மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்பி.ஸ்ரீ., ஓவியங்கள்: சித்ரலேகா

மகா கவியும் மகா மகமும்!

22.2.1921 செவ்வாய்க் கிழமையன்று ஒரு மஹாமக உற்சவம் கும்பகோணப் பகுதியில் சிறப்பாக நடந்தது. இவ்வுற்சவ மகிமையைப் பற்றி மகாகவி பாரதியார் 24-2-1921-ல் அருமையான ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரை எழுதினாரே ஒழிய, கவிஞர் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லையென்று இக்கட்டுரை மூலம் அறிகிறோம்.

‘லக்ஷக்கணக்கான ஹிந்துக்கள் நேற்று அதில் ஸ்நானம் செய்திருப்பார்கள்’ என்று கவிஞர் ஓர் இடத்தில் இக் கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதால் இச் செய்தியை நாம் ஊகிக்க முடிகிறது. அப்போது அவர் என்ன கஷ்ட நிலையிலிருந்தாரோ, பாவம்! அடுத்த மஹாமகத்துக்கு அவர் இல்லை! இக்கட்டுரை எழுதிய ஏழாவது மாதத்திலேயே புகழுடல் எய்திவிடுகிறார்.

‘இந்த எழுத்து தெய்வம்; எழுதுகோல் தெய்வம்’ என்று சொன்ன தெய்விகக் கவிஞரின் வாசகங்களை வரும் மஹாமக விழா சமயம் தமிழ்கூறும் நல்லுலகு காண்பது பொருந்துமாகையால், திரு பெ.தூரன் அவர்கள் தொகுத்துப் பதிப்பித்துள்ள ‘பாரதி தமிழ்’ என்ற நூலிலிருந்து இக்கட்டுரையினை அப்படியே வெளியிடுகிறோம்.

அருட்களஞ்சியம்

24 பிப்ரவரி 1921 ரௌத்திரி மாசி 13:

மந்த்ரனை தேவ தேவன் என்பர். மற்ற மனிதருக்கு வானவர் எப்படியோ, அப்படி வானவர்க்கவன் என்பது குறிப்பு. வட மொழியில் வால்மீகி, காளிதாஸர்களையும், தமிழில் கம்பனையும் புகழேந்தியையும், இங்கிலீஷில் ஷெல்லியையும், ‘கவிகளின் கவி’ என்று சிறப்பித்துச் சொல்லுகிறார்கள். அதாவது மற்ற மனிதருக்குக் கவிகளால் எத்தனை புதிய சுவை கிடைக்கிறதோ, அத்தனை புதிய சுவை கவிஞருக்கு அவ்வால்மீகி முதலியவர்களிடம் கிடைக்கிறதென்பது குறிப்பு.

அதுபோல், கும்பகோணத்திலுள்ள அமிர்த வாவிகள் என்று சொல்லப்பட்ட பொற்றாமரைக் குளம், மஹாமகக் குளம் இவ்விரண்டும் புண்ய தீர்த்தங்களுக்குப் புண்ய தீர்த்தமென்று புராணம் சொல்லுகிறது. அதெப்படியெனில், முற்காலத்தில் ஒன்பது தீர்த்த தேவதைகளும் ஈசனிடத்தில் சென்று, ‘‘கடவுளே, உலகத்திலுள்ள பாவிகளெல்லாரும் எங்களிடம் வந்து மூழ்கித் தங்கள் பாவங்களையெல்லாம் எங்களுக்குக் கரைத்துவிட்டு விட்டுப் புண்ணியாத்மாக்களாகிச் செல்லுகின்றனர். நாங்கள் சம்பாதிக்கும் இந்தப் பாவங்களுக்கெல்லாம் விமோசனம் அருள் புரிய வேண்டும்” என்று ப்ராத்தனை செய்தனர்.

அவர்களிடம் கருணை பாலித்து எம்பெருமான், ‘‘புண்ய தீர்த்தங்களே! பாவங்களாலே தீண்டப்படாத அமிர்த வாவிகள் இரண்டு நான் கும்பகோணத்தில் சமைத்திருக்கிறேன். அவற்றில் சென்று ஸ்நானம் புரிந்தால் உங்களுடைய பாவங்கள் விலகி விடும்” என்று கட்டளை புரிந்தார்.

பன்னிரண்டு வருஷங்களுக்கொரு முறை இங்கு கங்கை முதலிய தீர்த்த தேவதைகள் வந்து ஸ்நானம் புரியும் ஸமயமாகிய மஹாமக புண்ய காலம் (பெப், 22) செவ்வாய்க் கிழமையன்று கும்பகோணத்தில் கொண்டாடப்பட்டது. லக்ஷக்கணக்கான ஹிந்துக்கள் நேற்று அதில் ஸ்நானம் செய்திருப்பார்கள்.

ஆனால், ‘இத்தனை பேர்களும் ஸர்வபாப ரஹிதர்களாய்ப் பரம சுத்தத்தன்மை எய்திவிடுவார்களோ’ என்று சில மதப் பற்றில்லாதார் ஆக்ஷேபிக்கலாம்.

மதப் பற்றுடையார், அஃதற்றோர் என்னும் இரு திறத்தாரும் உணர்ந்து கொள்ளும்படி தீர்த்த யாத்திரைகளின் தத்துவத்தை இங்கு விளக்குவோம். இவற்றில் பாவமழிந்து புண்ணியத் தன்மை பெற வேண்டுமானால், உண்மையான நம்பிக்கையிருக்க வேண்டும் என்று நம்முடைய புராதன ஹிந்து சாஸ்த்ரங்கள் மிகத் தெளிவாக வற்புறுத்தியிருக்கின்றன. உண்மையான மனக் கோளின்றி கங்கையில் முழுகினாலும், மஹாமகத்தில் மூழ்கினாலும் பாப கர்மந் தொலையாதென்று சாஸ்த்ரங்கள் தெளிவுபடத் தெரிவிக்கின்றன. இனிமேல் நாம் பாவம் பண்ணுவதில்லையென்ற மனோ நிச்சயம் வேண்டும்.

தீர்த்த யாத்திரையின் அர்த்தமும் பயனும்


ஒருவன் இந்த க்ஷணம் முதல் பாவம் செய்வதில்லையென்று மனவுறுதி செய்து கொள்ளுதலாகிய அக்நி மயமான செய்கையாலேயே அவன் அதுவரை செய்த பாவமெல்லாம் எரித்துவிடப்படுகிறது. ‘ஞானாக்நிஸ் ஸர்வகர்மாணி பஸ்ம ஸாத் என்று பகவத் கீதையில் கடவுள் சொல்லியிருக்கிறார்.

பாவத்தை இனிச் செய்யவில்லையென்ற தீர்மானம் உண்மையாக இருக்க வேண்டும். ஞானமே அவ்வளவுதான். அதைக் காட்டிலும் பெரிய ஞானம் கிடையாது. சிலர் தவத்தால் ஞானமெய்த நாடுகிறார்கள். சிலர் தானத்தால், சிலர் ஆராய்ச்சியால், சிலர் தியானத்தால், சிலர் பூஜையால் ஞானமெய்த முயலுகிறார்கள். ஆனால், எல்லா வழிகளும் உண்மையான வழிகளே. இவையெல்லாம் ஞானத்தைத் தரும். ஆனால், எந்த வழியாலே தரும்? பாவத்தைத் தீர்த்துவிடுதலாகிய வழியிலே தரும். அவற்றால் பாவம் நீங்கும். அதனால் மோக்ஷம் அல்லது அறிவு மயக்கம் தெளியும். அதிலிருந்து ஞானம் உண்டாகும். ஞானமாவது எல்லாம் கடவுள் மயமென்ற அனுபவம். பாவமாவது தனக்கெனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவித்தல். இங்ஙனமே, புண்யமாவது தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பக் கலப்பில்லாத சுத்தமான இன்பம் விளைவித்தற்குரிய செய்கை என்பது சாஸ்த்ரகோடிகளின் பரம ஸிந்தாந்தம். எல்லாம் ஆத்மா, எல்லாம் கடவுள் ஆதலால், எல்லாம் தான் என்ற ஞானத்தால் பிற உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்கும் குணம் நீங்கிவிடும். அதாவது பாவம் போய்விடும். நியாயம் புண்யம்; அநியாயம் பாவம். ஹிதம் புண்யம்; அஹிதம் பாவம். ஸத்யம் புண்ணியம்; அஸத்யம் பாவம். திருப்தி புண்யம்; துக்கம் பாவம். மரணமாவது பாவத்தின் கூலியென்று கிறிஸ்துவ வேதம் சொல்லுகிறது.

‘‘இங்ஙனம் பாவத்தைத் துறந்துவிட விரும்புவோனுக்கு மனோ நிச்சயமும், ஞான உதயமும் கதியாயின், பணச் செலவு செய்து ரயிலேறிக் கும்பகோணத்துக்கும், காசிக்கும், ராமேசுவரத்துக்கும் ஏன் போக வேண்டும்?” என்று சிலர் வினவக் கூடும்.

மன மாறுதல்கள் சாசுவதமான இடத்தே விரதங்கள் என்று கூறப்படும். பெரிய சாசுவதமான ஸங்கல்பங்கள் விரதமெனப்படும். இந்த விரதங்கள் மனிதருடைய நினைப்பில் நன்றாக அழுந்தும்பொருட்டு ஆன்றோர் உலகமெங்கணும் இவற்றுக்குச் சில சடங்குகள் வகுத்திருக்கிறார்கள். கல்வி தொடங்கப் போகிறபோது ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. விவாகம் பண்ணும்போது மிகவும் கோலாகலமான கிரியைகள் நடக்கின்றன. புதிய வீட்டில் குடிபுகும்போது ஒரு சடங்கு நடத்துகிறோம். இவற்றின் நோக்கம், நாம் ஏதேனும் அமங்களத்தை நீக்கி மங்களத்தை சாசுவத உடைமையாகச் செய்துகொள்ள வேண்டுமென்பதேயாம். நான் மேலே கூறியபடி, மரணம் பாவத்தின் கூலியென்று, கிறிஸ்துவ வேதம் செல்வதைக் கருதுமிடத்தே, அமங்களமனைத்திலும் அமங்கள மானது பாவமென்று விளங்குகிறது. எனவே, மங்களங்களிற் சிறந்தது புண்யமென்பதும் வெளிப்படையாம்.

இப்படிப்பட்ட பாவத்தைக் களைந்து புண்யத்தைப் போர்த்துக் கொள்வதாகிய ராஜ விரதத்துக்கு ஒரு சடங்கு வேண்டாவோ? அவ்விதச் சடங்கே மஹாமக முதலிய புண்ய தீர்த்த யாத்திரை யென்க.

கட்டுரை அனுப்பியவர்: வி.ச.வாசுதேவன் - 11.2.68 ஆனந்தவிகடன் இதழில் இருந்து...

காதலின் கன்னி வெற்றி

நன்றாகத் துடைக்கப்பட்டுத் தகதக வென்றிருக் கும் வில் ஏதோ ஒரு பொன்மலைபோலப் பயங்கர மாய்க் காண்கிறது பார்ப்பவர்களுக்கெல்லாம். ஆனால், காதலன் கண்களில் அது அப்படிக் காணப்படவில்லையாம்.

ஆடக மாமலை அன்னது தன்னைத்,
தேடரு மாமணி சீதையெ னும்பொன்
சூடக வால்வளை சூட்டிட, நீட்டும்
ஏடவிழ் மாலைஇ(து) என்ன எடுத்தான்.


அந்தப் பெரிய வில் ராமன் கண்களுக்கு மலையாகத் தோன்றவில்லையாம்; மாலையாகத் தான் தோன்றுகிறதாம். ஆம், காதலிக்குச் சூட்ட வைத்திருக்கும் மணமாலையாகிய பூமாலை போலவே காண்கிறது, காதல் நிறைந்த கண்களுக்கு.

அருட்களஞ்சியம்

‘தேடரு மாமணி’ என்று காதலியை ஹிருதயத்தில் பிரதிஷ்டை செய்து வைத்திருக்கும் காதல், எவ்வளவு எளிதாக, எவ்வளவு குதூகலமாக, எவ்வளவு வேகமாக, வில்லை முறித்து வெற்றி சூடுகிறது!

ராமன் அநாயாஸமாக வில்லை எடுத்ததும் ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு. கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தார்களாம். இமைகளைக் கொட்டாதபடி தடுத்து ஒரே பார்வையாய்ப் பார்த்துக் கொண்டே இருந்தார்களாம், - ‘ஒவ்வொரு செயலையும் இம்மி விடாது பார்க்க வேணும்’ என்ற பேராசையோடு! அப்படியிருந்தும் அவர்கள் என்ன பார்த்தார்கள்?

தடுத்திமை யாமல் இருந்தவர் தாளில்
மடுத்ததும் நாண்நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்!


வில்லின் ஒரு முனையை ராமன் கால் - பெருவிரலில் வைத்து அழுத்தியதும், மற்றொரு முனை தானே வளைந்து வந்ததென்று அவனுக்கே தோன்றும்படி, அவ்வளவு வேகமாக நாணேற்றப் பார்க்கிறானாம். மற்றவர்களுக்கோ, அவர்கள் ‘தடுத்து இமையாமல்’ பார்த்துக் கொண்டிருந்தபோதிலும் - ராமன் வில்லை வளைத்ததும் தெரியவில்லை, நாண் பூட்டவைத்த தும் தெரியவில்லை. அவன் கையால் வில்லை எடுத்ததைக் கண்டதுண்டு கண்கள். உடனே வில் முறிந்த சப்தத்தைக் காது கேட்டது. ‘எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்!’ அவ்வளவுதான்.

ஏதோ ஒரு செப்படி வித்தை செய்து காட்டுவது போலே காட்டி விடுகிறது இந்தக் கவிதாரூபம், படுவேகமாக வில் முறிந்த வெற்றியை! - ஆம், ராமனுடைய காதலின் கன்னி வெற்றியை.

விண்ணும் மண்ணும் தழுவின!


சிவ தனுசு லேசாக முறிந்துவிட்டது ராமன் கையில். ஆனால் அந்தப் பேரோசை இடி யிடித்தது போலிருந்தது. ‘பிரம்மாண்டமே பிளந்து விட்டதோ?’ என்று கூடத் தோன்றியதாம் முதல் முதல். அவ்வளவு பயங்கரமாக இடித்த இடி, ‘சீதா கல்யாணம் இனிது நிறைவேறும்’ என்று விரைவில் எல்லாரையும் குதூகலப்படுத்தி விட்டது. இந்த மங்களகரமான இடிக்குப் பின் மங்களகரமான மழை:

பூமழை சொரிந்தார் விண்ணோர்,
பொன்மழை பொழிந்த மேகம்;
பாமமா கடல்கள் எல்லாம்
பன்மணி தூவி ஆர்த்த!
கோமுனிக் கணங்கள் எல்லாம்
கூறின ஆசி: கொற்ற
நாமவேல் சனகற்(கு) இன்று
நல்வினை பயந்த(து) என்னா


தோகை விரித்தாடும் மயில் போல் ஆடுகிறார்கள் பெண்கள், ராமன் வில்லை முறித்த ஓசை கேட்டதும். உள்ளத்தின் உவகை புன்னகையாகப் பொங்க, அந்த முகவிலாஸமும் காதிலுள்ள தோடும் கலந்து ஓடி ஒளியிடுகின்றன - இன்னும் ஏதோ ஒரு வில்லை இவர்கள் மாயமாகச் சிருஷ்டிப்பது போல.

அருட்களஞ்சியம்

வில் முறிந்த ஓசை கேட்பதற்கு முன் சில பெண்கள் கணவரோடு ஊடல் கொண்டிருந் தார்கள். சகஜம்தானே? மை தீட்டிய கண்கள் கோபத்தால் சிவந்துவிட்டன, குடியன் கண்களைப் போலே! வில் முறிந்த ஓசை கேட்டதும் அந்தக் காதலர்கள் தங்கள் கலகத்தை மறந்துவிட்டார்கள். வலியப் போய் அணைத்து கொண்டார்களாம் காதலிகள் தங்கள் காதலர்களை. இவர்கள் கோபம் தீர்ந்ததுடன், மஹா லஷ்மிக்குத் தரித்திரர்கள் மீது ஏற்பட்டிருந்த கோபமும் தீர்ந்து போயிற்றாம்:

உண்நற(வு) அருந்தி னாரில்
சிவந்(து)ஒளிர் கருங்கண் மாதர்,
புண்ணுரு புலவி நீங்கக்
கொழுநரைப் புல்லிக் கொண்டார்;
வெண்ணிற மேகம் மேன்மேல்
விரிகடல் பருகு மாபோல்,
மண்ணுறு வேந்தன் செல்வம்
வறியவர் முகந்து கொண்டார்.


அரசாங்கப் பொக்கிஷ சாலைகளெல்லாம் திறந்து வைக்கப்பட்டன.  காவல் இல்லாதபடி, கண்ட கண்ட பேர்களெல்லாம் வாரிக்கொண்டு போகும்படி. ஜனக வேந்தன் கட்டளை அது. இந்த மகத்தான குதூகலத்திலே, ஊடல் தீர்ந்து காதலர்கள் தழுவிக்கொண்டது மட்டுமா? விண் ணும் மண்ணும் தழுவிக் கொள்ளுகின்றன!

வில் இறுத்த விஜய சௌந்தரியத்தைக் காணும் பொருட்டு, தேவலோகத்துப் பெண்கள் இறங்கி வந்தார்களாம் பூலோகத்துக்கு. வந்தவர்கள் உவகை மிகுதியால் இந்தப் பெண்களைத் தழுவிக் கொள்ளுகிறார்கள். மண்ணுலகத்துச் சகோதரிகள் என்றா? தம்மவர்கள் என்றே தழுவிக் கொள்ளு கிறார்களாம். அழகிலும் வேறுபாடு தெரியவில்லை; செய்கையிலும் தெரியவில்லை; ஆடல் பாடல் களினாலும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடிய வில்லையாம்.

என்ன கண்கள்! எத்தனை கண்கள்!

எவ்வளவு உவகையோடு நகரவாசிகள் வில்முறித்த வீரனை மொய்த்துக் கொண்டார்கள்! மிதிலா பட்டணத்தின் சரித்திரத்திலேயே அற்புதமான நிகழ்ச்சியல்லவா? இந்த விஜய சௌந்தரியத்தை அனுபவிக்கும் ஆனந்தம் எப்படி யெல்லாம் வெளிப்படுகிறது பாருங்கள்!

தயரதன் புதல்வன் என்பார்,
தாமரைக் கண்ணன் என்பார்;
புயல்இவன் மேனி என்பார்,
பூவையும் பொருவும் என்பார்;
மயல்உடைத்(து) உலகம் என்பார்,
மானுடன் அல்லன் என்பார்;
கயல்பொரு கடலுள் வைகும்
கடவுளே காணும் என்பார்.


‘தசரத ராஜகுமாரன்!’ என்று மாத்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்கள் சிலர். வேறு வார்த்தையொன்றும் வெளிப்படவில்லை - சொல்லத் தெரியவில்லை - அந்த உவகை வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்ட இவர்களுக்கு.

விஜயசௌந்தரியம் கண்களிலே அலையெறியக் கண்டு தாக்குண்டு, ‘தாமரைக் கண்ணன்’ என்று மட்டும் சொல்லி அந்த வெள்ளத்திலே மூழ்கிப் போனார்கள் வேறு சிலர். மற்றும் சிலர், ‘நீலமேகம் இவன் மேனி!’ என்று அந்த நீல ஜோதி யைக் கண்கூச அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ‘ஜோதி மட்டுமா? ஆஹா! நீலமலர்களின் மென்மையையும் பொலிவையும் அனுபவிக்கி றோம்’ என்று மோகித்துப் போனார் சிலர்.

அருட்களஞ்சியம்

‘ஆஹா, என்ன மோகம்! என்ன மயக்கம்! - இந்த உலகத்துக்குத்தான்’ என்றார் இன்னும் சிலர். இவர்கள் ‘மானுடன் அல்லன்!’ என்றே எண்ணினார்களாம். இவர்களில் சிலர், ‘கடலில் பள்ளி கொண்டிருக்கும் கடவுளே இவன்!’ என்று கூடச் சொல்லிவிட்டார்களாம் அந்த ஆனந்த அதிசயத்திலே. இத்தகைய கூட்டத்திலும் - இப்படி ராம சௌந்தரியத்தை ஆனந்த பரவசமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் - அதே பேர்வழிகள் சீதையின் சௌந்தரியத்தை ராமனுடைய பேரழகுக்கும் மேலாக மதிப்பது இன்னும் அதிசயமல்லவா?

நம்பியைக் காண நங்கைக்(கு)
ஆயிரம் நயனம் வேண்டும்:
கொம்பினைக் காணுந் தோறும்
குரிசிற்கும் அன்ன தேயாம்;


‘நம்பியைக் காணும் நங்கைக்கு அக் காட்சி இரு கண்ணால் அமையாது; அவளுக்கு ஆயிரம் கண்கள் வேண்டும்!’ என்று துணிந்து கூறிய மிதிலை மக்கள், ‘நங்கையைக் காணுந்தோறும் (பார்க்கும்போதெல்லாம்) இந்த அழகனுக்கும் ஆயிரம் ஆயிரம் கண்கள் புதிது புதிதாக வேண்டும்!’ என்று பின்னும் எவ்வளவோ துணிவுடன் சித்தாந்தம் செய்து விடுகிறார்களாம். சீதையின் அழகு ராமனது அழகையும் வென்றுவிடுகிறது என்பது குறிப்பு. இத்தகைய அழகிமீது ராமன் கொண்ட காதல், வில்லை முறித்து வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் என்று ஊகித்தல் கூடும்.

வால்மீகி ராமாயணத்தில் வில் முறித்த வெற்றி ராமனது வீரத் தோள்களின் வெற்றி. கம்ப சித்திரத்திலோ இது காதலின் வெற்றி - வீரத்துக்கு உள்ளுறை உயிராக ராமன் சீதை மீது கொண்ட காதலின் வெற்றி!

- 18.3.45, 25.3.45 மற்றும் 1.4.45 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழ்களிலிருந்து...