Published:Updated:

கேள்வி - பதில்

எது அவசியம்... - விஞ்ஞானமா? மெய்ஞ்ஞானமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

எது அவசியம்... - விஞ்ஞானமா? மெய்ஞ்ஞானமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

? ‘தெள்ளத் தெளிந்தாருக்கு ஜீவனே சிவன்’ என்பது பெரியோர் வாக்கு.  நமக்குள்ளே இறைவன் இருக்கிறார் எனும்போது ஆலயம், வழிபாடு, மெய்ஞ்ஞானத்தேடல் எல்லாம் அவசியம்தானா? உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை பயக்கும் தீர்வுகளைத் தரும் விஞ்ஞான வழிகள் பல இருக்கும்போது,  மேற்சொன்ன வழிகளை நாடுவதால் பலன் என்ன எனக் கேட்கிறார் நண்பர் ஒருவர். நீங்கள்தான் விளக்கம் தந்து வழிகாட்ட வேண்டும்.

- எல்.ராமநாதன், திருச்சி-2

 முதல் கோணம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்காது. வாழ்க்கையில் தெரிந்துகொள்ள வேண்டியவை

கேள்வி - பதில்

மிஞ்சியிருக்கும். அதில் நிறைவு இருக்காது’ என்று சாணக்கியன் கூறுவார் (நஹிஸர்வஸர்வம் ஜானாதி). ‘இயற்கை உனது ஆசான். உலக நிகழ்வுகள் அனுபவத்துக்கு வரும்போது தெரிந்துகொள்ள வேண்டியவை ஏராளம் உண்டு என்று உணருவோம்’ என்று சொல்வார் சரகர் (க்ருத்ஸ்னோ ஹிலோ கோபுத்திமதாம் ஆசார்ய:).

‘எதைத்(பரம்பொருள்) தெரிந்துகொண்டால், எல்லாம் தெரிந்தவனாக மாறுவோமோ அதைத் தெரிந்துகொள்’ என்று ஆன்மிகவாதிகள் விளக்குவார்கள். அது மிகையான விளக்கம். உலகவியல் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளாமல் ஒதுக்கிவிட்டு, பரம்பொருளில் (அறிவில்) ஒன்றுபவன் எல்லாம் தெரிந்தவனாக மாட்டான். உலகவியலில் விருப்பு-வெறுப்பு, கசப்பு-இனிப்பு போன்ற உணர்வுகளை அனுபவித்து, அவற்றின் தரத்தை மதிப்பீடு செய்து, அவற்றையெல்லாம்விட உயர்ந்ததும் தெரிந்து கொள்ள வேண்டியதுமான பரம்பொருளை எட்டியவனே எல்லாம் அறிந்தவனாவான். கடலைத் தாண்டிய அனுமனுக்கு கடலின் ஆழம் தெரியாது. கடலின் அடியைத் தொட்ட மந்திர பர்வதத்துக்கு அதன் ஆழம் தெரியும். அதுவும் ஓர் அறிவுதான். அதையும் தெரிந்து
கொள்ள வேண்டும்.

? தாங்கள் சொல்வதுபோன்று சகலத்தையும் அனுபவித்து அறிய வேண்டும் எனில், விஞ்ஞானத்தைத் தவிர்க்க முடியாதுதானே?

இயற்கை நமக்குத் தேவையான படிப்பினையை வழங்குகிறது. பகலில் ஆதவனும் இரவில் சந்திரனும் நமக்கு வெளிச்சம் தந்து உதவுகின்றன. சந்திரன் கண்ணுக்குப் புலப்படாத வேளையில், நட்சத்திரங்கள் வழிகாட்டுகின்றன. கும்மிருட்டில் மின்மினியும் வழிகாட்டும். இயற்கை வளங்களை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளாமல், நமது தேவைகளை செயற்கை முறையில் நிறைவு செய்யும் பொருட்டு, விஞ்ஞானம் என்ற போர்வையில் இயற்கையை வென்றுவிட்டதாக நினைக்கிறோம். போதுமான வளர்ச்சியடையாத சிந்தனையில் உருவான முடிவுகளை வைத்து, இயற்கைக்கு மாறுபாடான முயற்சியில் இறங்குகிறான் மனிதன். இயற்கையை வெல்ல இயலாது என்று இன்னமும் அவன் தெரிந்து கொள்ளவில்லை. இயற்கையின் கோபத்துக்கு ஆளாகி தவிப்பை உணர்ந்தும், அந்த கோபத்துக்கான காரணத்தை ஆராயாமல், அதை எதிர்த்து செயல்பட முனைகிறான்; துவண்டு போகிறான். அரைகுறை அறிவுடன் ‘ஆகாசத்தை வில்லாக வளைப்பேன்’ என்று சூளுரைத்துவிட்டு, சொல்லோடு நின்றுவிடுவான்; செயலில் இறங்கமாட்டான்!

சமீபத்தில் சந்தித்த இயற்கையின் சீற்றத்தில் வளம் படைத்தவர்களும் வளைய வர இயலாமல் தவித்தார்கள். அப்படியும் நாம் இயற்கையின் பாடத்தை அறிந்து கொள்ளவில்லை. இப்படியான சிந்தனைதான் விஞ்ஞானத்தை வரவேற்று, இயற்கைக்கு மாறாக செயல்படவைத்து மனித சிந்தனையை திசை திருப்பிவிடுகிறது. மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகள், ரயில், பேருந்துகள் முதலாக மனிதனின் கண்டுபிடிப்புகளான விஞ்ஞானக் கருவிகள் அத்தனையும் செயலற்றுப் போயின.

?செயலற்றுப் போக இயற்கை சீற்றம்தானே காரணம்? விஞ்ஞானத்தைக் குறை சொல்வது நியாயமாகுமா?

மிக முக்கிய காரணம் நாம்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். சுயமாக பால் தரும் பசுக்களிடம், செயற்கை முறையில் இனப் பெருக்கத்தை ஏற்படுத்தி, அவற்றை துன்புறுத்தி வலுக்கட்டாயமாக பால் கறந்து, அதை பல நாட்களாக செயற்கை முறையில் சேமித்து விநியோகம் செய்கிறார்கள். விஞ்ஞானத்தால் பால் தரமற்ற நிலையில் மாற்றப்பட்டு, ஒப்புக்காக பாலை அருந்தும் அவலத்தைப்  பார்க்கிறோம். அதை விஞ்ஞான சாதனையாக பறைசாற்றவும் செய்கிறோம். இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக் கொடுக்காமல் எதிர்த்து வாழ கற்றுக் கொடுக்கும் சிந்தனை மனித முன்னேற்றத்துக்கு உதவாது.

பசுவின் சாணம் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் அளிக்கும். அது இயற்கையாக உருவானது. அதைத் தவிர்த்துவிட்டு, சுத்தத்துக்கும் சுகாதாரத்துக்கும் புதிய பொருட்களை அறிமுகம் செய்து, இயற்கையாகக் கிடைக்கும் சுகாதாரத்தையும் மனிதனை ஏற்கவிடாமல் தவிக்கவைக்கிறது விஞ்ஞானம்.

? அப்படியெனில் விஞ்ஞானத்தால் எந்தவித பலனும் இல்லை என்கிறீர்களா?

விஞ்ஞானக் கருவிகள் அத்தனையும் எதிர் விளைவுகளை உள்ளடக்கியவை. நடக்க உதவும் ஊன்றுகோலை உதறிவிட்டு தள்ளுவண்டியை ஏற்பது, பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். இயற்கையின் செல்வங்கள் அத்தனையும் ஜீவராசிகளின் அன்றாட வாழ்க்கையைச் செம்மைப்படுத்த உதவும். அத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் வழிவகுக்கும்.

வீட்டில் அகல் விளக்கொளியில் ஆண்டவனை வழிபட்டார்கள். கோயிலிலும் அமைதியுடன் இயற்கையான சிலையில் ஆண்டவனை அகல் விளக்கில் பார்த்து வணங்கினார்கள். ஆற்றிலும் குளத்திலும் நீராடி உடல் சுகாதாரத்தைப் பாதுகாத்தார்கள். பருவ காலங்களில் விளையும் மாறுபட்ட காய்-கனிகளை உண்டு பசியைத் தீர்த்தார்கள். பசியாற உணவு வேண்டும். உணவுக்குப் பயிரினங்கள் வேண்டும். பயிரினத்துக்கு மழை வேண்டும். தாகத்துக்கு தண்ணீர் வேண்டும். மூச்சுவிடக் காற்று வேண்டும். இவை அத்தனையையும் இயற்கையின் விபவத்தில் நிறைவேற்றிவிடுவோம்.

மனதைப் பக்குவப்படுத்த, பலபேருடன் இணைந்து வாழ வழிபாட்டை ஏற்போம். உடலும் உள்ளமும் சீராக இயங்க இயற்கையே நமக்கு வழிகாட்டுகிறது. அதை அலட்சியப்படுத்தி, செயற்கை வழியில் திசை திருப்பிவிட்டுத் துன்பத்தை நிரந்தரமாக ஏற்கவைப்பது தவறு. பண்டைய வாழ்க்கை முறை என்றும் பாதுகாப்பானது. செயற்கை முறை பாதுகாப்பின்மை மட்டுமல்ல, எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தி அலைக்கழிக்கும். இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்கள் நீண்ட ஆயுளோடும் சிறப்பாகவும் வாழ்ந்தார்கள். தூய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையும்தான் கை கொடுக்கும். ஆடம்பர வாழ்க்கையும் அடக்க இயலாத ஆசையும் வாழ்க்கையை கானல் நீராக்கிவிடும்.

கேள்வி - பதில்

உலகளாவிய நிலையில், மனித இனப்பெருக்கம் அளவு கடந்து விரிவடைந்த சூழலில், இயற்கை வளம் பற்றாக்குறையை எட்டும்போது, அதை நிறைவு செய்ய விஞ்ஞான முறை பயன்படுகிறது. ஆகவே, அது இயற்கைக்கு எதிரானது அல்ல.

? தானாகப் பழுக்கவேண்டிய கனியை வலுக்கட்டாயமாக கனிய வைப்பீர்கள். இதைப் போன்று எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். அப்படியிருக்க, விஞ்ஞானம் இயற்கைக்கு எதிரானது அல்ல என்று எப்படிச் சொல்ல முடியும்?

இயற்கையின் செயல்பாடு போதுமானதாக இல்லை என்பதை நல்லமுறையில் தெரிந்து கொண்டு, அதன் வளங்களை சூழலுக்கு ஏற்ப பெருக்கி, இயற்கை வளத்தை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் முயற்சியில் விஞ்ஞானம் இறங்கியது. அதில் வெற்றியும் கண்டது. ஆகவே, மனித சிந்தனை வளம் பெற்று விளங்குகிறது. அவனது சிந்தனையோட்டத்துக்கு ஈடுகட்டும் அளவுக்கு இயற்கை வளங்கள் போதுமானதாக இல்லை.

இயற்கைப் பொருள்களில் தென்படும் மின்சாரத்தை சேமித்து வெளிச்சத்துக்காகவும், எரிபொருளாகவும், தொலைத் தொடர்பு வசதிக்காகவும், போக்குவரத்துக்காகவும் பயன்படும்படி செய்தது விஞ்ஞானத்தின் சாதனையாகும். வீணாகப் போகும் இயற்கை சக்தியை சேமிக்கும் முறையை ஏற்படுத்தி, தங்கு தடங்கலின்றி வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்கிறது அது. செயற்கை உரத்தில் பயிர் வளர்ச்சியை பன்மடங்காகப் பெருக்கி அத்தனைப் பேருக்கும் தட்டுப்பாடின்றி உணவு வழங்குகிறது. விஞ்ஞான மருத்துவம் நொடிப் பொழுதில் பிணியை அகற்றி சுறுசுறுப்போடு இயங்க வைக்கிறது. பருவகால மாற்றங்களில் ஏற்படும் துன்பங்களை அகற்றவும் விஞ்ஞானக் கருவிகள் பயன்படுகின்றன. செயற்கை சுவாசத்தில் உயிரைத் தக்கவைத்து, நோயாளியை செயல்பட வைக்கும் திறமையையும் விஞ்ஞானம் அளித்துள்ளது.

பண்டைய நாளில் அறுபதுடன் முடிந்துபோன ஆயுளை இருமடங்காக உயர்த்தி அளித்திருக்கிறது விஞ்ஞானம். இதெல்லாம் இயற்கையின் தகுதிக்கு அப்பாற்பட்டது. ஆக, எட்டக் கூடிய விஞ்ஞா னத்தை உதறித் தள்ளிவிட்டு, எட்ட இயலாத மெய்ஞ்ஞானத்தைப் பரிந்துரைப்பது தவறு.

? நீங்கள் குறிப்பிடும் அனைத்து விஷயங்களுக்கும் மேலான இறை அனுபவத்தை விஞ்ஞானத்தால் தரமுடியாது அல்லவா?

உடல் இயக்கமே மெய்ஞ்ஞானத்தின் தூண்டுதலில் நிகழ்கிறது என்று ஆன்மிகவாதிகள் விளக்கும்போது, நம்முடனேயே பரம்பொருள் எப்போதும் ஒண்டியிருக்கிறார் என்று நிச்சயமான பிறகு, அவரை அடைவதற்கு பலவிதமான வழிமுறைகளை ஓதுவது வீண். ‘நான் ஏற்கெனவே ஆன்ம வடிவில் உடலில் இருக்கும் பரம் பொருளை உணர்ந்தவன்’ எனும்போது, உலக வாழ்க்கையைத் துறக்கவைத்து, முழு  மூச்சுடன் மெய்ஞ்ஞானத்தைப் பெறுவதற்காக செயல்படும்படி திசை திருப்புவது தேவையில்லாத ஒன்று.

உலகை இயக்கும் ஓர் அபூர்வ சக்தி எங்கும் நிறைந்து, அத்தனை உயிரினங்களிலும் ஊடுருவி இயங்க வைக்கிறது என்பதை உணர்ந்த பிறகு, அதைத் தேடி அலைய வேண்டிய சூழல் உருவாக வில்லை. கம்பியில் மின்சாரம் இருப்பதை மனம் உணர்ந்தால் போதும்; தொட்டுப் பார்க்கத் தேவையில்லை. மின்சாரத்தைப் பற்றி அறிந்திராத சிறுவனுக்கும் அந்த மின்சாரம் பயனளிக்கும். ஆக, பரம்பொருளை தெரிந்த பிறகு வாழ்க்கைப் பயணத்தை ஏற்க வேண்டும் என்று இல்லை.

பிறந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய ஆசாபாசங்களை நிறைவேற்றிக் கொள்ள இயற்கை வளத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவன், மெய்ஞ்ஞானத்தை பரம்பொருளை தேடி அலைய வேண்டிய வேலை இல்லை. இருக்கும் (உடலுக்குள்) இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையவிடும் சிந்தனையை, ஆன்மிக சிந்தனையாக விரிவாக்கி, மனிதனை அவனது கடமையைச் செய்ய விடாமல் வேறு வழியில் நுழைத்து அலைக்கழிப்பது தவறு.

? எனில், ஆன்மிகம் அவசியம் இல்லை என்கிறீர்களா?

ஆன்மிகம் வேறு, இயற்கை வேறு என்று இல்லை. விஞ்ஞானம் இயற்கையை விட வேறுபட்டதால், அதை இயற்கையின் மற்றுமொரு பரிணாமம் எனலாம். அது இன்றி நாம் வாழ இயலாது. மன அடக்கத்துக்கு மெய்ஞ்ஞானம் பயன்பட்டாலும், வாழ்க்கையில் பல்சுவைகளைச் சுவைத்து மகிழ விஞ்ஞானம் வரப்ரசாதம். அது இல்லாமல் வாழ்க்கையில் சுரத்து இல்லை. இயக்குபவன் கடவுள். இயங்க வேண்டிய மனதுக்கும் உடலுக்கும் தெம்பு ஊட்டுவது விஞ்ஞானம். பொருள்களைச் சூடேற்றவும், குளிரவைக்கவும் மின்சாரத்தால் இயலும். ஆனால் எதைக் குளிர வைப்பது, எதை வெப்பமாக்குவது என்று தீர்மானிப்பது மின்சாரம் அல்ல; நாம்தான். அதற்கு உகந்த வகையில் செயல்பட்டால் மின்சாரம் ஒத்துழைக்கும்.

எல்லாம் துறந்த துறவிகளும் விஞ்ஞான உபகரணங்களை நம்பி வாழ்கிறார்கள். அவர்கள் இயற்கையிடம் வைத்த நம்பிக்கை அவர்களுக்குக் கை கொடுக்கவில்லை. எனவே, தத்துவ விளக்கங்களும் ஆன்மிக வாதங்களும் வாழ்க்கை முறை அல்ல. வாழ்வதற்கு விஞ்ஞானம் வேண்டும். இல்லையென்றால் இருளில் மூழ்கிவிடுவோம். பழைய தத்துவ விளக்கங்களை திருப்பித் திருப்பிச் சொல்வது வாழ்க்கைக்கு உதவாது. காலத்தின் சூழலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் திறமையை விஞ்ஞானம் அளிக்கும்.

இயற்கைப் பொருள்கள் இன்பத்தைச் சுவைக்க ஒத்துழைக்கும். செயற்கை ஆரம்பத்தில் இன்பமாக தோன்றினாலும், முடிவில் துன்பத்துக்கே வழிகோலும். செயற்கை முறையில் சேமித்தப் பொருட்கள் அத்தனையும், அதன் தரத்தை இழந்த நிலையில் பயன்பாட்டுக்கு வருகின்றன.

கேள்வி - பதில்

? விஞ்ஞானம் வளராத அக்காலத்தில் அனைத்தும் தரமாக திகழ்ந்தனவோ?

பண்டைய இந்திய மருத்துவ முறையில் அரிஷ்டங்களையும், ஆசவங்களையும், லேஹியங் களையும் இயற்கை முறையில் சேமித்தார்கள். பூமிக்கடியில் பாதுகாத்தார்கள். உணவு பொருள்களையும்கூட வீட்டில் உறியிலும், மண்பாண்டங்களிலும் சேமித்தார்கள். வருடக் கணக்கில் ஊறுகாயைச் சேமிக்கும் முறையை அவர்கள் தெரிந்துகொண்டிருந்தார்கள். அவற்றை பல நாட்களுக்கு தரம் குறையாமல் சேமித்து வைக்க முடிந்தது. சுகாதாரத்தை பாது காப்பதிலும், உணவு பண்டங்களைத் தயாரிப்பதிலும் இயற்கை முறையைப் பின்பற்றினார்கள். உள்ளத் தூய்மைக்குக் கடவுள் வழிபாடும், உடல் தூய்மைக்கு நீராடலும் நெற்றித் திலகமும் பயன்படுத்தப்பட்டன. நோய் நொடியின்றி நீண்ட காலம் சீரும் சிறப்புமாக வாழ்ந்தார்கள்.

அன்றைய நாளில் இயற்கைச் சீற்றங்கள் தாக்கினாலும் உள்ளத்தின் திடமும், உடலின் வலிமையும் அந்த தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு அளித்தன. இயற்கை உரத்தில் பயிர் வளத்தைப் பெருக்கினார்கள். பொருள்களின் தட்டுப்பாடு அவர்களைப் பாதிக்கவில்லை. நெஞ்சுரமும், உடல் வலிமையும் இயற்கையின் எதிரிவிளைவுகளை எதிர்த்து வெற்றியடையச் செய்தன.
விஞ்ஞானச் சிந்தனை தோன்றுவதற்கு முன்பு வாழ்ந்த மக்கள், வாழ்க்கையில் இன்னலைச் சந்தித்தாலும் இயற்கையான முறையில் அதிலிருந்து வெளிவந்தார்கள். மின்சாரம், தொலைதொடர்பு, ரயில் வாகனங்கள் அவர்களுக்கு இருக்கவில்லை. இயற்கை  தரும் வெளிச்சத்தில் வாழ்க்கையைச் சுவைத்து மகிழ்ந்தார்கள். பாத யாத்திரையாக பயணத்தை மேற்கொண்டார்கள்.

உள்ளத்தில் உறைந்த ஆன்மாவை(கடவுளை) உணர்ந்து, அதை மனதில் அசைபோட்டு, மனதை உயர்த்தி மனக்கட்டுப்பாட்டின் மூலம் சங்கடங்கள் தங்களைத் தாக்காமல் செய்தார்கள். உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க சிறந்த உணவு முறைகளை ஏற்றார்கள். அன்றைய நாளிலும் இனப்பெருக்கம் இருந்தது. ஒவ்வொரு குடும்பமும் பத்துப் பதினைந்து குழந்தைகளைப் பெற்று விரிவடைந்திருந்தது. குடும்பக் கட்டுப்பாட்டை அறியாத அன்றைய நாளில், இனப்பெருக்கத்துக்கு இணையாக உணவு உற்பத்தியையும் பன்மடங்கு பெருக்கினார்கள். சத்திரங்களும், சாவடிகளும், தண்ணீர் பந்தலும் கிராமம்தோறும் செயல்பட்டன. மக்கள் பசியையும் தாகத்தையும் தணித்து மகிழ்ந்து வாழ்ந்தனர். இனப் பாகுபாடோ, பொருளாதாரச் சிக்கலோ அன்றைய நாளில் தலை தூக்கவில்லை. ஆடம்பரமற்ற வாழ்க்கையை ஏற்றார்கள். மன அடக்கத்தோடும் இயற்கையோடும் இணைந்தும் வாழ்ந்தார்கள். இயற்கை தந்த வளமும் கடவுள் நம்பிக்கையும்தான் அவர்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்தன. இன்று இயற்கைச் செல்வங்களில் செயற்கை நடைமுறையைத் திணித்து, இயற்கை வளத்தை சீர்கெடுத்து செயற்கை முறையை நாடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.

கேள்வி - பதில்

புது வகையான உரங்களின் வரவால் நிலம் விளையும் தகுதியை இழந்து தவிக்கிறது. உரம் இருந்தால் பயிர் விளையும், இல்லா விட்டால் விளையாது. சுயமாக இருந்த நிலத்தின் விளைவிக்கும் திறன் குன்றிவிட்டது. ஆகையால் மனித இனம் ஒட்டுமொத்தமாக செயற்கைப் பொருளுக்கு மாறிவிட்டது. பற்றாக்குறையை செயற்கை முறையில் வரவழைத்துக்கொண்டு, திரும்பத் திரும்ப விஞ்ஞான முறையில் முன்னேற முயற்சித்துப் பலனின்றி தவிக்கிறோம்.

? ஒட்டுமொத்தமாக ‘பலன் இல்லை’ என்று சொல்லிவிட முடியாதே?

இன்றைய நாளில் மனிதப் பண்பாட்டுக்கும் அவர்களது வாழ்க்கைக்கும் விஞ்ஞானம் எதிரியாக மாறியிருக்கிறது. விஞ்ஞான முறைகள் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் அல்பாயுளில்  முடிந்துபோகும். புதுப்புது நடைமுறைகள் தோன்றும். அவையும் நீண்டநாள் பலனளிக்காமல் மறைந்துவிடும். இப்படி புது சிந்தனையில் உருவான விஞ்ஞானம், வாழ்க்கையில் மரண பயத்தை தருவதாகவும், தீவிரவாதமாக மாறி சமுதாய நலனைப் பாதிக்கும் அளவுக்கு வளர்ந்தோங்கி யிருக்கிறது. விஞ்ஞானத்தால் ஒரு பயிரைக்கூட தோற்றுவிக்க முடியாது. ஆனால், தோன்றிய பயிர்களின் தரத்தை சின்னாபின்னமாக்க இயலும்.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலும் எதிர் விளைவுகளைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். கடவுள், இயற்கைச் செல்வங் களை மனித இனம் பகிர்ந்து பயனடையும் வகையில் அருளியிருக்கிறார். அவரை நினைவில் ஏற்றிக்கொண்டால், அவர் அளித்த செல்வங்களை ஒற்றுமையுடன் பகிர்ந்து வாழ்ந்து, இன்பத்தைச் சுவைக்க இயலும். அதை விட்டுவிட்டு, கடவுளை யும் மறந்து, இயற்கையையும் சீண்டித் துன்புறுத்தி, விஞ்ஞானத்தின் துணையுடன் அத்தனை இயற்கை வளங்களையும் சுரத்தில்லாமல் செய்வது தகாது. விஞ்ஞான அறிவு முன்னேற்றத்துக்கு உதவாது.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

பஞ்ச பூதங்கள் நமக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. மழை பொழிந்து, நீர் வளத்தால் பயிர் வளம் பெருகி, பசியும் தாகமும் மறைந்துவிடுகின்றன.காற்று மூச்சுக் காற்றாகச் செயல்பட்டு உடல் இயக்கத்தை நடைமுறைப்படுத்துகிறது.

கேள்வி - பதில்

சூரியனும் அக்னியும் வெப்பத்தை அளித்து, அறியாமையை அகற்றி நேர்வழியில் செயல்படும் சிந்தனையை உருவாக்குகின்றன. எந்த விஞ்ஞானமும் நமக்குத் தேவையற்றது.  ஐம்பெரும் பூதங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து, அத்தனை ஜீவராசிகளுக்கும் உணவும், பாதுகாப்பும் அளித்து பராமரிக்கின்றன. அது சரியாக ஈடேற உதவும் மனப் பக்குவத்துக்கு கடவுள் நம்பிக்கை ஒத்துழைக்கிறது. இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, விஞ்ஞானத்தை நம்பினால் விரும்பிய பலனை எட்ட இயலாது.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.