Published:Updated:

நாரதர் உலா

கோயில்களைக் காப்பாற்றிய யுனெஸ்கோ தீர்மானம்!

நாரதர் உலா

கோயில்களைக் காப்பாற்றிய யுனெஸ்கோ தீர்மானம்!

Published:Updated:

நாரதர் இன்னும் வரவில்லையே என்று நாம் நினைத்த உடனேயே நமக்கு முன்னால் பிரசன்னமானார் நாரதர். வரும்போதே செல்போனைப் பார்த்தபடியே வந்தார். ‘‘என்ன நாரதரே! போனில் ஏதும்

நாரதர் உலா

விசேஷமான செய்தியோ?’’ என்ற கேள்வியுடன் வரவேற்றோம்.

‘‘வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் வந்தது, அதைத்தான் பார்த்தபடி வந்தேன்’’ என்றார்.

‘‘என்ன தகவலோ?’’

‘‘கோயில்களில் அடிக்கடி புராதன சிலைகள், விக்கிரஹங்கள் திருடு போவதாக செய்தி வருகிறது அல்லவா? அதற்காக இதுவரையில் அலார மணி பொருத்தப்படாத கோயில்களில் புதிதாக அலார மணியைப் பொருத்தவேண்டும் என்று கோயில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்து இருக் கிறதாம்.’’
‘‘நல்ல விஷயம்தானே?’’

‘‘நல்ல விஷயம்தான். ஆனால், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வராமல் பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படும் கோயில்கள் பல இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு நிரந்தரமான வருமானம் இல்லாத நிலையில், அவர்களால் எப்படி கணிசமான பணம் செலவு செய்து அலார மணியைப் பொருத்த முடியும் என்று வாட்ஸ்அப்பில் ஆதங்கப்பட்டு இருக்கிறார் அந்த நண்பர்’’ என்ற நாரதரிடம்,

‘‘அறநிலையத் துறையிடம் விசாரித்தீரா?’’ என்றோம்.

‘‘விசாரிக்காமலா இருப்பேன். சர்வதேச சிலை கடத்தல் கும்பல் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாம். நம்மூர் விக்கிரஹங்களுக்கு வெளிநாட்டில் ஏக கிராக்கி. விக்கிரஹங்கள் இல்லாவிட்டால் கோயில்களுக்கு என்ன மதிப்பு? அதனால்தான் அலார மணி வைக்கச் சொல்கிறார் களாம். வருமானம் இல்லாவிட்டால், அங்குள்ள விக்கிரஹங்களை அருகில் உள்ள அரசு சிலை பாதுகாப்பு மையத்தில் கொண்டு வந்து வைக்கச்சொல்கிறார்கள். விசேஷ காலங்களில் எடுத்துக் கொண்டுபோய் கோயில்களில் வைத்து வழிபாடு செய்யலாம் என்று யோசனை சொல்லி இருக்கிறார்களாம்’’

‘‘புரிகிறது. அது சரி, போனமுறை வந்தபோது இந்து சமய அறநிலையத் துறையில் தொல்லியல் துறை ஆலோசகராக இருக்கும் ஒருவர் தமிழகத்தில் இருக்கும் சுமார் 300-க்கும் மேற்பட்ட கோயில்களை இடிக்க உத்தரவு போட்டிருப்பதாக வந்த தகவலைச் சொன்னீரே. அதுபற்றி விசாரித்தீரா?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாரதர் உலா

‘‘விசாரித்தேன். அது உண்மைதானாம். அவருடைய உத்தரவின்படி நாமக்கல் மாவட்டம் பேரையூரில் இருந்த 100 வருடங்களுக்கும் மேலான பழைமை வாய்ந்த மருதகாளி அம்மன் கோயிலும், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா பாப்பினியில் இருந்த 300 வருடங்களுக்கும் மேலாக இருந்து வந்த பெரியநாயகி அம்மன் கோயிலும் இடிக்கப்பட்டுவிட்டன. மற்ற கோயில்களை இடிப்பதற்கு முன்பாக திருச்சி திருவரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், இது தொடர்பாக விசாரிக்க ஒரு கமிட்டியையும் நியமித்து, விசாரணையை நவம்பர் 30-ம் தேதி தள்ளிவைப்பதாக உத்தர விட்டு இருந்தது’’ என்றார் நாரதர்.

‘‘அப்படியா? 30-ம் தேதி கோயில்களை இடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டதா?’’ என்றோம்.

‘‘அதைத்தானே சொல்ல வருகிறேன். அதற்குள் அவசரப்படுகிறீரே. உயர் நீதிமன்றம் உத்தரவின்படி ஒரு கமிட்டி அமைக்கப் பட்டது. அந்தக் கமிட்டியில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் இரா.நாகசாமி சில விவரங்களை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அவர் கூறியிருந்த சில ஆலோசனைகளை மேற்கோள் காட்டிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச் கோயில்களை இடிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம் கொடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது’’ என்றார் நாரதர்.

‘‘அப்படி நாகசாமி என்ன ஆலோசனைகளைக் கூறி இருந்தாராம்?’’

‘‘அதைப் பற்றித் தெரிந்துகொள்ள நாகசாமியை நேரில் சந்தித்து, நீதிபதிகள் மேற்கோள் காட்டிய அவருடைய ஆலோசனைகளைப் பற்றிக் கேட்டோம்.

‘முதலில் நான் குறிப்பிட்டு இருப்பது 1972-ஆண்டு யுனெஸ்கோ சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானம் பற்றிதான். இந்தியாவும் கையெழுத்து இட்டிருக்கும் அந்தத் தீர்மானத்தில், புராதனமான கோயில்கள், கட்டடங்கள் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் அதன் புராதனம் கெடும்படி மாற்றி அமைக்கக்கூடாது என்று தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது.’ என்ற நாகசாமி அப்படி இருந்தும் கோயில்கள் இடிக்கப்படுவதும் திருப்பணி என்ற பெயரில் மாற்றி அமைக்கப்படுவதும் வருத்தமாக உள்ளது என்று ஆதங்கப்பட்டார்’’ என்றார் நாரதர்.
‘‘வேறு என்ன ஆலோசனைகளை அவர் கூறினாராம்?’’

நாரதர் உலா

‘‘திருப்பணி என்ற பெயரில் பணிகள் மேற்கொள்ளும்போது, சுவர்களிலும் தூண்களிலும் உள்ள கல்வெட்டுகள் சிதைக்கப்படுவது, மண்டபங்கள் இடிக்கப்படுவது, அதுவரை வழிபட்டு வந்த கற்சிலைகளை அப்புறப்படுத்துவது போன்று நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு சேதங்கள் ஏற்படுகின்றன என்று நாகசாமி தெரிவித்திருந்தாராம்.

அதையும் தன் இடைக்கால தடை உத்தரவில் குறிப்பிட்டு இருந்த சென்னை உயர் நீதிமன்றம், திருப்பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக இதுபோன்ற விஷயங்களை கமிட்டியுடன் கலந்து பேசிய பிறகே திருப்பணிகளைத் தொடங்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறது.’’ என்ற நாரதர்,

‘‘நாகசாமியிடம் பேசியபோது இன்னும் இதுபோன்ற பல விஷயங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அது பற்றி நான் சொல்வதற்கு முன்பாக ஒரு சந்தோஷமான செய்தியை உங்களிடம் சொல்லட்டுமா?’’ என்று கேட்டார்.

‘‘சந்தோஷமான செய்தி என்றால் கேட்கக் கசக்குமா என்ன? சொல்லும்’’ என்று அவரைத் தூண்டினோம்.

‘‘சென்ற இதழ் சக்தி விகடனில் நீங்கள் குலோத் துங்க சோழன் வழிபட்ட ஓர் ஆலயம் சிதிலமடைந்து கவனிப்பார் இல்லாமல் இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தீர் அல்லவா?
அந்த இதழ் வெளிவந்த அன்றைய தினமே விஷயம் தெரிந்துகொண்ட அறநிலையத் துறை அமைச்சர் காமராஜ், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விவரம் கேட்டு, பூம்புகார் தொகுதி சட்டமன்ற எம்.எல்.ஏ.வை அந்த ஊருக்குச் சென்று பார்த்து வரும்படியாக உத்தரவு பிறப்பித்தாராம்.

அவரும் உடனே சென்று பார்த்ததுடன் விரைவில் உரிய நிதி ஒதுக்கி திருப்பணிகள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக சொல்லிவிட்டுச் சென்றாராம்.’’ என்றார்.

நாரதர் உலா

‘‘எப்படியோ... விரைவிலேயே கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றால் சந்தோஷம்தான்’’ என்றோம். அப்போது நாரதரின் போனில் ஏதோ மெசேஜ் வரவே அதைப் பார்த்தவர், ‘‘அவசரமாகச் செல்லவேண்டி இருக்கிறது. விரைவிலேயே வந்து பார்க்கிறேன்’’ என்று மெசேஜ் விவரம் பற்றி எதுவும் சொல்லாமலேயே அந்தர்தியானமாகிவிட்டார். 
‘அடுத்து நாரதர் எந்தக் கோயிலுக்குப் போகப்போகிறாரோ, என்ன குறைகளை அடுக்கப் போகிறாரோ’ என்ற நினைப்புடனே அவர் நம்மிடம் சொன்ன விவரங்களை டைப் செய்யத் தொடங்கினோம்.

படங்கள்: தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism