Published:Updated:

3 யுகங்கள்... 3 கதைகள்!

ஜகந்நாத தரிசனம் எஸ்.கண்ணன்கோபாலன், ஓவியம்: மாருதி

3 யுகங்கள்... 3 கதைகள்!

ஜகந்நாத தரிசனம் எஸ்.கண்ணன்கோபாலன், ஓவியம்: மாருதி

Published:Updated:

‘புருஷோத்தம க்ஷேத்திரம் பூரி ஜகந்நாதம்’ என்று புராணங்கள் போற்றும் பூரி ஜகந்நாதர் ஆலயம், பல புராண நிகழ்ச்சிகளையும் அதன் பின்னணியில் அரிய தத்துவங்களையும் நமக்கு உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது. ஜகத்துக்கே தான்தான் நாதன், தலைவன் என்பதை நமக்குச் சொல்லாமல் சொல்வதுபோல் பகவான் கிருஷ்ணர் அருளாட்சி புரியும் பூரி ஜகந்நாதர் ஆலயம் தோன்றிய புராண வரலாற்றைத் தெரிந்துகொள்வோமா?

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த இந்திரத்துய்மன், மிகச் சிறந்த விஷ்ணு பக்தராகத் திகழ்ந்தார். அவருடைய மனைவியும் விஷ்ணு பக்தை. தினமும் பாகவதர்களை அழைத்து பாகவத உபந்நியாசம் கேட்பது மன்னரின் வழக்கம். ஒருநாள் பாகவதர் ஒருவர், பகவானின் இருப்பிடமான வைகுண்டத்தைப் பற்றி வர்ணித்ததைக் கேட்ட மன்னருக்கு, எப்படியாவது வைகுண்டத்தை தரிசிக்கவேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. தனது விருப்பம் நிறைவேற சதாசர்வ காலமும் பகவானைப் பிரார்த்தித்தபடி இருந்தார் மன்னர். அவரின் பிரார்த்தனைக்கு இரங்கிய பகவான், அவரின் கனவில் தோன்றி, ‘‘பூவுலகத்திலேயே வைகுண்டம் இருக்கிறது. அதைக் கண்டறிந்து கொண்டாடுவதே சிறந்தது’’ என்று கூறினார்.

காலையில் கண் விழித்த மன்னர், தன் அமைச்சரை அழைத்து, கனவைப் பற்றிக் கூறி, பூவுலகில் உள்ள அந்த வைகுண்டம் எங்கிருக்கிறது என்று உடனே கண்டுபிடித்துச் சொல்லுமாறும் உத்தரவிட்டார். அமைச்சர் தன் தம்பி வித்யா பதியிடம் அந்தப் பணியை ஒப்படைத்தார்.

பல இடங்களுக்கும் அலைந்து திரிந்த வித்யா பதி, ஒருநாள் இரவு வழியில் இருந்த வனத்தில் தங்க முடிவு செய்தான். வனத்தில், சற்றுத் தொலைவில் விளக்கொளியுடன் ஒரு குடிசை தென்பட்டது. அங்கே சென்று குரல் கொடுத்தான். குடிசையில் இருந்து அழகிய இளம் பெண் வெளியில் வந்தாள். அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, பசியாற உணவும், இரவு குடிசைக்கு வெளியே தங்கவும் அனுமதி கேட்டான்.

3 யுகங்கள்...  3  கதைகள்!

‘‘ஐயா, தாங்களோ உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர். வேடுவர் குலத்தைச் சேர்ந்த நான் தங்களுக்கு உணவு கொடுத்தால் எனக்குப் பாவம் அல்லவா வந்து சேரும்?’’ என்று மறுத்தாள் அவள்.
‘‘பெண்ணே, கவலை வேண்டாம். அன்னதானம் என்பது சகல விதமான தோஷங்களையும் போக்கக்கூடியது. எனக்கு அன்னம் இடுவதால், உனக்கு எந்த தோஷமும் ஏற்படாது. புண்ணியமே உண்டாகும்’’ என்று கூறினான் வித்யாபதி.

அதன்பின், அந்தப் பெண் ஓரளவு சமாதான மாகி, கஞ்சியைக் கொடுத்துக் குடிக்கச் செய்தாள். பசியாறிய பிறகுதான், குடிசையில் அந்தப் பெண் தனியாக இருப்பதை உணர்ந்தான் வித்யாபதி.
அவளுடைய பெற்றோர்களைப் பற்றி விசாரித்தான். முதலில், ‘அது ரகசியம்’ என்று சொல்ல மறுத்தவள், பின்பு அவன் வற்புறுத்தலைப் பொறுக்க முடியாமல், ‘‘இங்கே எங்களுடைய குலதெய்வமான நீலமாதவர் கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலும் வைகுண்ட மும் வேறு வேறு அல்ல. நாங்கள் காலம்காலமாக அவரை வழிபட்டு வருகிறோம். வேறு எவருக்கும் இது தெரியக்கூடாது என்பதற்காக, என் பெற்றோர் இரவில் சென்று பூஜைகள் செய்துவிட்டு, அதிகாலையில் வந்துவிடுவார்கள்’’ என்றாள்.

தான் தேடி வந்த பொக்கிஷம் அதுதான் என்பதைத் தெரிந்துகொண்ட வித்யாபதி, எப்படியும் அந்த பூலோக வைகுண்டத்தைத் தரிசித்துவிடுவது என்று முடிவு செய்துகொண்டான்.
பொழுது விடிந்தது. அந்தப் பெண்ணிடம், தான் அவளை மணந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தான். தன் பெற்றோர் சம்மதித்தால் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றாள் அவள்.வித்யாபதியும் அவளுடைய பெற்றோரிடம் இது குறித்துப் பேசினான். முதலில் அவர்கள் மறுத்தாலும், பின்னர் சம்மதித்தனர். திருமணம் முடிந்த சில தினங்களில் வித்யாபதி அவர்களிடம், தானும் நீலமாதவரை தரிசிக்கவேண்டும் என்று கூறினான். என்னதான் தங்கள் பெண்ணை மணந்து கொண்டிருந்தாலும், அவன் வேறு இனத்தைச் சேர்ந்தவன் என்பதால், அவனைத் தங்களுடன் அழைத்துச் செல்லத் தயங்கினர். மகளும் வற்புறுத்தவே, ஒரு நிபந்தனையுடன் அழைத்துச் செல்வதாகக் கூறினர்.

அதன்படி, வித்யாபதியின் கண்களைக் கட்டி விட்டு, அழைத்துச் சென்றனர். வித்யாபதி ஒரு சிறிய துணியில் கடுகை முடிந்துகொண்டு சென்றான். தன்னை அழைத்துச் செல்லும் வழியில், யாரும் அறியாதபடி கடுகைத் தூவிக் கொண்டே வந்தான். சிறிது ஈரப்பதம் இருந்தாலே கடுகு முளைத்துவிடும்; அதை அடையாளமாகக் கொண்டு, தன்னை அழைத்துச் செல்லும் வழியைத் தெரிந்துகொள்ளலாம் என்பது அவனுடைய எண்ணம். அவனுடைய அதிர்ஷ்டம், அப்போது மழையும் தூறியது.

கோயிலை அடைந்ததும் கண் கட்டை அவிழ்த்து, பெருமாளை தரிசிக்க வைத்தனர்.பின்னர், மீண்டும் அவனுடைய கண்களைக் கட்டி விட்டு, வேறு வழியாக அழைத்து வந்தனர்.

அடுத்த நாள் காலையில், அவன் யாரிடமும் சொல்லாமல், தன்னுடைய நாட்டுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டான். மன்னரிடம் நடந்ததைக் கூறினான். உடனே, அமைச்சர் மற்றும் பரிவாரங்களுடன் வித்யாபதியையும் அழைத்துக்கொண்டு அந்தக் காட்டுப் பகுதிக்கு வந்தார் மன்னர். தங்கள் பகுதிக்கு அரச பரிவாரங்கள் வருவதைக் கண்டு திகைத்த வேடுவத் தம்பதி, அவர்களை வரவேற்று உபசரித்தனர். பின்னர் வித்யாபதியின் தந்திரத்தை அறிந்துகொண்ட அவர்கள், ‘இறைவனின் திருவுள் ளம் எப்படியோ, அப்படி நடக்கட்டும்’ என்று விட்டு விட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

3 யுகங்கள்...  3  கதைகள்!

மன்னரும் பரிவாரங்களும் கடுகு முளைத்திருந்த வழியாகவே சென்று, நீலமாதவர் கோயிலை அடைந்தனர். ஆனால், இறைவன் அங்கிருந்து மறைந்துவிட்டார். வேடுவத் தம்பதியரும் அவர்களின் மகளும் கதறி அழுதனர். காலம்காலமாக அவர்கள் வழிபட்டு வந்த இறைவன் மறைந்துவிட்டாரே என்று எண்ணிய மன்னரும், அதற்குத் தான் காரணமாகிவிட்டோமே என்று வித்யாபதியும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.

அப்போது இறைவன் அசரீரியாக, ‘‘மன்னனே, உனது  பக்தியைச் சோதிக்கவே நாம் இப்படி ஓர் அருளாடலை நிகழ்த்தினோம். நீ உன் நாட்டுக்குச் சென்று, அங்கே உன் விருப்பப்படி ஓர் ஆலயத்தை எழுப்பு. நாம் அங்கே எழுந்தருள்வோம்’’ என்றார்.

மன்னரும் பரிவாரங்களும் வேடுவத் தம்பதி களுக்கு ஆறுதலும் நன்றியும் சொல்லி விடை பெற்றனர். நாடு திரும்பியதும், சிற்பிகளைக் கொண்டு பிரமாண்டமாக ஓர் ஆலயத்தை எழுப்பி னார் மன்னர். ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய இறைவனின் திருவுருவம் வேண்டுமே என்ற எண்ணத்துடன் உறங்கிய மன்னரின் கனவில் இறைவன் தோன்றி, ‘‘பொழுது விடிந்ததும் கடற்கரைக்குச் செல். கடலில் மிதந்தபடி ஒரு கட்டை உன் அருகில் வரும். அதைக் கொண்டு என்னுடைய திருவுருவத்தை வடித்துப் பிரதிஷ்டை செய்’’ என்றார்.

பொழுது விடிந்ததும் கடற்கரைக்குச் சென்ற மன்னர், கடலையே பார்த்தபடி நின்றுகொண்டிருந் தார். பல மரக்கட்டைகள் மிதந்து வந்தாலும், எதுவும் மன்னரின் அருகில் வரவில்லை. சற்றுப் பொறுத்து ஒரு கட்டை மிதந்தபடி மன்னரின் அருகில் வந்தது. அதுதான் இறைவன் குறிப்பிட்ட கட்டை என்று நினைத்து மன்னர் அதைக் கையில் எடுக்கவும், மற்றொரு கட்டையும் அவருக்கு அருகில் வந்தது. திகைத்த மன்னர் அதையும் கையில் எடுத்துக்கொண்டார். உடனே, மூன்றாவதாக ஒரு கட்டையும் வந்து சேர்ந்தது. அதையும் கையில் எடுத்துக்கொண்ட மன்னர் சற்று நேரம் அங்கேயே நின்றார். அதன்பின், வேறு கட்டை எதுவும் அவர் அருகில் வரவில்லை. ‘இந்த மூன்று கட்டைகளில்தான் இறைவனின் திருவுருவத்தைச் செய்யவேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம் போலும்!’ என்று எண்ணியவாறே அரண்மனைக்குத் திரும்பினார் மன்னர்.

தனக்குக் கிடைத்த கட்டைகளில், பகவான் வைகுண்டத்தில் இருப்பதைப் போலவே விக்கிரஹம் செய்யக்கூடிய சிற்பி தேவை என்று முரசறைவித்து தெரிவித்தார். ஆனால், பகவான் வைகுண்டத்தில் இருக்கும் காட்சி யாருக்குத் தெரியும்? எனவே, ஒரு சிற்பியும் முன்வரவில்லை. சோர்ந்துபோன மன்னருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக, வயதான ஒரு சிற்பி மன்னரிடம் வந்து, தான் மன்னரின் விருப்பப்படியே வைகுண்டத்தில் இருக்கும் பகவானின் திருவுருவத்தை வடித்துத் தருவதாகச் சொன்னார். கூடவே, ஒரு நிபந்தனையும் விதித்தார்.

‘‘என்னை கர்ப்பகிருஹத்துக்குள் விட்டு, வெளியில் பூட்டிவிடுங்கள். 28 நாட்கள் முடியும்வரை கதவைத் திறக்கக்கூடாது. அப்போதுதான் என்னால் இறைவனின் திருவுருவத்தைச் செய்யமுடியும்’’ என்றார். அதன்படியே, அந்தச் சிற்பியை கர்ப்ப கிருஹத்தின் உள்ளே அனுப்பிவிட்டு, அவருக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வைத்து விட்டு, அறையைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

மறுநாளிலிருந்து, தினமும் காலையில் மன்னர் ராணியுடன் கோயிலுக்கு வந்து, உள்ளே சிற்பி வேலை செய்யும் சப்தத்தைக் கேட்டுத் திருப்தியுடன் திரும்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டார். இன்னும் இரண்டு தினங்களே இருந்த நிலையில், 27-வது நாள் எந்தச் சப்தமும் கேட்கவில்லை. காற்று குறைவான அந்த அறையில் சிற்பிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டதோ என்று அச்சம் கொண்டவராக, சிற்பியின் நிபந்தனையை மீறி, கர்ப்பகிருஹ கதவுகளைத் திறந்து பார்த்தார் மன்னர். உள்ளே சிற்பியைக் காணவில்லை. ஆனால், மூன்று திருவுருவங்கள் கை, கால்கள் இன்றி, அரைகுறையாக முடிக்கப்பட்டு இருந்தன.

அதிர்ச்சியுற்றார் மன்னர். அப்போது இறைவன் அசரீரியாக, ‘‘மன்னனே, வைகுண்டத்தில் இருக்கும் இறைவனை சிலை வடிக்க அந்த இறைவனால்தான் முடியும். வயோதிக சிற்பி யாக வந்தது நானே! நிபந்தனையை மீறி நீ கதவுகளைத் திறந்துவிட்டதால், சிலை வடிக் கும் பணி தடைபட்டு விட்டது. இருந்தாலும் பாதகம் இல்லை. எனது பக்தனான உன்பொருட்டு நான் இந்த அரைகுறை வடிவத்திலேயே பூரண சாந்நித்தியம் கொண்டு, இந்தக் கலி முடியும் வரை பக்தர்களுக்கு அருள்புரிவேன். கலியின் முடிவில் நான் எங்கிருந்து கட்டை வடிவில் வந்தேனோ, அங்கேயே சென்றுவிடுவேன். அங்கிருந்து மறுபடியும் பிரபஞ்சத்தை சிருஷ்டி செய்வேன்’’ என்று கூறினார். தொடர்ந்து,

3 யுகங்கள்...  3  கதைகள்!

‘‘இங்கே உள்ள மூன்று விக்கிரஹங்களில் கருமை நிறத்தில் உள்ள விக்கிரஹம்தான் நான். வெண்மை நிறத்தில் இருப்பது பலராமர்; மஞ்சள் நிறத்தில் உள்ளது, என்னுடைய அவதாரத்தின் போது கோகுலத்தில் அவதரித்த மாயா துர்கையான சுபத்திரை. எங்களை முறைப்படி நீ பூஜித்து வருவாயாக’’ என்று அருளினார்.

இந்தக் கதைக்கும் ராமாயணம் மற்றும் மகா பாரதத்துக்கும் தொடர்புடைய சில சம்பவங்கள் இருக்கின்றன.

ருமுறை, துவாரகையில் கிருஷ்ணனின் மகன் சாம்பனும் மற்றவர்களும் விளையாடிக்கொண்டிருந்த போது, அந்த வழியாகச் சில முனிவர்கள் வந்தனர். அவர்களின் பெருமையை உணராமல், தங்களில் ஒருவனுக்கு கர்ப்பிணி வேஷம் போட்டு, முனிவர்களிடம் அழைத்துச் சென்று, ‘‘முனிவர்களே, இவனுக்கு என்ன குழந்தை பிறக்கும்?’’ என்று கிண்டலாகக் கேட்டனர்.

இவர்களின் கிண்டலைப் புரிந்துகொண்ட முனிவர்கள், ‘‘இவன் வயிற்றில் ஓர் உலக்கைதான் பிறக்கும். அது உங்கள் குலத்தையே அடியோடு அழிக்கும்’’ என்று சொல்லிவிட்டனர். சாம்பனும் அவன் தோழர்களும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மறுநாளே, கர்ப்பிணி வேஷம் போட்டவன் வயிற்றில் இருந்து உலக்கை பிறந்தது. அதைக் கண்டு அச்சம் கொண்டவர்கள், அந்த உலக்கையை நன்றாகப் பொடி செய்து, கடற்கரையில் தூவிவிட்டனர். நாளடைவில் அவை கோரைப் புற்களாக முளைத்துவிட்டன. உலக்கையின் கூரிய இரும்புத் துண்டு மட்டும் கடலில் சென்று விழுந்து, அதை ஒரு மீன் விழுங்கிவிட்டது. அந்த மீனைப் பிடித்த வேடன், அதில் இருந்த இரும்புத்துண்டை எடுத்துத் தனது அம்பில் பொருத்திக்கொண்டான்.

சில காலம் சென்றது. குருக்ஷேத்திரப் போரும் தொடங்கி முடிந்தது. தனது வம்சம் அழிந்து விட்டதால் மிகுந்த துயரத்தில் இருந்த காந்தாரிக்கு ஆறுதல் சொல்ல கிருஷ்ணர் சென்றார். அவரைக் கண்டதுமே சினம் பொங்க, ‘‘கிருஷ்ணா, என்னு டைய குலத்தை அழித்த உன் குலமும் அழிந்து போகட்டும்’’ என்று சாபம் கொடுத்தாள். ஏற்கெனவே முனிவர்களால் தன் குலத்துக்கு ஏற்பட்டிருந்த சாபம் பற்றி அறிந்திருந்த கிருஷ்ணர், காந்தாரியின் சாபத்தையும் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.

துவாரகைக்குத் திரும்பிய கிருஷ்ணர், தன் குலத்தவர் மது போதையில் சிக்கிச்  சீரழிவதைப் பார்த்தார். இனி நடக்கப்போவது என்ன என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. உடனே, தன்னைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு க்ஷேத்திராடனம் புறப்பட்டார். கடற்கரை ஓரமாக வந்துகொண்டிருந்தபோது, அவர்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டது. ஒவ்வொருவரும் கரையில் தடிமனாக முளைத்திருந்த கோரப் புற்களைப் பிடுங்க, அவை இரும்பு உலக்கைகளாக மாறின. அவற்றால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு மடிந்தனர்.

கண்ணெதிரே தன் இனத்தவர் மடிந்தது கண்டு விரக்தி அடைந்த பலராமர், அங்கிருந்து வடக்கு நோக்கிச் சென்றுவிட்டார். இப்படியாக முனிவர்களின் சாபமும், காந்தாரியின் சாபமும் பலித்தன. அடுத்து, கிருஷ்ணரின் கையில் இருந்த சங்கும் சக்கரமும் மறைந்தன. தனது முடிவும் நெருங்கிவிட்டதை அறிந்துகொண்ட கிருஷ்ணர், அங்கிருந்த ஆலமரத்தின் அடியில் கால் மேல் கால் போட்டபடி, விச்ராந்தியாகப் படுத்துவிட்டார்.

சற்றுத் தொலைவில் இருந்த வேடனின் பார்வை யில் படுத்திருந்த கிருஷ்ணர் தெரியவில்லை; மாறாக, அவரின் பாதம் மட்டும் மானின் தலை போல் தெரிந்தது. உடனே, அவன் கடல் மீனின் வயிற்றில் கிடைத்த கூரான இரும்பு நுனியைப் பொருத்தி இருந்த அம்பை எய்தான். அந்த அம்பு கிருஷ்ணரின் பாதத்தில் சென்று தைத்தது.

3 யுகங்கள்...  3  கதைகள்!

வேடன் ஓடிச் சென்று பார்த்தபோதுதான், தான் மானென்று நினைத்துக் கிருஷ்ணரின் மேல் அம்பு எய்தது தெரிந்தது. பதறிப் போய், கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கோரினான்.

‘‘வேடனே, வருத்தம் வேண்டாம். இது எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்ட விதி! எனது ராம அவதாரத் தில் நான் மறைந்திருந்து வாலியை வதம் செய்ததன் பலன்தான் இது. நீ என்னுடைய முடிவை பாண்டவர்களுக்குத் தெரிவித்து, அவர்களை இங்கே அழைத்து வா’’ என்று கூறினார்.

உடனடியாக அங்கு வந்து சேர்ந்த பாண்டவர் கள் கதறிக் கண்ணீர் உகுத்தனர். கிருஷ்ணர் அவர்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றினார். பின்னர், தமது பூதவுடலை விட்டுப் பிரிந்தார். பாண்டவர்கள் கிருஷ்ணரின் மேனியை சந்தனக் கட்டைகளின் மேல் கிடத்தி, தகனம் செய்தனர்.

அப்போது அவருடைய மேனி யின் இரண்டு பகுதிகள் மட்டும் பிரிந்து, ஒன்று கடலுக்குள்ளும், மற்றொன்று அந்த வனத்துக்குச் சற்றுத் தொலைவில் இருந்த இடத்திலும் சென்று விழுந்தன.
வனத்தில் சென்று விழுந்த மேனியின் பகுதியே நீல மணியாக மாறி, அங்கிருந்த வேடர்களால் நீல மாதவராக வழிபடப்பட்டது. கடலில் விழுந்த மற்றொரு பகுதியே மூன்று கட்டைகளாக மாறி, இந்திரத்துய்ம மன்னரின் கைகளில் கிடைத்தன. அந்தக் கட்டைகளால் வடிக்கப்பட்ட விக்கிரஹங்களே பூரி கோயிலில் கிருஷ்ண, பலராம, சுபத்திரை தெய்வத் திருவடிவங்களாக அருளொளி பரப்பித் திகழ்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism