Published:Updated:

கலகல கடைசி பக்கம்

மந்திரங்களுக்கு பலன் உண்டா? தெனாலி , ஓவியம்: மகேஸ்

கலகல கடைசி பக்கம்

மந்திரங்களுக்கு பலன் உண்டா? தெனாலி , ஓவியம்: மகேஸ்

Published:Updated:

ரு ஊர்ல ஒரு ராஜா இருந்தான். அவன் ஒருநாள் நகர்வலம் வரும்போது, அரசவைப் புலவரின் வீடு கண்ணில் பட, சட்டுனு உள்ளே நுழைஞ்சான். புலவர் கண் மூடி ஸ்லோகம் சொல்லி, கடவுளைப் பிரார்த்தனை பண்ணிக்கிட்டிருந்தார். ராஜா பொறுமையா காத்திருந்தான். புலவர் பிரார்த்தனை முடிஞ்சு கண் விழிச்சார். ராஜா உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்து, பவ்வியமாக எழுந்து வந்து வணக்கம் சொன்னார். “இப்போ நீங்க ஏதோ மந்திரம் சொல்லிட் டிருந்தீங்களே, அது என்ன?”ன்னு கேட்டான் ராஜா.

‘‘இது ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம்”னு புலவர் சொல்ல, “இதைச் சொல்றதுனால என்ன பயன்?”னு கேட்டான். “இதை எவன் ஒருவன் சிரத்தையா சொல்றானோ, அவனை எந்த எதிரியாலும் வெல்லவே முடியாது”ன்னார் புலவர்.

“அப்படியானால் இதை இப்பவே எனக்கும் சொல்லிக் கொடுங்க”ன்னான் ராஜா.

“அப்படியெல்லாம் சட்டுனு சொல்லிக்கொடுத்துட முடியாது ராஜா! முறையான சிட்சை வேணும்”னார் புலவர். ராஜா கடுப்பாகி, எழுந்து போயிட்டான். சில நாள் கழிச்சு, மறுபடியும் ஒரு நாள் திடும்னு புலவர் வீட்டுக்கு வந்தான். ராஜாவை வரவேற்று உபசரிச்சார் புலவர்.

“உபசாரமெல்லாம் இருக்கட்டும். இங்கே கவனிங்க” என்ற ராஜா, ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தை கடகடன்னு சொல்லிட்டே போனான். முழுக்கச் சொல்லி முடிச்சுட்டு, “நீங்க சொல்லித் தர ரொம்ப பிகு பண்ணிக்கிட்டீங்களே! ஆனா, நானே கத்துக்கிட்டேன் பார்த்தீங்களா?”ன்னான் ரொம்பப் பெருமையா.

“ஆனா, இதனால உங்களுக்குத் துளியும் பலன் இல்லை”ன்னார் புலவர்.

கலகல கடைசி பக்கம்

“அதெப்படி, உங்களுக்குப் பலன் தர்ற அந்த ஸ்லோகம் எனக்கு மட்டும் பயன் தராதா என்ன? நான் ஒப்புக்க மாட்டேன். நீங்க பல வருஷம் போராடிக் கத்துக்கிட்டதை நான் ஒரே வாரத்துல கத்துக்கிட்டேன். அதை உங்களால ஜீரணிக்க முடியலை. அதான் இப்படிப் பேசறீங்க”ன்னான் ராஜா. புலவர் உடனே, ராஜாவோடு வந்திருந்த வீரர்களைக் கூப்பிட்டு, “உடனே இந்த ராஜாவைப் பிடிச்சு இந்தத் தூணுல கட்டிப் போடுங்க!”ன்னு உத்தரவிட்டார். வீரர்கள் அமைதியா நின்னாங்க. “என்ன, சொல்றேனில்லே! உடனே இந்த ராஜாவைப் பிடிச்சுக் கட்டிப் போடுங்க!”ன்னார் புலவர் மறுபடி. அப்பவும் வீரர்கள் அசையலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்ப ராஜாவுக்குக் கோபம் வந்துட்டுது. “இந்தப் புலவரைப் பிடிச்சுத் தூணுல கட்டிப் போடுங்க”ன்னு உத்தரவிட்டான். வீரர்கள் உடனே புலவர் மேல பாய்ஞ்சு, அவர் கைகளைப் பின்பக்கமா முறுக்கி இழுத்துட்டுப் போய், தூணுல கட்டிப் போட்டுட்டாங்க. புலவர் சிரிச்சார். “இப்ப புரியுதா ராஜா? இதையேதான் நானும் சொன்னேன். ஆனா, என் சொல் செல்லுபடியாகலை. அதையே நீங்க சொல்லும்போது, அதுக்கான பலன் உடனே கிடைச்சிட்டுது. ஏன்னா, அதுக்கான தகுதியும் அதிகாரமும் உங்ககிட்டே இருக்கு. அதேபோலத்தான், ஸ்லோகங்களை ஒரு குரு மூலமாக உபதேசம் பெற்று, அதற்குரிய முறையோடு, நியதியோடு ஓதினால்தான் பலன் கிடைக்கும். இப்படி சும்மா பாடல் படிக்கிற மாதிரி சொன்னா பலன் இருக்காது!” என்றார் புலவர்.

பகவான் ரமண மகரிஷி சொன்ன ஒரு குட்டிக் கதை இது. வெறுமே மந்திரங்களை ஓதுறதாலோ, பூஜை புனஸ்காரங்களைக் கடமையே எனச் செய்யறதாலோ ஆண்டவனின் அருளுக்குப் பாத்திரமாக முடியாது. ஆத்மார்த்தமா இறைவனை மனசில் இருத்தி வழிபடணும். அப்பத்தான் நம் பிரார்த்தனைக்கும் பலன் இருக்கும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism