தொடர்கள்
Published:Updated:

தைப்பூசத்தில் ஸ்ரீரங்க சீர்வரிசை!

தைப்பூசத்தில் ஸ்ரீரங்க சீர்வரிசை!

தை மாதத்துக்கு உரிய நட்சத்திரம் புஷ்யம் எனப்படும் பூச நட்சத்திரம் ஆகும். தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் பூச நட்சத்திரத்தில் குருவை வழிபடுவதால், வாழ்க்கையில் தெளிவு கிடைக்கும். மேலும், தை மாத பூசத்தன்று சிவபெருமானையும் முருகப்பெருமானையும், மற்றும் அவரவருக்கு உகந்த இஷ்ட தெய்வங்களுக்கும் தேனால் அபிஷேகம் செய்வது விசேஷம் என்கின்றன ஞானநூல்கள்.

தைப்பூசத்தன்று சூரியனின் 7-ம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் 7-ம் பார்வை சூரியன் இருக்கும் மகரத்திலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும், சந்திரனால் மனோ பலமும் கிடைக்கும்.

முருகவேள் சூரபதுமனை அழிக்கப் புறப்பட்டபோது, சக்தி தேவி தனது ஆற்றல் அனைத்தையும் ஒன்றுதிரட்டி வேலாயுதமாக மாற்றி, அந்த சக்தி வேலை முருகப்பெருமானுக்கு அளித்தது, தைப்பூச நன்னாளில்தான்.

தைப்பூசத்தில் ஸ்ரீரங்க சீர்வரிசை!

வள்ளியை முருகப்பெருமான் மணந்ததும் ஒரு தைப் பூசத்தன்றுதான். வள்ளியை மணந்ததால் முருகன் மீது ஊடல் கொண்ட தெய்வானையைச் சமாதானம் செய்து, தேவியர் இருவருடனும் முருகன் திருக்காட்சி அருளியதும் இந்த நன்னாளில்தான்.

நடராஜர், பார்வதிதேவியுடன் சேர்ந்து ஆடிய ஆனந்த தாண்டவத்தை முப்பத்துமுக்கோடி தேவர்களும், பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர் களும், தில்லை வாழ் அந்தணர்களும் தில்லையில் தரிசித்து மகிழ்ந்தது, ஒரு தைப்பூச நாளில்தான்.

தைப்பூசத்தையொட்டி தில்லை சிவகங்கை தீர்த்தக்கரையில் தீர்த்தவாரியும் நடன தரிசன மும் மிகச்சிறப்பாக நடைபெறும். இந்தத் திருக்காட்சியைத் தரிசித்தால் எல்லா நலன்களும் கூடும். அதேபோல், நாட்டியாஞ்சலி விழா 10 நாட்கள் நடைபெற்று தைப்பூசத் தினத்தன்று நிறைவு பெறும்.

முசிறி அருகே குளித்தலையில் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு கடம்பவனநாதர். இந்தத் தலத்தில் சப்த கன்னியருக்கும் சிவ தரிசனம் கிடைத்தது தைப்பூசத்தன்றுதான்.

திருச்சேறை தலத்தில் ஸ்ரீமந் நாராயணரை தியானித்துத் தவம் இருந்த காவிரித் தாய்க்கு, பெருமாளின் திவ்ய தரிசனம் கிடைத்த நாளும் தைப்பூசம்தான்.

தைப்பூச விழாவின்போது, ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோயிலில் இருந்து, பெருமாளின் சகோதரி சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசைகள், புத்தாடைகள் அனுப்பப்படுகின்றன.

வள்ளலார், 1872-ம் வருடம் ஜனவரி 25-ல் நடந்த தைப்பூசத் திருநாளில் முதன்முதலாக ஜோதி தரிசனத்தைத் துவக்கினார். வள்ளலார் ஜோதியில் கலந்ததும் தைப்பூசத்தில்தான். தைப்பூசத்தன்று வடலூர் சத்திய ஞான சபையில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். அன்று காலை 6:30, 10:00, மதியம் 1:00 மணி, இரவு 7:00 மற்றும் 10:00 மணி, மறுநாள் காலையில் 5:30 மணி என ஆறு வேளையும் ஏழு திரைகளும் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் கிடைக்கும். தவிர மாதாந்திர பூச நட்சத்திர தினங்களில், இரவு 8:00 மணிக்கு ஆறு திரைகளை மட்டும் விலக்கி, மூன்று முறை ஜோதி தரிசனம் காட்டப்படும்.

தொகுப்பு: எஸ்.ஸ்ருதி, சென்னை,

ஆர்.ராஜலட்சுமி, சேலம்