கான் ராகவேந்திரரால் ஆராதிக்கப்பட்ட சித்தமல்லி திருவேங்கடநாதப் பெருமாள், மிகுந்த சாந்நித்தியம் கொண்டவர் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த பக்தர்கள் மிகப் பலர். ராகவேந்திரரால் வழிபடப்பெற்று, காலத்தின் கோலமாக அவர் மண்ணுக்குள் மறைந்திருந்தாலும், எதிர்வரும் காலத்தில் ஏற்படப்போகும் இயற்கைச் சீற்றங்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் எனத் திருவுள்ளம் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டார்.

மண்ணுக்குள் கிடந்து வெளிப்பட்ட மாமணி யாம் திருவேங்கடநாதப் பெருமாள், தமக்கென ஓர் ஆலயம் அமையவும் திருவுள்ளம் கொண்டு, அதன் முதல்படியாக கடவுள் நம்பிக்கை  இல்லாத சுந்தரநாராயணன் மனதைப் பல அருளாடல்களால் பக்குவப்படுத்தி, அதில் பக்திப் பயிர் தழைக்கச் செய்தார். அவரையே தமக்கான திருக்கோயில் திருப்பணியிலும் ஈடுபடுத்திக் கொண்டார்.
பெருமாளின் திருக்கோயில் பணிகளை நிறைவேற்ற பொருளுதவி வேண்டுமே, அதற்கு என்ன செய்வது என்று கலங்கி நின்றார் சுந்தர நாராயணன். இங்கேயும் பெருமாளின் அருளாடல் களே துணை நின்றன. எண்ணற்ற பக்தர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் புரிந்து, அவர்களைத் தமக்கான ஆலயப் பணிகளுக்குப் பொருளுதவி செய்ய வைத்தார். அந்த பக்தர்களைப் பற்றிய விவரங்களை சுந்தரநாராயணன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 11

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடலூரைச் சேர்ந்த பிரபல ஆடிட்டர் சீதாராம ஐயர். அவருடைய மகன் ரங்கராஜன். ரங்கராஜனின் மனைவி கல்பனா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். இருவருக்குமே நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார் ரங்கராஜன். திருமணம் ஆகிப் பல வருடங்கள் கடந்தும், இரண்டு பிள்ளைகளுக்குமே குழந்தை பாக்கியம் இல்லை. எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்தும் பயன் இல்லை.

மிகுந்த மனத் துயரத்தில் இருந்த ரங்கராஜன் குடும்பத்தினருக்கு, சித்தமல்லி பெருமாளைப் பற்றித் தெரிய வந்தது. ஆனாலும், பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளால் அவர்களால் உடனே சித்தமல்லிக்குச் சென்று பெருமாளைச் சேவிக்க முடியவில்லை. எனவே, ரங்கராஜன் தம்பதியர் இருந்த இடத்தில் இருந்தபடியே சித்தமல்லி பெரு மாளிடம், தங்கள் குலம் தழைக்க, தங்களுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் வாரிசு வேண்டி மனப் பூர்வமாகப் பிரார்த்தித்துக் கொண்டனர்.

தம்மை நேரில் வந்து தரிசிக்கா விட்டாலும், தம்மிடம் மனப் பூர்வமான பக்தியுடன் பிரார்த்தித்துக் கொண்டாலே, அவர்களுக்கு அருள்மழை பொழியக்கூடியவரல்லவா சித்தமல்லி திருவேங்கடநாதப் பெருமாள்! அவர் ரங்கராஜன் குடும்பத்திலும் அற்புதம் நிகழ்த்தத் திருவுள்ளம் கொண்டார். அடுத்த சில ஆண்டுகளிலேயே, ரங்கராஜனின் இரண்டு பிள்ளைகளுக்குமே குழந்தை பாக்கியம் கிடைத்தது. பூரித்துப் போன ரங்கராஜன் தம்பதியர், பேரக் குழந்தைகளுடன் சித்தமல்லிக்கு வந்து பெருமாளை சேவித்ததுடன், ஆலயத் திருப்பணிகளுக்குத் தங்களால் இயன்ற பொருளுதவியும் செய்துவிட்டுச் சென்றனர்.

மயிலாடுதுறை பக்கம், விராலூரைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவரின் மகன் குமார். அவருக்கு ஒரு பெண். அழகும் நல்ல பண்புகளும் கொண்டிருந்த அந்தப் பெண், உயர் கல்வி முடித்து வங்கி ஒன்றில் நல்ல பணியிலும் இருந்தார். குமார் தன் மகளுக்குத் திருமணம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். எத்தனையோ வரன்கள் பார்த்தும் ஒன்றும் சரிவரவில்லை. வந்த வரன்கள் எல்லாம் ஏதேதோ காரணங்களால் தட்டிக்கொண்டே போயின. தன் மகளுக்குக் குறை ஒன்றும் இல்லாதபோதிலும், வந்த வரன்கள் எல்லாம் தட்டிக்கொண்டே போனதால், குமாருக்கு மன உளைச்சல் உண்டாகி, மிகவும் துன்பப்பட்டார். தெய்வம்தான் தன் மகளுக்கு நல்ல வரன் அமைய அருள்புரிய வேண்டும் என்று அவர் கலங்கி நின்ற நிலையில், தெரிந்த நண்பர் ஒருவர் மூலமாக சித்தமல்லி திருவேங்கடநாதப் பெருமாளைப் பற்றி அவருக்குத் தெரிய வந்தது.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 11

பெருமாளின் அருள்திறம் பற்றி நண்பர் சொல்லக் கேட்டதுமே, குமார் சித்தமல்லி பெருமாளை மானசிகமாக சேவித்து, தன் மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டார்.பெருமாளின் அருளால் குமாரின் மகளுக்கு உடனடியாக நல்ல வரன் அமைந்து, விரைவிலேயே திருமணமும் நடைபெற்றது. தான் நேரில் சென்று தரிசிக்காதபோதிலும், தன்னுடைய பிரார்த்தனைக்கு இரங்கி அருள்புரிந்த பெருமாளின் கருணைத் திறம் கண்டு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த குமார், மகளின் திருமணம் நடைபெற்ற உடனே சித்தமல்லிக்கு வந்து பெருமாளையும் தாயாரையும் சேவித்ததுடன், தாயாருக்குக் காணிக்கையாக திருமாங்கல்யம் ஒன்றைச் சமர்ப்பித்தார்.

சுந்தரநாராயணன் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிப்பவர் நாகராஜன். அவருடைய மகன் ஸ்ரீகாந்த் திருமணமாகி, மனைவி தீபாவுடன் காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இருவருமே பொறியாளர்கள். அவர்களுடைய மகள் ஸ்ரீநிதி டாக்டருக்குப் படித்து, மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்பது அவர்களின் விருப்பம். ஆனால், டாக்டர் சீட் மெரிட்டில் கிடைத்தால்தான்  அவர்களுடைய விருப்பம் நிறைவேற முடியும். லட்சங்களைக் கொட்டிக் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பது அவர்களால் முடியாத காரியம்.

நாகராஜன் சொன்னபடி ஸ்ரீகாந்த்தும் தீபாவும் சித்தமல்லி பெருமாளிடம் தங்கள் மகளுக்கு மெரிட்டில் மெடிக்கல் சீட், அதுவும் சென்னை யில் உள்ள மருத்துவக் கல்லூரியில் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டனர்பெருமாள் அவர்களுடைய வேண்டுதலையும் நிறைவேற்றினார். ஸ்ரீநிதி ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றதுடன், அவர் விரும்பியது போலவே மெரிட்டில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துப் படித்து வருகிறார்.

பெருமாள், தன் உறவினர் ஒருவருக்கும் அருள் புரிந்த விவரத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் சுந்தரநாராயணன்.

சுந்தரநாராயணனின் மைத்துனர் சுந்தரேசனின் மகன் நாகராஜன். சென்னை, சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்குத் திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகியும், குழந்தை இல்லை. இவரும் சித்தமல்லி பெருமாளைப் பற்றிக் கேள்விப்பட்டு, சென்னையில் இருந்தபடியே பிரார்த்தித்துக் கொண்டார். பெருமாளின் அருளால் நாகராஜ னுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
இப்படி, நேரில் வந்து சேவிக்கும் விருப்பம் இருந்தும், பல்வேறு காரணங்களால் இயலாமல், இருந்த இடத்தில் இருந்தே தன்னிடம் பிரார்த்தித்துக் கொண்டவர்களின் விருப்பங்களையும் பெருமாள் கருணை உள்ளத்தோடு நிறைவேற்றி அருள்கிறார்.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 11

ஆனால், முப்பொழுதும் சித்தமல்லி பெருமாளைத் தரிசிக்கும் வாய்ப்பு இருந்தும், நேரில் வந்து தரிசிக்காமல் பெருமாளிடம் தன்னு டைய கோரிக்கையைச் சமர்ப்பித்தார் ஒருவர்.
அவருடைய கோரிக்கை நிறைவேறியதா?

- சித்தம் சிலிர்க்கும்

படங்கள்: க.சதீஷ்குமார்

எங்கிருக்கிறது? எப்படிச் செல்வது?

வைத்தீஸ்வரன்கோவில்-மணல்மேடு சாலையில் பட்டவர்த்தி என்ற இடத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது சித்தமல்லி கிராமம். வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து 460 எண்ணுள்ள பேருந்தில் சென்று, பட்டவர்த்தி என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ மூலம் செல்லலாம்.

மயிலாடுதுறையில் இருந்து சித்தமல்லிக்கு நேரடியாக, இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து செல்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism