மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 6

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

அதிர வைத்த ஓலை!

ண்டையத் தமிழர்கள் தங்களின் மனவளத்தைப் போலவே, மழை வளத்தால் கிட்டும் நீர் வளத்தையும் தக்க முறையில் பெருக்கி வைத்திருந்தார்கள். அதற்குச் சான்று சொல்ல கரிகாலனின் கல்லணை ஒன்று போதும்.

மேற்றிசை மலைத்தொடரில் குடகு மலையில் பிறந்து தண்ணெனத் தவழ்ந்து வரும் பொன்னி நதியாள் கன்னித் தமிழகத்துக்குள் புகுந்ததும் பெரிதும் பூரிப்படைகிறாள். அதன் வெளிப் பாடாக பல துணையாறுகளையும் தன்னோடு இணைத்துக்கொண்டு, அகண்ட காவிரியாய் அவள் ஆர்ப்பரித்து வருவதைக் கண்டு, பெரிதும் மலைத்துப் போயிருக்கிறார்கள் தமிழ்ப் புலவர்கள்.
‘வான் பொய்ப்பினும் தான்பொய்யா மலைத் தலைய கடற் காவிரி’ என்று பட்டினப்பாலை ஏற்றிப் பாடுவதற்கு ஏற்பவும்,  ‘கருங் கயல்கண் விழித்து நடந்தாய் வாழி காவேரி’ என்று பெருமிதத்துடன் சிலம்பு புகழ் இசைக்கும்படியும் பொங்கிப் பெருகி வருபவள், சோழ மண்டலத்தின் உறையூரை நெருங்குகையில், சிராப்பள்ளியின் அருகே சீற்றம் தணிந்து இரண்டாகப் பிரிகிறாள். அவளின் கிளையாய் பிரியும் அந்த நதிக்கு கொள்ளிடம் என்று பெயர்.

பெருமழைக் காலத்தில் காவிரியில் பெருக்கெடுக்கும் மிகுதியான நீர், ஊருக்குள் புகுந்து பேரழிவை உண்டாக்கிவிடாமல், ஒரு கிளை நதியாய் வடிந்தோட ஏதுவாக இயற்கை தானாகவே ஏற்படுத்திக் கொண்ட அதிசயம்தான் கொள்ளிடம். ஆம்...

காவிரியின் அதிகப்படியான வெள்ளத்தைக் கொள்ளும் இடம் என்பதால், கொள்ளிடம் என்று அதற்குப் பெயர்!

சிவமகுடம் - 6

இங்ஙனம் காவிரி-கொள்ளிடம் எனப் பிரிந்து அரங்கம் எனும் தீவை ஏற்படுத்தி, பூலோக வைகுண்டமாகப் போற்றப்படும் அந்தத் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் நாராயணரை வழிபட்டு, பிறகு மீண்டும் ஒன்றாக இணைந்து வேகம் கொள்பவள், ஓரிடத்தில் சோழ நாயகனின் அணைப்புக்கு ஆட்பட்டு நாணத்துடன் அடங்கி, பெரும் சமுத்திரம் போன்று தேங்குகிறாள். அந்த நாயகன் கரிகாலன். பெருங்காதலும் களிப்புமாக காவிரிக்கு அவனால் ஏற்படுத்தப்பட்ட தடுப்பு அணைப்புதான் கல்லணை!

கல்லணை மட்டுமா..? காவிரியில் இருந்து பெரிதும் சிறிதுமாக எத்தனை எத்தனையோ கால்வாய்கள் கிளை பிரிந்தன; அவை  பல வளநாடுகளையும் ஊர்களையும் ஊடறுத்து, அங்கிருக்கும் நீர் நிலைகளை நிரப்பி வேளாண்மையைப் பெருக் கின. இதன் காரணமாகவே, சோணாடு எல்லையளவில் குறுகிக் கிடந்தபோதும் சரி, பெரும் சாம்ராஜ்ஜியமாக விரிந்து பரந்திருந்த போதும் சரி... காவிரியாளின் கருணையால் வளம் குன்றாமல் திகழ்ந்தது. சோழத்தில் காவிரி என்றால், தென்பாண்டி மண்டலத்தைச் செழிக்கச் செய்தன வைகையும், தண்பொருநைத் தாமிரபரணியும்.

இந்த நதிகளின் கருணையை பங்கமின்றி பயன்படுத்திக் கொண்டார்கள் தமிழர்கள். தடம், தடாகம், கயம், குளம், குட்டம், கிடங்கு, சூழி, தாங்கல், கேணி, படு, மடு, பட்டம், அலந்தை, இலஞ்சி, கோட்டம், பொய்கை, ஏல்வை, ஓடை, ஏரி என அவர்கள் ஏற்படுத்திக்கொண்ட நீர்ப்பாசனங்கள் ஏராளம். இவை யாவும் தேங்கும் நீர்ப்பாசனங்கள் என்றால், நம் முன்னோர் கடும் உழைப்பால் உருவாக்கிய நீரோட்டங் களும் அதிகம்! வாரம், பாரம், கூலம், தீரம் முதலான நீர் ஆதார கட்டமைப்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்துபவை. கூற்றன்வாய், தலைவாய், வாய்த் தலை, முகவாய் என்றெல்லாம் அவர்கள் கட்டமைத் திருந்த வாய்க்கால்கள், ஆற்றிலிருந்து நீரை வயல்களுக்குக் கொண்டு செல்லப் பயன்பட்டன.

அப்படி, காவிரியின் நீரைச் சுமந்து வருவதாக அமைந்த ஒரு கால்வாயின் கரையில்தான் கோச்செங்கணின் குடில் அமைந்திருந்தது. அவன் தம்பியான நம்பி உணவருந்திய பிறகு கையலம்ப வந்ததும், வந்த இடத்தில் பெரும் முதலை போன்று ஓர் உருவம் கரையேறி மயங்கிச் சரிந்ததுமான சம்பவம் நிகழ்ந்ததும் அந்தக் கால்வாயின் கரையில்தான்.

நம்பி அருகில் நெருங்கி கவனித்தபோது, அரை மயக்கத்தில் இருந்த அந்த உருவம், ‘பேரழிவு நிச்சயம்... பேரழிவு நிச்சயம்...’ என்ற முனகலோடு முழு மயக்கத்தில் ஆழ்ந்துபோக... அபாய அறிவிப்பாக வெளிப்பட்ட அந்த வார்த்தையைச் செவிமடுத்ததால் உண்டான பேரதிர்ச்சியால், நம்பிக்கும் பெருமயக்கம் ஆட்கொள்வதுபோல் தலை சுழன்றது. சுதாரித்துக் கொண்டவன் பெருங்
குரலெடுத்து அண்ணியாரை அழைத்தான். பொன்னியும் தாமதிக்காது கால்வாயின் கரைக்கு ஓடி வந்தாள். கணப்பொழுதில் நிலைமையை உணர்ந்து, நம்பிக்கு உதவ முற்பட்டாள். இருவருமாகச் சேர்ந்து பெரும் பிரயத்தனத்துடன் அந்தக் கனத்த கரிய உருவத்தை குடிசையின் திண்ணைக்குக் கொண்டு வந்து கிடத்தினார்கள்.

அந்த மனிதனின் கரத்தைப் பற்றி, நாடி ஓட்டத் தைக் கவனித்தான் நம்பி. அதன் சீரான இயக்கம்,

சிவமகுடம் - 6

உயிருக்குப் பழுதில்லை என்பதை உணர்த்தியது. ஆற்றிலும் கால்வாயிலும் அதிக தூரம் நீந்திய தால் ஏற்பட்ட களைப்பின் விளைவுதான் அந்த மயக்கம் என்பதும் நம்பிக்குப் புரிந்தது. தொடர்ந்து, அவனும் அவன் அண்ணியாரும் செய்த சிசுரூஷைகள், அதிபயங்கரத் தோற்றம் கொண்ட அந்த மனிதனின் தேகத்தில் மெள்ள மெள்ளச் சலனத்தை ஏற்படுத்த, பெரிதும் நிம்மதி அடைந்தான் நம்பி.

ஆனாலும், மயக்கம் கொள்ளும் அளவுக்கு வெகுதூரம் ஆற்றில் இவன் நீந்தி வரவேண்டிய அவசியம் என்ன? பேரழிவு நிச்சயம் என்ற இவனது முனகலுக்கு அர்த்தம் என்ன? பேரழிவு என்று எதைச் சொல்கிறான்..?’ என்பன போன்ற கேள்வி களும் அவன் சிந்தையில் எழாமல் இல்லை.

கண் விழிக்கட்டும், அவனிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று தீர்மானித்தவனின் காதுகளில் குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்டது. சத்தம் வந்த திக்கை ஏறிட்டவனின் கண்களில் சூரியகோடிப் பிரகாசம்.

‘‘அண்ணி, அதோ அண்ணன் வந்துவிட்டார்!’’

பொன்னியும் திரும்பிப் பார்த்தாள். தூரத்தில் கோச்செங்கணும் அவனது சகாக்கள் இருவரும் குதிரைகளில் வருவது தெரிந்தது. அவ்வளவுதான்... சூழலை மறந்தாள். வெகு ஆவலோடு கோச்செங்கணை எதிர்கொண்டு அழைக்க ஓடினாள். நம்பியும்  அதே வேகத்தில் பின்தொடர்ந்து ஓடினான்.

நீண்ட நெடுநாட்களுக்குப் பிறகான சந்திப்பு ஆதலால்,  இருவரும் ஆவல் மிகுதியுடன் குடிசையை விட்டு விலகி, வெகுதூரம் வந்து விட்டார்கள். இவர்களைக் கண்டதும் கோச்செங்கணின் இதழ்களிலும் புன்னகை பெரிதாய் பூத்தது.

‘‘வா நம்பி! நானே உன்னை வரவழைக்கலாம் என்றிருந்தேன். உன்னிடம் பகிர்ந்துகொள்ள அதிமுக்கியமான விஷயங்கள் பல இருக்கின்றன...’’

அவன் கூறி முடிக்குமுன் இடைமறித்த நம்பி, ‘‘அவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமான சங்கதி ஒன்று தங்களுக்கு இல்லத்தில் காத்திருக்கிறது’’ என்றான்.
‘‘அப்படியா! வா, பார்க்கலாம்’’ என்ற கோச்செங்கண், குதிரையில் இருந்தபடியே குனிந்து தனது இடக்கரத்தால் பொன்னியின் இடையை வளைத்து அலாக்காகத் தூக்கி, தனக்கு முன்னால் அமர்த்திக்கொண்டு, குதிரையைத் தட்டிக் கொடுக்க, அந்த ஆணையைப் புரிந்துகொண்ட குதிரையும் குடிசையை நோக்கி வேக நடை போட்டது. மற்றவர்களும் தொடர்ந்துசென்றார்கள்.
குடிசையை அணுகியபோது, அவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆமாம், திண்ணையில் கிடத்தப்பட்டிருந்த  அந்த கனத்த, கரிய உருவம் அங்கு இல்லை.

‘‘இங்குதானே படுத்திருந்தான்..?’’

‘‘மயக்கம் தெளிந்துவிட்டதா..?’’

‘‘எழுந்து எங்கு சென்றிருப்பான்?’’

மாறி மாறி பொன்னியும் நம்பியும் உதிர்த்த சொற்களைக் கேட்டும், அவர்களின்  தடுமாற்றத் தைக் கண்டும் கோச்செங்கண் புருவம் உயர்த்த... அவன் சகாக்களில் ஒருவன், அருகில் இருந்த வேம்பு விருட்சத்தைச் சுட்டிக்காட்டியபடி கத்தினான்...

‘‘அங்கே கவனியுங்கள்!’’

அனைவரும் அந்த விருட்சத்தை நோக்க, அதன் தண்டு பாகத்தில் ஓர் ஓலை நறுக்குடன் சேர்த்துக் குறுவாள் ஒன்று செருகப்பட்டிருந்தது.

கோச்செங்கண் கண்ணசைக்க, சகாக்களில் ஒருவன் வேகமாக இறங்கிச் சென்று குறுவாளை உருவி, ஓலை நறுக்கை எடுத்து வந்து கோச்செங் கணிடம் நீட்டினான்.
அதில் எழுதப்பட்டிருந்த வாசகம், கோச்செங் கணைப் பெரிதும் நிலைகுலையச் செய்தது.

குன்றுகள் சிரித்தன!

விடிந்தும் விடியாததுமான அந்த வைகறைப் பொழுதில், தான் தீப்பந்தத்தை அசைக்க, பதிலுக்கு

சிவமகுடம் - 6

மகள் மானி சுட்டிக்காட்டிய தூர திசையில், ஓராயிரம் தீப்பந்தங்கள் எழுந்து அசைந்தாடிய காட்சியைக் கண்டு வியப்பின் எல்லைக்கே சென்றார் மணிமுடிச் சோழர்.  அது மட்டுமின்றி, மானி உச்சரித்த ‘அஸ்திர வியூகம்’ எனும் வார்த்தைப் பிரயோகத்தால், அவர் மனத்தில் ஏற்பட்டிருந்த பெரும் பதற்றத்தையும் குழப்பத்தையும்கூட அறவே ஒழித்துவிட்டிருந்தது அந்தக் காட்சி.

ஆம்! பாண்டியர் படையெடுப்பை எதிர் கொள்ள சோழர் வகுத்து வைத்திருந்த மாபெரும் வியூகத் திட்டங்களை எல்லாம், மானியின் ‘அஸ்திர வியூகம்’ எனும் ஒற்றைச் சொல் சிதறடித்துவிட்டது. வேறு வியூகங்கள் வகுக்கவோ, அதற்கேற்ப படைகளை அணிவகுக்கச் செய்யவோ போதிய கால அவகாசம் இல்லாத கையறுநிலையில் சிக்கித் தவிக்கிறது சோழம். என்றாலும், மணிமுடிச் சோழரின் மனதில் சிறு நம்பிக்கை ஒட்டிக்கொண்டிருந்தது.

புலியூரைச் சுற்றி சிறு வளையமாகவும், உறையூருக்குக் காப்பாக பெரும் வளையமாகவும், இந்த இரு நகரங்களுக்கும் இடையில் இரண்டு இடங்களில் அர்த்த சந்திர வடிவிலும், தான் அமைக்கப் போகும் வியூகம் பாண்டியரை வீழ்த்து கிறதோ இல்லையோ, சோழத்தைத் தற்காக்கும் கேடயங்களாக அமையும் என்பதே அவரது நம்பிக்கை.

ஆனால், ஒரு விஷயத்தை அவர் கவனிக்கத் தவறியிருந்தார். உறையூரில் இருந்து புலியூர் வரையிலுமான இந்த வியூகங்கள் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியைப் பாதுகாக்கும் என்றாலும், அதற்கு நேர் எதிர்ப் புறத்தில்... அதாவது, கடல் மார்க்கமாக ஒரு படையணியைக் கரையிறக்கி,  சோணாட்டை வடக்கில் இருந்து பாண்டியன் தாக்கினால், நிலைமை என்னவாகும்? அதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை சோழர் பிரானுக்கு!

அவர், கடற்கரை பிராந்தியங்களைக் கவனத்தில் கொள்ளாததற்கு ஒரு காரணம் இருந்தது. பாண்டியன் தன் படைகளைக் கடற் மார்க்கமாக கரையிறக்கினால், அவன் பல்லவர்களின் சீற்றத்துக்கு ஆளாக நேரிடும். அதனால், அந்த யுக்தியை அவன் கையாள மாட்டான் என்றே கருதினார். ஆனால், மானி விவரிக்கும் விஷயங்களைப் பார்த்தால், கூன்பாண்டியன் எதற்கும் துணிந்தவன் என்றே தோன்றுகிறது.

சோழர்களை நிலைகுலையச் செய்வதுடன், பல்லவ சாம்ராஜ்ஜியத்துக்குத் தனது படைபலத்தை நிரூபிக்கும் வகையிலும், இந்தப் படையெடுப்பு அவர்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று காட்டும் விதமாகவும், கூன்பாண்டியன் தனது படைகளில் ஓர் அணியை கடல்வழியே அனுப்ப வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடக்குமெனில், இந்த விஷயத்தில் தனது கவனச் சிதைவு பெரும் பிழைதான் என்பதைத் தெளிவுற உணர்ந்தார் மணிமுடிச் சோழர்.

ஆனால், அந்தப் பிழையை மிகத் துல்லியமாகக் கண்டுகொண்டு நிவர்த்திசெய்திருக்கிறாள் மானி. வடக்கு எல்லையையும் காக்கும் விதமாக மிகச் சரியான இடத்தில் பெரும் பாசறையை உருவாக்கியிருப்பது, சோழரின் மனதுக்குப் பெரிதும் நிம்மதியளித்தது.

அது மட்டுமல்ல... மணிமுடிச்சோழரின் பெரும் வியப்புக்கு, மற்றொரு காரணமும் இருந்தது. சோழத்துக்கு ஆதரவாக, குறிப்பிட்ட அந்த இடத்தில் களமிறங்கியிருப்பது, தென்பாண்டி நாட்டின் *பரதவர் படைகள் என்பதுதான் அது!

அவர்களின் ஆதரவு மானிக்கு எப்படிக் கிடைத்தது? எந்த மார்க்கத்தில் அவர்களை மானி இங்கு வரவழைத்தாள்? வந்து குவிந்திருக்கிறார்கள் என்றாலும், பெரும்போரை தாக்குப்பிடிக்கும் வல்லமை பெற்றவர்களா அவர்கள்? இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் அவர்களிடமே சென்று விடைகாணத் துடித்தார் மணிமுடிச் சோழர். அத்துடன், நேரில் செல்வதால் அவர்களின் பலத்தையும் தீரத்தையும் ஐயமறத் தெரிந்துகொள்ளலாம் என்றும் முடிவுசெய்தார். எனவே, கணமும் தாமதிக்காமல் பரதவரைச்  சந்திக்க மானியுடன் புறப்பட்டார்.

பரதவர்களின் பாசறையை அவர்கள் அடைந்தபோது, நேரம் நண்பகலையும் தாண்டி யிருந்தது.  அங்கே, பரதவர்களின் வரவேற்பும், உபசரிப்பு களும் சோழரை பெரிதும் நெகிழ்ச்சியடைய வைத்தன.  தொடர்ந்து துடுப்புகள் துழாவிய தாலும், பிடிபடும் மீன்களோடு சேர்த்து வலை பாரம் சுமந்ததாலும் உரமேறிய அவர்களின் தோள்களும் தேகமும், ஆகிருதியான தோற்றமும் அவரை மலைக்கச் செய்தன. மட்டுமின்றி, முத்துக் குளிப்பதற்காக நெடிய நேரம் மூச்சடக்கும் பொருட்டு அவர்கள் மேற்கொண் டிருந்த மூச்சுப் பயிற்சியால், அவர்களின் திருமுகங்களும் ஒளிவீசித் திகழ்ந்ததைக் கண்டார்.

அதேநேரம், மற்றொரு விஷயத்தையும் அவர் கவனிக்கத் தவறவில்லை. அகண்டு விரிந்த அவர்களின் மார்புகளிலும், இன்னும் சிலரது வீரத் தோள்களிலும் பச்சையாகக் குத்தப்பட்டிருந்த மீன இலச்சினைகள்தான் அது!

அந்தக் கயற்குறிகள், தொழிற் பக்தியால் ஏற்கப்பட்டவையா அல்லது பாண்டிய தேசத்தவர்களான அவர்களது ராஜ விசுவாசத்தின் அடையாளமா என்பதை சோழர் பிரானால் கணிக்க முடியவில்லை.
ஆனால், அவர் கவனித்ததை, குறிப்பாக தனது மார்பை கூர்ந்து நோக்கியதை பரதவர் தலைவன் கண்டுகொண்டான். கரம் கூப்பி சோழர்பிரானை வணங்கியவன், சிறு புன்னகையோடு பேசவும் துவங்கினான்.

‘‘சோழர் பிரானுக்கு எங்கள்  மேல் ஐயப்பாடு எழுந்துவிட்டது போலும்! உங்களின் ஐயம் நியாயமானதுதான். இந்த அளவில், நானும் எங்களது நிலைப்பாட்டினை தங்களுக்கு விளக்கி யாக வேண்டியது அவசியமாகிறது.

சோழர்பிரானே... எங்களின் பாண்டிய தேசத்தையும், மாமன்னரையும் உயிருக்கு நிகராக நேசிக்கிறோம். இன்னும் சொல்வதானால், அன்றாடம் நாங்கள் வழிபடும் மாமதுரை சொக்கேசருக்கு அடுத்தபடியாக மாமன்னர் கூன்பாண்டியரைத்தான் எங்கள் நெஞ்சில் வைத்து வழிபடுகிறோம். ஆனாலும், அவரின் மாற்றுமதச் சார்பும், அதைச் சேர்ந்த கொள்கைகளிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும், அரசியல் ரீதியாகவும் அவருக்குச் சோழர்களின் அணுக்கம் பெரிதும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க் கிறோம். ஆனால், அவரைச் சேர்ந்தவர்களின் அணுகு முறைகள் இரு நாட்டவரையும் எதிரிகளாகவே சித்திரித்து விட்டன. அதை மாற்றவேண்டும். 

இப்போது இந்தப் போரில் உங்களுக்கு உதவுவதன் மூலம் தங்களின் உறவும் நட்பும் பரதவர்களாகிய எங்களுக்குக் கிடைக்கும். அதை எப்போதும் பேணிக் காத்து வருவோம். தருணம் வாய்க்கும்போது, எங்கள் வேந்தனுக்கும் அதைப் பரிசளிப்போம். அதற்கான வாய்ப்பைத் தென்னாடுடைய சிவனார் அருள்வார் எனும் நம்பிக்கை எங்களுக்கு உண்டு. இப்போது எங்களின் இந்த நடவடிக்கை, பாண்டியருக்கு வேம்பாகக் கசக்கும். ஆனாலும், இந்த கசப்பு மருந்து அளிக்கப்போகும் இனிப்பான பலனை எதிர்காலத்தில் பாண்டியர் நிச்சயம் புரிந்து கொள்வார்’’ என்றவன் தொடர்ந்தான்...

‘‘இந்த விளக்கங்களை விடவும், மானியார் வகுத்திருக்கும் ஒரு திட்டத்தை நீங்கள் தெரிந்துகொண்டால், அதைச் செயல்படுத்தத் துணிந்திருக்கும் எங்கள்மீது, தங்களின் நம்பிக்கையும் மதிப்பும் பரிபூரணம் பெற்றுவிடும்’’ என்றவன், இடையில் சொருகியிருந்த தனது குறுவாளை எடுத்து, தரையில் சில கோடுகளை எழுதினான்.

அடுத்தடுத்து அவன் வரைந்த புள்ளிகளும் சித்திரங்களும் இணைய, அந்தத் தரையில் மானியின் மகத்தான போர்த் திட்டம் விரிந்தது. கூடவே, உயிரைத் துச்சமென கருதிக் களமாடத் தயாராகிவிட்ட பரதவர்களின் தியாக உணர்ச்சி எத்தகையது என்பதையும் மிகத் தெளிவாக உணர்ந்தார் மணிமுடிச் சோழர்.

இவர்கள் இங்கே திட்டம் வகுத்துக்கொண்டிருந்த அதேநேரம்... சிராப்பள்ளிக் குன்றின் அடிவாரத்தில் புதிய சிறு குன்றுகள் முளைத்ததுபோல், ஆஜானுபாகுவான தோற்றத்துடன் இருவர் சந்தித்துக்கொண்டார்கள்.

அவர்களில் ஒருவன் ‘பேரழிவு நிச்சயம்’ என்று கூறிச் சிரிக்க, பதிலுக்கு மற்றவனும் குரூரச் சிரிப்பை வெளியிட்டான்!

- மகுடம் சூடுவோம்...

``ம் புராணங்கள் சத்தியமானவை. சத்தியம் சரித்திரமாகப் பரிணமிக்கும்போது அதன் மகத்துவம்

சிவமகுடம் - 6

இன்னும் அதிகமாகும். அப்படியான ஒரு மகத்துவம் சிவமகுடம். வெறும் கதையாகவோ அல்லது நிகழ்வுகளை மட்டுமே பதிவு செய்யும் தொடராகவோ இல்லாமல், நம் பண்டைய கலாசாரத்தையும், பண்பாட்டையும், பக்தி நெறியையும்  கலந்து கதை சொல்லும் இந்தத் தொடர், இக்காலத்துக்கு  மிக அத்தியாவசியம்!

ஆபரணங்களில் பிரதானமானது மணிமகுடம். சக்தி விகடனின் தலையாய ஆபரணம் இந்த சிவமகுடம்!''

- காளிகாம்பாள் கோயில்

சண்முக சிவாச்சார்யர்