பீமா நதிக்கரையில் அமைந்துள்ள பண்டரிபுரம், மகாராஷ்டிராவின் ஆன்மிகத் தலைநகரம். இந்தப் புனிதத்தலத்தில் பீமா நதி சந்திர பிறையைப் போல வளைந்து செல்வதால், அந்த நதி இங்கு சந்திரபாகா நதி எனப்பட்டது. சந்திரபாகா என்றால், பிறைச் சந்திரன் என்று பொருள். 

இந்தச் சந்திரபாகா நதிக்கரையில் ஸ்ரீகிருஷ்ணன், பாண்டுரங்கன் என்ற திருநாமத்துடன், தனது மனைவி ருக்மிணியுடன் எழுந்தருளியிருக்கிறான். ஸ்ரீகிருஷ்ணன் பண்டரிநாதனாகக் கோயில் கொண்டதற்குப் பின்னணியில் சுவாரசியமானதொரு புராண நிகழ்வு பொதிந்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் வசித்து வந்த ஜானுதேவர், சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன், திருமணத்துக்குப் பின் மனைவியின் பேச்சால் அவர்களை அவமதிக்கத் துவங்கினான். மனம் நொந்து, பெற்றோர் காசி யாத்திரைக்குப் புறப்பட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அவர்கள் மட்டும் எப்படிப் போகலாம்? நாமும் போக வேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தாள், புண்டரீகனின் மனைவி. காசி போகும் குழுவில் அவர்களும் சேர்ந்தனர். பெற்றோர் நடந்து வர, புண்டரீகனும் அவன் மனைவியும் குதிரையில் சவாரி செய்தனர். தவிர, பெற்றோரை எல்லோர் எதிரிலும் அவமரியாதை செய்யவும் புண்டரீகன் தயங்கவில்லை.

புண்ணிய பூமி

அவர்கள் எல்லோரும் குக்குட முனிவரின் ஆசிரமத்தில் தங்கி ஓய்வெடுத்தனர். விடியும் நேரத்துக்குச் சற்று முன்பாக, நைந்து போன ஆடைகளில் அழுக்கும் அருவருப்பான தோற்றமுமாக அழகான யுவதிகள் பலர் ஆசிரமத்துக்குள் நுழைவ தைப் புண்டரீகன் பார்த்தான். அவர்கள் ஆசிரமத்தின் தரையைச் சுத்தம் செய்தனர். முனிவரின் உடைகளைத் துவைத்தனர். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வைத்தனர். முனிவரின் அறையிலிருந்து வெளிப்பட்டபோது, அவர்கள் மிகச் சுத்தமான உடைகளைத் தரித்து, தூய்மையின் அம்சங்களாக விளங்கினர்.

என்ன நடக்கிறது என்று புரியாமல் புண்டரீகன் தவித்தான். மறுநாள், அப்பெண்கள் அழுக்காக ஆசிரமத்துக்குள் வந்ததைக் கவனித்தவன், வேலைகளை முடித்துவிட்டுத் தூய்மையாக வெளியே வந்தபோது, அவர்களை மறித்துப் பாதங்களில் விழுந்தான்.

'நீங்கள் யார்?' என வினவினான்.

'கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற பல புண்ணிய நதிகள் நாங்கள். மற்றவர் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களிடம் இறக்கி வைத்துவிட்டுத் தூய்மை பெறுகிறார்கள். தினமும் அந்தப் பாவங்களைக் களைய நாங்கள் இந்த ஆசிரமத்துக்கு வருகிறோம். தன்

பெற்றோரை தெய்வங்களாக எண்ணிப் பார்த்துக்கொள்ளும் குக்குட முனிவருக்கு சேவை செய்வதால், எங்கள் பாவங்கள் கழுவப் படுகின்றன. மீண்டும் தூய்மையடைந்து திரும்பு கிறோம்' என்று சொல்லி, அவர்கள் மறைந்தார்கள்.

அக்கணமே புண்டரீகன் மனம் திருந்தினான். பெற்றோருக்குச் சேவை செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டான்.

இந்தப் புண்டரீகனை அகிலத்துக்கு அறிமுகப் படுத்த எண்ணி, தக்கதொரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தான் கிருஷ்ணன்.

ஒருமுறை...

கிருஷ்ணன், ராதையுடன் குலவிக்கொண்டிருந் ததைப் பார்த்து, ருக்மிணி அவனிடம் கோபித்துக்கொண்டு, (தண்டிர்)வனத்துக்கு வந்து, தனித்திருந்தாள். அவளைச் சமாதானப்படுத்தி, மீண்டும் துவாரகைக்கு அழைத்துச் செல்லப் புறப்பட்டான் கிருஷ்ணன்.

வழியில், பெற்றோர்க்குச் சேவை செய்யும் மைந்தனை அவளுக்குக் காட்ட எண்ணி, புண்டரீகனின் குடில் வாயிலில் நின்று தண்ணீர் கேட்டான். அங்கு மழை பெய்து, சேறும் சகதியுமாக இருந்தது. உள்ளேயிருந்து புண்டரீகன் ஒரு செங்கல்லைத் தூக்கிப் போட்டான்.

'சற்று நேரம் அதன் மேலே நில்லுங்கள். என் பெற்றோருக்கான பணிவிடைகளை முடித்துவிட்டு உங்களைக் கவனிக்கிறேன்' என்றான்.

அதன்படியே, தனது பெற்றோர் சேவையை முடித்துக்கொண்டு புண்டரீகன் அவர்களை அண்டினான். வந்தவர்களை வரவேற்றான்.

புண்ணிய பூமி

அதற்கு மேலும் பொறுக்கமுடியாத ருக்மிணி, வந்திருப்பது கிருஷ்ணன் என்பதைப் போட்டு உடைத்தாள்.

புண்டரீகன் பதறினான். மண்ணில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். கிருஷ்ணன் புன்னகைத் தான். 'உன் மாதா, பிதா சேவையில் மனம் மகிழ்ந்தேன். வேண்டும் வரம் கேள்' என்றான்.

'பாண்டுரங்கனே! நீ எழுந்தருளியுள்ள இத்தலம் புண்ணியத் தலமாக விளங்கவேண்டும். பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீ இங்கே விட்டலனாக சாந்நித்தியம் கொள்ள வேண்டும்' என்று வேண்டினான், புண்டரீகன்.

கிருஷ்ணன் மனமுவந்து, 'இங்கே ஓடும் பீமா நதியில் நீராடி என்னை தரிசிப்பவர்கள், இடர் எல்லாம் நீங்கி, சர்வ மங்கலங்களையும் பெற்று வாழ்வார்கள்' என்று அருளினான்.

புண்டரீகபுரம் என்னும் அப்புண்ணிய இடத் தில், அற்புதமான ஆலயம் ஒன்று நதிக்கரையில் எழுப்பப்பட்டது. பின்னாளில் புண்டரீகபுரம் என்பது மருவி, பண்டரீபுரம் ஆகிவிட்டது.

ஆலயத்துக்கு நான்கு வாசல்கள். கோயிலின் கிழக்கு வாயிலுக்கு 'நாமதேவ் வாயில்’ என்று பெயர். கையில் தம்புராவுடன் இறைவனின் இசையில் மூழ்கியிருக்கும் நாமதேவரின் பித் தளைச் சிலை இங்கு உள்ளது.

இந்தப் பிரதான வாயிலின் வழியே உள்ளே நுழைந்தால் கருவறையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு மகாமண்டபம். இங்கே எழுந்தருளி யிருக்கும் தத்ராத்ரேயரையும், கணபதியையும் தரிசித்துவிட்டுச் சென்றால், அடுத்து விளங்குவது அழகியதொரு மண்டபம்.

வழவழப்பான 16 கருந்தூண்கள் தாங்கும் இந்த மண்டபத்தில் ஆங்காங்கே மாடங்கள். ஒரு மாடத்தில், பளிங்கில் செதுக்கப்பட்ட நரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார். இன்னொரு மாடத்தில் சிருங்கார ராதாவும், அவளது மையலில் மயங்கியிருக்கும் கிருஷ்ணனும் காட்சி தந்து, அந்த மண்டபத்துக்கு அழகு சேர்க்கிறார்கள். மற்றும் ஒரு மாடத்தில், செந்தூரத்தில் மூழ்கிய கோலத்துடன் கணபதி தரிசனம் தருகிறார்.

இந்த மண்டபத்தில், ஒரு தூணுக்கு முழுக்க முழுக்க வெள்ளிப் பூண் போடப்பட்டிருக்கிறது.

இந்தத் தூணுக்குக் கருட கம்பம் என்று பெயர். புரந்தரதாசர் கம்பம் என்ற காரணப்பெயரும் இதற்கு உண்டு.

பாண்டுரங்கனின் பரம பக்தரான புரந்தர தாசர் ஒருமுறை அவனை தரிசிப்பதற்காக நீண்ட பயணத்துக்குப் பின், பண்டரிபுரம் வந்து சேர்ந்தார். சத்திரம் ஒன்றில் தங்கினார். காலையில் கண்ணனை தரிசிக்கலாம் என்று எண்ணம் கொண்டு உறங்கப் போனார்.

புண்ணிய பூமி

நடுநிசியில் புரந்தரதாசர் கண்விழித்தார். கால் வலி தாங்காமல், 'அப்பண்ணா! ஒத்தடம் கொடுக்க வெந்நீர் கொண்டு வா!' என்று சீடனை அழைத்தார். பலமுறை கூவியழைத்த பிறகே சீடன் அப்பண்ணா ஒரு பாத்திரத்தில் சுடச்சுட வெந்நீர் கொண்டு வந்தான்.

தாமதமாக வந்த சீடன் மீது கோபம் கொண்டு, வெந்நீர்ப் பாத்திரத்தை வாங்கிய புரந்தரதாசர், வெந்நீரை அப்படியே அப்பண்ணாவின் முகத்தில் வீசிவிட்டார்.

பின்பு தமது செயலைக் குறித்து வருந்தி, நிம்மதியாகத் தூங்க முடியாமல், புரண்டு புரண்டு படுத்தார். பொழுது விடிந்தது. அப்பண்ணாவைத் தேடிப் போய், நள்ளிரவில் தான் நடந்து கொண்ட விதத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.

அப்பண்ணா ஆச்சரியமாகி, 'நான் இரவு முழுவதும் கண்விழிக்கவே இல்லையே?' என்றார். புரந்தரதாசர் குழம்பினார்.

நீராடிவிட்டுப் பாண்டுரங்கனைத் தரிசிக்கப் போனார். அங்கே பரபரப்பும் சலசலப்புமாக இருந்தது. விசாரித்ததில், கொதிக்கும் வெந்நீரை முகத்தில் கொட்டியது போல, பாண்டுரங்க விக்கிரகத்தின் முகம் முழுதும் கொப்புளங்களாக இருப்பது தெரியவந்தது.

கண்ணனே தனக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இரவு வந்திருந்தான் என்று உணர்ந்ததும், புரந்தர தாசர் நெகிழ்ந்து போனார். 'அப்பண்ணா வடிவில் வெந்நீர் கொண்டு வந்தது நீதான் என்று அறியாத பாவியாகிவிட்டேனே! நான் கோபத்தை விட்டொழிக்க வேண்டுமென்பதற்காக நீ செய்த விளையாட்டா இது? உன் அழகுத் திருமுகத்தை நான் மறுபடி காண வேண்டும்' என்று கண்ணீர் சிந்தினார்.

கண்ணனின் முகம் முன்பு போல் அழகானது. அந்த அழகில் மயங்கிய அவர் பாண்டுரங்கனின் மீது ஏகப்பட்ட துதிப்பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடினார்.

புரந்தரதாசர் இந்தத் தூணின் அடியில் அமர்ந்துதான் பாண்டுரங்கனின் மீது பாடல்கள் இயற்றினார் என்பதால் இதற்குப் புரந்தரதாசர் தூண் என்றும் பெயர்.

ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பாண்டுரங்கனைத் தரிசிக்கும் முன், இந்தத் தூணை ஆரத்தழுவி வணங்குகிறார்கள். அவ்வாறு செய்தால் தங்களது பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்.

மேலும், இந்த மண்டபத்தில் இருக்கும் கருந்தூண்களில் 64 மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி, மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களும் சிற்பங்களாக இந்தத் தூண்களில் இடம் பெற்றுள்ளன.  

கருவறைக்கு வெளியே ஜய, விஜய துவார பாலகர்கள். ஒரு கண்ணாடிப் பேழையில் திறந்த நிலையில் காட்சியளிக்கும் வேதநூல். அருகில், துக்காராமின் பாதுகைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மக்கள் துக்காராம் பாதுகைகளைக் கண்ணில் ஒற்றிக் களிப்பெய்திய பின்பு, கருவறை நாடி நடக்கிறார்கள்.

புண்ணிய பூமி

கருவறை! இங்கு இன, மொழி, சாதி வேறுபாடின்றி, இந்துக்கள் யாராக இருந்தாலும் கர்ப்பக்கிரகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இடுப்பில் கைகளை ஊன்றியவாறு, ஒரு செங்கல்லின் மீது நின்று அருள்புரிகிறான் பண்டரிநாதன்.

இந்தப் பண்டரிநாதர் சுயம்பு மூர்த்தி. மணற் கல்லால் உருவான மூர்த்தி. செங்கல் மீது நிற்பதாக ஐதீகம். சுவாமியின் பீடமும் மணற்கல்லே! காதுகளில் மகர குண்டலங்கள். தலையில் சிவ லிங்க வடிவ கிரீடம் தரித்திருக்கிறார்.

'ஜெய ஜெய விட்டலா, பாண்டுரங்க விட்டலா’ என்னும் கோஷம் கருவறையை நிறைக்கிறது. பண்டரிநாதனுக்குத்தான் விட்டலன் என்று இன்னொரு பெயர். 'விட்’ என்றால், செங்கல் என்பது பொருள். 'வா’வென்று அழைத்தால், நம்மோடே வந்துவிடுவதற்குத் தயாராக உள்ளது போல் ஒரு தோற்றம். கிருஷ்ணன் நம் வீட்டுப் பிள்ளைபோல் வெகு அந்நியோன்யமாக அங்கே எழுந்தருளியிருக்கிறார். பக்தர்கள் மூலவரின் திருவடிகளில் தலையை வைத்து வணங்கலாம். இதற்கு பாத ஸ்பரிச தரிசனம் என்று பெயர்.

மூலநாதனைத் தரிசித்த மன நிறைவோடு கருவறையை வலம் வந்தால், பின்னால் ஒரு தனிக் கோயில். இங்கே, அன்னை ருக்மிணிக்குத் தனிச் சந்நிதி உள்ளது. அன்னை ருக்மிணி தேவி இடுப்பில் இரு கரங்களையும் ஊன்றியபடி, ஆனந்தம் தவழும் வதனத்துடன் தரிசனம் தருகிறாள். அன்னைக்குக் குங்குமத்தால் அர்ச்சனை நடைபெறுகிறது. ருக்மிணி சந்நிதிக்கு அடுத்து சத்யபாமாவுக்கும், ராதையான ராதிகாவுக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.

இந்தத் திருத்தலத்தில் விட்டலன் இன்னொரு விளையாட்டையும் அரங்கேற்றியிருக்கிறான்.

பானுதாசர் விட்டலனின் பரமபக்தர்.அவனை தரிசிக்காமல் நீர் கூட அருந்தமாட்டார். பானுதாசரின் காலத்தில் சக்கரவர்த்தியாகக் கோலோச்சிக்கொண்டிருந்த கிருஷ்ணதேவராயர்

விட்டலனின் அழகில் மயங்கி, இந்த விக்கிரகத்தைக் கொண்டு போய், தன்னுடைய ராஜ்யத்தில் பிரதிஷ்டை செய்துவிட்டார்.

இந்த விவரம் தெரியாமல், பானுதாசர் வழக்கப் படி கண்ணனை தரிசனம் செய்ய வந்தார். கருவறையில் விட்டலன் இல்லை. துடித்துப் போனார். தேடித் தேடி, இறுதியில் அவர் விட்டலனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விட்டார். இறைவனின் திருவடிகளில் தலையை வைத்துக் கண்ணீர் உகுத்தபடி, அப்படியே அணைத்துக்கொண்டார். அப்போது கண்ணன் தன் கழுத்து துளசி மாலையையும், வைர மாலை யையும் எடுத்து, பானுதாசரின் கழுத்தில் போட்டு அழகு பார்த்தான்.

பானுதாசரின் கழுத்தில் வைரமாலையைக் கண்ட காவலர்கள், மன்னரிடம் இழுத்துப் போயினர். 'கண்ணனின் நகையைத் திருடியவரை சூலத்தில் ஏற்றிக் கொல்லுங்கள்' என்று ஆணையிட்டார் மன்னர்.

தண்டனையை நிறைவேற்ற முயன்றபோது, வாசம் வீசும் ஒரு பூச்செடியாக மாறியது சூலக்கம்பம். மன்னர் தன் தவற்றை உணர்ந்தார். பானுதாசருடன் கண்ணனையும் ஒரு பல்லக்கில் ஏற்றி, பண்டரிபுரத்துக்கே வழியனுப்பி வைத்தார்.

இந்த வைபவம் இன்றும் பண்டரீபுரத்தில் வருடாவருடம் 'ஆஷாட ஏகாதசி’யாகக் கோலா கலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பாண்டுரங்கன் பக்தர்களின் உள்ளம் கவர்ந் தவன். பக்தர்களோடு கொஞ்சிக் குலாவுபவன். பல லீலைகளை நிகழ்த்துபவன். ஆலயத்தில் எப்போதும் விட்டலனைத் துதித்து, பக்தர்கள் பஜனைப் பாடல்களைப் பாடிய வண்ணம் இருக்கிறார்கள். பாண்டுரங்கனைத் துதிக்கும் 'அபங்’ என்ற மராத்தியப் பிரார்த்தனைப் பாடல்கள் மிகப் பிரபலம்.

பாண்டுரங்கனைத் தரிசிப்போம். பரவசம் கொள்வோம்!

எங்கே உள்ளது?: மஹாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரிலிருந்து 75 கி.மீ. தொலைவில்.

எப்படிப் போவது?: சென்னையிலிருந்து மும்பை செல்லும் வழியில் சோலாப்பூரில் இறங்கி, பண்டரிபுரத்துக்குப் பேருந்திலோ, காரிலோ பயணம் செய்யலாம்.

எங்கே தங்குவது?: சோலாப்பூரிலும், பண்டரிபுரத் திலும் குறைந்த வாடகையில் தங்கும் விடுதிகளும் உணவு விடுதிகளும் ஏராளமாக உள்ளன.

தரிசன நேரம்: காலை 5.30 மணி முதல் 12.30 வரை; மாலை 4.30 மணி முதல் 8.30 வரை.