பிரசாத பிசினஸ்!
‘நாராயண, நாராயண’ என்ற குரல் கேட்டது. கூடவே, புளியோதரை மற்றும் மிளகு வடையின்

வாசமும் சேர்ந்தே வந்தது. “எப்போதும் நீர்தானே என்னை உபசரிப்பீர்! ஒரு மாறுதலுக்கு, நான் உமக்காக இந்தப் புளியோதரையையும் மிளகு வடையையும் வாங்கி வந்தேன்’’ என்றபடி, நம்மிடம் அந்தப் பொட்டலங்களை நீட்டினார் நாரதர்.
வாங்கிக் கொண்டு நன்றி தெரிவித்த நாம், ‘‘பிரசாதத்தைப் பிறகு சாப்பிடுகிறோம். முதலில் நீர் எந்தக் கோயிலுக்குப் போய் வந்தீர்? அதைச் சொல்லும்?’’ என்று கேட்டோம்.
‘‘சொல்கிறேன். அதற்கு முன்... பிரசாதம் என்பதற்கு அர்த்தம் தெரியுமா உமக்கு?’’ என்று கேட்டார் நாரதர்.
‘‘சாதம் என்றால், நாம் பசிக்காக உண்கிற சாதாரண உணவு. அதுவே, இறைவனுக்குப் படைக்கப்பட்ட பின்பு புனிதத்துவம் பெற்றுப் பிரசாதம் ஆகிறது. ‘பிர’ என்று அடைமொழி கலந்தாலே, அது புனிதத்துவம் பெற்றது என்றாகிவிடுகிறது. வசனம் என்றால் ஜனங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது. பிரவசனம் என்றால், இறைவனின் புகழைப் பாடுவது. தோஷம் என்றால், கெடுதலானது; பிரதோஷம் என்பது கெடுதல் நீங்கிப் புண்ணியம் பெற்றது எனப் பொருள்...” என்று நாம் நமக்குத் தெரிந்தவற்றை எடுத்து விட, ‘போதும், போதும்’ என்று கையமர்த்தினார் நாரதர்.
‘‘ஆமாம். பிரசாதம் என்பது ஒருகாலத்தில் புனிதமாகத்தான் இருந்தது. இன்றைக்கு அப்படி இல்லை என்பதுதான் நமது துர்பாக்கியம்” என்றார்.

“என்ன சுவாமி சொல்கிறீர்கள்?” என்று பதறினோம்.
‘‘யதார்த்த நிலைமையைத்தான் சொல்கிறேன். முன்னெல்லாம் கோயில்களில் பிரசாதம் தயாரிப்பதற்கென்று மடப்பள்ளிகள் இருக்கும். அங்கே அதற்கென்று நியமிக்கப்பட்ட தகுதியான நபர்களால் மிகத் தூய்மையான முறையில் பிரசாதம் தயாராகி, இறைவனுக்குப் படைக்கப்பட்டு, பின்பு பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். ஆனால், இன்றைக்குப் பல கோயில்களில் பிரசாதம் கமர்ஷியல் வியாபாரம் ஆகிவிட்டது. பிரசாத விற்பனைக்கென்றே டெண்டர் விட்டு ஆட்களை நியமிக்கிறார்கள். பிரசாத ஸ்டாலை ஏலம் எடுக்கும் நபர்கள், வெளியில் எங்கெல்லாமோ உணவுப் பண்டங்களைத் தயாரித்து வந்து, கோயில்களில் விற்பனை செய்கிறார்கள். நீங்கள் முன்னே சொன்ன இலக்கணப்படி இதையும் பிரசாதம் என்று ஒப்புக்கொள்வீர்களா?’’ என்று கேட்டார் நாரதர்.
‘‘தப்புதான்! அம்மாதிரி விற்பனையாகும் பண்டங்களைப் பிரசாதம் என்று சொல்ல முடியாதுதான். ஆனால்...”
“ஏன் நிறுத்திவிட்டீர்கள்? கேட்க நினைத்ததை தைரியமாகக் கேளுங்கள்!” என்றார் நாரதர்.
“கோயிலில் பிரசாத ஸ்டால் அமைக்க டெண்டர் விடுவதால் கோயிலுக்கு வருமானம் கிடைக்குமல்லவா? அது நல்ல விஷயம்தானே?’’ என்றோம்.


‘‘கோயிலுக்கு வருமானம் வருவதற்கு எத்தனையோ வழிகள் உண்டு. அவற்றை ஒழுங்காக நடை முறைப்படுத்தினாலே கோயிலுக்குத் தேவையான வருமானம் கிடைத்து விடும். இப்படி டெண்டர் விட்டு, வெளியில் தயாரித்து எடுத்து வந்து பிரசாதம் என்ற பெயரில் விற்பனை செய்வது சாஸ்திர சம்மதம் இல்லை. சாஸ்திர சம்மதத்தை விடுங்கள்... டெண்டர் எடுப்பவர்கள் அதில் லாபம் பார்க்க நினைப்பார்களா, அல்லது கைக்காசைப் போட்டுப் புண்ணியம் தேடிக்கொள்ள விரும்புவார்களா? அவர்களில் எத்தனை பேர் பக்தி சிரத்தையோடு பிரசாத தயாரிப்பில் ஈடுபடுவார்கள்? பிரசாத விற்பனையால் இன்னொரு அநாசாரமும் நடக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள், பிரசாதம் என்ற பெயரில் அங்கே விற்கப்படும் உணவுப் பொட்டலங்களை வாங்கி, கோயில் பிராகாரத்திலேயே உட்கார்ந்து சாப்பிடுவதும், பிறகு இலைகளையும் பேப்பர் களையும் கோயிலுக்கு உள்ளேயே ஆங்காங்கே போட்டுவிட்டுப் போவதும், கோயில் திருக் குளங்களில் எச்சில் கையைக் கழுவுவதுமாக கோயிலின் தூய்மையைக் கெடுப்பதைப் பல கோயில்களில் நானே பார்த்தேன்!’’ என்றார் நாரதர்.
‘‘நீர் சொல்வதைக் கேட்டால், ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. பல கோயில்களில் மடப் பள்ளியே இல்லை என்று கேள்விப்பட்டோம். அங்குள்ள அர்ச்சகர்தான் தன் வீட்டில் இருந்து சுத்த அன்னம் தயாரித்து எடுத்து வந்து, இறைவனுக்கு நைவேத்தியம் செய்கிறார் என்றும் அறிகிறோம். இது உண்மையா?’’ என்றோம்.
‘‘நீர் கேள்விப்பட்டது உண்மைதான். பல கோயில் களில் இந்த நிலைதான்!’’ என்ற நாரதர், அர்ச்சகர்கள் தரப்பில் தெரிந்து கொண்ட சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
‘‘கோயில்களுக்கு வரும் பக்தர்களின் கோரிக்கைகளை இறைவனிடம் முறையிட்டு அர்ச்சனை செய்பவர்கள் அர்ச்சகர்கள்தான். அவர்களுக்குத் தான் கோயிலைப் பற்றிய எல்லா விஷயங்களும் முழுமையாகத் தெரிந்திருக்கும். ஆனால், பொருளாதார ரீதியாக அவர்கள் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் மிக மிகக் குறைவு. பிரசித்திபெற்ற சில கோயில்களில் இருக்கும் அர்ச்சகர்கள் ஓரளவு நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். மற்றபடி, நான் பார்த்தவரையில் பெரும்பாலான கோயில் அர்ச்சகர்கள் சிரமத்தில் தான் இருக்கிறார்கள்’’ என்றார்.
“என்னவோ போங்கள், கேள்விப்படுவது ஒன்றும் நல்லதாக இல்லை. போகட்டும், ஏதோ அவசர தகவல் வந்திருக்கிறதென்று கிளம்பிப் போனீரே, அதென்ன விஷயமோ?” என்று கேட்டோம்.

‘‘அதைத்தான் சொல்ல வந்தேன். நீர் முந்திக் கொண்டீர். சென்னை, வடபழநி பகுதியில் இருக்கிறது வேங்கீஸ்வரர் கோயில். பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படும் அந்தக் கோயிலுக்கு ஏராளமான நிலங்களும் சொத்துக்களும் உண்டு. போன வருஷம் ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. என்ன காரணத்தாலோ, அந்தக் கோயிலின் பரம்பரை அறங்காவலராக இருந்தவரை நீக்கி, சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது இந்துச் சமய அறநிலையத் துறை. ஆனால், நீக்கப்பட்ட அந்தப் பரம்பரை அறங்காவலரின் மனைவியையே தற்போது அந்தக் கோயிலுக்கு அறங்கா வலராக நியமித்திருக்கிறது அறநிலையத் துறை. அவரை நீக்கியது ஏன், இவரைக் கொண்டு வந்தது ஏன், இடையில் என்னதான் நடந்தது என்பதெல்லாம் அந்த வேங்கீஸ்வரருக்கே வெளிச்சம்!’’ என்ற நாரதரின் பார்வை, நமது லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்டின் சிஸ்டத்தில் காணப்பட்ட இந்த இதழுக்கான ‘ஆலயம் தேடுவோம்’ பக்கங் களில் விழுந்தது. ‘‘ஏதேது, என் வேலையை உம்முடைய நிருபரே எடுத்துக்கொண்டு விட்டார் போலிருக்கிறதே?’’ என்று கேட்டுக் கண்சிமிட்டினார்.

‘‘கோபித்துக் கொள்ளாதீர். அதுபற்றிய மேல் விவரங்களை நீர்தானே விசாரித்துச் சொல்ல வேண்டும்’’ என்றோம். கூடவே, நமது நிருபர் சேகரித்து வந்திருந்த, ஊர்மக்கள் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு, அதன்பேரில் அறநிலையத் துறை ஆணையர் வேலூரில் இருக்கும் அறநிலையத் துறையின் இணை ஆணையருக்கு அனுப்பிய கடிதம் போன்றவற்றின் நகல்களை நாரதரிடம் கொடுத்து, விசாரிக்கச் சொன்னோம்.
அவர் கிளம்பிச் சென்ற பின்புதான் பசி என்கிற ஒரு விஷயமே நமக்குள் உறைக்க, அவர் தந்த பொட்டலங்களைப் பிரிக்கத் தொடங்கி னோம்... ‘இது பிரசாதமா, வெறும் சாதமா?’ என்கிற
கேள்வியோடு!