Published:Updated:

காளை மாட்டின் வடிவில் அருள்பாலிக்கும் இறைவன்! கம்பத்தில் ஓர் அதிசயக் கோயில்

காளை மாட்டின் வடிவில் அருள்பாலிக்கும் இறைவன்! கம்பத்தில் ஓர் அதிசயக் கோயில்
காளை மாட்டின் வடிவில் அருள்பாலிக்கும் இறைவன்! கம்பத்தில் ஓர் அதிசயக் கோயில்

யிர்களில் பாரபட்சம் கிடையாது. ஓரறிவு ஜீவன் முதல் ஆறறிவு மனிதர் வரையில் இறைவனுக்கு எல்லாமே ஒற்றை உயிர்தான். அதனை உணர்த்தவே ஜீவராசிகளாகவும் அவதாரம் எடுத்து, உலகுக்கு உண்மையை உணர்த்தினார்கள். மச்சம், கூர்மம், வராகம், சிம்மம்... இப்படி அவதாரங்கள் நிகழ்த்தப்பட்டதன் நோக்கமும் அதுதான். ஜீவராசிகளின் மீது அன்புகொண்ட இறைவனை, கோயில்களில் மச்சம், கூர்மம், சரபம் போன்ற வடிவங்களில் தரிசித்திருக்கலாம். தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள ஸ்ரீநந்தகோபாலர் கோயிலில் உயிருடன் உலவும் காளை மாட்டின் வடிவிலேயே அருள்பாலிக்கிறார் இறைவன். 

பசுக்களை மேய்த்து, அவற்றின் மீது தீராத அன்புகொண்டவராக கிருஷ்ணாவதாரத்தில் தன்னைக் காட்டிய இறைவன் இங்கு காளை வடிவிலேயே வணங்கப்படுகிறார். 

மாடுகள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தொழுவம்தான் (கொட்டகை) இங்கு கோயில். அங்கிருக்கும் காளைதான் இறைவன். அதற்குத்தான் வழிபாடுகளும், பூஜைகளும் நடக்கின்றன. கோயில் என்றாலும், இன்றும் இது ‘நந்தகோபாலர் தம்பிரான் மாட்டுத்தொழு’ என்ற பெயரில்தான் பதிவேடுகளில் உள்ளது. கோயிலில் மூலவர், உற்சவர் விக்கிரகங்கள் உருவ வழிபாடும் இல்லை. 

வித்தியாசமான நடைமுறையைக்கொண்ட இந்தக் கோயில் இங்கே தோன்றியவிதம் சுவாரஸ்யமானது. கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில், கர்நாடகத்தில் வேற்று நாட்டவர் அடிக்கடி போர் தொடுத்துவந்தார். அவரது படையால் இன்னலுக்கு ஆளான மக்கள் பலரும், பாதுகாப்புக்காக இடம் பெயர்ந்தனர். அப்படிக் கிளம்பியோரில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் வழியாக தமிழகம் வந்தவர்கள், கிருஷ்ணகிரி, மேட்டூர், கோவை, ஈரோடு, பழநி எனத் தங்கினார்கள். அதில் ஒரு குழுவினர் இங்கே வந்தனர். 

துங்கபத்ரா நதிக்கரையில் வசித்து வந்த அவர்களின் குலத்தொழில் விவசாயமும், அதற்கு உதவியான மாடுகளை மேய்ப்பதும்தான். தங்களுக்கு வாழ்வளிக்கும் மாடுகளை தங்கள் வீட்டுப் பிள்ளைகள்போலவே வளர்த்துவந்தவர்கள், மாடுகளையே தெய்வமாக வணங்கினார்கள். மாட்டுக் கொட்டகையில் கல் கம்பம்வைத்து, விளக்கேற்றி, கோயிலாகப் போற்றினர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. 

சுமார் 400 மாடுகள் தொழுவத்தில் உள்ளன. `பசுவின் பால் கன்றுக்கு’ என்பதைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்கிறார்கள். அதன் பாலை வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் எடுப்பதில்லை. இறைவனின் வடிவமாக வணங்கப்படுவதை ‘பட்டத்துக் காளை’ என்கின்றனர். இந்த காளைக்குத்தான் அத்தனை பூஜைகளும், மரியாதைகளும் செய்யப்படுகின்றன. 

இதனைத் தேர்ந்தெடுப்பதற்கும் நடைமுறை உண்டு. ஒரு மண் திட்டில் பச்சை சோகையுடன் உள்ள செங்கரும்புக் கட்டையும், அருகில் பால் காவடியில் கொண்டு வந்த சொம்பையும் வைத்துவிட்டு, மாடுகளை அவிழ்த்துவிடுவார்கள். அதில் எந்த மாடு, மண்திட்டைச் சுற்றி வந்து முதலில் சோகையைச் சாப்பிடுகிறதோ, அதையே ‘பட்டத்துக்காளை’ ஆகத் தேர்ந்தெடுக்கின்றார்கள். அதன் ஆயுள் முழுக்க அந்தக் காளைதான் இங்கே பிரதான தெய்வமாக வணங்கப்படுகிறது. 

இதனைப் பராமரிக்க ‘பட்டத்துக்காரர்’ ஒருவரும் நியமிக்கப்படுகிறார். இவர் பின்பற்றவும் சில சட்டதிட்டங்களை வகுத்துவைத்துள்ளனர். பட்டத்துக்காளை இறந்தால் இவரே பெற்ற பிள்ளைபோல இருந்து இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும். தன் வாழ்நாள் முழுதும் அவர் வேறு எந்த துக்க காரியத்திலும் கலந்துகொள்ளக் கூடாது. பெற்ற தாய், தந்தையர் தவறினாலும் அதற்கு அவர்கள் செல்லக் கூடாது. 
பட்டத்துக்காளை இறக்கும்பட்சத்தில், அதற்கு ஊர் மக்கள் மரியாதை செய்கிறார்கள். அதை ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். அப்போது, பெண்கள் வாசல் தெளித்து, கோலமிட்டு, காளைக்கு மாலை அணிவித்து அதனை வழியனுப்பிவைக்கிறார்கள். பின், கோயில் வளாகத்திலேயே அதனை அடக்கம் செய்துவிடுகின்றனர். புதிய காளை தேர்ந்தெடுக்கப்படும் வரையில் கோயில் கம்பத்தருகே உள்ள விளக்கு அணைக்கப்பட்டு, கோயிலும் அடைக்கப்படுகிறது. அந்த நாளில் கல்யாணம் போன்ற விசேஷங்களும் நடத்தப்படுவதில்லை. இப்படி, மாட்டுக்கு முக்கியத்துவம் தரும் கோயிலாகவே இந்தக் கோயில் திகழ்கிறது. 

கம்பம் நகரில் ஊரின் மேற்கு எல்லையையொட்டி பரந்த வெட்டவெளியான இடத்தில் பசுமையாக அமைந்திருக்கிறது ஆலயம். முகப்பில் கோபுரம், கொடிமரம், பலிபீடம்... என வழக்கமாக கோயில்களுக்கு உரிய எந்த அமைப்பும் இல்லை. அமைதியுற அமைந்திருக்கிறது இந்த ஆலயம். கோயில் வளாகம் முழுதும் வளர்ந்திருக்கும் செடி, கொடிகள், மரங்கள் மனதை ரம்மியமாக்குகின்றன. 
கருவறையாகப் போற்றப்படும் மாட்டுத் தொழுவத்துக்கு முன்புறம் கல்லால் ஆன கம்பம் (தீப ஸ்தம்பம்) மட்டும் இருக்கிறது. அருகில் தீபம் மட்டும் ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்த தெய்வ வடிவங்களும் இல்லை. மேற்கூரையும் இல்லை. திறந்தவெளியில் இருக்கும் கல் கம்பத்தில் பட்டத்துக்காளை மற்றும் பால் காவடி சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் இங்கு நின்று காளைகளைத் தரிசித்து, இந்தக் கம்பத்தைச் சுற்றி வந்து வணங்குகிறார்கள். 

ஆலய வளாகத்தில் பிற்காலத்தில் விநாயகர் மற்றும் கிருஷ்ணர் விக்கிரகங்கள்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பிரதான பூஜைகள் காளைக்குத்தான் நடக்கிறது. நவக்கிரக சன்னிதியும் இங்குள்ளது. அருகிலேயே ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ராகு, கேது, குரு மற்றும் சனிப்பெயர்ச்சியில் பரிகாரம் செய்யவேண்டிய ராசிக்காரர்கள் மற்றும் இதர கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டோர் இங்கு வந்து நவக்கிரகங்களை வணங்கி, அதற்குரிய மரங்களைச் சுற்றிவைத்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால், அவர்களைப் பீடித்திருக்கும் தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை உண்டு.

கிருஷ்ண ஜெயந்தியன்று வழுக்கு மரம் ஏறும் விழா உற்சாகமாக நடக்கும். அன்று கல் கம்பத்துக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். மாட்டுப் பொங்கல் இந்தக் கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற விழா. அன்று ஒரு நாளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள். அருகிலுள்ள கூடலூர், லோயர்கேம்ப், சின்னமனூர், கே.கே.பட்டி, கே.ஜி.பட்டி, சுருளிப்பட்டி, புதுப்பட்டி, உத்தமபாளையம் எனத் தேனி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ஊர்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் வருகின்றனர். 

பாத யாத்திரையாகவும், வண்டி மாடு கட்டிக்கொண்டு வருவோரும் அதிகம். அன்றைக்கு ‘பட்டத்துக்காளை’க்கு சிறப்பு அலங்காரம் செய்து, கோயில் முகப்பில் உள்ள மண்டபத்தில் கட்டிவிடுவார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாழைப்பழம், அகத்திக்கீரை எனக் கொடுத்து அதை வணங்கிச் செல்வார்கள். 

அழகான குழந்தை பிறக்க, தோஷங்கள் நீங்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் கிடைக்க... என எல்லாவிதமான பிரார்த்தனைகளுக்காகவும் இங்கே வேண்டுவதுண்டு. அப்படிப் பிறந்த குழந்தைகளுக்கு நந்தகோபால், நந்தன் போன்ற பெயர்களைச் சூட்டுகிறார்கள். பிற உயிர்களைக் கொன்ற தோஷம் என்றாலும், பசுவுக்கு உணவு கொடுத்து வணங்குவதன் மூலம் நிவர்த்தியாகும். எனவே, தீராத தோஷம் உள்ளோர் கோயிலில் உள்ள காளைகளுக்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுத்து தோஷ நிவர்த்திக்கு வேண்டிச் செல்வதுண்டு. 

சனிக்கிழமைகளில் இங்கே பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். அந்த நாளில் பட்டத்துக்காளைக்கு விசேஷ அபிஷேக, அலங்காரங்களும் உண்டு. அன்று `கை எடுத்து விடுதல்’ என்னும் வைபவம் நடக்கிறது. தோஷம், பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிப்புக்கு ஆளானோர், பயத்தால் உடல்நலம் குன்றியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் குணமாக இந்தச் சடங்கைச் செய்கின்றனர். கோயில் வளாகத்தில் கம்பளி விரித்து அமர்ந்திருக்கும் பெரியவர் ஒருவர், இந்தச் சடங்கைச் செய்து, தீர்த்தம் கொடுப்பார். இதனால், தீய சக்திகள் விலகி நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. 

இங்கே வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகள் நிறைவேறியவர்கள் காளை, பசுக்களையே தைப்பொங்கல் விழாவன்று நேர்த்திக்கடனாகச் செலுத்துகின்றனர். அவையும் தொழுவத்தில் சேர்க்கப்படுகின்றன. தவிர, மாட்டுப்பொங்கல் நாளில் கம்பம், கூடலுர் சுற்றுவட்டாரப் பகுதியில் எங்கேணும் கன்று ஈன்றால், அதனை ஓர் ஆண்டு மட்டும் வீட்டில் வளர்த்து, அடுத்த ஆண்டில் கோயிலில் கொண்டுவந்து விடும் வழக்கமும் உள்ளது. 

இப்படி, மாடும், மாடு சார்ந்த வழிபாடுகளும் கொண்டதாக அமைந்த இந்தக் கோயிலை மாட்டுப் பொங்கல் திருநாளில் சென்று வழிபட்டு, அந்த நந்தகோபாலரின் அருளைப் பெற்று வாருங்கள். 

எங்கிருக்கிறது ஆலயம்?
தேனியிலிருந்து கூடலூர், குமுளி செல்லும் வழியில் 40 கி.மீ தொலைவில் உள்ளது கம்பம். பஸ் ஸ்டாண்டிலிருந்து 1 கி.மீ தொலைவில் இந்தக் கோயில் உள்ளது. 

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் விசேஷ பூஜைகள் உண்டு.