப் பாடாத நாளெல்லாம் பிறவாத நாள்தானே சுவாமி? அந்த வகையில், நான் பிறந்து அறுபது ஆண்டுகள் ஆனாலும், எனக்குச் சொந்தமானவை 40,000 மணி நேரம் மட்டுமே! அதாவது, எனக்குச் சொந்தமான வயது நாலு வருஷம், ஏழு மாசம் மட்டும்தான் சுவாமி!” என்றார் அந்தப் பெரிய மனிதர் பவ்வியமாக.

“போகட்டும், உமக்கு மூன்று புதல்வர்கள் என்று கேள்விப்பட்டேனே?” என்றார் முனிவர்.

“ஆமாம் சுவாமி! ஆனால், ஒருவன் சூதாட்டத்தில் கெட்டழிகிறான்; இன்னொருவன் மதுப் பழக்கத்தால் சீரழிகிறான். ஒரு மகன் மட்டும்தான் என்னைப் பின்பற்றி, ஆன்மிக நெறியில் வாழ்கிறான். தகப்பனை புத் எனும் நரகத்திலிருந்து மீட்டெடுப்பவன்தானே புத்திரன்? அந்த வகையில் கடைசி மகன் மட்டும்தான் என் ஒரே புத்திரன்,”

“சரி, உண்மையைச் சொல்லும்! உம்மிடம் வெறும் இருபதாயிரம் ரூபாய்தான் இருக்கிறதா?”

“என் கணக்கில் நான்கு லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கிறது சுவாமி! ஆனால், தர்மக் கணக்கில் இதுவரை இருபதாயிரம் ரூபாய் மட்டும்தான் செலவழிந்துள்ளது. நான் இறந்த பின்பு என்னோடு வரப்போவது நான் செய்த தர்மம் மட்டும்தானே? அதனால்தான் எனக்குச் சொந்தமான பணம் இருபதாயிரம் ரூபாய் என்றேன்!”

இதைக் கேட்ட முனிவர் மகிழ்ந்து, அந்தப் பெரிய மனிதரின் வீட்டில் உணவருந்த ஒப்புக்கொண்டாராம்.

இனி, ஆரம்பக் கேள்விக்கு வருவோம். இந்த உலகில் நமக்கென்று சொந்தமானது எது? நாம் செய்யும் தான, தருமங்கள் மட்டும்தான் என்பது புரிகிறதல்லவா?!