முன்னோர்கள் சொன்னார்கள்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
பிறந்த வேளை கன்னி லக்னம், 7-ம் வீட்டில் மீனத்தில் குரு வீற்றிருக்கிறான். இந்த அமைப்பைப் பெற்ற ஜாதகனின் மனைவி தங்கமாட்டாள். அல்லது தாம்பத்திய சுகத்தில் நிறைவைத் தரமாட்டாள். குடும்ப வாழ்க்கைக்கு உதவுவதில் அவளுடைய பங்கு பயனற்றதாகிவிடும் என்கிறது ஜோதிடம். ‘இந்த லக்னத்துக்கு 7-க்கு உடைய குருவுக்கு எதிரிடையான செயல்பாடு இருக்கும். கேந்திராதிபத்யதோஷம் ஏற்பட்டதால் தாம்பத்திய சுகத்தை இழக்கவைப்பான்’ என்று விளக்கமளிக்கும்.
1, 4, 7, 10 இந்த வீடுகளுக்கு கேந்திரம் என்று பெயர். அந்தந்த வீட்டின் தலைவனுக்கு கேந்திரத்துக்கு அதிபதி என்ற தகுதி இருக்கும். அதைப் பெற்றவன் இடையூறான விளைவை ஏற்படுத்துகிறான் என்று ஜோதிடம் சொல்லும். குருவுக்கு 4-ம், 7-ம் வீட்டில் அமையும் வேளையில், கன்னி லக்னத்தில் பிறந்தவனுக்கு கேந்திராதிபத்யம் தோஷம் ஏற்பட்டுவிடும். 4-ம் வீடு தனுசு. அதற்கு உடையவன் அதிலேயே இருந்தால் அவனுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. 7-ம் வீடு மீனம். அதற்கு உடையவன் குரு. அங்கும் குருவுக்கு கேந்திராதிபத்ய தோஷம் இருக்கும்.
இங்கு கன்னி லக்னத்தில் பிறந்தவனுக்கு, 7-ல் மீனத்தில் கேந்திராதிபத்ய தோஷம் குருவுக்கு இருப்பதால் தோஷம். 7-ம் வீடாக இருப்பதால் வரும் மனைவியின் இழப்பு அல்லது ஒத்துழையாமை போன்றவற்றால் தாம்பத்தியம் சிறக்காது.
பொதுவாக பாப கிரகங்கள் 7-ல் இருந்தால் தாம்பத்தியத்தில் இடையூறைச் சுட்டிக்காட்டும். சுப கிரகம் இருந்தாலும் சில தருணங்களில் தாம்பத்தியம் சிறக்காமல் போய்விடும். கிரகத்தின் இயல்பு பலன் அளிக்காது. அதன் பயன்பாட்டு தகுதிக்கு உகந்தவாறு பலன் ஏற்படும். விரும்பிய பலனுக்கு சுப கிரகம்; விரும்பாத பலனுக்கு பாப கிரகம் என்ற பாகுபாடு கிடையாது. அமர்ந்திருக்கும் கிரகத்தின் அப்போதைய தகுதிதான் பலனை நிர்ணயிக்கிறது. சுப கிரகமானாலும் கேந்திராதிபத்ய தோஷத்தைப் பெற்றவன், அந்த பலனை ஏற்கவைப்பான் என்று பொருள்.

பாவத்துக்கு உடையவன் பாவத்தில் இருந்தால், அந்த பாவத் தின் முழுப் பலனை உணரவைப்பான். அவன் பாப கிரகமாக இருந்தாலும் சரி, சுப கிரகமானாலும் சரி ஒன்றுதான். அந்த பாவத்துக்கு உடையவன் என்ற தகுதியைப் பெற்றதும் நன்மை செய்யும் பாங்கு வந்துவிடுகிறது. அதுபோல், கேந்திராதிபத்ய தோஷத்தின் சேர்க்கையால், சுப கிரகமானாலும் அந்த பாவத்துக்கு
உடையவனாக இருந்தால் விபரீத பலனை ஏற்கவைப்பான்.
7-வது வீடு மனைவியைக் குறிக்கும். அங்கு குரு வீற்றிருக் கிறார். எல்லா சுப கிரகங்களிலும் சிறப்பு பெற்ற சுப கிரகம் குரு. அதுவும் தனது வீட்டிலேயே அமர்ந்திருக்கிறான். எனினும், சுப கிரகம் சுப பலனை அளிக்கும் என்ற பொதுக் கோட்பாடு இங்கு செயல்படாது. கேந்திராதிபத்ய தோஷத்தின் தாக்கம்தான் இங்கு செயல்படுகிறது என்று ஜோதிடம் விளக்கும். கிரகங்கள் குறிப்பிட்ட தகுதியை ஒட்டி பலன் அளிப்பதில் பாகுபாடு தென்படும். பொதுப்பலன் அங்கு செயல்படாது. பாப கிரகம், சுப கிரகம் என்ற பாகுபாட்டைத் தாண்டி பலன் அளித்துவிடும்.
7-ல் சுப கிரகம் இருப்பதால் தாம்பத்தியம் சிறக்கும். அதுவும் குரு தென்படுவதால் மகிழ்ச்சி உருவாகும் என்று மதிப்பீடு செய்து, ‘தோஷம்’ இல்லாத சுத்த ஜாதகப் பொருத்தம் இருப்பதாக நினைத்து, இணைத்து வைத்து திருமண முறிவுக்கு இடம் கொடுத்த ஜோதிட பிரபலங்களும் உண்டு. அதுமட்டுமின்றி, ஜோதிடத்தின் பரிந்துரைப்படி இரு ஜாதகங்களிலும் தோஷமில்லாததை உணர்ந்து சேர்த்துவைத்தும், விபரீத பலன் அனுபவத்துக்கு வந்தால், ‘ஜோதிடம் நம்பிக்கைக்கு உகந்ததல்ல’ என்ற முடிவை எட்டிய பிரபலங்களும் இருக்கிறார்கள். தனது குறையை (அலசி ஆராயாமல் இருப்பது) ஜோதிடத்தின் குறையாக மாற்றி, விபரீத பலனுக்கு ஜோதிடம் பொறுப்பு என்ற மதிப்பீட்டை எட்டிய பிரபலங்களும் உண்டு. ஆழ்ந்த சிந்தனையோடு ஜோதிடத்தின் நுணுக்கங்களின் ஆராய்ச்சியில் பலனை இறுதியாக்க வேண்டும். ஜோதிடக் கையேடுகள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் பொருத்தம் பார்க்கக் கூடாது. கையேடுகளில் பல ஜோதிட நுணுக்கங்கள் இடம் பெற்றிருக்காது.
கேந்திராதிபத்ய தோஷம் என்பது சுப கிரகங்களுக்கு மட்டும் தான் உண்டு; பாப கிரகங்களுக்கு இல்லை. அதிலும் குரு, புதன், சுக்கிரன் ஆகிய மூன்றுக்கும் உண்டு. அவர்கள் இரண்டு வீடுகளுக்கு அதிபதியாக இருப்பார்கள். ஒரு வீட்டுக்கு அதிபதியான சந்திரன் இதில் அடங்கமாட்டான். குருவுக்கு இரண்டு இடங்களில் கேந்திராதிபத்ய தோஷம் இருக்கும். தனுசில் 4-லும், மீனத்தில் 7-லும் உண்டு. ஆனால், 7-வது கேந்திரம்தான் விபரீத பலனை அளிக்கும். புதனுக்கு 4-வது கேந்திரமும், சுக்கிரனுக்கு 10-வது கேந்திரமும் விபரீத பலனை அளிக்கும் என்று சொல்லும். இரண்டு கேந்திரங்கள் வாய்த்தாலும் குருவுக்கு 7-ம் வீடும் புதனுக்கு 4-வது வீடும், சுக்கிரனுக்கு 10-ம் வீடும் விபரீத பலனை அளிக்கும் என்று விளக்கம் அளிக்கும்.
புதனுக்கு 4-ல் இருக்கும் கேந்திராதிபத்ய தோஷம் மகிழ்ச்சியை இழக்கச் செய்யும். சுக்கிரன் 10-வது கேந்திரத்தில் தோஷம் இருப்பதால் வேலையை இழக்கவைப்பான், வியாபாரத்தில் நஷ்டத்தை ஏற்படுத்துவான் என்ற விளக்கமும் உண்டு. அதேநேரம், கேந்திராதிபத்யம் இருக்கும் கிரகத்துடன் அதே இடத்தில் மற்றொரு கிரகமும் இணைந்திருந்தால் கேந்திராதிபத்ய பலன் இழக்கப்பட்டுவிடும் என்ற விளக்கமும் ஜோதிடத்தில் உண்டு.
வாழ்க்கையில் இருவிதமான பலன்களை நுகர்கிறோம். ஜீவித உபகரணங்களின் சேர்க்கையில் ஏற்பட்ட மகிழ்ச்சி... அதாவது ஆடம்பரப் பொருள்களில் கிடைக்கும் இன்பம். மன மகிழ்வை ஈட்டித்தரும் பலன்கள்... அதாவது ஜீவபரமான பலன்கள்.

பட்டம், பதவி, பொருளாதாரம், வீடு, வாகனம் எல்லாம் இருக்கும். குடும்பச் சூழலில் நிம்மதி இருக்காது. மனைவியின் ஒத்துழையாமை, அல்லது குழந்தையின்மை, உற்றார் உறவுகளின் பகை இப்படி ஏதாவது ஒன்றால், நிறைவை எட்டாமல் மனம் பாதிப்புக்கு உள்ளாகும். இது ஜீவபரமான பலன்களில் அடங்கும்.
முழு மகிழ்ச்சியை அளிக்கும் மனைவி, மனதை நிறைவு செய்யும் மழலைச் செல்வங்கள், உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு ஆகியன எல்லாம் அனுபவத்துக்கு வரும். ஆனால், வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் மற்றவர்களின் ஒத்துழைப்பில் நிறைவு இருக்காது. ஏழ்மை அவனை வாட்டும்.இது ஜீவனோபகரணங்களின் குறை.
பலனை இழக்கவைக்கும் கிரகங்கள், இரண்டு பலன்களையும் சேர்த்து இழக்கவைக்காது. ஆடம்பரப் பொருள்களின் சேர்க் கையை இல்லாமல் செய்தால், குடும்ப சுகத்தைக் கொடுத்துவிடும். குடும்ப சுகத்தை இழக்கச் செய்தால் ஆடம்பரப் பொருள்களின் சேர்க்கையை நிறைவு செய்துவிடும். கேந்திராதிபத்ய தோஷம் உடைய குரு, மனைவியை இழக்கவைப்பான் (ஜீவபரமான பலன்). ஆனால் செல்வந்தனாக்கி வசதியான வாழ்க்கையை அளித்துவிடுவான். ‘மனதுக்கு ஒப்பான மனைவியை ஏற்பான், பொருளாதாரம் அந்தஸ்திலும்கூட தன்னிறைவு பெற்றிருப்பான். ஆனால் மனைவியை இழப்பான்’ என்று விளக்கும் ஜோதிடம்.
இருவகை பலன்களிலும் ஒன்றின் இழப்பில் துயரத்தின் தாக்கம் அதிகமாக அனுபவத்துக்கு வரும். எல்லாம் இருந்தாலும் குழந்தை இல்லையெனில், வாழ்க்கையையே சூன்யமாக உணரு வான். மனைவி, மக்களோடு குதூகலமான குடும்பச் சூழல் இருக்கும். ஆனால், ஏழ்மை அவனை வாட்டும். அவனுக்கும் வாழ்க்கை சூன்யமாகத் தோன்றும். நேரடி மனதை வாட்டும் பலன்கள், பரம்பரையாக மனதை பாதிக்கும் பலன்கள் என்று இரண்டு விதம் உண்டு. ஒன்றின் இழப்பு இருந்தால், மற்றொன்று நிறைவை எட்டிவிடும். ஒட்டு மொத்த சூன்ய பலனை கிரகங்கள் சுட்டிக்காட்டாது.
சமீபத்தில் நிகழ்ந்த இயற்கை சீற்றத்தில் கழுத்து வரை தண் ணீரில் மிதந்தான் செல்வச் சீமான் ஒருவன். அவன் தனது தாகத்தைத் தணிக்க தண்ணீரும் கிடைக்காமல் தவித்தான். தண்ணீரில் ஓலைக்குடிசையை இழந்தவன், கொடையாகக் கிடைத்த புது வீட்டால் மகிழ்ச்சி அடைவான்! கை நிறையச் சம்பாதிக்கும் வேலையில் அமர்ந்து இரவு பகலாக உழைப்பவன், ஒருவித மனப் பதற்றத்துடன் வாழ்க்கையை சுவைக்க முடியாமல் தவிப்பான். தகுதியற்றவன் தலைவனாக மாறி, மற்றவர்களது உழைப்பில் தான் ஊதியம் பெற்று உயர்வான்; சமுதாயத்திலும் பெருமை பெற்று விளங்குவான்.
இங்கு 7-ல் இருக்கும் குரு, ஆடம்பரமான வாழ்க்கையை அளிப்பான். அளித்த பிறகு, மனைவியை இழக்கவைப்பான்.வளமான குடும்பச் சூழலை தோற்றுவித்த பிறகே மனைவியை இழக்கவைப்பான். எந்தவொரு பலனை செயல்படுத்திய பிறகு, தொடர்ந்து இரண்டாவது பலனையும் நடைமுறைப்படுத்த இயலுமோ, அந்த பலன் முதலில் கிடைத்து விடும். திருமணமானவுடன் மனைவியை இழக்க வைத்தால் மனம் ஒடிந்து போகும். பொருளாதார நிறைவை எட்ட செயல்படாமல் படுத்துவிடும். திருமண இணைப்பில் மகிழ்ச்சி பெற்ற மனம் சுறுசுறுப்போடு செயல்பட்டு பொருளாதாரத்தில் நிறைவை எட்டிவிடும்.
அதன்பிறகு நிகழும் மனைவியின் இழப்பு, அவனைப் பொறுத்தவரையிலும் சொல்லொண்ணா துயரத்தை உணரவைக்கும். பலன் சொல்லும் வேளையில், எந்த வகையில் இழப்பு இருக்கும் எதற்கு இருக்காது என்பதையும் ஆராயச் சொல்கிறது ஜோதிடம்!

உதாரணம்-1: இந்த அமைப்பில் குருவுக்கு கேந்தி ராதிபத்ய தோஷம் உண்டு. தனுசில் குரு அமைந்தாலும் உண்டு. ஆனால் பலன் அளிப்பது 7-ல். 4-ல் சுகத்தை இழக்க வைப்பான்; மனைவியை இழக்க வைக்கமாட்டான். தோஷம் 4-லும், 7-லும் இருந்தாலும் மனைவி இழப்பில்தான் அதன் செயல்பாடு இருக்கும். அத்துடன் சுகம் குறைவதாலும் 4-ம் இடமும் வலுவிழந்து விடுகிறது.
உதாரணம்-2: இங்கு புதனுக்கு கேந்திராதிபத்யம் தோஷம் உண்டு. 7, 10 என்ற இரு பாவங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். ஆனால் மீன லக்னத்துக்கு 4-ல் வரும் புதன் சுகத்தை இழக்க வைப் பான்.
உதாரணம்-3: மகர லக்னத்தில் பிறந்தவனுக்கு சுக்கிரன் கேந்திராதிபத்ய தோஷத்தை ஏற்கிறான். இங்கு சுக்கிரன் யோக காரகனாக இருந்தும், தோஷத்தோடு இணைந்துவிடுகிறான். அவன் 10-ல் இருந்தால் மட்டுமே தோஷம் பற்றிக் கொள்ளும்.
சுப கிரகம், பாப கிரகம் என்ற பாகு பாட்டைக் கடந்து பலன் சொல்லும் விஷயத் தில் தகுதியில் மாற்றம் இருப்பதை ஆராயச் சொல்லும் ஜோதிடம். விருப்பம் இருப்பவனுக்கு ஜோதிடம் விருந்து; இல்லாதவனுக்கு கசக்கும் கஷாயம். ஆகையால்தான் மூட நம்பிக்கை என்றும், விஞ்ஞானத் தகவல் என்றும் இரண்டு வகை வாதங்கள் தோன்றியிருக்கின்றன.
- தொடரும்...