Election bannerElection banner
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 17

சத்தியப்பிரியன், ஓவியம்: ஸ்யாம்

30. கடித்து பெற்றேனோ 

திருமங்கையாரைப் போலே? 

திருமங்கை என்று இங்கே பெண் பிள்ளை குறிப்பிடுவது திருமங்கையாழ்வாரை.

திருமங்கையாழ்வார் மகாவிஷ்ணுவின் சார்ங்கம் என்ற வில்லின் அம்சமாகப் பிறந்தவர் என்று வைணவப் பூர்வர்கள் கூறுவது உண்டு. கலியுகத்தில் 398வது நள வருடத்தில் கார்த்திகை மாதம் பௌர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் திருமங்கையாழ்வார் அவதரித்தார். இவருடைய இயற்பெயர் பரகாலர் என்பதாகும்.

சோழமன்னனால் திருவாலி நாட்டின் குறுநில மன்னனாக விளங்கியவர். இவர் குமுதவல்லியின் அழகில் மயங்கி முறையாக அவளுடைய பெற்றோரிடம் பெண் கேட்கச் செல்கிறார். குமுதவல்லி, ஸ்ரீவைஷ்ணவரைத் தவிர வேறொருவரை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன் என்கிறாள். அதனால், திருமங்கையார் பஞ்சசம்ஸ்காரம் செய்துகொண்டு ஸ்ரீவைஷ்ணவர் ஆகிறார். குமுதவல்லி, 1008 ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுது படைக்கவேண்டும் என்று மேலும் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். அதையும் நிறைவேற்றுகிறார் திருமங்கையார்.

மேலும் குமுதவல்லிக்காக தன்னுடைய செல்வம் அனைத்தையும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ததியாராதனை செய்வதிலும், பெருமாள் கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்வதிலும் தன்னுடைய செல்வத்தை எல்லாம் செலவிடுகிறார். இதனால் சோழ அரசருக்குச் செலுத்த வேண்டிய கப்பத் தொகையை அவரால் செலுத்த முடியவில்லை.எனவே கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படுகிறார். அன்றிரவு எம்பெருமான் அவருடைய கனவில் தோன்றி, வேகவதி நதிக்கரையில் புதையல் இருக்கும் ரகசியத்தைக் கூறுகிறார். அமைச்சரின் அனுமதியுடன் சிறையில் இருந்து வெளியில் வந்தவர், பெருமாள் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று புதையலைக் கண்டெடுக்கிறார். அதில் ஒரு பகுதியை மன்னனுக்குச் செலுத்தவேண்டிய கப்பத்துக்குக் கொடுத்துவிட்டு, மற்றவைகளை ஸ்ரீவைஷ்ணவர்களை உபசரிப்பதிலும், பெருமாளின் திருப்பணிகளுக்கும் செலவிடுகிறார். மீண்டும் வறுமை ஆட்கொள்கிறது. பரகாலராகிய திருமங்கையாழ்வார் துணிந்து ஒரு முடிவுக்கு வருகிறார். 'பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்பதுபோல் 'களவு புரிந்தும் கைங்கர்யம் நன்றே’ என்ற புது இலக்கணத்தை ஏற்படுத்துகிறார்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 17

முடிவு செயல் வடிவம் பெற்றது. நீர்மேல் நடப்பான், நிழலில் ஒதுங்குவான், தாளூதி, தோராவழக்கன் என்ற நால்வர் கூட்டு சேர்ந்தனர். வழிப்பறி தொடங்கியது. வழிப்பயணம் செல்லும் செல்வந்தர்கள் தாக்கப்பட்டனர். பொருள்கள் களவாடப்பட்டு எம்பெருமானின் கைங்கரியத்திற்கு செலவு செய்யப்பட்டது.

ஆட்கொள்ளவேண்டிய தருணத்தை உணர்ந்த பெருமாள் அந்தண வேடம் புனைந்து ஸ்ரீதேவியுடன் ஒரு திருமணகோஷ்டி போல பரிவாரங்களுடன் கிளம்பினார்.

''நில்'' நால்வருடன் வந்த  பரகாலர் என்றழைக்கப்படும் திருமங்கையாழ்வார் தடுத்தார்.

பெருமான் பயந்தவர் போல் நின்றார்.

''நகைகள் அனைத்தையும் கழற்றுங்கள்'' பரகாலர் மிரட்டினார்.

பயந்தவர் போல நடுங்கிய எம்பெருமான் எல்லா நகைகளையும் கழற்றினார். வெள்ளி மெட்டி கழற்றப்படாமல் பிராட்டியின் கால்களில் மின்னிக் கொண்டிருந்தது. அதனையும் விட மனமிலாமல் பரகாலர் குனிந்து ஸ்ரீதேவி முன்பு தண்டனிட்டு கால்விரலில் மின்னிய மெட்டியைக் கழற்ற முயற்சித்தார். முடியவில்லை. தனது பற்களால் கடித்து கழட்டினார். எம்பருமான் சிரித்துக் கொண்டே, ''நீர் நமது கலியனோ? ' என்றார்.

பரகாலர் ஆபரணத்தை ஒரு பட்டுச் சீலையில் கட்டி வைத்தார். மூட்டையை தூக்கப் பார்த்தார். என்ன ஆச்சரியம்! மூட்டை கனத்தது. இருந்த இடத்தைவிட்டு நகர்த்த முடியவில்லை.

 'என்னிடம் ஒரு மந்திரம் இருக்கிறது. அதனைக் கேட்டால் எந்தச் சுமையையும் சுமக்கலாம்'' என்றார் எம்பெருமான்.

ஆலியரசனை அருகில் இருந்த அரசமரத்தின் அடியில் அமர்த்தி தேவர்களுக்கு அரசனான எம்பெருமான் மந்திரங்களுக்கு அரசனான திருமந்திரத்தை ஓதினான். என்ன ஒரு பாக்கியம் கலியனுக்கு?

திருமங்கையாழ்வார் உடனே கதறுகிறார். 

வாடினேன்வாடிவருந்தினேன்மனத்தால்

பெருந் துயர் இடும்பையில் பிறந்து

கூடினேன் கூடி இளையவர்தம்மோடு

அவர் தரும் கலவியே கருதி

ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்

உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து

நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்

நாராயணா என்னும்  நாமம்

கலியன் முக்தியடையக் கேட்பானேன்?

மாதவன் ஸ்ரீதேவி சமேதனாக கருடாழ்வார் மேல் நித்திய சூரிகளுடன் காட்சியளித்தார்.

ஏற்கனவே தமிழில் நல்ல புலமை பெற்ற திருமங்கையாழ்வார் தனது அனுபவங்களை ஆசு, சித்திரம்,மதுரம் மற்றும் விஸ்தாரம் என்ற நான்கு வகைக் கவிகளாகப் பாடினார். நம்மாழ்வார் நான்கு வேதங்களின் உட்பொருளை நான்கு பிரபந்தங்களாகப் பாடியது போல இவரும், அந்த வேதாங்கங்களான சிக்ஷை, வியாகரணம், கல்பம், நிருக்த்தம், ஜோதிஷம், சந்தஸ் என்ற ஆறு பிரிவுகளின் உட்பொருளை பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடலில் பாடி வைத்தார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் அதிக பாசுரங்களைப் பாடியிருப்பவரும் இவர்தான். அதேபோல அதிக அளவில் எம்பெருமான் சந்நிதிகளை மங்களாசாசனம் செய்து வைத்த ஆழ்வாரும் இவர் ஒருவர்தான்.

மெட்டியைப் பல்லால் கடிக்கப் போக எட்டெழுத்து மந்திரத்தை பகவானே ஆச்சாரியனாக இருந்து உபதேசம் பெற்ற பாக்கியம் உடையவர் திருமங்கையார். அவரைப் போல பாக்கியம் பெறவில்லையே நான். எனவே நான் இந்த ஊரில் இருந்து என்ன பயன் என்று அந்தப் பெண் திருக்கோளூரை விட்டு கிளம்புகிறாள்.

 - தொடரும் 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு