Published:Updated:

கல்லும் கதை சொல்லும்!

மண் மணக்கும் தரிசனம்... ம.மாரிமுத்து

கல்லும் கதை சொல்லும்!

மண் மணக்கும் தரிசனம்... ம.மாரிமுத்து

Published:Updated:

மிழனின் தொன்மையைப் பறைசாற்றும் பல சுவடுகள்  சங்ககால இலக்கியங்களிலும், தொன்மையான நடுகற்கள் மற்றும் குத்துக்கற்களிலும், பாறைச் சித்திரங்களிலும், மண்மணக்கும் கிராமியப் பாடல்களிலும் வரியாகவோ, காட்சியாகவோ, ஒலி வடிவத்திலோ ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 

அப்படியாக தமிழர்களின் வரலாற்றைச் சொல்லும் நிஜத்தின் உரைக் கற்கள்தான் 'குத்துக்கற்கள்’. அவை கூறும் கதைகளோ ஏராளம். அப்படியொரு கல்லை சிவகங்கையிலிருந்து மானா மதுரைக்குச் செல்லும் வழித்தடத்திலுள்ள காட்டூரணி  அதிகரை விலக்கில் கண்டறிந்தோம். இவை நடுகற்களுக்கு முந்தைய வடிவம் என்ற உண்மையை அவ்வூர் மக்கள் அறிந்திருக்கவில்லை.

எனினும், இந்தக் குத்துக் கற்களுக்கு, இங்கு நடக்கும் வழிபாட்டு முறை விநோதமானது. ஆண்டுக்கு ஒருமுறை இங்கு இருக்கும் குத்துக்கற்களுக்கு தென்தமிழகத்தைச் சார்ந்த இதன் பூர்வகுடிகள் சிறப்பாக விழா நடத்துகிறார்கள். அந்தக் கதையும் நமக்கு பக்தியின் உச்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பண்டைய காலத்தில் இப்பகுதி, காடும் காடு சார்ந்த முல்லைப் பகுதியுமாக இருந்துள்ளது. இப்பகுதியில் இருந்த பெரும்பாலான மக்களின் தொழில் ஆநிரை மேய்த்தல், ஆநிரைகளிலிருந்து கிடைக்கும் பால் பொருட்களை விற்பனை செய்தல்!  

கல்லும் கதை சொல்லும்!

ஒரு கார் காலத்தில் இப்பகுதியில் கடுமையான மழைப்பொழிவு தொடங்கி மண்ணை அதிர வைத்தது. புயலும் விட்டு வைக்கவில்லை. இடிச் சத்தமும் அவ்வப்போது அங்கிருக்கும் மான்களையும் முயல்களையும் பயமுறுத்திக் கொண்டிருந்தது. பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வயல்களில் நடப்பட்டிருந்த வரகு, சாமை, முதிரை ஆகிய உணவுப் பொருட்கள் நீரில் துள்ளி ஆடும் மீன்களைப் போல அங்குமிங்கும் தலையைக் காட்டி நெளியத் தொடங்கியிருந்தன.

இது ஒரு பேரழிவின் துவக்கம் எனக் கருதிய, அங்கு வசித்து வந்த குறும்பொறை நாடன், தோன்றல், கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், பொதுவர், பொதுவியர், கோவலர் பிரிவினைச் சார்ந்த மக்கள் உடனடியாக ஊரை காலி செய்து விட்டு கிளம்ப ஆயத்தமானார்கள்.

ஊரில் இறுதியாக ஏறுகோட் பறை மூலம் மழை ஆபத்து குறித்த தகவல்களை இரண்டு காவல் வீரர்கள் அறிவித்துக்கொண்டு இருந்தனர். அப்பறை ஓசை ஒலித்த மறுகணம், அப்பகுதி பெருமக்களும் ஊரை காலி செய்து, மழையினூடே நடக்கத் தொடங்கினர்.

சில மக்கள் அவர்கள் வாழ்வுக்கு ஒளி தந்த ஆநிரைகளையும் உடன் அழைத்துக் கொண்டனர். ஊரே கொஞ்சம் கொஞ்சமாக வெறிச்சோடிக் கொண்டிருந்தது. மழை விடாது பெய்து கொண்டிருந்ததால், இருளும் தன் பங்குக்கு அப்பகுதி மக்களை சீக்கிரமாக வாட்ட ஆரம்பித்தது.

கல்லும் கதை சொல்லும்!

ஆனால், ஒரே ஒரு வீட்டில் மட்டும் மக்களின் சத்தம் கேட்பது அங்கு இருந்த காவல் வீரர்களுக்கு  பெரும் கிலியை ஏற்படுத்தியது. அருகில் சென்று பார்த்த அவ்வீரர்கள் அண்ணனும் தங்கையும் இருக்கும் அந்த வீட்டிலிருந்து மட்டும் யாரும் வெளியேறவில்லை என்பதைக் கண்டு அதிர்ந்தனர். அந்த நேரத்தில் குடில்களை இடுப்பளவு நீர் சூழ்ந்து கொண்டிருந்தது.

அவ்வீரர்கள், அண்ணனும் தங்கையுமான பெரிய இடையனையும், இடைச்சியையும் உடனடியாக வெளியேறச் சொன்னார்கள். ஆனால், அநாதைகளான இருவருமே பாசமும், பரிவும் காட்டி வளர்த்த அவ்வூரை விட்டுச்செல்ல முடியாது என்றும், தங்களுக்குப் பிறப்பும் இறப்பும் இவ்வூரில்தான் என முரண்டு பிடிக்கத்தொடங்கினர்.

வீரர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அண்ணன்தங்கை இருவருமே கேட்காததால், நெடுஞ்சாண் நெஞ்சுயர வெள்ளம் வந்ததும், தீப்பொறியிலிருந்து வெடித்துச் சிதறும் கங்கினைப்போல் சடாரென வெளியேறினர் காவல் வீரர்கள் இருவரும்.

கல்லும் கதை சொல்லும்!

உடன், அருகிலிருக்கும் சிறு ஓடையும் கரை தாண்டிக் காட்டாறாக ஊருக்குள் ஊடுருவியதில், தங்கைக்கு நாசி தொட்டது வெள்ளம். உடனே அண்ணன்தங்கை இருவருமே தம் குல தெய்வமான மாயோனிடம், இப்பேரழிவு உடனடியாகக் குறையவேண்டுமென்று விடாது துதித்துக்கொண்டே இருந்தனர். வெள்ளம் தலைக்கு மேல் போக, இருவரின் உயிரும் பிரிந்தது.

பெருமழை கழிந்து ஒரு வாரம் கழித்து, ஊருக்குத் திரும்பிய பூர்வகுடிகளுக்கு, இறுதியாகத் தப்பிச் சென்ற காவல் வீரர்கள் பெரிய இடையன், இடைச்சி பற்றிய தியாகக் கதையைக் கூறினர்.

தங்கள் ஊரில் நேரிட்ட சீற்றம் தணிய கடவுளைத் துதித்துக்கொண்டே மரித்த அந்த இருவரின் மீதும் பூர்வகுடிகளுக்கு மனதில் ஈரம் கசிந்தது. தங்கள் பொருட்டு வேண்டிக் கொண்ட அண்ணனுக்கும் தங்கைக்கும் ஏதேனும் செய்யவேண்டுமே எனத் தவித்தனர்.  

கல்லும் கதை சொல்லும்!

உடனே ஊர் கூடிப்பேசி, முன்பனிக் காலத்திலுள்ள தை மாதத்தில் பெரிய இடையனுக்கு ஒரு பெரிய கல்லும், இடைச்சிக்கு ஒரு சிறிய கல்லும் நாட்டினர். அந்தக் குத்துக்கற்கள் இரண்டும் தான், இன்னும் அவர்களின் வீர வரலாற்றைச் சொல்லும் சாட்சியாக அப்பகுதியில் நிற்கிறது. அவர்களுக்கு ஆண்டுக்கொரு முறை மட்டும் கார்த்திகை மாதத்தில் பூர்வகுடி மக்களால் இன்றளவும் வழிபாடு  நடத்தப்படுகிறது. மேலும் இக்கல்லில் விளக்கேற்ற பிற்காலத்தில் 4 குழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கல்லும் கதை சொல்லும்!

இத்தகைய பெருமைமிக்க தியாகத்தைச் சொல்லும் வரலாற்று ஆவணங்கள்தான்  இந்தக் குத்துக்கற்கள் என்றால் மிகையல்ல. இப்படியொரு பீடு செய்ய தமிழ்ச் சமூகம் எத்தனித்ததில் ஒரு முக்கியத் தகவல் ஒளிந்திருக்கிறது. அது... 'பழைமையைப் போற்றும் இனம் நம் தமிழ் இனம்'

    படங்கள்: வ.வினோத்குமார்

குத்துக்கற்களும் நடுகற்களும்!

பொதுவாக, விவசாயத்தில் கிடைத்த அறுவடையைக் கொண்டாடும் விதமாகவும், ஆதிகால மக்களிடையே இருந்து மறைந்த வீரர்களின் தியாகக் கதைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்கூற உதவும் வகையிலும் குத்துக்கற்கள் நடப்பட்டு இருக்கின்றன. ஆனால், இவை நடப்பட்ட காலம் நடுகற்களுக்கும் முந்தைய காலம் என்கிறது வரலாறு.

நடுகற்கள் அதிக எடை கொண்டவை. அதுபோல நாம் அங்கே கண்ட குத்துக்கற்களின் எடை, உறுதித்தன்மை ஆகியவை மிகவும் அதிகமாகவே இருந்தது. எனவே, போராளிகளுக்கு பழங்கால மக்கள் கொடுத்த மதிப்பும், அக்கற்களுக்கு உண்டான தேர்வு முறையும் நம்மை வியப்பில் ஆழ்த்தின. ஒரு கல் உறுதியாக இருந்தால் மட்டுமே அந்த கல்லுக்குப் பின் இருக்கும் வீரனின் கதையும் பல தலைமுறைகளைக் கடந்து தாங்கி நிற்கும் என்பது பழந்தமிழர்களின் எண்ணமாக இருந்துள்ளது!

புறநானூற்றில் நடுகல் வழிபாடு...

புறநானூற்றில் வரும் பாடல் ஒன்று, நடுகல் வழிபாடு குறித்து விவரிக்கிறது.

இல்லடுகள்ளின் சில்குடிச் சீறூர்ப்

புடைநடு கல்லின் நாட்பலியூட்டி

நன்னீராட்டி நெய்நறை கொளீஇய

மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்...

அதாவது, வீடுகளில் கள் காய்ச்சும் மக்கள் வாழும் சிற்றூரின் அருகே நடப்பட்ட நடுகல்லுக்கு விடியற்காலையில் நன்னீராட்டி நெய் விளக்கேற்றி, படையல் படைத்தனர். நெய் விளக்கு ஏற்றியதால் உண்டான புகையானது மேகம் போல் எழுந்து, தெருவில் மணம் வீசுமென்று, நடுகல் வணங்கப்பட்ட செய்தியை சொல்கிறது. அப்படியெனில், நடுகல்லுக்கு முந்தைய குத்துக்கற்களுக்கு, ஆதி காலத்தில் எத்தகைய மரியாதை இருந்திருக்கவேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism