காசி கால பைரவர்! & கழுகுமலை அற்புதம்!
கழுகுமலை அற்புதம்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது கழுகுமலை. இங்கே மயில் வாகனத்தில் ஆறு திருக்கரங்களுடன் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமான் சிறந்த வரப்பிரசாதி. இங்கே இவரது மயில் வாகனம் முருகப் பெருமானுக்கு இடப்புறமாக திரும்பி நிற்கிறது. அதேபோல், இந்த முருகன் கோயிலில் உள்ள தூண்களில், ராமர் மற்றும் ஆஞ்சநேயரின் சிற்பங்கள் இடம்பெற்றிருப்பதும் சிறப்பம்சம்.

கழுகுமலை சமணச் சிற்பங்களுக்கும் பெயர்பெற்ற ஊர். ‘களப்பிரர்’ காலத்தில் இந்தப் பகுதியில் சமண சமயம் வேரூன்றி வளர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக, வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி வரலாற்று தலமாகவும் திகழ்கிறது கழுகுமலை!
- சி. பரமேஸ்வரன், மதுரை-2
காசி கால பைரவர்!
சிவபெருமானின் திரிசூலத்தால் தாங்கப்படுவதும், எக்காலத்தும் அழியாததும் ஆன நகரம் காசியாகும். காசியிலுள்ள அனைத்துச் சிவாலயங்களிலும் சிவபெருமானின் தலைமைக் காவலரான பைரவமூர்த்தி அனேக பெயர்களில் எழுந்தருளியுள்ளார். இவற்றின் தலைமையிடம் காலபைரவர் சந்நிதியாகும்.
இது, காசியில் விசுவநாதர் கோயிலுக்கு வடக்கில் பைரவநாத் என்னும் இடத்தில் உள்ளது. காசிக்குச் செல்பவர்கள் தவறாமல் இந்த பைரவரை தரிசனம் செய்வதுடன் அவருடைய பிரசாதமான கயிற்றையும் அணிந்துகொள்ள வேண்டும். இதனால் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள், பயம் விலகும். மேலும் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் ஏற்படும் மரண வேதனைகளும் துன்பமும் மயக்கமும் உண்டாகாது என்பது நம்பிக்கையாகும். இவர்பேரில் காலபைரவ அஷ்டகம் பாடப்பட்டுள்ளது. இதனைத் தினமும் பாராயணம் செய்து வந்தால் பகைவர்கள் தொல்லை நீங்கும்.

காசியே பைரவரின் பிரதான க்ஷேத்திரமாகும். இங்கு செய்த வேள்வியில் தோன்றியவரே திருப்பத்தூர் யோகபைரவர் என்பர். இங்கு கங்கை ஆற்றிலிருந்து வெளிப்பட்டு ராமதே சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதே நாகப்பட்டினம் சட்டநாதர் திருவுருவமாகும். இப்படி எல்லா பைரவர்களும் காசியிலிருந்து வெளிப்பட்டுப் பல தலங்களில் நிலைபெற்றுள்ளனர்.
- பூசை. ஆட்சிலிங்கம், சென்னை-4