Election bannerElection banner
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

குலோத்துங்கன் வழிபட்ட கூத்தனுக்கு - கோயிலும் இல்லை; கூரையும் இல்லை!எஸ்.கண்ணன்கோபாலன்

மாதங்களில் சிறந்ததான மார்கழி மாதம் பிறந்துவிட்டது. மார்கழி என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது திருவாதிரைத் திருநாள்தான். திருவாதிரை நாயகனாம் எம் ஐயன், புவிமாந்தர் செய்த தவப்பயனாய் எத்தனையோ புண்ணியத் தலங்களில் கோயில் கொண்டு, தன்னை நாடி வந்து வழிபடும் பக்தர் களுக்கு நாளும் பொழுதும் நல்லருள் புரிந்து வருகிறார்.

ஐயன் சுயம்புவாகத் தோன்றிய திருத்தலங்கள், மகரிஷிகளும் மகான்களும் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருக்கோயில்கள், மன்னர்கள் நிர்மாணித்த சிவாலயங்கள் எனத் தேன்தமிழ் ஒலிக்கும் தென்னாட்டில் சிவாலயங்களுக்குப் பஞ்சமே இல்லை. அதனால்தான், எம் ஐயன் எந்நாட்டவர்க்கும் இறைவனாகத் திகழ்ந்தாலும், தென்னாட்டுக்கு உரியவராகச் சிறப்பாகப் போற்றப் பெறுகிறார்.
தென்னாடுடைய எம் ஐயனுக்கு எத்தனையோ ஆலயங்கள் பொலிவுடன் திகழ்ந்தாலும்கூட, ஐயனின் நூறு நூறு ஆலயங்கள் நிழலுக்குக் கூரையோ, ஒரு கால பூஜைக்கு வழியோ இன்றிக் காணப்படும் கோலத்தை என்னவென்று சொல்வது?

ஆலயம் தேடுவோம்!

பொட்டல்வெளிகளிலும், புதர்க்கூட்டங்களுக்கு இடையிலும் சிவலிங்கத் திருவுருவங்களைக் காணும்போதெல்லாம், சுமக்கமுடியாத பாரத்தை சுமப்பதுபோல் இதயம் கனக்கிறது; காணாத சோகத்தைக் கண்டதுபோல் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. அப்படி நம் இதயத்தைக் கனக்கச் செய்து, கண்களில் நீர் பெருக்கெடுக்கச் செய்தது, ஆலயம் தேடிச் சென்ற நாம் தரிசித்த ஒரு திருக்கோயில்.
அங்கே பிரமாண்டமான ஒரு கோயிலை நாம் காணவில்லை. மாறாக, ஒரு காலத்தில் அந்தக் கோயில் பிரமாண்டமாக, சீரும் சிறப்புடனும் பொலிவுற்றுத் திகழ்ந்தது என்பதற்கான தடயங்களைத்தான் நம்மால் காணமுடிந்தது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிள்ளைப்பெருமாள்நல்லூர் என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது ஐயனின் திருக்கோயில். ஐயன் அபிமுக்தீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அன்னை அகிலாண்டேஸ்வரியுடன் திருக்காட்சி தருகிறார்.

சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந் ததாகக் கருதப்படும் இந்தக் கோயிலில் உள்ள இறைவனை சூரியன் வழிபட்ட தாகவும், அதன் காரணமாகவே சூரியனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தத்துக்கு ‘சூரிய தீர்த்தம்’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஊர்ப் பெரியவர்கள் சொல்கிறார்கள்.

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!


 
இங்குள்ள இறைவனை சிவனடியார்கள் பலரும் வழிபட்டு அருள் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக, அருகில் உள்ள திருக்கடவூரில் தோன்றிய குங்கிலியக் கலய நாயனாரும் காரி நாயனாரும் அபிமுக்தீஸ்வரரை வழிபட்டு அருள் பெற்றிருக்கிறார்கள். மேலும், திருக்கடவூர் மற்றும் திருக்கடவூர் மயானம் ஆகிய சிவாலயங்களை தரிசிக்க வந்த ஞானசம்பந்தரை இங்கிருந்துதான் குங்கிலியக் கலய நாயனார் வரவேற்று அழைத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான சான்றுகள் இல்லாமல் மறைந்துபோனாலும், கோயிலின் தொன்மையையும் ஞானசம்பந்தப் பெருமான் மற்றும் குங்கிலியக் கலயரின் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, குறிப்பிட்ட நிகழ்ச்சி உண்மையாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவே நினைக்கத் தோன்றுகிறது.

முற்காலத்தில் மிகுந்த சாந்நித்தியத்துடன் பொலிவு பெற்றுத் திகழ்ந்த இத்திருக் கோயிலில் ஐயனின் கருவறையே சிவலிங்க வடிவில் காட்சி தருகிறது. சதுர வடிவ ஆவுடையாரின் மேலாக ஐயனின் கருவறை ஒரு லிங்கமாக அமைந்திருப்பது போல் பெருமானின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆனால், இன்று சதுர வடிவ ஆவுடையார் வடிவத்தில் உள்ள அடித்தளமும் சிதைந்துவிட்டது; ஐயனின் கருவறை மேலாக இருந்த விமானமும் இடிந்து விட்டது கண்டு மனம் பதைபதைக்கிறது.

தொன்மைச் சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலுக்கு மூன்றாம் குலோத்துங்க சோழன் (1178-1218) தன்னுடைய ஆட்சியின் 21-வது ஆண்டில் (1199) திருப்பணிகள் செய்ததாக ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. அதில் இறைவனின் திருப்பெயர் அருள்முகீஸ்வரர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தம்மை தரிசித்து வணங்குபவர்களுக்கு அருள் வழங்கும் கருணைத் திருமுகம் கொண்டவர் என்ற பொருளில் இறைவனுக்கு அந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

ஐயனையும் அம்பிகையையும் தரிசித்தபடி, ஊர்ப் பெரியவர்களிடம் கோயிலைப் பற்றிய விவரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, அர்ச்சகர் ஒருவர் வந்து, மகேஷ் குருக்கள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரிடம் திருப்பணிகள் பற்றிக் கேட்டோம்.

ஆலயம் தேடுவோம்!

‘‘இந்தக் கோயில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. முற்காலத்தில் மிகவும் பிரசித்தியுடன் திகழ்ந்த இந்தக் கோயில் சிதிலம் அடைந்த நிலையில், சுமார் 100 வருஷங்களுக்கு முன்பாக சிறிய அளவில் திருப்பணிகள் செய்யப்பட்டன. அதன் பிறகு கடந்த பல ஆண்டுகளாகவே கோயில் இந்த நிலைமையில்தான் இருக்கிறது. கடந்த 2014-ம் வருடம் பிப்ரவரி மாதம், கிராம மக்கள் மற்றும் இந்துச் சமய அறநிலையத் துறையினரின் உதவியுடன் திருப்பணிகள் செய்ய முடிவு செய்து, பாலாலயம் செய்யப்பட்டது. விரைவில் திருப்பணிகள் நிறைவு பெற ஐயன் அபிமுக்தீஸ்வரரும் அம்பிகை அகிலாண்டேஸ்வரியும்தான் அருள்புரிய வேண்டும்’’ என்றார்.

பாலாலயம் செய்யப்பட்டு இரண்டாண்டுகள் முடியப்போகும் நிலையிலும் ஐயனின் ஆலயம் சிதிலமடைந்த நிலையிலேயே இருப்பதைக் காண்கையில், சொல்லமுடியாத வருத்தம்தான் ஏற்படுகிறது. இதுவரை எம் ஐயனின் ஆலயத் திருப்பணிகள் தொடங்கப்படாமலே இருப்பதற்குக் காரணம் என்னவாகிலும் இருந்துவிட்டுப் போகட்டும். இனியேனும் ஐயனின் திருக்கோயில் திருப்பணிகள் உடனே தொடங்கப்பட வேண்டும் என்று ஐயனிடம் பிரார்த்திப்போம்.

ஆலயம் தேடுவோம்!

தென்னாடு உடையவரும் தென்னாட்டுக்கு உரியவரும் ஆவார் எம் ஐயன் என்று சொந்தம் கொண்டாடினால் மட்டும் போதுமா? கலியின் பிடியில் சிக்கித் தவிக்கும் நம்முடைய துன்பங் களைப் போக்கி, நாளும் பொழுதும் நமக்கு அருள் புரிவதற்காகவே கோயில் கொண்டிருக்கும் ஐயன் அபிமுக்தீஸ்வரரின் ஆலயம் மீண்டும் புதுப் பொலிவுடன் அருளொளி பரப்பித் திகழச் செய்வது நமது கடமை மட்டுமல்ல; எப்போதும் நமக்கு அருள்புரிவதில் சமர்த்தரான அந்த சர்வேஸ்வரனுக்கான நம்முடைய நன்றிக் காணிக்கையும்கூட!

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அட்டை மற்றும் படங்கள்: க.சதீஷ்குமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு