Published:Updated:

சந்நியாசிகள் வசைபாடுவது குறித்து அர்ஜுன் சம்பத், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், இராமகோபாலன்... இவர்களின் ரியாக்‌ஷன் என்ன?

சந்நியாசிகள் வசைபாடுவது குறித்து அர்ஜுன் சம்பத், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், இராமகோபாலன்... இவர்களின் ரியாக்‌ஷன் என்ன?
சந்நியாசிகள் வசைபாடுவது குறித்து அர்ஜுன் சம்பத், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், இராமகோபாலன்... இவர்களின் ரியாக்‌ஷன் என்ன?

ண்டாள்குறித்து கவிஞர் வைரமுத்து அண்மையில் எழுதியிருந்த கட்டுரை சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஆண்டாள்குறித்து இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை அவர் எழுதியிருந்தாலும், இந்தக் கட்டுரைக்கு மட்டும் பலத்த எதிர்ப்பு. ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதப் போராட்டமே நடத்தினார்.  நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து சில பெண்கள் மோசமான வார்த்தைகளால் வசைபாடி, வீடியோக்களை உலவவிட்டார்கள்.  இந்து அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன.

வைரமுத்துவும் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் “ஆண்டாள் புகழ் பாடத்தான் நான் ஆசைப்பட்டேன். நான் சொன்ன செய்தியை தவறாகப் பரப்பிவிட்டனர். உள்நோக்கத்தோடு சிலர் வேண்டுமென்றே செயல்படுகிறார்கள்" என்று அதில் தெரிவித்திருந்தார்.

வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும்கூட அவரைப் பற்றிய அருவருக்கத்தக்க வசைகள்  அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன.  கோயில்களில் ஆன்மிகப் பணி செய்பவர்களும், துறவறம் பூண்டவர்களும்கூட அருவருக்கத்தக்க வகையில் பேசி வீடியோக்களை வெளியிடுவது  அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

குருகுலக் கல்வி என்பது மேன்மையானது. பிறரை மதிப்பது, அன்பு செய்வது, எதிர்கருத்து சொல்வோரிடமும் மதிப்பளித்து

நாகரிகமாக விவாதிப்பதுபோன்ற தகுதிகளை வளர்ப்பதுதான் குருகுலக் கல்வியின் முக்கிய அம்சம். ஆன்மிகமும் அதைத்தான் போதிக்கிறது. ஆனால், சாதாரண மனிதர்களே உச்சரிக்கத் தயங்கும் வார்த்தைகளை ஆன்மிகத்தில் உள்ளவர்கள் சர்வசாதாரணமாகப் பேசலாமா?  

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்திடம் கேட்டோம்.. 

"கழுத்தில் ருத்ராட்சம், உடல் முழுக்கத் திருநீறு பூசிக்கொண்டு இப்படி ஆபாசமாகப் பேசுவதை இந்து சமயமும், தமிழ்ச் சமூகமும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. வைரமுத்து,  `ஆண்டாள் என் தாய். என் தாய் வேறு, ஆண்டாள் வேறல்ல’ என்று சொல்லியிருக்கிறார். ஆண்டாள் சன்னதியில் மன்னிப்புக் கேட்டுவிட்டால் எல்லா விமர்சனங்களும் சுமுகமாக அடங்கிவிடும். ஆனால், அவருடைய  கொள்கைகள்

அதற்கு இடம் கொடுக்க மறுக்கின்றன. 

நானும், ஹெச்.ராஜாவும்கூட  கடுமையான  எதிர் விமர்சனங்களை முன்வைத்தோம். ஆனால், அருவருப்பாக, ஆபாசமாகப் பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. விரைவாக இந்தப் பிரச்னைக்கு ஒரு சுமுகமானத் தீர்வு காண வேண்டும்"  என்கிறார் அர்ஜுன் சம்பத்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசனிடமும் இதுகுறித்துப் பேசினோம்... 

"வைரமுத்து பேசிய விஷயங்கள்  சரியில்லை என்றாலும்,  மோசமாக விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தனை நாள்கள் இந்து சமயத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள், தாக்குதல்கள் ஒருவழிப் பாதையாக இருந்தன. ஆனால், இன்று  மாற்றுக்கருத்துகளும், எதிர்கருத்துகளும் கடுமையாக வரத் தொடங்கியிருக்கின்றன. இத்தனை நாள்கள் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவுதான் இது. 

இன்று கேள்வி கேட்பவர்கள் இத்தனை நாள்கள் எங்கே போயிருந்தார்கள் என்று

தெரியவில்லை. எப்படி இருந்தாலும் எதிர் விமர்சனம்தான் செய்ய வேண்டுமே தவிர,  அநாகரிகமாக விமர்சிக்கக் கூடாது" என்கிறார் அவர்.

பாரதிய ஜனதாவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவிடம் பேசினோம்.

“கடுமையாகப் பேசுவதென்பது வேறு... ஆபாசமாகப் பேசுவதென்பது வேறு. ஆபாசமாக யாரும் பேசக் கூடாதென்பது என்னுடைய கருத்து" என்றார்.

இந்து முன்னணியின் தலைவர் ராமகோபாலனிடம் இதுகுறித்துப் பேச முயற்சித்தோம்...

"குறிப்பிட்ட இந்த ஆபாச வசைபாடல்களைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. வைரமுத்து பற்றிப் பேசுவது என்றால் பேசலாம்" என்று ராமகோபாலன் தெரிவித்ததாக அவரின் உதவியாளரிடமிருந்து பதில் வந்தது.