Published:Updated:

சரண கோஷம் ஒலிக்கும் அமெரிக்க ஐயப்பன்!

சரணம் ஐயப்பா!ஸ்ரீ.தனஞ்ஜெயன்

சரண கோஷம் ஒலிக்கும் அமெரிக்க ஐயப்பன்!

சரணம் ஐயப்பா!ஸ்ரீ.தனஞ்ஜெயன்

Published:Updated:

மெரிக்காவிலும் விண்ணதிர ஒலிக்கிறது ஐயப்பமார்களின் சரணகோஷம். ஆம்! இருமுடி கட்டுதல், பெரிய பாதை பயணம், சரங்குத்தி, பேட்டைத் துள்ளல், 18-ம் படி தரிசனம்... என சபரி மலையில் உள்ளது போன்ற வழிபாட்டு நியதிகளுடன் திகழ்கிறது, அங்கிருக்கும் ஓர் ஆலயம்!

அமெரிக்காவின் மெரிலாண்டில் லான்ஹேம் எம்டி எனும் இடத்தில் உள்ள ஸ்ரீசிவா விஷ்ணு திருக்கோயில்தான் அது (Shree Siva Vishnu Temple-SSVT). தாந்த்ரிக வம்சாவளியினரால் வடிவமைக்கப்பட்ட விக்கிரகத் திருவுருவில் சுவாமி ஐயப்பன் சந்நிதி கொண்டிருக்கும் இந்தக் கோயில், `மேலை நாட்டின் சபரிமலை' என்று சிறப்பு பெற்றிருக்கிறது எனச் சிலாகித்துச் சொல்கிறார், இக்கோயிலின் தலைவர் கே.ஜி.வெங்கட்ராமன்.

சபரிமலையில் மகர சங்கராந்தி அன்று திருவாபரணம் சாத்தப்படும்போது கருடன் வலம்  வந்து தொடர்வதைப் போன்று, இந்த ஆலயத்தின் முதல் கும்பாபிஷேகத்தின்போது கருடன் வலம் வந்து வழிபட்டதாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரண கோஷம் ஒலிக்கும் அமெரிக்க ஐயப்பன்!

அமெரிக்காவில் டெட்ராய்டில் உள்ள பரா சக்தி கோயிலிலும், வர்ஜீனியாவில் உள்ள ராஜ்தானி கோயிலிலும் ஐயன் ஐயப்பன் கொலு வீற்றிருக்கிறார் என்றாலும், இந்த சிவாவிஷ்ணு ஆலயத்தில் சபரிமலையின் வைபவங்கள்-மரபுகள் அப்படியே பின்பற்றப்படுவது சிறப்பம்சம்!

இக்கோயிலின் குருவானவர் சபரிமலை கோயிலில் மேல்சாந்தியாக இருந்தவர்தான். சபரி பெருவழிப் பாதை பயணம் போன்று, இங்கேயும் விரதம் இருக்கும் பெரியவர்களும், சிறியவர்களும் உறைபனியாலும், ஐஸ் கட்டிகளாலும் சூழப்பட்ட பெரிய பாதையில் வெறுங்கால்களுடன் நடந்து வருகிறார்களாம்.

இங்கு, பெரும்பாலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களே விரத காலமாக இருக்கின் றது. இந்த மாதங்களில் அமெரிக்காவில் விடுமுறைக் காலம் என்பதால், வருடந் தோறும் இக்கோயிலுக்கு மாலை அணிந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம். பல்வேறு மாகாணங்களில் இருந்தும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், இந்தக் கோயிலில் இருந்து சில கி.மீ. தொலைவில் உள்ள பிட்ஸ்பெர்க் வேங்கடேஸ்வரர் கோயிலுக்கு வந்து, அங்கே இருமுடி கட்டிக்கொண்டு அங்கிருந்து யாத்திரையாக இந்த ஆலயத்துக்கு வருவார்களாம். இருமுடியை நிரப்பும் அந்த திருப்பணியானது ‘கட்டுனரா’ என்று அழைக்கப்படுகிறது.

சரண கோஷம் ஒலிக்கும் அமெரிக்க ஐயப்பன்!

இங்கே ஐயப்பனை வழிபட பெண்களும் அனுமதிக்கப்படுகின்றனர். ஐயப்பனுக்கு நடை பெறும் மஞ்சன நீராட்டு விழாவில் குறைந்தது 108 பெண்களாவது பங்குபெற வேண்டுகிறது கோயில் நிர்வாகம். அந்த விழாவில் நம்பூதிரிகளின் வழிகாட்டுதலோடு பெண்கள் தங்களின் கைகளில் உள்ள ‘திரிசந்தனம்’ எனப்படும் மஞ்சள் நீரால் நிரப்பப்பட்ட கலசங்களைக் கொண்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

விரதம் கடைப்பிடிக்கும் இருபாலரும் குரு சாமியின் கட்டளையின்படி இத்திருக்கோயிலின் பதினெட்டு படிகளின் முகப்புகளில் உள்ள கருப்பணசுவாமி, சின்னக் கருப்பணசுவாமி மற்றும் கருப்பாயி அம்மன் ஆகியோர்களின் திருவுருவங்களை வணங்கிவிட்டு, புண்ணியப் படிகளான 18 படிகளில் ஏறிச் செல்வார்கள்.

மண்டல நாட்களிலும், மகர சங்கராந்தியிலும் பெண்கள் விளக்குகளை தங்களின் கையில் ஏந்தியவாறு ஐயப்பனின் திருவுருவச் சிலையின் முன்பு வழிபடுவதை ‘தலப்பள்ளி’ என்கிறார்கள். 
மேலும், இக்கோயிலில் எட்டு காவல் தெய்வங்களுக்கும் சிறப்புப் பூஜைகள் செய்யப் படுகின்றன. அந்த நேரத்தில் சுவாமி ஐயப்பனின் முன்னிலையில் எட்டு அல்லது எட்டின் மடங்கு களிலான எண்ணிக்கையில் திருமணங்கள் செய்து வைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி பல கலச பூஜைகளும், ஹோமக் கிரியைகளும், அபிஷேகங்களும் நடைபெறும் நிகழ்ச்சி ‘ஐயப்ப உத்சவ சத்ரம்’ எனப்படுகிறது.

படங்கள்: தனஞ்ஜெயன்

எப்படிச் செல்வது?:

மெட்ரோவில் பயணித்தால் பால்டிமோர் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து முப்பது நிமிடங்களிலும், வாஷிங்டன் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரத்திலும் திருக்கோயிலைச் சென்றடையலாம்.

சரண கோஷம் ஒலிக்கும் அமெரிக்க ஐயப்பன்!

நடை திறந்திருக்கும் நேரம்:

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திருக்கோயிலின் நடை திறந்திருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism