மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

ஆகம விதிகள் அவசியமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? சர்ச்சைக்கு இலக்காகித் தவிக்கிறது ஆலய வழிபாடு. 'எல்லோருக்கும் உரிமை உண்டு’ என்றும், 'எந்தவொரு பணிக்கும் தகுதி தேவை எனும்போது, ஆலயங்களிலும் தேவைதானே’ என்றும் வாதபிரதிவாதங்கள் எழுந்துள்ளன. 

எது சரி, எது தவறு என்பது தெரியாமல் தவிக்கிறார்கள் பக்தர்கள். அவர் களுக்கு, உங்கள் பாணியில் வெவ்வேறு கோணங்களில் அவரவர் வாதங்களை முன் வைத்து விளக்கி, உரிய தீர்வையும் பதிலையும் தாருங்களேன்.

பி.பரமசிவம், செங்கல்பட்டு

 முதல் கோணம்...

சங்கரன் முகத்திலிருந்து ஆகமம் வெளிவந்தது; சக்தி அதை ஆதரவுடன் ஏற்றுக்கொண்டாள்; வாசுதேவன் அதை ஆமோதித்தான்  என்று ஆகம விளக்கம் உண்டு (ஆகதம் சிவவக்தராத்து கதம் ச கிரிஜாமுகெ. மதம் சவாஸு தேவஸ்ய தஸ்தாத் ஆகம உச்யதெ). எழுதாக்கிளவியை (வேதம்) 'ஆகமதத்’ என்று சொல்வது உண்டு. அதுவும் ஆகமத்தில் இருப்பதால், அதன் பெருமை பன்மடங்கு வளர்ந்தது. ஆகமத்துக்கு உயிரோட்டம் அளிப்பது வேதம். அது, வேதத்துடன் இணைந்து செயல்வடிவம் பெற்றது.

? ஆலய வழிபாடுகளில் ஆகமங்களின் பங்களிப்பு என்ன?

வழிபாடுகளில் இரண்டு விதம் உண்டு. ஒன்று தனக்காக கடவுள் வழிபாட்டை ஏற்பது; மற்றொன்று பிறருக்காக ஏற்பது. இவற்றில், பிறருக்கான வழிபாட்டை நடைமுறைப்படுத்துவதுதான் ஆகமம். மாற்றுத்திறனாளிகள், சிந்தனை வளம் குன்றியவர்கள், கடவுள் வழிபாட்டுக்கு உகந்த இயல்பு இல்லாதவர்கள் ஆகிய அனைவரை யும் கடவுள் வழிபாட்டில் இணைக்க, அவர்களுக் காக பூஜைபுனஸ்காரங்களை ஏற்றுக் கொள்பவர்கள், பரார்த்த பூஜைகளை நடைமுறைப் படுத்துகிறார்கள். தகுதி இழந்தவர்களும் அதாவது இயலாத நிலையில் உள்ளவர்களும் வாழ்க்கையில் அடைய வேண்டியதை அடைந்து, எல்லோரும் போல் பிறவிப் பயனை அடையவேண்டும் எனும் நோக்கில், பரார்த்த பூஜை பயனுள்ளதாகும். ஆகவே, தகுதி இல்லாமல் இருந்தாலும் தானே தனக்காக கடவுள் வழிபாட்டைப் பயன்படுத்தவேண்டும் என்று அடம்பிடிக்கவேண்டாம்.

தகுதி இழந்தவர்களைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு உதவி செய்ய ஸனாதனம் கட்டளையிடும். அந்த அறத்தை நிறைவேற்றும் வகையில், தன்னிச்சையாகவே பரார்த்த பூஜை யில் இறங்குகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் கிராமம் கிராமமாகத் தென்படும் கோயில்கள். அவர்களுக்காகவே கோயில்கள் இயங்குவதால் காலையில் இருந்து மாலை வரை சிறிய இடை வெளியோடு பூஜைகள் நடந்து கொண்டிருக்கும். ஆறு காலம், நான்கு கால பூஜைகள், அர்த்த ஜாம பூஜைகள் பிரம்மோத்ஸவங்கள், ரதோத்ஸவங்கள், நீராடுதல், கிராம வலம் வருதல் போன்ற விழாக்கள் அத்தனையும், அப்பாவி மக்களும் பூஜையில் இறங்க இயலாதவர்களும் ஆகம முறைப்படி முழுப் பலனை ஏற்று பயன்பெற வழி வகுக்கிறது.

கேள்வி - பதில்

? தனக்காக மட்டுமின்றி மற்றவர்களின் நன்மைக்காகவும் செய்யப்படுவது பரார்த்த பூஜை எனில், அதை எல்லோரும் செய்யலாம்தானே?

குடியரசு சிந்தனையுடன் மனிதனாகப் பிறந்த அத்தனை பேரும் பரார்த்த பூஜையில் இணையலாம் என்று ஆகமம் சொல்லாது. இனம் ஒன்றானாலும் இயல்பில் ஒன்றுபடமுடியாது. இது இயற்கையின் நியதி. அதை ஒன்றாக்கி வெற்றிபெற இயலாது. தனக்காக பூஜை செய்பவர்களின் தினசரி அட்டவணையில் பூஜை

யும் சேர்ந்து இருக்கும். ஆகம முறைப்படி ஒழுக்கத்துடன் பூஜையைக் கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே பரார்த்த பூஜையில் (கோயில் பூஜையில்) இணைய இயலும் என்று ஸனாதனம் சொல்லும்.

இயல்பாக பூஜை செய்யும் எண்ணம் இருக்க வேண்டும். அது மனிதனின் ஒரு சாராருக்கு மட்டும்தான் இருக்கும். பிறப்பில் எல்லாரும் சரிசமமானாலும் இயல்பில் மாறுபாடு இருக்கும். கருவறையில் இருந்து வெளிவரும் நோக்கில் மனித இனம் ஒன்றுதான். ஆகையால், ஸனாதனம் பிறப்பில் மனித இனம் ஒன்று என்று சொல்லும். இயல்பில் மனித இனம் மாறுபட்டிருக்கும் என்பது உண்மை. பிறந்த நாள் குழந்தைகள் இயல்பில் மாறுபட்டு இருக்கிறார்கள்; தாய் தகப்பனாரின் இயல்பு அவர்களிடம் காணப்படுவது இல்லை. 'இயல்பை வைத்து நான்கு வர்ணங்களை வரையறுத்தேன்’ என்கிறார் கண்ணன்.

? பாகுபடுத்துவது நாம்தான். இதில், பகவானை துணைக்கு அழைப்பது தவறு இல்லையா?

காக்கையும் குயிலும் பறவை இனம். எனினும், குயிலின் திறமையை காக்கையிடம் வரவழைக்க இயலாது. மரங்கள் ஓரினம். ஆனால்  பலா, மாங்காய் என்று அவை ஒவ்வொன்றும் தரும் காயும் கனிகளும் மாறுபட்டவை. நிலம் ஒன்றானாலும் கறுத்த நிலத்தில் விளையும் பயிர்கள் சிறப்புப் பெற்று இருக்கிறது; மற்ற நிலத்தில் விளைவிக்க முற்பட்டாலும் பயன்படுவதில்லை. எல்லா நதிநீர்களும் ஒன்றானாலும் கங்கையின் நீருக்கு இருக்கும் பெருமை அலாதியானது. விசித்திரமான பிறவிகளும், விசித்திரமான இயல்புகளை உடைய உயிரினங்களும் உலகத்தின் அடையாளம் இயற்கையில் மாறுபட்ட இனங்களை செயற்கையில் ஓர் இனமாக இணைக்க இயலாது.

இயற்கை வளங்களை எல்லா இனங்களும் ஒன்று என்ற நோக்கில் சமமாகப் பகிர்ந்தளிக்க இயலும். இயற்கையில் தோன்றிய இனத்தின் தகுதியை ஒன்றாக நினைக்கலாம். ஆனால், மாற்ற இயலாது. மனிதப் பிறவியில் ஓர் இனம், சிந்தனை வளம் பெற்று ஆகாசத்தில் மறைந்திருக்கும் ஒலியை தனது மனக் கண்ணால் கண்டு, மனதில் சேமித்து, தேவைப்படுபவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கும் தகுதி படைத்தவர்களாக இருந்தார்கள். அவர்களை ரிஷி பரம்பரை என்று சொல்வார்கள். அவர்கள் வேதத்தை மனதில் சேமித்து வார்த்தை வடிவில் வெளியிட்டார்கள். அந்தத் தகுதி இருப்பவர்கள், தன்னிச்சையாகக் கடவுளை வழிபடலாம். பிறரை முன்னேற்ற பூஜையிலும் ஈடுபடலாம். இந்தத் தகுதி இல்லாதவர்களை அதில் ஈடுபடவைத்தால் விரும்பிய  பலனை எட்ட இயலாது. ஆகமங்கள் அந்தத் தகுதியை வரையறுத்துக் கூறுகின்றன.

கேள்வி - பதில்

பிறந்த மனிதர்கள் எல்லோரும் பரார்த்த பூஜைகளில் ஈடுபட இயலாது. ரிஷி பரம்பரையில் உதித்தவர்கள் மட்டுமே இணைய இயலும். அது அவர்களுக்கு கிடைத்த தனிச் சிறப்பல்ல; பொறுப்பு.

அதை உணராமல், பூஜை செய்வதை உயர்ந்ததாக நினைத்து, அது தமக்குக் கிட்டாமல் இருக்கும் சூழலில் காழ்ப்பு உணர்ச்சியில் அவர்களை எதிர்த்துப் போராடி வெற்றி காண நினைப்பது தவறு. அவர்களது வெற்றி அப்பாவி மக்களை உயர்த்த முடியாமல் செய்துவிடும். இன்றைக்கும் எல்லோராலும் எல்லா காரியங்களையும் செய்துவிட முடியாது. அவர்களது இயல்பில் இருக்கும் மாறுதல் அவர்களது தகுதியை வரையறுத்துவிடும். முடியாத காரியத்தில் ஈடுபடுவது தவறு.

இரண்டாவது கோணம்...

பிறக்கும்போது உடல் உறுப்புகள் முழுத் தகுதியோடு இருப்பது போன்று மூளையும் சிந்தனை வளமும் முழுமை பெற்று இணைந்திருக்கும். தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தால், அவர்களது சிந்தனை வளம் குறிப்பிட்ட சில விஷயங்களில் முழுமை பெறாமல் போனது. அதை குறையாக நினைத்து அவர்களுக்கு பரார்த்த பூஜையில் (கோயில் களில்) கலந்துகொள்ள இடமளிக்காமல் இருப்பது தவறு.

? கடவுளுக்கான பணிவிடையில் தகுதியை எதிர்பார்ப்பது தவறா?

பண்டைய சமுதாயத்தில், 'பூஜைகளில் பங்கு பெறத் தகுதி இல்லாதவர்கள்’ என்று முத்திரை குத்தி வெளியேற்றினார்கள். அவர்கள் கண்ணோட்டத்தில், ரிஷி பரம்பரை யில் தோன்றாதவர்களாக இருப்பதால், தகுதி இல்லாதவர்கள் என்று தீர்மானித்து விட்டார்கள். ஆகம முறைப்படி 'பூஜை செய்பவன் உயர்ந்தவன்; கடவுளை வணங்க வரும் பக்தர்கள் தாழ்ந்தவர்கள்’ என்ற பாகுபாடு இல்லை என்றாலும், ஆகம பூஜை செய்பவர்களின் மனதில் 'தான் உயர்ந்தவன்’ என்கிற எண்ணம் மேலோங்கியிருப்பதை உணர்கிறோம். ஸனாதனம் எல்லோரையும் ஒன்றாகப் பார்த்தாலும், அது என்னவோ தெரியவில்லை... எண்ணத்தில் மட்டுமல்ல, செயல்களிலும் ஏற்றத்தாழ்வுகள் பளிச்சிடு கின்றன.

கேள்வி - பதில்

எல்லோருக்கும் எழுத்தறிவு கிடைக்கப் பெற்றால், ஏற்றத்தாழ்வு தலைதூக்காது. எழுத்தறிவு பெற இயலாத பண்டைய சமுதாயத்தின் சில பிரிவினரும் மக்களும் முன்னேற முடியாமல் தவித்தார்கள். அதை பிறப்பின் தகுதியாகச் சுட்டிக்காட்டினர்.

இன்றைய குடியரசில் அடித்தளத்தில் இருப்பவரும் ஜனாதிபதியாக முடியும். மேல்தட்டு மக்கள் வெளிநாடு செல்வதும், அடித்தட்டு மக்கள் அரசாட்சியில் அமர்ந்தும் இருக்கிறார்கள். எல்லா துறைகளிலும் அடித்தட்டு மக்களின் திறமைகள், அரசு இயந்திரம் சிறப்பாக இயங்கப் பயன்படுகின்றன. முடியரசில், ஒரு சாராருக்கு மட்டுமே இருந்த பெருமை, குடியரசில் எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது. ஆண்  பெண் பேதமின்றி அத்தனை அடித்தட்டு மக்களும் எல்லா துறையிலும் தங்களது முத்திரையைப் பதித்திருக்கிறார்கள்.

மேட்டுக்குடி மக்களும் உயர்ந்த சிந்தனை வளம் பெற்ற கல்வியாளர்களும் பாரதத்தைவிட்டு வெளியேறி, வெளிநாடுகளில் வாழ்ந்தபோதிலும் சாதாரண மக்களின் உழைப்பிலும் சிந்தனையிலும் பாரதம் தலை நிமிர்ந்து நிற்கிறது. நாடகக் கலைஞர்களும் சினிமாக் கலைஞர்களும் அரசமைத்து சேவை செய்கிறார்கள். குடியானவனும் அமைச்சராக மாறியிருக்கிறான். ஒரு காலத்தில்  அடுப்பங்கரையில் அடுப்பூதிக் கொண்டிருந்த பெண்மணிகள், இன்றைக்கு விமானத்தை இயக்கும் அளவுக்கு பலதுறைகளிலும் சாதித்துள்ளார்கள்.

? சாதனைக்கு மன ஈடுபாடுதான் காரணம். கடவுள் வழிபாட்டிலும் அத்தகைய ஈடுபாட்டையும் இயல்பையும் எதிர்பார்ப்பது எப்படி தவறாகும்?

நாயும் பூனையும் இயல்பில் மாறுபட்டவை. ஆனால், நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தவுடன், பகையை மறந்து நட்போடு வாழும். பூனை எலிக்குஞ்சுக்குப் பால் கொடுத்த நிகழ்வும் உண்டு.  அடித்தட்டில் இருந்தவர்களும் உழைப்பால் உயர்ந்து அரசியலில் ஏற்றம் பெற்றிருக்கிறார்கள். கோயில் வழிபாடுகளும் அவர்களை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலை உண்டு. அரசு அதிகாரியின் ஆணைக்கு இணங்க கோயிலில் வழிபாடுகள் செயல்படுகின்றன. கோயில் பணிகளும் அரசாங்கத்தின் ஒரு துறையாகச் செயல்படும் காலம் இன்று.

கேள்வி - பதில்

ஆகமத்தின் சட்டதிட்டங்கள் ஒதுங்கி வழிவிட, மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற நடைமுறைகள் வழக்கத்துக்கு வருகின்றன. கிட்டத்தட்ட வியாபார நோக்கமாகவே செயல்பாடுகள் உள்ளன. கடவுளின் பிரசாதம் வியாபாரப் பொருளாக மாறிவிட்டது. கோயிலின் பண்பான உருவம் மாறி பகட்டான உருவத்தில் தென்படுகிறது. அதில் சிற்றுண்டி சாலையும் இடம் பெற்று விட்டது. அதை கௌரவமான பாஷையில் அன்னதானமுகாமாக  பிரகடனப்படுத்துவார்கள். கோயில் வளாகத்தை சிறு சிறு கடைகள் அடைத்துக்கொண்டிருக்கும். சேவார்த்திகளின் போக்குவரத்து, கடைகள் வளரக் காரணமாகி, வணிக வளாகமாகவே காட்சி அளிக்கும் கோயில்களும் உண்டு. 'டெண்டர்’ முறையில் பூஜாரிகளை அமர்த்தும் பிரசித்திப் பெற்ற கோயில்களும் உண்டு.

ஆகம முறைப்படி செயல்பட அந்தச் சூழல் இடம் கொடுக்கவில்லை. இந்த நிலையில், குடிமக்கள் அத்தனை பேரும் பூஜையில் இணைவதற்கு எந்தத் தடங்கலும் இல்லையே. எனவே, ஆகம பூச்சாண்டியைக் காட்டி பயமுறுத்தி, ஒரு சாராருக்கு மட்டுமே இடம் அளிப்பதைத் தவிர்த்து, உண்மைக் கண்ணோட்டத்தில் எல்லோருக்கும் இடமளிப்பது சிறப்பாகும்.

? எனில், ஆகமங்கள் எல்லாம் அவசியம் இல்லை என்கிறீர்களா?

வேதத்தில் நேரடியாகச் சொல்லப்படும் பூஜை முறையைக் கையாண்ட கோயில்களும் உண்டு. வைதிக ப்ரதிஷ்டை என்ற பிரிவில் அவை அடங்கும். வேதமும் ஆகமமும் இல்லாமல், சம்பிரதாய முறையில் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் பூஜை முறை இருக்கிறது. கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்கள், முன்னோர்களை தெய்வமாக மாற்றிய தெய்வங்கள், மதுரை வீரன், கண்ணகி, கறுப்பு மாடசாமி போன்ற தெய்வங்களை ஆராதிப்பவர்கள் வேதத்தையோ ஆகமத்தையோ பின்பற்றவில்லை. அவர்கள், முன்னோர் வகுத்த சட்டதிட்டத்தை ஏற்று செயல்படுகிறார்கள். அவர்களுக்கும் வருஷத்தில் ஒரு முறை உற்சவம் இருக்கும். தேசப்பிதா காந்தி மஹானுக்கும் உருவம் அமைத்து சுதந்திர தினத்தன்று ஆராதனை இருக்கும். அங்கும் வேதமோ, ஆகமமோ பின்பற்றப்படுவதில்லை. அங்கு, பூசாரியாவதற்கு எந்தவொரு குறிப்பிட்ட தகுதியும் தேவையில்லை.

ஆக, பூஜிக்க தேவையான தகுதி மனித இனத்துக்கு இருந்தது; இருக்கிறது; இருக்கும். பெண்களும் பூஜாரியாக மாறி இருக்கிறார்கள். பூஜாரிகள் சங்கம் உண்டு. அந்த பூஜாரிகள் வேதம், ஆகமம் கற்றவர்கள் அல்ல. ஐயப்ப பக்தர்கள், கிருஷ்ண பக்தர்கள், ராம பக்தர்கள், அம்மன் பக்தர்கள் ஆகிய அத்தனை பேரும் பாகுபாடு இல்லாமல் பூஜாரியாக செயல்படுவார்கள். அதற்குத் தனித்தகுதி இருக்காது; பக்தனாக இருந்தால் போதும்.

இப்படி, நடைமுறையில் எல்லோரும் பூஜை செய்ய இடம் இருக்கும் நிலையில், யார் பூஜை செய்யத் தகுதியானவர் என்ற வாதமே தேவையற்றது. அதை எழுப்பியவர்கள் உள்நோக்கோடு செயல்படுபவர்கள் ஆவார்கள். அவர்களது சிந்தனையை ஆராய குழுமத்தை ஏற்படுத்துவது தவறு.

இயற்கை அதிசயங்கள் ஆச்சரியத்தை அளிக்கும். சில நிகழ்வுகள் பயத்தை அளிக்கும். இந்த நிலையில் மனதில் தோன்றிய பயத்தை அகற்ற மனிதன் கடவுளைச் சரணடைகிறான். அதுவே நித்யமாக பூஜை செய்யத் தூண்டியது. இப்படி, தானாக ஏற்பட்ட பூஜைக்கு தகுதி ஏற்படுத்துவது தேவையற்றது. எத்தனையோ நல்ல விஷயங்கள், சிந்தனைக்கு இருக்க, தேவையற்றை விஷயங்களில் பொழுதைப் போக்குவது அறியாமை.

மூண்றாவது கோணம்...

செயல் சிறப்பு பெறுவதில், அதைச் செய்பவனின் திறமை முக்கிய பங்கு பெறும். கல்வியறிவும், நல்லவர்களது இணைப்பும், சுய முயற்சியில் ஈட்டிய அப்யாஸமும் இல்லாத திறமையை ஏற்படுத்திவிடும். ஆனால், பிறப்பிலேயே நீறுபூத்த நெருப்பாக மறைந் திருக்கும் திறமை எல்லோரிடமும் தென்படாது.

வேதம் ஓதுவதும், பிறருக்கு அளித்து ஓத வைப்பதும், ஒழுக்கத்தோடு அறநெறியைக் காப்பாற்றும் திறமையும் எல்லோருக்கும் இருக்கும் என்று சொல்லமுடியாது. மக்களின் துயர் துடைப்பை சிறப்பாக செயல்படுத்தும் தகுதி எல்லோருக்கும் இருக்காது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருள்களைப் பகிர்ந்தளிக்கும் திறமை எல்லோருக்கும் இருக்காது. மக்களின் துயரத்துக்கு முதலுதவி அளித்து, வாழ்க்கையில் அவர்கள் வெற்றிபெறும் சுறுசுறுப்பை ஏற்படுத்தும் தகுதி எல்லோருக்கும் இருக்காது. இந்தத் தகுதியெல்லாம் பிறக்கும் போதே அவரவரிடம் சேர்ந்திருக்கும்.

? தகுதி - தகுதி இல்லாமை என்று நீங்கள் குறிப்பிடுவது வீணான ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திவிடாதா?

கண்ணன் நான்கு வர்ணங்களை அறிமுகம் செய்தார். அந்த வர்ணங்களுக்கு தகுதி அவர்களது இயல்பு, அவர்களது செயல்பாடு என்று விளக்கினார். கண்ணன் 'ஜாதி’ என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. பிற்பாடு வந்த புதிய கண்ணன்கள், தங்கள் சிற்றறிவுக்கு எட்டிய வழியில் வர்ணத்தை ஜாதியாக்கி புது வர்ணம் பூசிவிட்டார்கள். அதோடு நிற்காமல் 'பழைய கண்ணன் ஜாதியைக் குறிப்பிட்டார்’ என்று

அந்த கண்ணனையும் தன்னோடு இணைத்துக் கொண்டார்கள். 'ஜாதி பிறக்கும்போது இல்லை; கண்ணனின் படைப்பு ஜாதி’ என்று அந்தப் பரம்பொருளை அல்பனாக மாற்றிய திறமை பெற்றவர்கள்தான் நிரம்பி வழிந்தார்கள்.

பறவைகளின் பறக்கும் தகுதி பிறக்கும் போதே ஒட்டிக் கொண்டிருக்கும். பிறந்த பிறகு பயிற்றுவிப்பது இல்லை. பறக்க இயலாத பறவைகளுக்கு பயிற்றுவிக்கவும் இயலாது. மீன்களுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கத் தேவை இல்லை. பாகற்காயின் கசப்பும், கரும்பின் இனிப்பும் அவற்றின் விதைகளில் ஒளிந்திருக் கும் தகுதி. மல்லிகையின் நறுமணத்தை செண்பகத்தில் கொண்டுவர இயலாது. பலாச் சுளையின் இனிப்பு, மாம்பழத்தின் இனிப்பு, திராட்சையின் இனிப்பு, பாலின் இனிப்பு, தேனின் இனிப்பு ஆகிய அத்தனையும் மாறுபட்ட இனிப்புகள். இதெல்லாம் முளைக்கும் முன்பே விதையில் பற்றிக் கொண்டிருக்கும் தனித்தகுதி.  

இயற்கையில் விளையும் அத்தனை பொருள்களிலும் ஒரு தனித் தகுதி உண்டு. மாறுபட்ட இயல்புகள்தான் பொருள்களுக்கு தனிச்சிறப்பு. விசித்திரமான படைப்புகளை அறிமுகம் செய்வதுதான் இயற்கையின் அடை யாளம். பிரம்மனின் படைப்புகள் அத்தனையும் ஏதோ ஒரு தனித்தகுதி பெற்றவையே. அதில் தேவனும், அரக்கனும், மனிதனும், இயல்பில் மாறுபட்டவர்களும் இடம் பெற்றிருப்பார்கள். 'தென்படும் அத்தனை பொருள்களிலும் தென்படும் தனித்தன்மை வாய்ந்த சிறந்த பகுதி’ எனது பங்கு என்பார் கண்ணன் (யத்யத்விபூதிமத் ஸ்த்வம் மதூர்ஜிதமேவவா...). இப்படி, பிறப்பில் சேமித்திருக்கும் தகுதியை வைத்து

வர்ணத்தை அறிமுகம் செய்தார் கண்ணன். அதில் வேதம் ஓதும் இயல்பைப் பெற்றவர்கள், பிறருக்காக தெய்வ வழிபாட்டை ஏற்கும் தகுதி பெற்றவர்கள். அந்தத் தகுதி அற்றவர்களிடம் அதை ஒப்படைக்கக் கூடாது. அந்த வழிபாடு சூன்யமாகிவிடும்.

? கடவுள் வழிபாடு எல்லோருக்கும் பொது. அதில் 'தகுதி’ எனும் பெரும் தடை தேவையா?

அறிவுரை வழங்குபவர்கள் (அட்வைஸரி போர்டு), செயல்படுத்துபவர்கள் (எக்ஸிக் யூடிவ்), வணிகத்தை விரிவுபடுத்துவர்கள் (மார்க்கெட்டிங்), பொருளை உற்பத்தி செய்பவர் கள் (பணியாளர்கள்), உழைப்பவர்கள்... இப்படி ஒரு நிறுவனம் இயங்குவதற்கு, தகுதியின் அடிப்படையில் (ஜாதி அல்ல) பிரித்துப் பார்க்கிறோம். இந்த நான்கு வகையினரிலும் ஊதியத்திலும், வசதியிலும், பெருமையிலும், வேலையிலும் மாறுபாடு உண்டு. உழைப்பாளியை அறிவுரையாளராகவோ, அறிவுரையாளரை உழைப்பாளியாகவோ மாற்ற மாட்டோம். இங்கெல்லாம் 'ஜாதி’ என்று சொல்லாமல், பாகுபாட்டை பகிரங்கமாக நடைமுறைப்படுத்தும் சிந்தனை, கோயில்கள் விஷயத்தில் மாறுபடுவது துரதிர்ஷ்டமே!

கோயில் ஓர் நிறுவனம் அல்ல; அரசுக்கு உட்பட்டதல்ல; தனி மனிதனின் உலக சேவை யின் பங்கு. அது அவனது பிறப்புரிமை. நாம் இயற்றிய நீதிமன்றங்களோ, அரசு அதிகாரிகளோ ஆகமச் சட்டத்தில் நுழைய முடியாது. சமூக முன்னேற்றத்தில் தன்னிச்சையாகச் செயல்பட்ட சமுதாயத்தை, தடியெடுத்துக் கொண்டு ஆள முடியாது. அரசு அறிமுகமாவதற்கு முன்பே ஆகமமும் தெய்வ வழிபாடும் தோன்றிவிட்டன. பிற்காலத்தில் தோன்றிய அரசாங்கமும் நீதிமன்றங்களும் அதைச் சீர்திருத்தலாம்; ஆகம விதிகளை மாற்றி அமைக்கும் உரிமை இல்லை.

ரிஷி பரம்பரை பூஜையை ஏற்கும். பக்தர் களின் காணிக்கையில் வாழ்க்கையை நடத் தும். யாரை நியமிக்க வேண்டும் என்ற உரிமை, அதிகாரம் ரிஷி பரம்பரைக்குத்தான் உண்டு.

அது பொது சொத்து அல்ல. ரிஷி பரம்பரை யின் குறிக்கோளான உலக நன்மையை நிலை நிறுத்தும் சடங்கை (பூஜை) நடைமுறைப்படுத்தும் புனிதமான இடம்தான் கோயில்கள். அன்றைய நாளில் அவர்களது சேவை மனப் பான்மையைக் கண்ணுற்று, வலிய வந்து அவர்களின் பணி சிறக்க கோயில் கட்டிக்கொடுத்தார்கள் அரச பரம்பரையினர். அதுவும் அரசு சொத்தல்ல. சேவையைத் தொடர அரசு அளித்த அன்பளிப்பு. தனக்கு மாற்றாக வேறோர் அர்ச்சகரை அவர்களே தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்கும் மாதச் சம்பளம், ஓய்வு, ஓய்வு ஊதியம் ஒன்றும் இருக்காது.

கேள்வி - பதில்

தடங்கலின்றி நடந்து வந்த உலக சேவையை, மற்றவர்கள் தலையீட்டில் ஒரு நிறுவனமாக்கி, அதன் குறிக்கோளை சிதைக்கும் வண்ணம், எல்லோருக்கும் சகட்டுமேனிக்கு வழி திறந்துவிடும் புதுத்தலைமுறையின் முயற்சி பெருமைக்கு உரியது அல்ல. ஆன்மிக வழியில், ஆர்வத்தோடு உலக அமைதிக்கு உகந்த வகையில், ஸனாதனத்தின் பரிந்துரையோடு நிகழும் தனிமனித சேவையை கொச்சைப் படுத்துவது நமது துரதிருஷ்டம்.

? 'எல்லோருக்கும் உரிமை’ என்பது கொச்சைப் படுத்துதல் ஆகுமா?

கணவன் மனைவியோடு ஒத்துப்போக முடியாமல் விவாஹரத்தை ஏற்கிறான். இருவருமே மனித இனம்தான். எனினும் இயல்பில் வேறு வேறாக தென்படுகிறார்கள்.  இப்படி மாறுபட்ட இயல்பை அனுபவத்தில் உணர்ந்தும், எல்லோரையும் தெய்வ வழிபாட்டில் இணையவைத்து (கோயில் வழிபாட்டில் உரிமை அளித்து) புரட்சி செய்வதாக நினைக்கும் சீர்திருத்தவாதியை என்னவென்று சொல்வது.

சம்பந்தப்படாத விஷயத்தில் ஈடுபட்டு அப்பம் பங்கு வைத்த கதை போல், பாரதக் கலாசாரத்தின் அடித்தளமான கோயில் பூஜைகளைச் சுரத்தில்லாமல் செய்வது அறம் ஆகாது. அந்தந்தச் சமுதாயத்தின் தனி அறங் களைச் செயல்படுத்த சுதந்திரம் அளித்து விட்டு, வேத அறத்தைப் பாதுகாக்கும் சமுதாய சேவையைக் கட்டுப்படுத்தி சுதந்திரத்தைப் பறிப்பது தகாது. ஒரு கண்ணுக்கு வெண்ணெய்,   மற்றொன்றுக்கு சுண்ணாம்பு... இந்த சிந்தனை ஏற்கத்தக்கதல்ல. கடவுள் ஸனாதனத்தில் அறிவுரையில் செயல்படுகிறார் (தஸ்மாத் சாஸ்திரம் ப்ரமாணம் தெகர்யாகார்ய வ்யவ ஸ்திதைள). அதற்கு எதிராக நமது சட்டத்தைத் திணிப்பது அறத்துக்குப் புறம்பானது. கிடைத்த பொக்கிஷத்தை (நமது கலாசாரம்) காப்பாற்ற முடியாவிட்டாலும் அழிக்க முற்படக்கூடாது.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

வெளியில் தென்படும் உறுப்புகள் மட்டுமல்ல, உடலுக்குள் இருக்கும் உருப்படி களை இழந்தவர்களும் ஊனமுற்றவர்களே. கிட்னி, கருவறை, மூளையில் தென்பட வேண்டிய சிந்தனை வளத்தைப் பெருக்கும் செல்கள்... இவற்றை இழந்தவர்களும் உண்டு. பிறப்பிலேயே போதிய வளர்ச்சி பெறாமல் இருப்பவர்களும் உண்டு. உணவின் தரம், செயல்பாட்டின் பாகுபாடு ஆகியன உற்பத்தி யாகும் சிசுவைப் பாதிக்கும். கண் தெரியாத திருதராஷ்டிரருக்கு, பார்வை இழந்த நிலையில், உரிமை இருந்தும் அரசுரிமை மறுக்கப்பட்டது.

மூளை செல்லில் சேதத்தை உள்வாங்கி சேமித்து தேவைப்படும்போது, உலக நன்மைக்

காக பூஜையில் பயன்படுத்தும் திறனானது, மனிதனாகப் பிறந்தவரில் எல்லோரிடத்திலும் தென்படாது. வேதம் படித்த பரம்பரையில் அதை நம்பலாம். ஆகையால் அந்த சேவையை அவர்களிடம் ஒப்படைத்து உலக அமைதிக்கு வழிவிடுவதே சிறப்பு. கச்சாப் பொருளை

அப்படியே பயன்படுத்த முடியாது. அதிலிருக்கும் தேவையற்றதைக் களைந்தபிறகு, பயன் படுத்துவோம். பிறந்த மனிதர்கள் அத்தனை பேரையும் கோயில் பூஜாரியாக நியமிக்கக் கூடாது. அதற்கு எதிரான அம்சத்தைக் களைந்தபிறகுதான் செயல்படுத்தவேண்டும்.

பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.