சூரிய ரதம்!
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது, அருள்மிகு கூடலழகர் திருக்கோயில். இந்தக் கோயிலின் அலுவலக அறைக்கு இடப்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சூரிய ரதம் விசேஷமானது.
இந்த ரதத்தின் மத்தியில் அறுகோண வடிவ கட்டத்தில் அமர்ந்து அருள்கிறார் சூரியபகவான். அறுகோண மூலைகளும் வசந்த ருது, கிரீஷ்ம ருது, வர்ஷ ருது, சரத் ருது, ஹேமந்த ருது, சிசிர ருது ஆகிய 6 ருதுக்களைக் குறிக்கும் (இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது). அடுத்து, பூ புவ ஸுவ எனும் வியாஹ்ருதிகளைக் குறிக்கும் 3 வட்டங்கள். தொடர்ந்து சூரிய பகவானை இடமிருந்து வலமாகச் சூழ்ந்தபடி 12 ராசிகள். இவை, 12 மாதங்களைக் குறிக்குமாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு சக்கரத்துடன் கூடிய இந்த ரதத்தை அருணன் செலுத்த, ரதத்தின் இருபுறமும் நாகங்கள். இவை, இரவையும் பகலையும் குறிப்பனவாம். உதய காலத்தில் மட்டுமே அருணன் காட்சி புலப்படுமாம். இத்தகைய எழில்மிகு ரதத்துடன் கூடிய சூரிய நாராயணரைத் தரிசித்து வழிபட களத்திர தோஷம், சர்ப்ப தோஷம் முதலான தோஷங்கள் நீங்கும்; தேக ஆரோக்கியம் பெருகும் என்கிறார்கள்.
தி.சபாபதி, நெல்லை - 2
சூரிய சதகம்
சூரியனின் தேரை ஏழு குதிரைகள் இழுக்கின்றன. இவன் ஏழு உலகை வலம் வருகிறான் என்கின்றன புராணங்கள். அதேபோல், சூரியன் சம்பந்தமான அறிவியல் விஷயங்களும் ஞானநூல்களில் விளக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில் சூரியன் உதிப்பதுமில்லை, மறைவதுமில்லை என்ற உண்மையைச் சுட்டிக் காட்டுகிறது 'சூரிய சதகம்’ என்ற நூல்.
சூரியன் வழிபட்ட தலங்களில் ஏழு தலங்கள் முக்கியமானவை என்கிறது புராணம். அவை: கண்டியூர், திருவேதிக்குடி, கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில், பரிதிநியமம், திருதெளிச்சேரி, புறவார் பனங்காட்டூர், திருநெல்லிக்கா.
ஜெயலட்சுமி கோபாலன், சென்னை