Published:Updated:

சித்தமெல்லாம் சித்தமல்லி - 12

நிவேதிதா

றைவன் கருணையே உருவானவன். நம்மிடம் இறைவன் எதிர்பார்ப்பது மனத் தூய்மையுடன் கூடிய அன்பைத்தான். மற்றபடி, ‘இதைத் தா, அதைத் தா, தினமும் வந்து என்னை தரிசித்து வணங்கு, இன்னின்ன நேர்த்திக்கடன்களைச் செய்’ என்றெல்லாம் கேட்பதும் இல்லை; விரும்புவதும் இல்லை; இருந்த இடத்தில் இருந்தபடியே நமக்குப் பிரியமான இறைவனை மனத் தூய்மையுடன் கூடிய அன்புடனும் பக்தியுடனும் பிரார்த்தித்துக்கொண்டாலே போதுமானது; இறைவன் நம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி அருள்வார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இறைவனின் இந்தக் கருணைத் திறனுக்கான சத்தியசாட்சியாய் அமைந்ததுதான், கலியமூர்த்தி என்பவரின் வாழ்க்கையில் ஐயன் திருவேங்கடநாதப் பெருமாள் நிகழ்த்திய அருளாடல்.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 12

கலியமூர்த்தி சித்தமல்லியில்தான் வசிக்கிறார். அவர் நினைத்தால், தினமுமே மூன்று வேளையும் சென்று பெருமாளை  சேவிக்கலாம். ஆனால், அவருடைய மனதில் ஏனோ அப்படி ஓர் எண்ணம் தோன்றவே இல்லை. வீட்டுக்குத் தேவையான கதவு, ஜன்னல் போன்றவற்றைச் செய்து தருவதே அவருடைய தொழில். சிறப்பான முறையில் நேர்த்தியாக தன்னுடைய பணியைச் செய்து வரும் அவருக்கு மனதில் ஒரே ஒரு குறை மட்டும் இருந்தது. அவருடைய செல்ல மகளுக்குத் திருமணம் தடைப்பட்டுக்கொண்டே வந்தது. எத்தனை வரன்கள் வந்தாலும், அத்தனையும் ஏதோ ஒரு காரணத்தால் அமையாமல் போனது. இந்தக் கவலையில் இருந்தவருக்கு, பத்மாவதி தாயார் சமேத திருவேங்கடநாதப் பெருமாள் பற்றித் தெரிய வந்தது.

உள்ளூரிலேயே இருந்தும் அவரால் நேரில் சென்று பெருமாளை சேவித்து, தன் கோரிக்கையைச் சமர்ப்பிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு வேலைச் சுமை அவரை அழுத்தியது. இருப்பினும், தன் வீட்டு பூஜை அறையில் அமர்ந்து, மகளுக்கு விரைவிலேயே ஒரு நல்ல வரன் அமைந்து, நல்லபடியாகத் திருமணம் நடக்கவேண்டும் என்று சித்தமல்லி திருவேங்கடநாதப் பெருமாளிடம் மனமுருகிப் பிரார்த்தித்துக் கொண்டார். தாயாருக்குத் திருமாங்கல்யம் காணிக்கை செலுத்துவதாகவும் வேண்டிக்கொண்டார்.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 12

கலியமூர்த்தியின் தூய பக்திக்குக் கட்டுப்பட்டவராக, பெருமாள் அவருக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார். விரைவிலேயே நல்ல வரன் அமைந்து கலி யமூர்த்தியின் மகளுக்கு சீரும் சிறப்புமாகத் திரு மணம் நடைபெற்றது கலிய மூர்த்தியும் தான் வேண்டிக் கொண்டபடியே தாயாருக்குத் திருமாங்கல்யம் காணிக்கை செலுத்தினார்.

சித்தமல்லி திருவேங்கட நாதப் பெருமாள், கலியுகத்தின் கற்பக விருட்சமாகவும் காம தேனுவாகவும் திகழும் மகான் ஸ்ரீராகவேந்திரரால் வழிபடப்பெற்றவர் அல்லவா? ஆக, அந்தப் பெருமாளின் கருணைத் திறம் பற்றிச் சொல்லவும் வேண்டுமா என்ன?!
சென்னையைச் சேர்ந்த சங்கீதா என்ற பக்தையின் வாழ்க்கையில் பெருமாள் நிகழ்த்திய அதிசயம் நம்மைச் சிலிர்க்கச் செய்கிறது. அன்பான கணவர், வசதியான குடும்பம் என எல்லாம் இருந்தும், திருமணம் நடைபெற்றுப் பல வருடங்கள் ஆகியும் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. பல மருத்துவர்களைப் பார்த்தும் பலன் இல்லை. ஒவ்வொரு நாளும் வேதனையாகவே விடிந்தது சங்கீதாவுக்கு.

இந்த நிலையில், வேதனை இருள் போக்க வந்த விடிவெள்ளியாக சங்கீதாவுக்கு ஓர் உத்தரவு கிடைத்தது. சங்கீதாவின் அக்கா சுதா ஒருநாள், ‘‘எத்தனையோ டாக்டர்களைப் பார்த்தும் பலன் இல்லையே என்று வருத்தப்படாதே! எல்லோருக்கும் மேலான டாக்டராக கடவுள் இருக்கிறார். நாம் ஏன் நம் ஊருக்குச் சென்று பெருமாளிடம் பிரார்த்தனை செய்துகொள்ளக் கூடாது?” என்று கேட்டார்.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 12

அக்கா சொன்ன வார்த்தைகள் சங்கீதாவுக்கு இனம்புரியாத ஆறுதலைத் தந்தன. அக்கா சொன்னதுபோல், ஊருக்குச் சென்று பெருமாளையும் தாயாரையும் தரிசித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதாக மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. உடனே, குடும்பத்தோடு சித்தமல்லிக்குப் புறப்பட்டுவிட்டார் சங்கீதா. 2013-ம் வருடம் டிசம்பர் 18-ம் தேதி சித்தமல்லிக்குச் சென்று, பெருமாளையும் தாயாரையும் தரிசித்து வணங்கியதுடன், மணி ஒன்றையும் வாங்கி, தம்பதி சமேதராக சந்நிதியில் கட்டிவிட்டு வந்தனர்.

தன்னை நம்பிச் சரணடைந்ததுடன், நாளும் தன் சந்நிதியில் மங்கல மணியோசை ஒலிக்கச் செய்த சங்கீதா தம்பதியருக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார் திருவேங்கடநாதப் பெருமாள். சங்கீதாவின் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய லீலை, பெரும் அதிசயம்தான். எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்தும் பலனின்றி வாடிய சங்கீதா தம்பதியருக்கு, பெருமாளை தரிசித்து வணங்கி வந்த அடுத்த சில மாதங்களிலேயே சந்தோஷச் செய்தி கிட்டியது. ஆம்... சங்கீதா கருத்தரித்தார்.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 12

அவர்கள் பெருமாளின் சந்நிதியில் மணி வாங்கிக் கட்டியது 2013, டிசம்பர் 18-ம் தேதியன்று. அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 2014-ல், அதே டிசம்பர் 18-ம் தேதியன்று, மணியோசை போல் மழலைக் குரல் ஒலிக்க சங்கீதாவுக்கு அழகான ஓர் ஆண் குழந்தை பிறந்தது என்றால், இதைப் பெருமாளின் கருணைத் திறன் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? திருவேங்கடநாதப் பெருமாளின் இந்த அருளாடலை இன்றைக்கும் பார்ப்போரிடமெல்லாம் சொல்லிச் சொல்லிச் சிலிர்க்கிறார்கள் சங்கீதா தம்பதியினர்.
இப்படியாக பெருமாள், பத்மாவதி தாயார் சமேதராகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட சில வருடங்களிலேயே, எண்ணற்ற பக்தர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் புரிந்து, அவர்களைத் தன் கோயில் திருப்பணிகளில் பக்திபூர்வமாக ஈடுபடச் செய்திருக்கிறார்; இன்னமும் செய்து வருகிறார்.

மந்த்ராலய மகானால் வழிபடப்பெற்று, பல தலைமுறைகளாக பலருக்கும் அருள்புரிந்து வந்த திருவேங்கடநாதப் பெருமாள், பின்பு ஏன் இத்தனை காலமாக மண்ணுக்குள் மறைந்திருக்கவேண்டும்? அதற்கான காரணம்தான் என்ன? இப்போது அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

அந்த தேவ ரகசியங்களைத் தெரிந்து கொள்ளலாமா..?

- சித்தம் சிலிர்க்கும் 

படங்கள்: க.சதீஷ்குமார்