Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

மறைந்திருந்து வெளிப்பட்ட மகேஸ்வரனுக்கு ஆலயம் எப்போது?எஸ்.கண்ணன்கோபாலன்

ஆலயம் தேடுவோம்!

மறைந்திருந்து வெளிப்பட்ட மகேஸ்வரனுக்கு ஆலயம் எப்போது?எஸ்.கண்ணன்கோபாலன்

Published:Updated:

றையாய் மறையின் அரும்பொருளாய்த் திகழும் ஐயன் மகேஸ்வரனின் எண்ணற்ற

ஆலயம் தேடுவோம்!

திருக்கோயில்கள் பொலிவுடன் திகழும் நம்முடைய நாட்டில்தான், மன்னர்களிடையே சதாகாலமும் நிலவிய யுத்தங்களால் நூறு நூறு சிவாலயங்கள் சிதைக்கப்பட்ட அவலமும் நிகழ்ந்தது. இந்த அவலம் மகேஸ்வரனின் ஆலயங்களுக்கு மட்டுமல்ல, மாதவன் கொண்ட கோயில்களுக்கும் நிகழவே செய்தது. எண்ணிக்கை அளவில் பார்த்தால், மகேஸ்வரனின் ஆலயங்களே அதிகம். அப்படி ஓர் ஆலயத்தைதான் நாம் இந்த இதழில் தரிசிக்க இருக்கிறோம்.

சென்னை பூந்தமல்லி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரத்தை அடுத்து வரும் பிள்ளைச்சத்திரம் என்ற கிராமத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரியம்பாக்கம் கிராமம். இந்தக் கிராமத்தில்தான் மேற்கூரை இல்லாமல், மூன்று பக்கம் செங்கற்களால் கட்டப்பட்ட சந்நிதியில் நம் ஐயன் பத்மபீட ஆவுடையாரின் மேலாகப் பொலிவுடன் அருட்காட்சி தருகிறார். ஐயனை தரிசித்தபடி நந்திதேவர் காட்சி தருகிறார்.

சுமார் 1300 வருடங்கள் பழைமையான இந்தக் கோயில் பிற்காலப் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாமென அங்கிருந்த கல்வெட்டுச் செய்திகளில் இருந்து தெரிய வந்துள்ளது. மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்த இந்தக் கோயிலைக் கண்டு மனம் பதறி நின்றபோது, கொஞ்சம் ஆறுதல் தரும் விதமாக, அந்த ஊரைச் சேர்ந்த நாலு பேர் ஒன்று சேர்ந்து ஐயனுக்குக் கோயில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக  ஒரு தகவல் நமக்குக் கிடைத்தது. அந்த நால்வருமே 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது மகிழ்ச்சி தந்த ஒரு விஷயம்! அவர்களில் ஒருவரான பாலகணேஷிடம் சிதிலம் அடைந்திருந்த ஆலயத்தைப் பற்றிக் கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

‘‘இங்கே ரொம்ப வருஷமாவே வெட்டவெளியில் பாணமும் லிங்கமும் தனித்தனியா இருந்தது. ஒரு நந்தியும் இருந்தது, எப்படியாவது சுவாமிக்கு ஒரு சின்ன கோயிலாவது கட்டணும்னு எனக்கு ஆசை. பன்னீர்செல்வம், சுரேஷ், ராஜேந்திரன் போன்ற என் நண்பர்களும் ஆசைப்பட்டாங்க. ஆனா, தினமும் வேலைக்குப் போனாத்தான் குடும்பம் நடத்த முடியும்ங்கிற நிலையில் இருந்த எங்களுக்கு, கோயில் கட்ட வழி தெரியலை.

அப்பத்தான், குடியாத்தத்தைச் சேர்ந்த பெரியவர் பக்தவத்சலம் ஐயா பத்தி தெரிஞ்சுது. சிதில மடைஞ்சு போன பல கோயில்களுக்குத் திருப்பணி செய்திருக்கும் அவரைப் போய்ப் பார்த்துப் பேசினா ஏதாவது ஐடியா கிடைக்கும்னு நினைச்சோம். காஞ்சிபுரத்துல நடந்த ஒரு மாநாட்டுக்கு அவர் வந்திருக்கிறதா கேள்விப்பட்டு, அவரைப் போய்ப் பார்த்துப் பேசி, எங்க விருப்பத்தைச் சொன்னோம். கோயில் கட்ட அவர் எங்களுக்கு உதவினார். நீங்க அவர்கிட்ட பேசினா உங்களுக்கு இன்னும் விஷயம் கிடைக்கும்’’ என்றார்.

‘‘சுவாமியோட பெயர் என்ன?’’ என்று கேட்டோம்.

‘‘தெரியலை. இப்போதைக்கு நாங்க ஆதி கும்பேஸ்வரர்னு பெயர் வச்சிருக்கோம்’’ என்றார்.

தனக்கென்று ஓர் உருவம், ஒரு நாமம் இல்லாத இறைவனை எந்தத் திருநாமம் சொல்லி அழைத்தாலும், உடனே வந்து அருள்புரியமாட்டாரா என்ன?!

அதேபோல்தான், தன்னை நாளும் வந்து வழிபடும் அன்பர்களுக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டுவிட்டார் எம் ஐயன். 

பின்னர், பாலகணேஷ் நம்மிடம் கூறிய பெரியவர் பக்தவத்சலத்தை தொடர்பு கொண்டு பேசினோம்.

‘‘வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில்தான் நான் இருக்கிறேன். தேவாரம், திருவாசகம், திருமந்திரப் பாடல்களையும் மக்களிடம் பரப்புவதற்காக தமிழ் வேதம் என்ற சிற்றிதழை நடத்தி வருகிறோம். சிதிலம் அடைந்திருக்கும் கோயில்களுக்கு எங்களால் முடிந்தவரை திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்தி வருகிறோம்.

ஆலயம் தேடுவோம்!

எங்கள் தமிழ் வேதம் சார்பாக காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டுக்குச் சென்றபோது, ஆரியம்பாக்கத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் என்னிடம் வந்து, தங்கள் ஊரில் இருக்கும் பழைமையான கோயில் சிதிலம் அடைந்திருப்பதைப் பற்றிக் கூறினார்கள். அந்த இளைஞர்களின் பொறுப்பு உணர்ச்சியும், சிவபக்தியும் என்னைப் பெரிதும் கவர்ந்தது. நான் ஆரியம்பாக்கம் கிராமத்துக்குப் போய்ப் பார்த்தேன். கோயிலின் நிலை கண்டு வருந்தி, உடனே செயலில் இறங்கினேன்.

முதலில் தனித்தனியாக இருந்த ஆவுடை யாரையும் லிங்கத்தையும் சேர்த்துப் பிரதிஷ்டை செய்து, எதிரில் நந்திதேவரையும் பிரதிஷ்டை செய்தோம். இப்போதைக்கு இறைவனுக்குச் செங்கல்லால் கர்ப்பகிருஹம் அமைத்திருக்கிறோம்,. இன்னும் மேற்கூரை போடுவது, சுற்றுச் சுவர் கட்டுவது போன்ற பணிகளுடன் புதிதாக அம்பாள், விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி போன்ற பரிவார தெய்வங்களுக்கான விக்கிரஹங்களைச் செய்து, பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்யவேண்டும்.

ஆன்மிக அன்பர்களின் பக்திபூர்வமான பொருளுதவி போதுமான அளவுக்குக் கிடைத்தால், விரைவிலேயே திருப்பணிகளைப் பரிபூரணமாகச் செய்து முடித்து, கும்பாபிஷேகம் செய்துவிடலாம். ஐயன் ஆதிகும்பேஸ்வரர்தான் இதற்கு அருள் புரியவேண்டும்’’ என்றார்.

ஆலயம் தேடுவோம்!

மக்கள் நாளும் இறைவனை வழிபட்டு நல்வாழ்வு பெறவேண்டும், நாட்டில் சுபிட்சம் தழைக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில்தான், அக்கால மன்னர்கள் கோயில்களை எழிலுடன் கட்டிச் சென்றுள்ளனர். ஆனால், அந்நியர்களின் படையெடுப்பின் காரணமாக அவற்றுள் எண்ணற்ற ஆலயங்கள் இருந்த இடம் தெரியாமல் சிதைந்தும் மறைந்தும் விட்டன. அன்றைக்கு கோடானுகோடி பக்தர்களால் காலமெல்லாம் வழிபடப்பெற்ற இறைவன், இன்றும் நமக்கு அருள்வதற்காகவே ஆங்காங்கே அமைந்திருக்கும் சிதிலமடைந்த ஆலயங்களை வெளிப்படுத்தச் செய்கிறார்போலும்!
நமக்கு அருள்வதற்காகக் கோயில் கொள்ளத் திருவுள்ளம் கொண்டுவிட்ட ஐயனின் திருக்கோயில் திருப்பணிகள் பூர்த்தியாகி கும்பாபிஷேகம் நடைபெற்று, நித்திய பூஜைகள் தவறாமல் நடைபெற, நம்மால் இயன்ற பொருளுதவி செய்யவேண்டியது நம்முடைய கடமையல்லவா?

‘வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்’ எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனாம் ஆதிகும்பேஸ்வரரின் ஆலயத் திருப்பணிகள் விரைவில் பூர்த்தியடைந்து, ஆலயம் கும்பாபிஷேகம் காண நம்மால் இயன்றதைச் செய்வோம்; ஐயனின் திருவருளை நாமும் நம் சந்ததியினரும் ஐயமின்றிப் பெற்றுச் சிறப்புற வாழ்வோம்!

 படங்கள்: ச.பிரசாந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism