Published:Updated:

நாரதர் உலா

சிதம்பர சிரமங்கள்!

நாரதர் உலா

சிதம்பர சிரமங்கள்!

Published:Updated:

டந்த பத்து நாட்களாக நாரதரைத் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில், இந்தப் பெருவெள்ளத்தில்

நாரதர் உலா

அவர் எங்கு இருக்கிறாரோ எப்படி இருக்கிறாரோ என்று நாம் தவித்துக் கொண்டிருந்தபோது, நம் தவிப்பைப் போக்குவதுபோல் நாரதரிடம் இருந்து வாட்ஸ்அப்பில், ‘வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து இப்போதுதான் மீள முடிந்தது. விரை விலேயே வந்துவிடுகிறேன்’ என்று தகவல் வந்தது. சொன்னபடியே விரைவில் நம் அறைக்குள் பிரவேசித்தார் நாரதர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மழையில் நனைந்து வந்தவருக்கு சூடாக இஞ்சி டீ கொடுத்து உபசரித்தோம். ருசித்துக் குடித்தபடியே, ‘‘இந்த மழையில் மக்கள் படும் கஷ்டங்களைப் பார்க்கச் சகிக்கவில்லை. ஆனாலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒருவர், ‘மனித்த பிறவியும் வேண்டு வதே இம் மாநிலத்தே’ என்று பாடி உள்ளாரே...’’ என்ற நாரதரை இடைமறித்து,

‘‘சிதம்பரம் தலத்தில் நடராஜப் பெருமானின் ஆடல் அழகைக் கண்டு நாவுக்கரசர்தானே அப்படிப் பாடி இருக்கிறார்?’’ என்று கேட்டு, நாரதர் சிதம்பரத்துக்குத்தான் சென்று வந்துள்ளார் என்பதை நாம் புரிந்துகொண்டுவிட்டதை நாசூக்காக அவருக்கும் உணர்த்தினோம். நமது புரிதலை ஆமோதித்தவராக, ‘‘சரியாகச் சொன்னீர். இயற்கைப் பேரிடர் தந்த துயரங்களில் இருந்து வெகுசீக்கிரம் மக்கள் மீள்வதற்கு அந்த ஆடல்வல்லான் அருள் செய்யவேண்டும்’’ என்ற நாரதர் தொடர்ந்தார்.

‘‘முன்னாள் தொல்லியல் துறை இயக்குநர் டாக்டர் நாகசாமி நமக்கொரு மெயில் அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த மறுநாளே  சிதம்பரத்துக்குப் புறப்பட்டுவிட்டேன். அவர் மெயிலில் குறிப்பிட் டிருந்தது பெரும்பாலும் உண்மைதான் என்பதை நேரிலேயே தெரிந்துகொண்டோம்’’ என்ற நாரதர், தொடர்ந்து நாகசாமி அனுப்பிய மெயிலில் அவர் சுட்டிக்காட்டி இருந்த குறைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
‘‘ ‘தீட்சிதர்களின் கருத்துப்படி சொன்னால், பிரபஞ்சத்தின் மையப் புள்ளியாகத் திகழ்வது சிதம்பரம். 1300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டிருக்கும் இந்தக் கோயிலில் உள்ள நடராஜரின் நாட்டியத் தோற்றம் உலக அளவில் பிரசித்தி பெற்றது. சோழ மன்னர்களின் குலதெய்வமாகத் திகழ்ந்தவர் சிதம்பரம் நடராஜர்.

நாரதர் உலா

9-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனாலும் பின்னர் வந்த அவனுடைய மகன் விக்கிரம சோழனாலும் இந்த ஆலயத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டன. அது பற்றிய விவரங்கள், ‘குலோத்துங்க சோழன் உலா’, ‘ராஜராஜ சோழன் உலா’ மற்றும் ‘தக்கயாக பரணி’ போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளன. பின்னர், 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கோப்பெருஞ்சிங்கன் மற்றும் சுந்தரபாண்டியன் ஆகியோரால் கோபுரங்களுக்குத் திருப்பணிகள் செய்யப்பட்டன. அப்போதுகூட அவர்கள் கோயிலையும், பிராகாரங்களையும் மற்றும் உள்ள இடங்களையும் ஒரு சிறிதும் மாற்றாமல்,  ஆலயத்தின் தொன்மை கெடாமல் மிகவும் கவனமாக திருப்பணிகளைச் செய்தனர். பிற்காலத்தில், கிருஷ்ணதேவராயர் கோயிலின் வடக்கு கோபுரத்தை புனரமைத்தபோதுகூட புதிதாக எந்த ஒரு மாற்றத்தையும் அவர் செய்யவே இல்லை.

மொழி, இலக்கியம், நாட்டியம், இசை இவை அனைத்துக்கும் மேலாக உயரிய தத்துவம் மற்றும் இந்து சமயம் ஆகியவற்றின் நிலைக் களனாக-நினைவுச் சின்னமாகத் திகழும் சிதம்பரம் கோயில் பல நூற்றாண்டு களாக அதன் பழைமையும் தொன்மைச் சிறப்பும் மாறாமல் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், இப்போது கோயிலின் சிறப்பு குறைத்துவிடும் அளவுக்கு கோயிலின் அமைப்பில் மாற்றங்களையும் கூடுதலான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இத்தனைக்கும் காரணம் கோயிலுக்கு உரியவர்கள் தாங்கள்தான் என்று சொந்தம் கொண்டாடும் ஒரு தரப்பினர்தான். அவர்களுக்குத் தெரியாதா, அல்லது தெரிந்தேதான் அப்படிச் செய்கிறார்களோ எனவும் தெரியவில்லை’ என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டு இருக்கும் டாக்டர் நாகசாமி அங்கே நடைபெற்று வரும் மாற்றங்கள் பற்றியும் விவரமாகத் தெரிவித்து இருந்தார்’’ என்று கூறிய நாரதரிடம்,

‘‘அப்படி என்னென்ன மாற்றங்களைச் செய்து வருகிறார்களாம்?’’ என்று கேட்டோம்.

நாரதர் உலா

‘‘டாக்டர் நாகசாமி நமக்கு அனுப்பிய மெயிலில் இருந்த விஷயங்களை வரிசையாகச் சொல்கிறேன். அவருடைய மெயிலில் முதலில் அவர் குறிப்பிட்டு இருப்பது கோயிலுக்கு உள்ளே கட்டப் பட்டு இருக்கும் மூன்று கட்டடங்களைத்தான், கோயிலின் புனிதத்தையே குறைப்பது போல் அந்தக் கட்டடங்கள் அமைந் திருக்கிறதாம். அடுத்தபடியாக கோயில் பிராகாரத்தில் ஒரு கல்யாண மண்டபத்தையும் கட்ட நினைத்தார்கள். அதனால் கோயிலின் புனிதம் சிதைந்துவிடும் என்பதால், பக்தர்களே நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்து அதற்குத் தடை வாங்கி இருக்கிறார்கள்.

தொடர்ந்து அவர் குறிப்பிட்டு இருப்பது, 12 வருஷங்களுக்கு முன்பாக இடிக்கப்பட்ட ஒரு கோயிலைப் பற்றித்தான். சிவகாமி அம்மை கோயிலுக்கு பக்கத்தில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுப்ரமணியர் கோயில்தான் அது. நல்ல நிலையில் இருந்த அந்தக் கோயிலைப் புதுப்பித்துக் கட்டுகிறோம் என்ற பெயரில் இடித்துவிட்டார்கள். 12 வருஷமாகியும் இன்னும் புதுப்பித்துக் கட்டப்படாமல் அப்படியே இடிந்த நிலையில்தான் இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பது அந்த சுப்ரமணியருக்குத்தான் வெளிச்சம். முத்தாய்ப்பாக நாகசாமி தன்னுடைய மெயிலில் குறிப்பிட்டு இருக்கும் விஷயம்தான் மிகவும் முக்கியமானது. கோயிலின் கிழக்கு கோபுரத்தின் வழியாகத்தான் பெருமளவு பக்தர்கள் கோயிலுக்குச் சென்று வருவார்கள். பக்தர்களின் வசதிக்காக அந்த வழியில் மேற்கூரை அமைக் கிறோம் என்ற பெயரில், இரண்டு பக்கங்களிலும் கான்கிரீட் தூண்களை நட்டு வைத்திருக்கிறார்கள். இதனால் அந்த வழியானது இருபது அடியாகச் சுருங்கிவிட்டது.

‘‘சாதாரண நாட்களிலேயே கூட்டம் அலைமோதும். திருவிழாக் காலங்களிலோ பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்தக் குறுகலான வழியாக அவ்வளவு பக்தர்கள் போய் வரும்போது கண்டிப் பாக நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துக்களும் ஏற்படக்கூடும்’ என்று நாகசாமி குறிப்பிட்டு இருக்கிறார்’’ என்றார் நாரதர்.

‘‘இது தொடர்பாக கோயில் சம்பந்தப்பட்டவர் களிடம் பேசினீர்களா?’’ என்று கேட்டோம்.

‘‘பேசாமல் இருப்பேனா? கோயில் செயலாளர் அலுவலகத்தில் உள்ளவர்களிடம் பேசினேன். அவர்கள் தரப்பில், ‘சிவகாமி அம்மை கோயிலுக் குப் பக்கத்தில் இருந்த சுப்ரமணியர் கோயில் புதுப்பிக்கப்படவேண்டி இருந்ததால்தான் இடித் தோம். இப்போது காஞ்சி சங்கர மடத்தின் நேரடி பார்வையில் திருப்பணிகள் நடைபெற ஏற்பாடாகி இருக்கிறது. விரைவிலேயே திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறும்’ என்று தெரிவித் தார்கள்’’ என்ற நாரதர் தொடர்ந்து,

நாரதர் உலா

‘‘கோயிலுக்கு உள்ளே புதிய கட்டடம் கட்டப் பட்டு இருப்பது பற்றிக் கேட்டதற்கு, ‘புதிய கட்டடங்கள் பக்தர்களின் தேவைக்காகவும், திருவிழாக் காலங்களில் பயன்படுத்துவதற்கும்தான் கட்டப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார்கள்’’ என்றார் நாரதர்.

‘‘கோயிலின் கிழக்கு வாசல் வழியில் மேற்கூரை அமைப்பதால், பாதையின் அகலம் பாதியாகக்

நாரதர் உலா

குறைந்துவிட்டது பற்றி அவர்கள் தரப்பில் என்ன விளக்கம் சொல்கிறார்கள்?”
‘‘அது பற்றிக் கேட்டதற்கு, ‘மேற்கூரை அமைப் பதால் பாதையின் அகலம் குறைந்துவிடுவதாகச் சொல்வது சரியில்லை. மேற்கூரை அமைக்கும் பணி இன்னும் முடியாததால் பாதையின் அகலம் குறுகிவிட்டது போல் தெரிகிறது. கூரை அமைத்த பிறகுதான் பாதை முன்பிருந்த அளவிலேயே இருப்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்’ என்று சொன்னார்கள்’’ என்று நாரதர் சொல்லிக்கொண்டு இருந்தபோதே அவருடைய வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதைப் படித்துவிட்டு நம் பக்கம் திரும்பிய நாரதர்,

‘‘இந்து சமய அறநிலையத்துறையில் தொல்லியல் துறை ஆலோசகராக இருக்கும் ஒருவர் தமிழகத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கோயில்களை இடிக்க அனுமதி கொடுத்திருப்பதாகத் தகவல் வந்துள்ளது. அதில் இரண்டு கோயில்களை இடித்தும் விட்டார்களாம். இது பற்றி விசாரித்துவிட்டு வந்து எல்லாவற்றையும் விவரமாகச் சொல்கிறேன்’’ என்று சொல்லியபடியே அந்தர்தியானமாகி விட்டார்.

 - படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism