சித்திர ராமாயணம்பி.ஸ்ரீ
காலையில் திருமால்... மாலையில் மஹாதேவன்!
சிவபெருமான், திருமால் இரண்டு பேரையும் உபாஸிப்பதற்கு நீண்ட காலமாக ஒரு விதி இருக்கிறது. லோக விவகாரங்களை நாம் அழகாக, தர்மமாக நடத்துவதற்கு ஜகத் பரிபாலகரான மஹா விஷ்ணுவையும், இந்த வியாபாரங்களிலிருந்து மனஸைத் திருப்பி ஆதார வஸ்துவில் ஒடுங்குவதற்கு சம்ஹார மூர்த்தியான பரமேச்வரனையும் தியானிக்க சொல்லியிருக்கிறார்கள்.
இதற்கேற்ப வெளியிலே பார்த்தாலும் மஹாவிஷ்ணுதானே திருபுவனச் சக்கரவர்த்தியாக இருக்கிறார்! பரமேகவரனோ ஆண்டியாக, பிச்சாண்டியாக அல்லவா இருக்கிறார்! இருவரிட மும் இருக்கிற சொத்துக்களைக் கொஞ்சம் கணக்கெடுத்துப் பார்ப்போம்.
சிவனிடம் சாம்பல், எருக்கம்பூ, தும்பைப்பூ, ஊமத்தை, மண்டைஓடு, யானைத்தோல், பாம்பு இவைதான் இருக்கின்றன. இதற்கெல்லாம் யாரும் விலை கொடுக்க மாட்டார்கள்!
மஹா விஷ்ணுவிடமோ கிரீட குண்டலங்கள், முக்தா ஹாரங்கள். பீதாம்பரம், கெளஸ்துப மணி எல்லாம் இருக்கின்றன. இவற்றுக்கும் எவரும் விலை நிர்ணயிக்க முடியாது. சிவனிடம் உள்ளதற்கு விலை மதிப்பு இல்லை. விஷ்ணுவிடம் உள்ளதோ விலைமதிக்க முடியாதது. எல்லாவற்றுக்கும் மேலாக மஹாவிஷ்ணுவிடம் ஐசுவரிய தேவதையான மஹாலஷ்மியே இருக்கிறாள். பரமசிவனி டம் இருக்கும் அம்சங்களுக்கோ 'அபர்ணா' என்று பெயர். ஓர் இலை(பரணம்) கூட இல்லாதவன் என்று அர்த்தம். இலையைக்கூட உண்ணாமல் பரம தியாகியாகத் தபஸ் செய்தவள் அபர்ணா.

இதிலிருந்து லோகமெல்லாம் தர்மத்தோடு சந்தோஷமாக இருப்பதற்கு மஹாவிஷ்ணுவையும், வைராக்கியம் வருவதற்குப் பரமேசுவரனையும் ஆராதிப்பதில், பொருத்தம் இருப்பது தெரியும். மகாவிஷ்ணுவால் ஞானம் தர முடியாது என்றோ, பரமேசுவரனால் லோக வியாபாரம் நன்றாக நடக்க அனுக்கிரகிக்க இயலாது என்றோ அர்த்தமில்லை. இரண்டு மூர்த்திகளை வழிபடுகிறபோது, இப்படி இரண்டு விதங்களில் ஆராதிப்பது ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொருவரிடமும் சித்த ஒருமைப்பாடு கொள்வதற்கு உதவும்
இந்த அடிப்படையில்தான் விடியற் காலையில் ஒவ்வொருவரும் எழுந்தவுடன் 'ஹரிநாராயண ஹரிநாராயண' என்று கொஞ்ச காலமேனும் ஸ்வரணம் செய்ய வேண்டும் என்றும், சாயங்காலத்தில் 'சிவ சிவ' என்று சிறிது பொழுதேனும் ஸ்மரிக்க வேண்டும் என்றும் பெரியவர்கள் விதித்திருக்கிறார்கள். வெகு சுலபமான சாதனம், எல்லோரும் இதை அவசியம் செய்ய வேண்டும்.
வீட்டில் பூஜை அவசியம்!
ஒவ்வொரு குடும்பத்திலும் ஈஸ்வர பூஜைகளை எடுத்துக்கொண்டு செய்யலாம். செளகரியமில்லாவிடில் சுருக்கமாகச் செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும். ஆபீஸூக்குப் போகிறவர்களும் இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை என்று ஒன்றைச் செய்ய வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும்.
ஈஸ்வரன்,அம்பாள்,விஷ்ணு,விநாயகர்,சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதன பூஜை என்று பெயர். அங்கங்களோடு விக்கிரங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துகளில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது ஒரு சம்பிரதாயம்.
இவற்றில் ஈஸ்வரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஓடிய கல். விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது. சூரியனுக்குரிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவான சோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற சோணா(ஸோன் என்பார்கள்) நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஓரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போலாகும்.

இந்த ஐந்தில், எல்லாமாகச் சேர்ந்தாலும் கொஞ்சம் இடத்தைத் தான் அடைத்துக் கொள்ளும். பெரிய பூஜா மண்டபம் கூடத் தேவையில்லை. ஒரு சின்னச் சம்புடத்தில் போட்டு வைத்து விடலாம். ஆவாஹனம் பண்ணி, நாலு உத்தரணி தீர்த்தத்தில் அபிஷேகம் பண்ணி, சந்தனம், குங்குமம் அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.
வெளியூருக்குப் போகும்போதுகூடப் பத்து நிமிஷம் இப்படிப் பூஜை செய்வதில் சிரமமில்லை. வெளியூரில் அர்ச்சனைக்குப் பூ கிடைக்குமா என்று கவலைப்பட வேண்டாம். வில்வத்தையும் துளசியையும் உலர்த்தி வைத்துக் கையில் எடுத்துப்போனால் ஈஸ்வரனையும் விஷ்ணுவையும் அதனாலே அர்ச்சிக்கலாம். மற்றவர்களுக்கு அக்ஷதையால் அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியத்துக்குச் சுத்தமான அன்னம் வெளியூர்களில் கிடைக்குமா என அலட்டிக் கொள்ள வேண்டாம். காய்ந்த திராக்ஷைப் பழத்தைக் கையோடு வைத்திருந்து நிவேதித்துவிடலாம்.
இந்த ஐந்து மூர்த்திகளுக்குச் செய்வது 'பஞ்சாயதன பூஜை’ எனப்படும். பிராசீனமாக நம் தேசத்திலிருந்து வந்த இந்தப் பத்ததியைச் சங்கர பகவத்பாதான் புது ஜீவனோடு பிரகாசிக்கும் படியாகச் செய்தார். 'ஷண்மத ஸ்தாபனம்’ என்று வருகிறபோது இவற்றோடு சுப்ரமணிய உபாசனையையும் நிலைநாட்டினார். எனவே, மேலே சொன்ன ஐந்தோடு நாமும் ஒரு வேலை வைத்து வேலாயுதனான குமாரஸ்வாமியைப் பூஜிக்கலாம்.
பூஜை என்பதற்காகப் பெரிய சிரமம் எதுவும் தேவையில்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கேயிருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதற்காக இவ்வளவு சொன்னேன். வீட்டிலே இருந்தால் 'மகா நைவேத்தியம்' எனப்படும் அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம்.
விபூதி மகிமை!
'விறகுக் கட்டையை அக்னியானது பஸ்மமாக்குவது போல், ஞானம் என்கிற அக்னி எல்லாக் கருமங்களையும் பஸ்மமாக்குகிறது’ என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். பஸ்மமாகிய விபூதி, இவ்விதம் கர்மங்களை எரித்தபின் நிற்கும் ஞானத்துக்கே அடையாளமாகும்.
'விபூதி பூதிரைச்வர்யம்’ என்று அமரகோசத்தில் உள்ளது. அதாவது விபூதி என்பதும் ஐச்வரியம் என்பதும் ஒரே பொருள். எந்தப் பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது கறுப்பாக ஆகும். பிறகு இன்னும் அக்னி புடம் போட்டால் நீற்றுப் போகும். சுத்த வெளுப்பாக ஆகிவிடும். அப்புறம் தீயில் போட்டால் அது மாறாது. அதுவே முடிவான நிலை. இப்படி நீற்றுப் போனதே திருநீறு. நீறு, பஸ்மம் எனப்படும். ஈசுவரன் மஹா பஸ்மம். எல்லாம் அழிந்த பின்னும் இவற்றை அழித்துவிட்டு எஞ்சி நிற்கிற, அழியாத சத்யமான மஹா பஸ்மம் அவன். பஸ்மமாக நீற்று வெளுத்துப் போனதற்கு முந்தைய மாறுதல் கறுப்பு. அதுதான் கரி. நிலக்கரிதான் இவ்வுலக ஐச்வரியத்தில் இக்காலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.
ரொம்பவும் விலைமதிப்பான வைரமும் அதுதான். இந்தக் கரியாக மாறிய பொருளைவிட, மிகவும் உயர்ந்தது நீற்றுப்போன திருநீறு. திருநீற்றுக்கு மேலான பொருளே கிடையாது.
பல வர்ணங்களைக் கொண்ட பொருள்களைக் காண்கிறோம். ஆனால், இந்த வர்ணங்களெல்லாம் வஸ்துவை எரித்தபின் மாறி விடுகின்றன. எல்லாம் கடைசியில் வெளுத்துப்போய்விடும். நாம் 'சாயம் வெளுத்துப் போய்விட்டது’ என்கிறோம். சாயம் என்பது வேஷம். வேஷம் போனபின் இருப்பதே மெய். மெய்யான ஆத்மாவின் தூய்மைக்குப் பெரிய அடையாளமாக இருப்பது விபூதிதான். இதை இந்தப் பொய்யான மெய்(தேகம்) முழுவதும் பூசிக்கொள்ள வேண்டும்.
விபூதியைத் தேகம் முழுவதும் பூசிக்கொள்ள வேண்டும். விபூதியைத் தரித்துக் கொள்வதினால் ஸகல ஐச்வரியங்களையும் அடையலாம். பெரும்பாலான மக்கள் விபூதியை அணிகிறார்கள். பூத, பிரேத, பைசாச சேஷ்டைகளில் இருந்து காப்பாற்றும் பெரிய ரக்ஷையாக இருப்பது விபூதியே.
**தெய்வத்தின் குரல் விகடன் அருளுரையில் இருந்து...
மாய வில்
ராமனது அழகைக் கண்ணால் மொண்டு பருகிய ஜனகனுக்கு நீறு பூத்த நெருப்பைப் போல் அந்தப் பேரழகில் மறைந்திருந்த புயவலியையும் விசுவாமித்திரர் காட்ட முயன்றார். ராமனது குலமுறையின் மகிமையையும் தம் வாக்கின் மகிமையால் பிரத்யக்ஷமாக்கிவிட்டார். உடனே, 'என் மகள் தவம் செய்தவள் தான் (நோற்றனள் நங்கையும்)' என்ற எண்ணம் உண்டாகிறது சீதையின் தந்தைக்கு. ஆனால் மாப்பிள்ளைக்கும் பெண்ணும் இடையே சிவ தனுசு கிடக்கிறதே!
வில்லை நினைத்ததும் மனம் பகீரென்றது. அதை 'மாய வில்’ என்கிறான். ராமனைச் சந்திப்பதற்கு முன் அந்த வில்லைக் குறித்து எவ்வளவோ பெருமை பாராட்டியவன்தான். தன் அருமைத் திருமகளை 'எனக்குத் தரவேணும், எனக்குத் தரவேணும்!' என்று அரசர்கள் வற்புறுத்தி நெருங்கிய காலத்திலே, 'இந்தச் சிவதனுசை எடுத்து வளைத்து நாணேற்றிய வீரனே மணமகனாக உரியவன்!’ என்று நியமம் ஏற்படுத்தியிருந்தான் ஜனகன்.
வில்லைத் தொடுவதற்கும் அஞ்சினார்கள் அரசர்கள். 'இனி இந்த வில்லின் மகிமையால் என் மகளுக்குத் தகுந்த புருஷன் கிடைப்பான்: இதுவே கந்யாசுல்கம்' என்று மகிழ்ந்திருந்தான். நாளடைவில் மகிழ்ச்சி கவலையாக மாறி வந்தது. 'கந்யாசுல்கம் சீதையை என்றும் கன்னிகையாகவே வைத்துவிடுமோ?' என்று.
ராமனைக் கண்டதும் வரலாறு கேட்டதும், கவலை நடுக்கமாக மாறிவிடுகிறது. 'என் மாய வில்லுக்கு நான் தோற்றேன்!' என்று நடுங்குகிறான்.

ஆனால் அடுத்த க்ஷணத்திலே 'என் பெண் பாக்கியவதிதான்!' என்கிறான். அப்படியில்லா விட்டால் ராமன் வந்து சேர்ந்திருப் பானா? 'ராமனும் பாக்கியசாலியாக இருந்து வில்லில் நாணேற்று வானானால், சீதையும் பாக்கியவதி தான், தவஞ் செய்தவள்தான்!' என்கிறான். 'ராமன் நாணேற்றுவது உண்மையில் எங்களையெல் லாம் துன்பக் கடலிலிருந்து கரை யேற்றுவதாகும்' என்று ஒப்புக் கொள்கிறான்.
இப்படியெல்லாம் ஊஞ்சலாடும் ஜனக ஹிருதயத்தை இதோ பாருங்கள்:
'மாற்றம்யா துரைப்ப(து)? என்
மாய விற்குநான்
தோற்றவா(று)! என, மனம்
துளங்கு கின்றதால்:
நோற்றனள் நங்கையும்
நொய்தின் ஜயன்வில்
ஏற்றுமேல், இடர்க்கடல்
ஏற்றும்!’ என்றனன்.
விரைவாகக் காரிய சித்தி பெறவேண்டும் என்ற ஆசை ஒரு புறம், இந்த அழகன் அதிக சிரமமில்லாமலே லேசாகவே வில்லை வளைத்து நாணேற்ற வேண்டுமென்ற ஆசையும் ஒரு புறம், தொனிக்கின்றன ஜனகன் வார்த்தையிலே. ராமனைக் கண்டவுடனே அந்த அழகைப் பருகி வெறி கொண்டவனல்லவா? சீதைக்காக வில் வளைப்பதற்கு 'ஐயன்’ வருந்துவதைக் கூட மனம் சகிக்கவில்லையாம்.

'நொய்தின் ஐயன்வில் ஏற்றுமேல்’ என்று ஒரு க்ஷணம் ஜனகன் தயங்கி நிற்பதையும் பாருங்கள். பிறகு ஜனகன், எதிரே நின்ற ஏவலாளர்களை நோக்கி, 'அந்தக் குன்றையொத்த வில்லைக் கொண்டு வாருங்கள் இங்கே' என்று கட்டளையிடுகிறான்.
இனி, சிவ தனுசு வந்து சேரும் வைபவத்தைப் பாருங்கள்:
உறுவலி அனைவரும்
ஒத்த மேனியர்,
செறிமயிர்க் கல்லெனத்
திரண்ட தோளினர்,
அறுபதி னாயிரர்,
அளவில் ஆற்றலர்,
தறிமடுத்(து), இடையிடைத்
தண்டில் தாங்கினார்.
விற்சாலைக்குப் போனவர்கள் நால்வர்தான்; வில்லைச் சுமந்து வருகிறவர்களோ மிகப் பலர் 'அறுபதினாயிரர்’ என்கிறான் கவிஞன். இந்தத் தொகையில் ஒரு மோகம். தசரதர் அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆண்டாராம், அவர் மனைவியரும் அறுபதினாயிரம் பேராம், அவருடைய மந்திரிமார்களும் அறுபதினாயிரம் ஆசாமிகளாம். இப்படிக் கதை சொல்லுவதால், சிவ தனுசைச் சுமந்து வந்தவர்களின் தொகையையும் அறுபதினாயிரம் ஆக்கி விடுகிறான்.
இந்த அறுபதினாயிரவரும் சாமானியர் அல்லர், மிக்க வலிமை வாய்ந்தவர்கள். ஒவ்வொருவரும் ஒரு யானைக்குச் சமானமான
வராம். 'யானையை ஒத்த மேனியர்’ என்று கூறுவது கவனிக்கத் தக்கது. அவ்வளவு கரு நிறமும் பெரிய உடலும் படைத்தவர்களாம். அந்த ஆசாமிகள் எல்லோரும் ஒரே மாதிரி அளவெடுத்து வார்த்தாற் போன்ற தோற்றம் வாய்ந்தவர்களாம். ஆம்; மனிதத் தோற்றமில்லை, யந்திரத் தோற்றம்! அறிவுப் பயிற்சி பெறாதவர்களும் முரடர்களுமான பேர்வழிகள் என்பது குறிப்பு.
இவர்கள்தான் அந்த வில்லை லேசாகத் தூக்கி வந்தார்களா? தூக்க மாட்டாமல் தூக்கி வந்தார்களாம். இடையிடையே தறிகள் அமைத்து அவற்றோடு நெடுகக் கட்டிய தண்டுகளிலே தோள் கொடுத்துச் சுமந்து வந்தார்களாம். ஒரு பிரம்மாண்டமான வாகனத்தைச் சுமந்து வருவது போலே!
கௌதம முனிவனுடைய புதல்வனாகிய சதானந்த முனிவன் விச்வாமித்திர முனிவனை நோக்கி வில்லின் வரலாற்றைச் சொல்லத் தொடங்குகிறான். சிவதனுசு அல்லவா? 'மேருமலையையே வில்லாக வளைத்த சிவபெருமான் உபயோகித்தவில் இது!' என்று சொல்லுகிறான்.

சிவபெருமான் ரௌத்ரா காரமாய் இந்த வில்லோடு தக்ஷனின் யாக சாலையில் குதித்தது தான் தாமசம். பற்களும் கைகளும் உதிர்ந்து சிதறத் தொடங்கினவாம். ஆம், அந்த யாகத்திற்கு உதவியாக வந்திருந்தவர்களுடைய பற்களும் கரங்களும்தான். ஓடினார்களாம் தேவர்கள்; நிலை கெட்டு ஓடி நுழைய முடியாத இடங்களிலெல்லாம் எப்படியோ நுழைந்து பதுங்கிக் கொண்டார் களாம். தக்ஷ யாகமும் தழல் ஆறிக் குளிர்ந்தது; சிவ கோபமும் தழலாறிக் குளிர்ந்துவிட்டதாம்.
அந்த யாகத்துக்கு உதவிய தேவர்களையும் மன்னித்து அருள் புரிந்தார் சிவபெருமான். எனினும் தேவர்கள் நடுங்கிக்கொண்டே இருந்தார்களாம். காரணம் இந்த வில் அவர் கையில் இருந்தது தான்! தேவர்களுடைய நடுக்கத்தைப் போக்கு வதற்காக இந்த வில்லை இந்த ஜனக மகாராஜனது குலத்திலே தோன்றிய பூர்வீக ராஜா ஒருவனிடம் வைத்து போய் விட்டாராம் சிவபெருமான். இந்த வில்லைக் கண்டும் நடுங்காதவன் இந்த ராஜாவின் முன்னோர்களில் ஒருவன்தான் என்று எவ்வளவு பெருமை யோடு சொல்லுகிறான் சதானந்தன்! பரம்பரையாக இந்த வில் இந்த ஜனகனுக்குக் கிடைத்தது என்பது குறிப்பு.
'இனிமேல் இந்த வில்லை நாணேற்றும் வீரனுக்கு மனைவியா வதற்கு உரிய சீதையின் வரலாற்றைச் சொல்லப் போகிறேன்' என்கிறான் சதானந்தன்.
அரசனும் அவனைச் சேர்ந்தவர் களும் நிலத்தை உழுதார்களாம். ஆம், கலப்பைப் பிடித்து உழுதார்களாம், வில்லைப் பிடித்த கைக ளால். கலப்பையோ ரத்தினம் பதித்த பொற்கலப்பை. அந்தக் கலப்பையில் வயிரக் கொழுவைக் கட்டி உழுதார்களாம். ஏன் இந்த அதிசய உழவு?
'யாகசாலை அமைப்பதற் காக நிலத்தை உழுதோம்' என்கிறான் சதாநந்தன். அந்தக் கொழுவின் முனையிலே அந்த உழவு சாலிலே சூரியோதயமா?
உழுகின்ற கொழுமுகத்தின்,
உதிக்கின்ற கதிரின் ஒளி
பொழிகின்ற புவிமடத்தைத்
திருவெளிப்பட் டெனப், புணரி
எழுகின்ற தெள்ளமுதோ(டு)
எழுந்தவளும் இழிந்(து) ஒதுங்கித்
தொழுகின்ற நன்னலத்துப்
பெண்ணரசி தோன்றினாள்.
ஆம், தோன்றியதும் அரசியாகி விட்டாள். அதற்கு முன் சௌந்தரிய ஸிம்மாஸனத்திலே 'பெண்மை’ என்ற ராஜ்யத்துக்கு அரசியாக வீற்றிருந்தவள், அழகுத் தெய்வமும் செல்வத்தின் அதிதேவதையுமான ஸாக்ஷாத் மஹாலஷ்மியேதான். அப்படி இருந்தும் இந்தச் சீதை தோன்றியதும் இவளே 'பெண்ணரசி’ யாகி விடுகிறாள்!
அந்த அழகுத் தெய்வமான மஹாலக்ஷ்மியைத் தேவர்கள் மணம் செய்து கொள்ள விரும்பினார்களாம், அவள் அழகின் மூர்த்தியான திருமாலுக்கே உரியவள் என்பதை அறிந்துகொள்ளாமல். அப்ப டியே இந்த அழகுத் தெய்வமான சீதாலக்ஷ்மியையும் அரசர்கள் மணந்து கொள்ள ஆசைப்பட்டார்களாம்.
அத்திருவை அமரர்குலம்
ஆதரித்தார் என அறிஞ !
இத்திருவை நிலவேந்தர்
எல்லாரும் காதலித்தார்.
** 18.2.1945, 25.2.1945 மற்றும் 4.3.1945 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...