Published:Updated:

ஆபரணங்களை காத்தருளும் அரியமாணிக்கம்!

பொருள் காக்கும் இறைவி! மு.ஆதவன்

ஆபரணங்களை காத்தருளும் அரியமாணிக்கம்!

பொருள் காக்கும் இறைவி! மு.ஆதவன்

Published:Updated:

ட்டமாய் ஓடும் மனிதனின் வாழ்க்கைத் தேடல் எதுவாக இருக்கும்? செல்வம்தானே! செல்வம் என்றால் பணம், பொருள், நகை, ஆடை, ஆபரணம் என்று நீண்டுகொண்டே போகும். 

இப்படி, ஒருவன் காலமெல்லாம் கஷ்டப்பட்டுச் சேர்த்த அந்தச் செல்வம் ஒருநாள் திடீரென காணாமல் போனால் அல்லது அதை எவரேனும் பறித்துக் கொண்டால், பரிதவித்துப் போவோம். ஆக, சம்பாதிக்கும் பொருள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது முக்கியம். அதற்கு ஓர் அரணும் தேவை.

அப்படியோர் அரணாக, 'தாயே நீயே துணை’ என்று தன்னைச் சரண் புகும் பக்தர்களின் செல்வங்களுக்கும் உடைமைகளுக்கும் மட்டு மின்றி, அவர்களின் உயிருக்கும் வாழ்க்கைக்கும் காவல் சக்தியாகத் திகழ்கிறாள் அரியமாணிக்கம் எனும் அம்பிகை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் இருந்து எழுமலை எனும் ஊருக்குச் செல்லும் வழியில் சுமார் 14 கி.மீ. தொலைவில் இருக்கிறது தாடையம்பட்டி எனும் ஊர். இங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தூரம் பயணித்தால், மேலத் திருமாணிக்கம் என்ற ஊரை அடையலாம். இந்த ஊரில்தான் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறாள், அரியமாணிக்கம் எனும்  அந்த காவல் நாயகி! ஊரின் பெயரும், இவளது பெயரும் மாணிக்கம் என்ற பெயரில் அழைக்கப்படுவதற்கும் காரணமாக ஒரு திருக் கதைச் சொல்லப்படுகிறது.

ஆபரணங்களை காத்தருளும் அரியமாணிக்கம்!

இந்தக் கோயிலுக்கு அருகிலேயே பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் ஒன்றும் அமைந்திருக்கிறது. மன்னர்கள் காலத்துக்குப் பிறகு கேட்பாரற்று, புதர்மண்டிக் கிடந்தது இந்த ஆலயம். இந்தக் கோயிலில் ஒரு புற்றில் வசித்த நாகம் ஒன்று தினமும் மாணிக்கக் கல்லை உமிழ்ந்து, அதை சிவனாருக்குச் சமர்ப்பித்து வழிபட்டு வந்ததாம். இந்த நிலையில் அவ்வழியே பயணித்த அந்தணர் ஒருவர், கோயிலின் நிலையைக் கண்டு கலங்கினார். கோயிலைச் சுத்தப்படுத்தியவர், அங்கேயே தங்கியிருந்து வழிபாடுகளைத் தொடர்ந்தார். ஆள் நடமாட்டம் ஏற்பட்டதும் நாகம் வெளியே வராமல் பதுங்கிக்கொண்டது.

நாள் தவறாமல் சிவனை பூஜித்து வந்த அந்தணருக்கு, வறுமையின் காரணமாக வழிபாடுகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ஒருநாள் அவர் முன் தோன்றிய நாகம், மாணிக்கக் கல்லை உமிழ்ந்துவிட்டு, அருகிலிருந்த புற்றுக்குள் சென்று மறைந்து விட்டது. சிவனின் திருவிளையாடல்களில் அதுவும் ஒன்று என்றெண்ணிய அந்த பக்தர், மாணிக்கக் கல்லை விற்றுக் கிடைத்த பணத்தில் பூஜைகளைத் தொடர்ந்தார்.

ஒருமுறை மட்டுமல்ல, அந்தணருக்கு பணமுடை ஏற்பட்ட ஒவ்வொரு தருணத்திலும் மாணிக்கக் கல் தந்து சென்றது நாகம். அப்படி, நாகம் தந்த மாணிக்கக் கல்லை வேறு எவரும் அபகரித்துவிடாதபடி காத்தருளியவள் என்பதால், இந்த அம்பிகைக்கு அரியமாணிக்கம் என்றும், அவள் கோயில் கொண்டிருக்கும் ஊருக்கு திருமாணிக்கம் என்றும் பெயர் ஏற்பட்டது. இந்த அம்பிகைக்கு அம்மச்சியம்மன் என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு.

ஆபரணங்களை காத்தருளும் அரியமாணிக்கம்!

நாகம் வசித்த புற்றினை இன்றைக்கும் இவ்வூரிலுள்ள அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் வடமேற்கு மூலையில் காணலாம். சிவனருள் பெற்ற அந்த அந்தணர், 'ஆதிமூர்த்தி’ என்ற பெயரில் அந்தப் புற்றின் மீதே ஐக்கியம் ஆகியிருக்கிறார்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் வாலை ஐயனார் கோயில் பகுதியில் உற்பத்தியாகி பாய்ந்து வரும் கவுண்டமா நதிக்கரையில், இயற்கை எழிலுற அமைத்திருக்கிறார்கள், ஆலயத்தை. ஆனால், தற்போது நதியின் தடம், சிறு வாய்க்காலாகத் திகழ்கிறது.

ஆபரணங்களை காத்தருளும் அரியமாணிக்கம்!

அம்பிகையின் சந்நிதிக்கு வெளியே, மூன்று புறமும் வேப்ப மரங்கள் அமைந்துள்ளன. அம்பிகையின் 3 சக்தி வடிவங்களே இந்த மரங்களின் வடிவில் இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். கர்ப்பக்கிரகத்தில், பார்க்கும்போதே கண்களை நிறைக்கிறது அம்பிகையின் அற்புதமான வடிவம். தலையில் அக்னி கிரீடம் தரித்திருக்கிறாள். எட்டு கைகளில் உடுக்கை, டமருகம், சூலம், பாசம், அங்குசம் உள்ளிட்ட ஆயுதங்களைத் தாங்கியபடி, வலது காலை மட்டும் குத்திட்டு அமர்ந்த நிலையில், இடக்காலை அசுரனின் தலையின் மீது வைத்தபடி காட்சி தரும் அம்மனின் திருவடிவத்தைத் தரிசிக்கும்போதே மெய்சிலிர்க் கிறது. பிராகாரத்தில் பைரவர், கருப்பசாமி உள்ளிட்ட காவல் தெய்வங்கள் உள்ளனர்.

இந்த அம்பிகையிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் நிச்சயம் கிடைக்கும் என்பது, இப்பகுதி மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. வீட்டில் பொன், பொருள் வைத்திருப்போர், விலை மதிப்பற்ற தங்கம், வைரம் போன்றவற்றை வியாபாரம் செய்யும் வணிகர்கள், தங்களின் செல்வங்கள் திருடு போகாமலும், வேறு வகையில் பறிபோகாமலும் இருக்க, இந்தக் கோயிலுக்கு வந்து பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.

இவ்வாறு வேண்டுதல் செய்வோர், ஆஜானுபாகுவாகக் காட்சி தரும் அம்பிகைக்கு மஞ்சள் நிறப் புடவை அணிவித்தும், 'நிலை மாலை’ எனும் பெரிய மாலையை அணிவித்தும் வழிபடுகிறார்கள். மேலும் பொங்கல் வைத்தும், அக்னிச் சட்டி ஏந்தி வலம் வந்தும், பாற்குடம் எடுத்து வந்தும் நேர்த்திக் கடன் செலுத்துவதும் உண்டு.

ஆபரணங்களை காத்தருளும் அரியமாணிக்கம்!

புரட்டாசி மாதத்தின் இரண் டாவது செவ்வாய்க்கிழமையை ஒட்டி 2 நாட்கள், இந்தக் கோயிலில் பொங்கல் விழா நடக்கிறது. அப்போது அம்பிகை ஊருக்குள் புறப்பாடு ஆவாள். தவிர, தைப் பொங்கல் தினத்தன்று அம்பிகை சந்நிதியில் பொங்கல் வைத்து, விசேஷ பூஜைகள் செய்வதுண்டு.

வாழ்வில் ஒருமுறையேனும் இவ்வூருக்கு வந்து அரியமாணிக்கம் அம்மனை வழிபட்டுச் செல்ல, பொன்பொருளை மட்டுமல்ல, துயரங்களில் சிக்கித் தவிக்க நேரிடாத வகையில், நம் வாழ்க்கையையும் காபந்து செய்தருள்வாள் இந்த அம்பிகை!

படங்கள்: சி.முருகேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism