தொடர்கள்
Published:Updated:

தடைகளைத் தகர்க்கும் தைப்பூச தரிசனம்!

சண்முகா சரணம்

முன்னூர் முருகன்

திண்டிவனம் அருகில் உள்ள முன்னூரில் அமைந்திருக்கும் ஸ்ரீஆடல்வல்லான் ஆலயத்தில், மயில் மீது அமர்ந்து பன்னிரு கரங்களில் ஆயுதங்கள் தரித்தவராகப் போருக்குச் செல்லும் கோலத்தில் திருக்காட்சி தருகிறார். இவரை வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருத்தங்கல் முருகன்

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் என்னும் ஊரைச் சேர்ந்த பக்தர் ஆறுமுகசாமித் தம்பிரான், தன்னுடைய கனவில் பழநி முருகன் உத்தரவு கொடுத்ததன்பேரில், பழநியில் இருந்து மண் எடுத்து வந்து தன் ஊரில்ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோயிலைக் கட்டினார். தைப்பூச விழாவில் இன்றைக்கும் அவருடைய வம்சத்தினர் பால் குடம் எடுத்து வந்து ஸ்ரீபாலதண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

ஸ்ரீதீர்த்தகிரி வடிவேல்

தடைகளைத் தகர்க்கும் தைப்பூச தரிசனம்!

சென்னை-பெங்களூர் சாலையில், பாலாற்றின் தென்கரையில் உள்ள புதுவசூர் என்னும் கிராமத்தில் மலைமீது அமைந்திருக்கிறது ஸ்ரீதீர்த்தகிரி வடிவேல் ஆலயம். இந்தத் தலத்தில்தான் முருகப்பெருமான் ஔவையிடம், ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று சொல்லாடல் நிகழ்த்தியதாகச் சொல்கிறார்கள். அதற்குச் சாட்சியாக மூலவர் சந்நிதிக்கு எதிரில் பெரிய நாவல் மரம் இருப்பதைப் பார்க்கலாம். 500 வருடப் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில், கோடையிலும் வற்றாத நீர் ஊற்று ஒன்றும், புனிதக் கிணறு ஒன்றும் உள்ளன. இவற்றின் தீர்த்தம் சகல பிணிகளையும் போக்கும் சக்தி கொண்டது.

வேளிமலை குமரன்

கன்யாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது வேளிமலை குமார கோயில். முருகப் பெருமானுக்கும் வள்ளிக்கும் இடையே காதல் வேள்வி நடந்த மலை என்பதால், இதற்கு ‘வேள்வி மலை’ என்று பெயர். இதுவே பின்னர் வேளிமலையாக மருவியது. இங்கு வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ‘கஞ்சி தர்மம்’ விசேஷமானது. இந்தக் கஞ்சி, நோய் தீர்க்கும் அருமருந்து என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருச்சி வழிவிடு வேல்முருகன்

திருச்சி ஜங்ஷன் ரவுண்டானாவுக்கு அருகில் அமைந்துள்ளது வழிவிடு வேல் முருகன் கோயில். ராமேஸ்வரம் கடலில் இருந்து கரை ஒதுங்கிய அழகிய முருகப்பெருமானின் விக்கிரகத்தை, இங்கே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பி வழிபடத் துவங்கினராம். வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாகப் பயணிக்கும் பக்தர்களுக்குப் பக்கத் துணையாக இருந்து, அவர்களுக்கு நல்வழி காட்டி அருள்கிறார் இந்த முருகன் எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர் அன்பர்கள்.

ஞானமலை முருகன்

இங்கே மலைமீது பாதச் சுவடுகள் காணப்படுகின்றன. இவை முருகனின் திருவடிகள் பதிந்த இடம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கிருந்து திருத்தணியும் வள்ளிமலையும் சம தொலைவில் முக்கோண வடிவில் அமைந்துள்ளன.

தடைகளைத் தகர்க்கும் தைப்பூச தரிசனம்!

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், சுமார் 16 கி.மீ. தொலைவில் மங்கலம் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து, ஞானமலை பெயரைத் தாங்கியுள்ள வளைவின் வழியாக சுமார் 2 கி.மீ. தொலைவு பயணித்தால் ஞானமலை அடிவாரத்தை அடையலாம்.

விராலிமலை முருகன்

தடைகளைத் தகர்க்கும் தைப்பூச தரிசனம்!

திருச்சியில் இருந்து மதுரை செல்லும் வழியில் அமைந்திருக்கிறது விராலிமலை. விராலிமலை பேருந்து நிலையத்தின் அருகில் பிரமாண்டமான மலையின் மேல், அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் முருகப் பெருமான். இவ்வூரில் முருகப் பெருமான் வயோதிகராக வந்து ஒரு பக்தரிடம் இருந்து சுருட்டைப் பெற்றுக்கொண்டதால், இங்கே முருகனுக்கு சுருட்டு நைவேத்தியம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தடைகளைத் தகர்க்கும் தைப்பூச தரிசனம்!சூரலை வாயிடைத் தொலைத்து மார்புகீண்
டீரலை வாயிடும் எஃகம் ஏந்தியே
வேரலை வாய்தரு வெள்ளி வெற்பொரீஇச்
சீரலை வாய்வரு சேயைப் போற்றுவாம்

- கந்தபுராணம்

புதுக்குடி முருகன்

‘‘பேரலை பொங்கும் திருச்சீரலைவாய்- பெரிய திருச்செந்தூர்; சிற்றலை தாலாட்டும் புதுக்குடி- சின்ன திருச்செந்தூர்!’’ என்று வாரியார் சுவாமிகளால் புகழப்பெற்ற திருத்தலம், சிற்றலை புதுக்குடி சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புதுக்குடி கிராமம். திருச்செந்தூரில் சண்முகப் பெருமானுக்கு நடத்தப்படும் அனைத்து விழாக்களும் அதே முறையில் புதுக்குடியிலும் நடத்தப்படுகின்றன. இந்தத் திருக்கோயில் நந்தவனத்துக்கு அருகில் காணப்படும் கூந்தப் பனை சிறப்பு வாய்ந்தது. சுயம்புவான இந்தக் கூந்தப் பனையை மனிதர்கள் எவரும் நட்டு வளர்க்க முடியாது என்கிறார்கள்.

வயலூர் முருகன்

‘முருகப் பெருமானுக்குப் பிடித்தமான தலங்கள் இரண்டு!’ என்கிறார் அருணகிரிநாதர். ஒன்று, திருச்செங்கோடு, மற்றொன்று, வயலூர்! திருச்சியில் இருந்து மேற்கே, சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குமாரவயலூர் எனும் வயலூர்.

திருமண தோஷம் மற்றும் தடைகள் உள்ளவர்கள், முதல் நாள் இரவே இங்கு வந்து தங்கி, மறுநாள் சக்தி தீர்த்தத்தில் நீராடி, சுப்ரமணிய ஸ்வாமிக்கு ‘கல்யாண உற்சவம்’ நடத்தி வழிபட்டால், திருமணம் நடந்தேறும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

நடுபழநி முருகன்

தடைகளைத் தகர்க்கும் தைப்பூச தரிசனம்!

திண்டிவனம் அச்சிறுப்பாக்கத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள மலையின்மீது அமைந்துள்ளது நடுபழநி முருகன் கோயில். கண்டிகை என்ற ஊரைச் சேர்ந்த முத்துசுவாமி என்ற பக்தருக்குக் கனவில் முருகன் தோன்றி கட்டளை இட்டதால், அவர் காவடி சுமந்து ஊர் ஊராகச் சென்று திருப்புகழ் பாடி, நிதி திரட்டிக் கட்டிய கோயில் இது. இந்தக் கோயிலுக்கு வருகை புரிந்த காஞ்சி மஹாஸ்வாமிகள், இந்தத் தலத்தை ‘நடுபழநி’ என்று அழைத்துச் சிறப்பித்துள்ளார். இங்குள்ள முருகப்பெருமானை தரிசித்தால் நாகதோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருவல்லிக்கேணி முருகன்

தடைகளைத் தகர்க்கும் தைப்பூச தரிசனம்!

சென்னை- திருவல்லிக்கேணி என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், அப்பகுதி மக்களால் ‘எட்டாம் படைவீடு’ என்று போற்றப்படுகிறது. இங்கே, ஐப்பசி மாதம் சூரசம்ஹாரத்துக்கு மறுநாள் நடைபெறும் திருக்கல்யாண உற்ஸவம் சிறப்பு! அன்று, அருகில் உள்ள ஸ்ரீதுலுக்காணத்தம்மன் ஆலயத் தில் இருந்து முருகப் பெருமானுக்கு தாய்வீட்டு சீர்வரிசை வருவது சிறப்பம்சம்.

சிக்கல் சிங்காரவேலன்

நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் தலம் சிக்கல். ‘சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ என்று சொல்வார்கள். சிவன், அம்பாள், விஷ்ணு என அனைத்து தெய்வங்களுக்கும் உவப்பான தலம் சிக்கல். வடக்கில் வாரணாசியைப் போல் தெற்கில் சிக்கலில்தான் எல்லா தெய்வங்களும் கூடுகின்றனர்; இங்கே உள்ள சிவலிங்க மூர்த்தியை தரிசித்தாலே முக்தி!

ஓதிமலை முருகன்

தடைகளைத் தகர்க்கும் தைப்பூச தரிசனம்!

முருகப் பெருமான் குடிகொண்ட மலைகளுள், மிகவும் உயர்ந்தது இந்த ஓதிமலை என்று சொல்லப்படுகிறது. வேறெங்கும் காண்பதற்கு அரிதான நிலையில் ஐந்து திருமுகங்களும், எட்டுத் திருக்கரங்களும் கொண்டு முருகப் பெருமான் இங்கு தரிசனம் தருவது விசேஷம்! ஐந்து முக வடிவம் என்பது ‘ஐம்முகச் சிவன்’ என்பர். அதாவது, சிவபெருமானும் முருகப் பெருமானும் வேறு வேறு வடிவங்கள் அல்ல என்பதை உணர்த்தும் திருவடிவம்தான் ஐந்து திருமுகம் கொண்ட ‘ஸ்ரீகுமார சுப்ரமண்யர்’. அதனால், இந்தப் பெருமானை சிவகுமாரன் என்றும், குமாரசிவம் என்று சொல் கின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ஓதிமலை முருகன் கோயில்.