மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 7

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிரகிரியின் குகையில்... 

'கறங்கிசை விழவி னுறத்தைக் குணாது நெடும்பெருங் குன்றம்’ என்று அகநானூற்றுப் பாடல் குறிப்பிடும் சிரகிரி எனும் அந்த மலையை வெகு விநோதமாகவே சிருஷ்டித்திருந்தது இயற்கை. கீழ்திசையில் இருந்து நோக்கினால் மூத்தப் பிள்ளையாரைப் போன்றும், வடக்கில் இருந்து பார்க்கையில் தோகைவிரித்து கூத்தாடும் கோல மயில் போன்றும், மேற்குப் புறத்தில் பெரும் லிங்கத் திருவுருவைப் போன்றும், அதுவே தென் திசையில் இருந்து தரிசிக்க தலை நிமிர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபத்தைப் போலவும்... நான்கு திசைகளிலும் வெவ்வேறு விதமான தோற்றம் கொண்டு திகழும் சிராப்பள்ளியின் அந்த சிரகிரியை, இயற்கையின் பெரும் விநோதம் என்று சித்திரிப்பதில் சிறிதும் வியப்பில்லைதான்!

சென்றடையாத திருவுடையானை சிராப்பள்ளி

குன்றுடையானைக் கூறவென் மனம் குளிருமே

என்று அடியார்கள் பாடிப் பரவினார்கள் என்றால், அவர்களின் அந்தப் போற்றுதலுக்கு உரிய  புராணம் தொட்டு பேசப்பட்டு வரும் பல

காரணக் கதைகள் இருக்கவே செய்கின்றன. அதில் ஒன்று இந்த பெருங்குன்றினை மேரு பர்வதத்தின் அம்சமாகவே சித்திரிக்கிறது.

ஒருமுறை 'தங்களில் பலவான் யார்?’ என்று வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே போட்டி எழுந்ததாம். அதன் தொடர்ச்சியாக ஆதிசேஷன் மேரு பர்வதத்தை சுற்றிவளைத்து இறுக்கிப் பிடித்துக்கொள்ள, அந்த பர்வதத்தின் ஏதேனும் சிறு பகுதியைச் சிதறடித்துவிட்டால் போதும்; தான் பலவான் என்பதற்கு அதுவே சாட்சி என்று முடிவு செய்த வாயு பகவான், பலம் கொண்டமட்டும் பெரும் காற்றை வீசச் செய்தாராம். ஆனால் ஆதிசேஷனின் பிடியில் சிக்கியிருந்த மேரு சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. பின்னர், வாயுபகவானுக்கு ஆதரவாக தேவர்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் ஆதிசேஷனுடன் உரையாடி அவரின் கவனத்தைத் திசைதிருப்ப, வாயுவின் புயல் பாய்ச்சலில் மேருவின் சில பாகங்கள் சிதறி தெறித்தனவாம். அப்படி தெறித்துவிழுந்த பாகங்களில் ஒன்றே இந்த சிரகிரி குன்றம் என்பார்கள்.

சிவமகுடம் - 7

ராமன் அளித்த ரங்கநாதர் விக்கிரகத்தை விபீஷணன் இலங்கைக்குக் கொண்டு செல்ல, வழியில் அவரை தடுத்து திருவரங்கனை இங்கேயே நிலைநிறுத்தி திருவிளையாடிய விநாயகர் கோயில் கொண்டிருப்பதும் இந்த மலையின் உச்சியில்தான்.

இந்த மலையில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு தாயுமானவர் என்று திருநாமம். தாமே தாயாக வந்து பக்தைக்கு பிரசவம் பார்த்தவர் ஆதலால் இந்த ஸ்வாமிக்கு இப்படியொரு திருப்பெயர். இலங்காபுரியை ராவணேஸ்வரன் ஆண்டுவந்த காலத்தில், அவனது சகோதரனான திரிசிரன் என்பவனின் ஆட்சிக்கு உட்பட்டு திகழ்ந்ததாம் இந்தப் பகுதி. அவன் பெயரை யொட்டியே திரிசிரம் என்று பெயர் கொண்டதாகவும் கூறுவார்கள்.

இத்தகு புராணச் சிறப்புகள் பல மிகுந்த இந்த மலையில் திகழ்ந்த குகைகள், அக்காலத்தில் அமணர்கள் தங்கியிருந்து தவம் புரிந்த பள்ளிகளாகவும் திகழ்ந்தன. அப்படி, இந்த மலையில் திகழ்ந்த ஒரு குகையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள், 'பேரழிவு நிச்சயம்’ என்று பேரபாயத்தைச் சுட்டும் அடையாள வாக்கியங்களைக் கூறி தங்களுக்குள் அறிமுகமாகிக் கொண்ட அந்த முரட்டு வீரர்கள் இருவரும்.

வார்த்தைகளுக்கு  வாக்கியங்களுக்கு வீரியம் அதிகம். ஆத்மார்த்தமாக பலமுறைச் சொல்லப்படும் ஒரு வார்த்தை, செயல் வடிவில் பலித்து ஒரு சம்பவத்தை நிகழ்த்திவிடும் மந்திரமாகவும் மாறிவிடுவது உண்டு. இதை அனுபவத்தில் கொண்டுதான் 'ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும்’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.

இங்கே, இவர்கள் தங்கள் கூட்டத்தின் முகமனாகவே பரிமாறிக்கொள்ளும்  பெரும் அபாயத்தைச் சுட்டிக்காட்டும் அந்த வார்த்தையின் பலனும் பிற்காலத்தில் தங்கள் தலையி லேயே விடியப் போகிறது என்பதையோ, அருகில் நெருங்கிவிட்ட குகைக்குள் தங்களுக்கு ஒரு ஆபத்து காத்திருக்கிறது என்பதையோ அறியாமல் நுழைந்தார்கள், அந்த முரட்டு வீரர்கள்.

இருவரில் ஒருவன், முன்யோசனையுடன் வரும் வழியிலேயே கொற்றவை கோயிலில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த பந்தம் ஒன்றை எடுத்து வந்திருந்தான் ஆகையால், அதன் துணையோடு குகைக்குள் கவிந்திருந்த இருளை விலக்கி ஓரளவேனும் நகர முடிந்தது.

குகையின் இருளை வெற்றிகொண்டார்கள் என்றாலும், அவர்களது முன்னேற்றத்தை, அந்தக் குகை அதிர ஒலித்த ஒரு குரல் தடுத்து நிறுத்தியது!

''அங்கேயே நில்லுங்கள். மேற்கொண்டு ஓரடி எடுத்துவைக்க முயன்றாலும் உங்கள் உடலில் உயிர் தங்காது!''

குலைநடுங்கச் செய்த அந்தக் குரலைக் கேட்டு ஒருவன் பெரிதும் அதிர்ச்சியுற்றான் எனினும், இருவரிலும் எஜமானனாகத் தென்பட்ட மற்றொருவனின் முகத்திலோ அச்சத்தின் சாயல் சிறிதும் இல்லை. மேலும், வெகு பரிச்சயமானக் குரலை செவிமடுத்தவன் போன்று, தடித்த தனது இதழ்களில் புன்முறுவலையும் வலுக் கட்டாயமாக வரவழைத்துக் கொண்டு

சொன்னான்...

''ஓ... பரமேசுவரப் பட்டரா! பட்டர்பிரானுக்கு

சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!''

பெரிதும் இகழ்ச்சி தொனித்த அவனது வணக்கத்தை அசட்டை செய்த பரமேசுவரப் பட்டர், தனது குரலின் கடுமையை மேலும் அதிகப்படுத்திக்கொண்டு கேட்டார்;

''நீ மிகச் சிறந்த மதியூகிதான்; ஒப்புக் கொள்கிறேன். ஆனால், உனது ஞான விளையாடல் என்னிடம் பலிக்கும் என்று கனவு

காணாதே. யார் நீ, எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன், என்னை எங்ஙனம் அடையாளம் கண்டுகொண்டாய்? உங்கள் இருவரில் உறையூர் சம்பவத்துக்குக் கருவி யார்? அதற்கான காரணம்

என்ன? இந்தக் கேள்விகளுக்கு முறையாகப் பதில் சொல்லாவிடில் உன் தலை தப்பாது!'' என்றவர் தொடர்ந்து கூறினார்...

சிவமகுடம் - 7

''ஏதோ கிழவன் பிதற்றுகிறான் என்று கருதி விடாதே. இப்போது இந்தக் குகை சோழர் படைத்தலைவன் கோச்செங்கணின் தலைமை

யிலான நால்வர் படையால் சூழப்பட்டிருக் கிறது என்பதைத் தெரிந்துகொள். உயிர் பிழைக்க வேண்டும் எனில், உள்ளதை உள்ள படி விளக்க வேண்டியது அவசியம்''

இருட்டில் பட்டர்பிரானின் முகம் சரியாகப் புலப்படவில்லை. ஆயினும், கண்டிப்பும் அதிகாரமும் மிகுந்த அவரின் கட்டளைக் குரல் கேட்டு முரடர் தலைவனின் கூட்டாளிக்கு பயத்தால் உடல் நடுக்கம் கண்டது ஒருபுறம் என்றால், மறுபுறம் நடப்பது எல்லாமே பெரும் அதிசயமாகத் தெரிந்தது அவனுக்கு.

சிரகிரியின் குகைகள் அமணர்கள் வாழும்

பள்ளிகள் என்றும், போர்ச் சூழலின் காரணமாக அமண அடியவர்கள் இங்கிருந்து  நகர்ந்து விட்டதாகவும், அவை தமது பயன் பாட்டில் இருப்பதாகவும்தானே தலைவர் தன்னிடம் தெரிவித்தார். அப்படியென்றால், பட்டர்பிரான் என்று தலைவர் அழைக்கும் இந்தக் கிழவர் இங்கு வந்தது எப்படி? அதுவும் சிறு படையுடன் அல்லவா வந்திருக்கிறார். எனில், தங்களின் திட்டங்கள் யாவும் அவருக்கு தெரிந்துவிட்டிருக்குமோ? அப்படி அவர் தெரிந்துகொண்டிருந்தால், நமக்கு பெரிதும் நாசம் விளையுமே... என்றெல்லாம் எண்ணி பெரிதும் குழப்பமும் அச்சமும் கொண்டான் அந்தக் கூட்டாளி!

ஆனால், அவன் தலைவனோ சற்றும் நிலை தடுமாறினான் இல்லை. பட்டர்பிரானின் கூற்று

எந்த அளவுக்கு உண்மை என்பதை ஆராயும் நோக்கில், சற்றே திரும்பி குகையின் வாயிலை நோக்கினான். மறுகணம்... அந்தக் குகை மட்டுமல்ல, சிரகிரி அமைந்திருக்கும் அந்த

மொத்த பிராந்தியமும் அதிரும்படி பெருங் குரலெடுத்துச் சிரித்தான். அவனது அந்தச் சிரிப்புக்கு ஒரு காரணம் இருக்கவே செய்தது.  

தவளையை உணவாக்கக் காத்திருக்கும் சர்ப்பம் போன்று,  குகைக்குள் பரமேசுவரப் பட்டரும் வெளியே கோச்செங்கணும் அவனது

சகாக்களுமாக அந்த முரட்டு வீரர்களை வளைத்திருக்க... சர்ப்பத்தை உணவாக்கிக் கொள்ள பெரும் சிறகுகளை விரித்து பாய்ந்து வரும் வல்லூறைப் போன்று, ஒரு படை சிரகிரி யைச் சுற்றி வளைத்தபடி மெள்ள மேலே ஏறி வந்துகொண்டிருந்தது.

அது, பாண்டியரின்* முன்னோடிப் படை!

அறக் கருணையும் மறக் கருணையும்!

பச்சைப் பட்டுக்கு வெள்ளி ஜரிகை இழைத்தாற்போன்று, சோழ மண்டலத்தின் பசும்பரப்பை ஊடறுத்து பாய்ந்து வரும் பொன்னி

நதியாள், அன்றைய அந்த நிகழ்வுக்குச் சிறப்பு சேர்ப்பதுபோல் வழியெங்கிலும் காட்டு மரங்கள் சொரிந்த பூக்களை ஏற்று தன் அழகையும், தன் உற்சாகத்துக்கு ஈடாக தனது வேகத்தையும் அதிகப்படுத்திக்கொண்டு வெகு துள்ளலுடன் பாய்ந்து வந்தாள்.

அந்த அற்புத நிகழ்வைக் காணும் ஆவலுடன் வெகு சீக்கிரமாகவே கீழ்வானில் எழுந்துவிட்ட ஆதவனும் தன் பங்குக்கு செங்கதிர்களை நீர்ப் பரப்பில் பாய்ச்சி, பொன்னியின் மேனியை பொன்மயமாக்கியிருந்தான்.

ஆனால், இயற்கையின் இந்த ஜாலங்களை விடவும் பொன்னியின் மடியில் தவழ்ந்தாடிக் கொண்டிருக்கும் பரதவர்களின் படகுகளே மணிமுடிச் சோழரின் மனதை வெகுவாய் ஈர்த்தன. அந்தப் படகுகள் ஒவ்வொன்றிலும் பாதி பேர் துடுப்பு துழாவுவதற்குத் தயாரா கவும், மீதிப் பேர் கலம் செலுத்தி களம் காணத் தயாராகவும் நின்றிருக்க... மானி திரட்டியிருக்கும் அற்புதமான அந்தப் படையணியை பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் சோழ மன்னர்.

பரதவர்களின் இன்னும் ஒரு படையணி, கரையில் சோழரையும் இளவரசி மானியையும் சூழந்தபடி மெய்க்காவலாக நின்றிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் மன்னரின் ஒப்புதலுடன் இளவரசி மானி கையசைத்ததும், முகப்புப் படகில் நின்றிருந்த வீரன் ஒருவன் மிகச் சன்னமாக கொம்பு வாத்தியத்தை முழங்க, அதே படகில் நின்றிருந்த பரதவர் தலைவன் தன் வாளை விண்ணோக்கி உயர்த்த, பெரும் ஜயகோஷத்தோடு படகுகள் அனைத்தும் மெள்ள நகர ஆரம்பித்தன.

அப்படி படகுகள் நகர்ந்ததனால் ஏற்பட்ட சலனத்தின் காரணமாக நதியில் எழுந்த அலைகள் அடுக்கடுக்காக வேக வேகமாக வந்து கரையைக் கடந்து, அங்கு நின்றிருந்த மானியின் பாதங்களை நனைத்துச் சென்றன. அந்தக் காட்சி, மகள் மானியை அன்னைக் காவிரி முத்தமிட்டு ஆசியளிப்பதாகவே பட்டது மணிமுடிச் சோழருக்கு.

சிவமகுடம் - 7

அதேநேரம், கரைக்கு பாய்ந்து வந்த காவிரியின் அலைகளைப் போன்றே, அவரின் மனதிலும் பற்பல எண்ணங்கள் எழுந்து அலைபாய்ந்து கொண்டிருந்ததை, மானி கவனிக்கவே செய்தாள். அதற்குக் காரணம் தனது இந்த நடவடிக்கையால் எழுந்த பெருமிதமா அல்லது பெண் மகள் இத்தகைய ஆபத்தான காரியங்களை செய்யத் துணிகிறாளே என்ற பெருங்கவலையா என்பதை அவளால் அனுமானிக்க முடியவில்லை.

தனது கடற்புற பெருந்திட்டத்தை பரதவர் தலைவன் பரிபூரணமாக விவரித்த பிறகு, அதிலிருந்த ஆபத்துக்களை தெரிந்து கொண்ட பிறகு, தந்தை என்ற முறையில் அவர் மனதில் கவலை எழுவது இயற்கைதான். அப்படியிருப் பின் அந்தக் கவலையை அவர் மனதில் இருந்து அடியோடு அகற்றவேண்டும். பெண் ணுக்கு அறக்கருணை மட்டுமல்ல, அவசியம் ஏற்பட்டால் மறக்கருணையும் தேவை என்பதை அவருக்கு உணர்த்தியாகவும் வேண்டும் என்று திட்டமாக முடிவு செய்தாள் மானி.

அதற்குள் வெகுதூரம் நகர்ந்துவிட்ட படகுகள் சிறு புள்ளிகளாகி மறைந்தன. இங்கிருந்து அவை நகரத் துவங்கி சிலபல நாழிகைகள்  கழிந்திருக்க, தெற்கே ரிஷபகிரியின் அடிவாரத்தில் இருந்து கூன்பாண்டியரின் ஆணைக்கு இணங்க பெரும் புரவிப் படையொன்று

புழுதிப் பறக்க சோழம் நோக்கி நகரத் துவங்கியது!

மகுடம் சூடுவோம்...

* போர் நடைபெறும் காலங்களில், படையெடுப்புக்குமுன் எதிரி நாட்டு எல்லைப்புறங்களில் உள்ள சூழலை, பகை மன்னனின் நடவடிக்கைகளை அறியும் பொருட்டு ஏவப்படுவது முன்னோடி படை.

இதுவரை...

ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் சோழ தேசத்துக்கு பாண்டியர்களால் பேராபத்து சூழ்ந்திருந்த சூழலில், எல்லை கிராமமான புலியூரில் புகுந்தான் கரும்புரவி வீரன் ஒருவன். அவன் யார் என்பதை அறிந்த பரமேசுவரப்பட்டரும், சோழ படைவீரர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

அதேநேரம் பாண்டியரின் படைவலிமை குறித்து ஒற்றறிய ரிஷபகிரிக்குச் செல்லும் சோழர் படைத்தலைவன் கோச்செங்கண் பாண்டியர் களிடம் சிக்கிக்கொள்கிறான். பாண்டிய மன்னரின் ஆணைப்படி அவனை சிறையில் அடைக்க மதுரைக்கு அழைத்துச் செல்லும் வழியில், பாண்டிய வீரர்களின் தோற்றத்தில் இருந்த தனது சகாக்கள் இருவரின் உதவியால் தப்பித்தான் கோச்செங்கண்.

உறையூரிலோ சோழ மன்னர் தீர்க்காலோ சனையில் ஆழ்ந்திருக்கிறார். அப்போது, புலியூரில் தோன்றிய கரும்புரவி வீரன், பரமேசுவரப்

பட்டருடன் அவரது அறைக்குள் நுழைகிறான். அந்த வீரன் இளவரசி மானிதான் என்பதை அறிந்த மன்னரும் அங்கிருந்த மற்றவர்களும் பெரும் வியப்புக்கு ஆளானார்கள்.

அந்த தருணத்தில் எதிர்பாராதவிதமாக சாளரத்தில் இருந்து குறுவாள் ஒன்று பாய்ந்து வர, அதைத் தனது சுழற்படையால் தடுத்து வீழ்த்துகிறாள் மானி. நடந்ததையெல்லாம் கண்டு கலக்கமுற்ற சோழ மன்னருக்கு ஆறுதல் சொல்வதோடு, அவரது போர் வியூகத்தில் இருக்கும் குறைகளையும் சுட்டிக்காட்டுகிறாள் இளவரசி. அத்துடன் கடற்மார்க்கம் வழியாக எதிரிகள் உட்புகுந்து தாக்குதல் நிகழ்த்தினால், அதைச் சமாளிக்கும் வகையில் தான் திரட்டி வந்திருக்கும் பரதவர் படைகளின் பாசறைக்கு தந்தையை அழைத்துச் செல்கிறாள்.

அங்கே, குறுவாளால் தரையில் சிலபல கோடுகளை எழுதி பரதவர் தலைவன் விளக்கிய மானியின் போர்த் திட்டத்தைக் கண்டு பெரும் வியப்புக்கு ஆளாகிறார் மணிமுடிச்சோழர்.

இவர்கள் இங்கே திட்டம் வகுத்துக் கொண்டிருக் கும் அதே வேளையில், சிராப்பள்ளி குன்றின் அடிவாரத்தில், 'பேரழிவு நிச்சயம்’ என்று கூறியபடி முரட்டு வீரர்கள் இருவர் சந்தித்துக் கொண்டார்கள்!