Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 18

சத்தியப்பிரியன், ஓவியம்: ஸ்யாம்

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 18

சத்தியப்பிரியன், ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

31. குடை  முதலானதானேனோ    அனந்தாழ்வான்  போலே! 

எம்பெருமானுக்கு பரமபதத்தில் தினமும் சேவை புரிகின்ற வர்களை வைணவ சம்பிரதாயத்தில் நித்யசூரிகள் என்பர். அநந்த, கருட, விஷ்வக்ஸேநாதிகள்  என்பதே அந்த  வரிசை. இதில் முதலாவதாக இடம் பெரும் நித்யசூரி அனந்தன் எனப்படும் ஆதிசேஷனாகும். ஆதிசேஷனைப் பற்றிய குறிப்புகள் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளன. காச்யபர் என்ற மகரிஷிக்கு கத்ரு, வினதை என்று இரண்டு மனைவிகள். பெண்கள். இருவரும் காச்யபரிடம் புத்திர பாக்கியம் வேண்டும் என்று கேட்கின்றனர். கத்ரு தனக்கு ஆயிரம் பிள்ளைகள் வேண்டும் என்று வரம் கேட்கிறாள். வினதை தனக்கு அறிவுடைய இரண்டு புத்திரர்களைக் கேட்கிறாள். வினதையின் இரண்டு புத்திரர்களாக அருணனும் கருடனும் பிறக்கின்றனர். சூரியபகவான் அருணனை தனது தேரோட்டியாக ஆக்கிக்கொள்கிறார். கத்ருவின் ஆயிரம் புதல்வர்களும் ஆயிரம் அரவங்களாக பிறக்கின்றனர். இவர்களுக்கு மூத்தவரான ஆதிசேஷன் சதாசர்வ காலமும் தனது சகோதரர்கள் பொறாமை பிடித்தவர்களாகவும், வினதையின் புதல்வன் கருடனுடன் சண்டையிடுபவர்களாகவும் இருப்பது கண்டு பொறுக்காமல் காடு மலைகளுக்குச் சென்று கடும்தவம் இயற்றுகிறார்.

பிரம்மா அவர் முன் தோன்றி 'என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்க அதற்கு ஆதிசேஷன் 'என் மனம் எப்போதும் தர்ம சிந்தையில் ஆழ்ந்திருக்க வேண்டும்'' என்றார். உடனே பிரம்மா 'எப்போதும் அதன் மையப்பகுதியிலிருந்து அசைந்தவண்ணம் இருக்கும் பூமிபந்தினை அதன் அச்சிலிருந்து அசையாமல் உனது ஆயிரம் தலைகளால் தாங்கி பிடித்துக் கொண்டிரு. இதனை விட உன் சிந்தை தரும காரியத்தில் நிலைத்திருக்க வேறு மார்க்கமில்லை'' என்று கூறவே, ஆதிசேஷன் இந்த பூலோகத்தை தனது தலையில் தாங்கிப் பிடித்து வருவதாக  மகாபாரதம் கூறுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அனந்தஸ்சாச்மி நாகாநாம்'' என்று கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் 29வது சுலோகத்தில் பகவான் குறிப்பிடுகிறார். நாகங்களில் நான் ஆதிசேஷனாக இருக்கிறேன் என்று இதற்குப் பொருள். மகாபாரதத்தில் பீஷ்ம பர்வத்தில் பீஷ்மர் பகவானின் குணங்களைக் கூறும்போது, 'இந்த பரம புருஷன் உலகமாக விரிந்த அனந்தன் என்று தேவவடிவம் பெற்ற ஆதிசேஷன் என்ற நாகத்தைப் படைத்தார்'' என்கிறார். அப்படிப்பட்ட ஆதிசேஷனை பகவான் தனது படுக்கையாக மாற்றிக் கொள்கிறார்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 18

இதனை முதலாழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வார் தனது பாசுரத்தில் மிக அழகாக எம்பெருமானுக்கும் ஆதிசேடனுக்கும் உள்ள உறவை விளக்குகிறார்.

'சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம்

நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்

புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம்  புல்கும்

அணையாம் திருமாற்கு அரவு'

அந்த ஆதிசேஷன் பிராட்டியுடன் எப்போதும் கூடியிருக்கும் எம்பெருமானுக்கு அவர் செல்லும்போது குடையாகவும், அமரும்போது சிங்காதனமாகவும், நிற்கும்போது காலணியாகவும், அவர் பள்ளிகொண்டுள்ள பாற்கடலில் பாயாகவும், எப்போதும் ஒளிமிகுந்த விளக்காகவும், பரிவட்டமாகவும், அணைத்துக் கொள்ளும்போது தலையணையாகவும் விளங்குவதாகப் பாடுகிறார்.

ராமாநுஜரின் சீடர்களில் ஒருவர் பட்டர் என்பவர். அவருக்கு சர்வதந்திரஸ்வதந்திரர் என்ற சிறப்புப் பெயர் ஒன்று உண்டு. இதனைப் பொறுக்காத ஒருவன் அவரை சோதிக்க எண்ணி ஒரு குடத்தினுள் பாம்பு ஒன்றைப் போட்டு அதன் வாயை இறுக்கி துணியால் மூடி அவரிடம்,  'பட்டரே, உள்ளே என்ன இருக்கிறது?'' என்று கேட்கிறான். பட்டர் கைகளில் வாங்கிப் பார்க்கிறார். பாம்பின் அசைவின் மூலம் உள்ளே இருப்பதை உணர்ந்து 'இது என் எம்பெருமானின் குடை'' என்கிறார். வந்தவன் சிரித்து குடத்தின் வாயில் இருந்த துணியை விலக்கி, 'பட்டரே உள்ளே பாம்பு இருக்கு. ஆனால் நீங்க குடை என்று சொன்னது தவறு'' என்கிறான். அதற்கு பட்டர்,  'இந்தப் பாம்புதான் எம்பெருமானுக்கு குடையாக இருப்பதாக பொய்கையாழ்வார் பாடி வைத்துள்ளார்'' என்று பதில் கூறினாராம்.

அந்தக் குடை முதலியவைகள் போல அனந்தாழ்வான் விளங்கினாரே, அப்படி எனக்கு ஒரு வாய்ப்பு கிட்டவில்லையே நான் இந்தத் திருக்கோளூரில் இருந்து என்ன பயன்? அதனால்தான் கிளம்புகிறேன் என்று கூறி அந்தப் பெண் கிளம்பினாளாம்.

32. கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே ?

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் மொத்தம் இரண்டு திருவடிகள். பெரிய திருவடி என்று அழைக்கப்படுபவர் கருடன் எனப்படும் கருடாழ்வார். இரண்டாவது திருவடி ராமகாதையில் வரும் ஹனுமன். கருடன் நித்தியசூரிகளில் ஒருவராக வைத்து வணங்கப்படுபவர். சென்ற வாக்கியத்திலேயே அநந்த, கருட, விஷ்வக்ஸேநாதிகள்   என்று பார்த்தோம். கருடனுடைய புராணம் மகாபாரதத்தில் மிக விரிவாக கூறப்பட்டுள்ளது. தனது தாயான வினதையின் அடிமைத்தளையை நீக்கும் பொருட்டு கருடன் அமிர்த கலசத்தை தேவர்களிடம் இருந்து கவர்ந்து வரச் சென்று தேவர்களுடன் போரிட்டு இறுதியில் மகாவிஷ்ணுவின் ஆணைப்படி பணிந்து அவருக்கு வாகனமாகிறார்.

ஒருமுறை விஷ்ணுசித்தர் என்றழைக்கப்பட்ட பெரியாழ்வார் கூடல்மாநகர் மன்னன் வல்லபதேவனின் சந்தேகத்தை தீர்த்து, அவன் கொடுத்த பொற்கிழியை பெற்றுக் கொண்டு மதுரை வீதிகளில் யானை மீதேறி பவனி வரும்போது, எம்பெருமான் தேவி சமேதனாக கருட வாகனத்தில் காட்சியளிக்க, அந்த அழகை பிறர் கண்டு கண்ணேறு ஆகிவிடக் கூடாது என்று பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடியதாக சரித்திரம்.

பெரியாழ்வார் இப்படி பாடினால் அவர் மகள் ஆண்டாள் கருடனைப் பாடாமல் விடுவாளா என்ன?

'மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை

ஏலாப் பொய்களுரைப்பானை இங்கே போதக்கண்டீரே?

மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன்    சிறகென்னும்

மேலாப்பின் கீழ்வருவானை விருந்தாவனத்தே கண்டோமே''

என்று ஆண்டாள் கருடனை வினதையின் சிறுவன் என்றே குறிப்பிடுகின்றாள்.

திருக்குறுங்குடி என்னும் திவ்ய தேசத்தில் கோயில் சுவரில் கருட புராணம் அழகிய சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

மற்ற எல்லா திவ்ய தேசங்களிலும் கருடருக்கு எம்பெருமான் முன்பாக சந்நிதி இருக்கும். நவதிருப்பதிகளில் ஒன்றான தென்திருப்பேரை என்ற திவ்ய தேசத்தில் தனது கோயில் வாசலில் விளையாடும் சிறுவர்களின் ஆனந்த களியைக் காண்பதற்காக அங்கு வீற்றிருக்கும் பெருமானான மகரநெடுங்குழைக்காதர் எதிரில் நின்ற கருடனை சற்று விலகியிருக்கச் சொன்னதால் இன்றும் இறைவன் சந்நிதிக்கு நேர்எதிரில் இல்லாமல் கருடனின் மூர்த்தி சற்று விலகியபடியேதான் உள்ளது.

ஆழ்வார்திருநகரியில் கருடனுக்கு என்று தனி உற்சவமே கொண்டாடப்படுகிறது. இங்கு கோயில் வெளிச் சுவரில் அமர்ந்திருக்கும் கருடன் மிக விசேஷமானவர். இதன்பின்னால் ஒரு பெரிய கதையே உள்ளது. இந்த கருடனுக்கு அருள்பட்சிராஜர் என்ற பெயரும் உண்டு. ஒருமுறை இசுலாமியர்களின் படையெடுப்பு காரணமாக திருவுருவச் சிலைகளுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட நம்மாழ்வாரின் காய்ச்சின திருமேனியை எடுத்துக் கொண்டு கேரள தேசமான கோழிக்கோட்டில் மறைத்து வைக்கின்றனர். மீண்டும் அமைதி திரும்பியதும், வைஷ்ணவர்கள் ஒளித்து வைத்த சிலையைத் தேடிக்கொண்டு கோழிக்கோடு செல்கின்றனர். மறைத்த இடம் தெரியாமல் தடுமாற, அப்போது அங்கிருந்த குளத்தின் மேல் கருடன் பறந்து அடையாளம் சொல்கிறது. பிறகு அந்தக் குளத்தில் மூழ்கி மறைத்து வைக்கப்பட்ட நம்மாழ்வாரின் திருமேனியை மீண்டும் சந்நிதியில் எழுந்தருளச் செய்கின்றனர். இதன் காரணமாக ஆடிமாதம் கருடாழ்வாரின் திருஅவதார  நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்திற்கு முன்பு பத்துநாட்கள் திருவிழா எடுத்துக் கொண்டாடுகின்றனர். ஆடி சுவாதியன்று ஆழ்வார்திருநகரியில் உள்ள அனைத்து யாதவர்களும் தங்கள் தொழுவங்களில் உள்ள மாடுகள் மூலம் கறக்கப்படும் பால் முழுவதையும் கருடாழ்வாரின் திருமஞ்சனத்துக்கு அர்ப்பணிக்கின்றனர். அன்று மறந்து போய் தங்கள் மாடுகளின் பாலை சொந்த உபயோகத்துக்கு எடுத்துக் கொண்டார்கள் என்றால் அந்த வருடம் முழுவதும் அவர்கள் பால் மாடுகளுக்கு பால்வளம் குன்றி விடும் என்பது ஐதீகம்.

அப்படிப்பட்ட கருடர் தனது தோள்களில் எம்பெருமானை சுமந்து கொண்டு திரிந்ததைப் போல இந்தத் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளுக்கு நான் எந்தவித கைங்கரியமும் செய்யவில்லையே, எனவேதான் அந்த திவ்ய தேசத்தை விட்டுச் செல்வதாகக் கூறி அந்தப் பெண்பிள்ளை கிளம்பினாளாம்.

  தொடரும்