மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்பி.ஸ்ரீ., ஓவியங்கள்: சித்ரலேகா

அறம் வளர்க்கும் அன்னை!

தமிழ் நாட்டிலே எத்தனை எத்தனையோ சிவன் கோயில்கள். அத்தனை கோயில்களிலும் அம்பிகைக்கும் சந்நிதி உண்டு. இந்த அம்பிகைகள் எல்லாம், அந்த ‘மலையரையன் பொற்பாவை வாள் நுதலான் பெண் திருவுருவின்’ மூர்த்தமே என்றாலும், அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே வேறு வேறு பெயராலேயே அழைக்கிறார்கள் கவிஞர்கள், கலைஞர்கள், பக்தர்கள்.

வண்டமர் பூங்குழலி, ஏலவார் குழலி, மட்டுவார் குழலி என்று அவள்தன் குழல் அழகிலேயே மெய் மறந்து நிற்பவர்கள் உண்டு. தேனார் மொழியாள், யாழைப் பழித்த மொழியாள் என்று அவளது கரும்பன்ன சொல்லிலேயே மயங்குபவர்களும் உண்டு. அத்துடன் அவளை அறம் வளர்க்கும் அன்னையாகவும் உருவகப் படுத்திப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள் கலைஞர்கள். ‘பால் நினைந்து ஊட்டும்’ தாயின் அன்பைப் பாடிய மாணிக்கவாசகர்,

தாயாய் முலையைத் தருவானே

தாராது ஒழிந்தால், சவலையாய்

நாயேன் கழிந்து போவேனோ

என்று உள்ளம் உருகப் பாடுகிறார். ‘ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றும் இறைவனை, தாயவன்காண் உலகிற்கு தன்னொப்பில்லா தத்துவன்காண்' என்று அப்பர் பாடி மகிழ்கிறார். இத்தகைய அன்னைதான் மனையறத்தால் அறம் பெருக்கித் திறம் வளர்க்கிறாள்; அகில உலகத்தில் உள்ள உயிர்களை எல்லாம் ஊட்டி வளர்க்கிறாள் என்றெல்லாம் கற்பனை பண்ண முடிந்திருக்கிறது கலைஞனுக்கு.

அருட்களஞ்சியம்

தமிழ்நாட்டில் பிரசித்திப் பெற்ற அன்னை காமாக்ஷியை, மதுரை மீனாக்ஷியை, இல்லை இவர்களோடு ஒத்த பெருமையுடைய அகிலாண்டேஸ்வரியை, அபிராமியை எல்லாம்தான் நீங்கள் நேரில் சென்று கண்டு வணங்கியிருப்பீர்களே!

இவர்களை விடுத்து, பலருக்கு அறிமுகம் இல்லாத ஒரு அன்னையையே உங்கள் முன் நிறுத்துகின்றேன். தாராசுரம் கோயில் அன்னை அன்னபூரணி அமுத கலசத்தை ஏந்திக் கொண்டு நம்மை நோக்கி விரைந்தே வருகிறாள், நம் பசிப் பிணி நீக்க!

   - தம்பி

**1958 ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இருந்து....

பிறந்ததும் வளர்ந்ததும்

பரம்பரைப் பெருமையிலும் சேர்ந்த புகழிலும் தசரதன் தன் முன்னோர்களை வென்றுவிடுகிறான் என்பதில் கூடச் சந்தேகம் ஏற்படலாம். ஆனால் ராமனைப் பெற்ற புகழ் என்ற மூன்றாவது புகழ் தசரதனுக்கே உரியது, ஏகபோகமாக. இத்தகைய ராமன் பிறப்பு ஜனகனுடைய மனோபாவத்தை விசேஷமாக வசீகரிக்கும்படி விச்வாமித்திரனால் வர்ணிக்கப்படுகிறது.

தீவினை செய்த தீவினையாலும், அறம் செய்த அறத்தாலும் ராமன் தோன்றியிருக்கிறானாம்.

விரிந்திடுதீ வினைசெய்த

 வெவ்வியதீ வினையாலும்,

அருங்கடையில் மறைஅறைந்த

 அறம்செய்த அறத்தாலும்,

இருங்கடகக் கரதலத்(து) இவ்

 எழுதரிய திருமேனிக்

கருங்கடலைச் செங்கனிவாய்க்

 கவுசலையென் பாள்பயந்தாள்.

ராமனுடைய சகோதரர்களைக் குறித்துப் பிரஸ்தாபிக்கும்போது பரதனுக்கும் ஏறக்குறைய ராமனுக்குச் சமமாகப் பெருமை கொடுத்துப் பேசுகிறான் விச்வாமித்திரன். ராமனை ‘தர்ம ஸமுத்திரம்’ என்று குறிப்பாகக் கூறியவன், பரதனை ‘நியாய சமுத்திரம்’ என்று வெளிப்படையாகக் கூறுகிறான்.

பிறகு லக்ஷ்மண சத்ருக்னர்களின் ஸௌந்தர்யத் தையும் பராக்கிரமத்தையும் பாராட்டுகிறான் விச்வாமித்திரன். ராமனோடு பரதனை ஒப்பிட்டது போல், லக்ஷ்மணனோடு அயோத்தியிலுள்ள சத்ருக்னனையும் ஒப்பிட்டுப் பேசுகிறான்.

அருட்களஞ்சியம்

அப்பால் இந்தப் புதல்வர்களின் வித்யாப்பி யாசத்தைக் குறிப்பிடுகிறான். இவர்களுக்குத் தசரதன் பெயரளவிலேதான் தந்தையென்று சொல்லி, வசிஷ்டனே சகல கலைகளையும் வேதங்
களையும் ஊட்டி வளர்த்த உண்மைத் தந்தை என்கிறான்.

தலையான பொருளுணர்வில்

 கலைமகட்கும் தலைவராய்ச்

சிலைஆயும் தனு(ர்)வேதம்

 தெவ்வரைப்போல் பணிசெய்யக்

கலைஆழிக் கதிர்த்திங்கள்

 உதயத்தில் கலித்(து) ஓங்கும்

அலைஆழி எனவளர்ந்தார்

 மறைநான்கும் அனையார்கள்.

ராமன் முதலான நான்கு புதல்வர்களும் ஆண்டிலும் அறிவிலும் வசிஷ்ட குருகுலத்திலே எப்படி வளர்ந்தோங்கினார்கள் என்பதை எவ்வளவு அதிசயமாய்க் குறிப்பிடுகிறது இந்த விச்வாமித்திர வாக்கு!

குழந்தைகளின் உள்ளத்தை ஒரு கூடையாகவோ, குப்பைத் தொட்டியாகவோ கருதிப் பலவேறு விஷயங்களாலும் நிரப்பி விடுவதுதான் கல்வி என்று வசிஷ்டர் நினைக்கவில்லையாம். வாழ்க்கை யில் எதிர்ப்படும் விஷயங்களைச் சோதித்து அறிந்து, அவற்றின் உண்மைப் பொருளை உணர்ந்து ஒழுகும் சக்தியை மாணாக்கர்களுக்கு அளிப்பதுதான் உத்தமமான கல்வி முறையென்று வசிஷ்டர் கருதியதுபோலத் தோன்றுகிறது.

அருட்களஞ்சியம்

தலையான பொருள் உணர்வில்

கலைமகட்கும் தலைவராய் -

- இந்த இளங்குமாரர்கள் விளங்கும்படி செய்து விட்டதாம் வசிஷ்டர் கற்பித்த போதனா முறை.

இக்கல்விப் பயிற்சிக்கு உடற்பயிற்சியும் இன்றியமையாதது என்பதையும் வசிஷ்டர் உணர்ந்திருந்தார் என்ற குறிப்பு,

சிலைஆயும் தனு(ர்)வேதம்

 தெவ்வரைப்போல் பணிசெய்ய

என்ற விச்வாமித்திர வாக்கில் அடங்கியிருக்கிறது. ராமன் முதலானவர்கள் வசிஷ்ட குருகுலத்திலே உள்ளத்தைப் பண்படுத்திக் கொண்டதுபோல் உடம்பையும் வில்வித்தை முதலான சாதனங்களால் பண்படுத்திக் கொண்டார்கள்.

அந்தக் காலத்திலே போர்க் கலையின் அதிமுக்கிய அம்சமே வில்வித்தைதான். எனவே இந்த வித்தை ‘தநுர்வேதம்’ என்று அவ்வளவு உயர்வாக மதிக்கப் பட்டது.

இந்த வித்தை ராமன் முதலானவர்களுக்குப் பணி செய்கிறது என்கிறான் முனிவன். அதிலும், பகைவர்களைப் போல் பணி செய்கிறது என்கிறான். தோற்று வந்து அரசர்களிடம் பணி செய்யும் அரசர்கள் எவ்வளவு ஜாக்கிரதையாகக் குற்றேவல் செய்வார்களோ, அவ்வளவு ஜாக்கிரதையாகக் குற்றேவல் செய்கிறதாம் இந்தக் குமாரர்களுக்கு இந்த வித்தை.

வீரப் பிரசங்கம் முடிவு பெற்றது

தசரத ராஜ குமாரர்கள் அறிவோடும் வீரத்தோடும் வசிஷ்ட குரு குலத்திலே வளர்ந்து வந்தார்களே, அந்த வித்தியாப்பியாச முறையைப் பாராட்டிய விச்வாமித்திரன், ‘‘அந்தக் குமாரர்களில் ராம லக்ஷ்மணரை என் யாக ரக்ஷகர்களாக அழைத்து வந்தேன்” என்கிறான். அந்தச் சந்தர்ப்பம் அதுவரை இந்தப் புதல்வர்கள் படித்திருந்த படிப்பிற்கு ஒரு பரீக்ஷையாகவும் அமைந்ததாம்.

அருட்களஞ்சியம்

பரீக்ஷை என்றால் பேனா முனையில் பேப்பரை வதம் செய்து தள்ளும் தற்காலப் பரீக்ஷையா? அம்பு - முனையில் அல்லவா தாடகையின் கொடிய ராக்ஷஸ பலத்தைப் பரீக்ஷிக்க நேர்ந்தது?

ஈங்(கு) இவரால், என்வேள்விக்(கு)

 இடையூறு கடி(து) இயற்றும்

தீங்(கு) உடைய கொடியோரைக்

 கொல்விக்கும் சிந்தையனாய்ப்,

பூங்கழலார்க் கொண்டுபோய்

 வனம்புக்கேன்! புகாமுன்னம்

தாங்கரிய பேராற்றல்-

 தாடகையே தலைப்பட்டாள்!

‘‘முதலாவது பரீக்ஷையான கன்னிப்போரே அவ்வளவு கடினமான பரீக்ஷையாக ஏற்பட வேண்டுமா?” என்று முனிவன் இரக்கப்படுவது போல் அமைந்திருக்கிறது இந்தப் பாட்டின் கடைசி அடி.
அழகும் சக்தியும் - வாக்கும்

அழகுக் கடலில் எழுந்த அலைபோல் இருக்கிறதாம் ராமன் உருவம். அழகைப் போல் ஆற்றலும் நிறைந்திருக்கிறது அந்த நீண்டு உயர்ந்த தோள்களிலே. ‘‘இந்த வீரத் தோள்களை நீ ஊன்றிப் பார். ‘தாடகை என்ன பாடு பட்டிருப்பாள்!’ என்று நான் சொல்லாமலே நீ தெரிந்து கொள்ளலாம்” என்கிறான். இந்தப் பீடிகையோடு, தாடகை மார்பை ஊடுருவிப் போன பாணம் வேறு எவற்றையெல்லாம் துளைத்துக் கொண்டு போயிற்று என்று அடுக்கிக் கொண்டே போய் ஜனகனைப் பிரமிக்கச் செய்கிறான். கன்னிப் போரையும் அந்தக் கை வண்ணத்தையும் இவ்வளவு ரஸமாய்ப் பிரஸ்தாபித்தவன், தாடகை புத்திரர்களான சுபாகு மாரீசர்களை ராமன் ஜபித்து யாகரக்ஷணம் செய்ததையும் ரஸமாகவே குறிப்பிடுகிறான். ‘‘ஓர் அம்பினோடும் அரக்கி மக்களில் அங்கு ஒருவன் போய் வான்புக்கான்!” என்கிறான். ராமன் ஓர் அம்பு போட்டதும் அந்த அம்போடே ஆகாசம் போய்ச் சேர்ந்தானாம் சுபாகு. ‘‘மற்றையவன் புக்க இடம் அறிந்திலேன்!” என்று மாரீசன் போன போக்கும் படுவேகமும் தன்னுடைய ‘ரிஷி - திருஷ்டிக்’கும் புலனாகவில்லை என்கிறான். வேறு வேலை இல்லையா முனிவனுக்கு? அவன் போன இடத்தைத் தேடிக் கொண்டிருந்தால் யாக காரியம் முடிவு பெற்றிருக்குமா? ராமன் கல்யாணம்தான் நிறைவேறுமா? எனவே, ‘‘போந்தனன்என் வினை முடித்தே” - யாக காரியத்தை முடித்துக் கொண்டு அப்படியே இங்கு வந்துவிட்டேன் - என்கிறான் முனிவன்.

முடிவுரை

இப்படி ராமனுடைய ‘கை வண்ணம்' சொன்ன விச்வாமித்திரன் ‘கால்வண்ண’த்தையும் சொல்லி முடிக்கிறான்.

கோதமந்தன் பன்னிக்கு

முன்னைஉருக் கொடுத்த(து). இவன்

போதுவென்ற(து) எனப்பொலிந்த

பொலன்கழல் - கால் பொடிகண்டாய் !

காதல், என்தன் உயிர்மேலும்

இக்கரியோன் பால் உண்டால்!

ஈ(து) இவந்தன் வரலாறும்

புயவலியும் - என உரைத்தான்.

ராமனது பாததுளி பட்டதும், அகலிகை ‘முன்னே உரு’ப் பெற்று விட்டாளாம். ‘அகலிகைக்கு’ என்று சொல்லாமல் ‘கோதமன்தன் பன்னிக்கு’ என்று சொல்வதும் கவனிக்கத்தக்கது. கௌதம பத்தினியாவதற்கு முன்னிருந்த அந்தக் கன்னி - உருவத்தையே கொடுத்துவிட்டதாம் ராமனுடைய பாததூளி. இப்படியெல்லாம் ராமனது துஷ்ட நிக்கிரக சாமர்த்தியத்தோடு சிஷ்ட பரிபாலன சாமர்த்தியத்தையும் பிரஸ்தபித்த முனிவன், தனக்கு அவன் மேலுள்ள விசேஷ அபிமானத் தையும் வெளியிடுகிறான். அந்த அபிமானத்தைக் ‘காதல்’ என்றே ஒப்புக்கொள்கிறான்.

எப்படிப்பட்ட காதல்? ‘‘கண்ணில் காண்ப ரேல், ஆடவர் பெண்மையை அவாவும் (ஆசைப் படும்) தோளினாய்!” என்று ஏற்கெனவே புருஷோத்தமனாகிய ராமனுடைய அழகிற்கு நெஞ்சைப் பறிகொடுத்தவனல்லவா?

** 4.2.1945 மற்றும் 11.2.1945 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...