Published:Updated:

நாட்டுப்புற கலைகளில் தெய்வ தரிசனம்!

மண்ணின் கலை... ரா.வளன்

நாட்டுப்புற கலைகளில் தெய்வ தரிசனம்!

மண்ணின் கலை... ரா.வளன்

Published:Updated:

ம்முடைய தொன்மையான கலாசாரம், பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை பிரதிபலிக்கும் ஒப்பற்ற சாதனமாகத் திகழ்வது நாட்டுப்புறக் கலைகள் தான். நாட்டுப்புறக் கலைகளுக்கென்று நீண்ட நெடிய வரலாறு உண்டு. சொல்லில் எளிமையும் வெளிப்படுத்துவதில் மிளிரும் அழகுமே நாட்டுப்புறக் கலையின் உயிரோட்டமாகத் திகழ்கின்றன. நம்முடைய பண்பாடும் கலாசாரமும் என்றும் நிலைத்திருக்க வகை செய்யும் ஒப்பற்ற கலைகள்தான் நாட்டுப்புறக் கலைகள் என்பதால், பெரும்பாலான தமிழ் அறிஞர்கள் நாட்டுப்புறக் கலைகளை உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றி இருக்கிறார்கள். 

இன்றைக்கு அருகி வரும் நாட்டுப்புறக் கலை களைப் பரப்புவதில் பெரிதும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊரின் பெயரையே தன் பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கும் திருப்பத்தூரான் சேவியர். கடந்த 27 ஆண்டுகளாக தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் நாட்டுப்புறக் கலைகளைப் பரப்பி வளர்த்து வருகிறார். ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும் நாட்டுப்புறக் கலைகளில் அவருக்குப் பெரிதும் ஈடுபாடு இருப்பதால், நாட்டுப்புறக் கலைகளில் ஆன்மிகத்தையும் இணைத்து, அந்தந்த ஊர்களில் உள்ள குலசாமிகள் மற்றும் எல்லைச் சாமிகளைப் பற்றியும் பாடுவதோடு, பாடலுக்கு வேஷம் கட்டி ஆடுவதும் குறிப்பிடத் தக்க விஷயம். அவரைச் சந்தித்தபோதே அழகான நாட்டுப்புறப் பாடலுடன் தான் நம்மை வரவேற்றார்.

''ஆடிப்பாடி வேலை செய்தால்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அலுப்பு இருக்காது  அதில்

ஆணும் பெண்ணும் சேராவிட்டால்

அழகு இருக்காது...

நாட்டுப்புற கலைகளில்  தெய்வ தரிசனம்!

குடும்பம் என்ற அமைப்பு முறையில், பிறப்பில் தாலாட்டைச் சொல்வதும், வளர்ப்பில் குலசாமி தெய்வ நம்பிக்கையை வழிபாட்டு முறைகளைக் கற்றுத் தருவதும், விளையாட்டில் வீரத்தை வளர்ப்பதும், விடுகதை மற்றும் வார்த்தை விளையாட்டில் நாக்கு வளைந்து கொடுப்பதற்கு ஏதுவாக யரலவழள வல்லினம் மெல்லினம் இடையினம் வார்த்தைகளை கோத்துப் பேச வைப்பதும், சுப காரியங்களில் எசப்பாட்டு பாடச் செய்து அறிவைச் சோதிப்பதும், சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் பொறுப்புணர்வை வளர்ப்பதும் என நாட்டுப்புறக் கலைகள் நம் அன்றாட வாழ்க்கை முறையோடு பின்னிப் பிணைந் திருக்கின்றன.

இந்தப் பாரம்பரியக் கலைகளில் எனக்குப் பெரிதும் ஈடுபாடு ஏற்பட்டதால், நானும் நாட்டுப் புறக் கலைகளைப் பரப்புவதற்கு என்னால் முடிந்த அளவுக்கு முயற்சிக்கிறேன்'' என்று அடக்கமாகச் சொல்லும் இவர் தொடர்ந்து,

''பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள கோயில் திருவிழாக்களிலும், எல்லைச்சாமி விழாக்களிலுமே நாட்டுப்புறக் கலைகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். எந்த ஒரு பேதமும் இல்லாமல் என்னை நிகழ்ச்சிக்கு அழைப்பவர்கள், தங்கள்  ஊர் குலசாமி, எல்லைச்சாமிகள் பற்றி மணிக்கணக்காகப் பகிர்ந்துகொள்வார்கள். அதில் என்னையே மறந்து நானும் ஒன்றிப்போவேன்.

காளியம்மாள், மாரியம்மாள்

காத்திடும் தேசம்  நாம்

காட்டுகிற பக்தியிலே ஏது துவேசம்

கமுதிமுத்து மாரியம்மன் காவல் தெய்வமேஅதை

கையெடுத்து வழிபட்டால் காலம் வெல்லுமே

கோட்டூர் மாரியம்மன் கொள்கைக்காரியாம்பக்தி

கொண்டவரை வாழவைக்கும் எல்லைக்காரியாம்

நாட்டுப்புற கலைகளில்  தெய்வ தரிசனம்!

என்று குலதெய்வப் பாடலைப் பாடும்போதே, கைதட்டிப் பாராட்டுவார்கள். அம்மனே நேரில் வந்ததுபோல் நான் பத்துக் கைகளுடன் காளி வேஷம் போட்டு ஆடிப் பாடும்போது, அந்த தெய்வம் எனக்குள்ளே இறங்கிவிட்டதாகவே பாவித்துக்கொள்வேன். என்னுடைய சக கலைஞர்களும் அப்படித்தான்'' என்று சக கலைஞர்களையும் பாராட்டுகிறார்.

''அடியெடுத்து வைத்தால் பூமி அதிருமப்பா இடையில்

அணிந்திருக்கும் மணிகளெல்லாம் உதிருமப்பா

தண்டைபோட்ட கால்களுக்கு தயக்கம் ஏதப்பாஉன்

கெண்டைவேட்டி காண்பதற்கு மயக்கம் தானப்பா

வா கருப்பாநீ வரம் கொடப்பா

அண்டமெல்லாம் கிடுகிடுங்க

ஆகாயம் படபடங்க

மெல்ல மெல்ல போகையில

வீச்சருவா கையிலேந்தி

வேட்டையாடி வர்றாரய்யா

கோட்டை கருப்பணசாமி...

இப்படி கருப்பணசாமி வேஷம் கட்டி ஆட்டம் ஆடும்போதே எங்களுக்குள் ஒரு புது சக்தி பிறக்கும். என்னையும் அறியாமல் கருப்பா என்று அழைக்கும்போதும், அந்த ஊர் எல்லையைச் சொல்லி வருத்திப் பாடி ஆடும்போதும் நிஜமாகவே அருள் வருவது போல் இருக்கும். இந்த உணர்வு மற்ற பக்தர்களிடம் தானாகவே வெளிப்படுகிறது. பக்தர் கூட்டமும் அருள் வந்து ஆடி விடுவார்கள்!

நாட்டுப்புற கலைகளில்  தெய்வ தரிசனம்!

அந்த சாமி வெளியேற நாங்கள் விபூதி கொடுப்போம். அப்போது ஒட்டுமொத்த பக்தர் கூட்டமும் எங்களிடம் விபூதி வாங்கிக் கொள்வார்கள். நடுநடுவே நாட்டுப்புறக் கலைகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகம், நெருப்பாட்டம், குறவன்குறத்தி ஆட்டம் போன்ற பல நிகழ்ச்சிகளுடன் மதுவிலக்கு போன்ற சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தும் பாடல்களையும் நகைச்சுவை இழையோடப் பாடி,  சுமார் மூன்று மணி நேரத்துக்குள் மொத்த நிகழ்ச்சியையும் நடத்தி விடுவோம்.

பெரும்பாலான தமிழ் அறிஞர்களின் பாடல்கள், கதைகள், நாடகங்கள் எல்லாம் மண் மணக்கும் கலைகளாகத்தான் இருந்திருக்கின்றன. ஆனால், இக்கலைகள் யாவும் இன்று ஒவ்வொன்றாக மறைந்துகொண்டு வருகின்றன. இருப்பினும், கிராமங்கள் இருக்கும் வரை நாட்டுப்புறக் கலைகளுக்கு அழிவு என்பதே இல்லை என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு ஆறுதலாய் இருக்கிறது!'' என்று கூறி முடித்தார் திருப்பத்தூரான்.

நாட்டுப்புற கலைகளில்  தெய்வ தரிசனம்!

இவ்வையகத்தில் நம் பண்பாடும் கலாசாரமும் நிலைக்க வேண்டு மானால், இம்மண்ணில் நாட்டுப்புறக் கலைகள் என்றென்றும் நீடித்து நிலைக்க வேண்டும். அதற்கு இறைவன் திருவருள் புரியட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism