நல்லது நடந்தது!
திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில், வடக்கு புறவழிச் சாலையில் தாமிரபரணி கரையோரம் அமைந்திருக்கிறது மணிமூர்த்தீஸ்வரம். இங்குள்ள 900 வருடங்கள் பழைமையான விநாயகர் கோயில் சிதிலம் அடைந்து கிடந்தது குறித்த கட்டுரையை சக்தி விகடன் ‘ஆலயம் தேடுவோம்’ பகுதியில் வெளியிட்டிருந்தோம்.
விநாயகப்பெருமானுக்கான தனிக்கோயில், அண்ணாந்து பார்க்கவைக்கும் பிரமாண்ட மதில்கள், அகன்ற பிராகாரங்களுடன் திகழ்ந்த ஆலயம், சித்திரை மாதம் முதல் மூன்று நாட்கள் சூரியன் தன் கிரணங்களால் இங்கு அருள்பாலிக்கும் மூலவர் உச்சிஷ்ட கணபதியை வழிபடும் அதிசயம் நிகழும் திருக்கோயில்... என இந்த ஆலயத்தின் சிறப்புகளைக் குறிப்பிட்டிருந்ததுடன், ‘தற்போது வெறும் காரைச் சுவர்களுடன் திகழ்கிறது இந்த ஆலயம். மேலும், பல இடங்களில் தூண்கள் வலுவிழந்து, சிற்பங்கள் சிதைந்து, மண்டபங்களும் சிதிலமடைந்து கிடக்கின்றன’ என்று உச்சிஷ்ட கணபதி கோயிலின் அப்போதைய அவல நிலையையும் அந்தக் கட்டுரையில் விவரித்திருந்தோம்.

ஆலய வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறவும், திருப்பணிகள் துவங்குவதற்குமான முயற்சிகளில் ‘ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி அருட்பணி மன்றம்’ என்ற அமைப்பினர் ஆர்வத்துடன் இறங்க, உள்ளூர் இளைஞர்களும் அவர்களோடு கைகோத்தனர். அதனைத் தொடர்ந்து, அப்போதைய இந்துச் சமய அறநிலையத்துறை சிறப்பு ஆணையர் பிச்சாண்டி நேரடியாக வந்து திருப்பணிக் குழுத் தலைவராக ஸ்ரீமத் சுவாமி சங்கரானந்தாவை நியமிக்க, அவர் திருப்பணியை தொடங்கி வைத்தார்.
மும்பை, கொல்கத்தா போன்ற வெளி மாநிலங்களில் உள்ள சக்தி விகடன் வாசகர்களும் கோயில் திருப்பணிக்குத் தங்கள் உதவிகளை வழங்கினார்கள். மேலும், உள்ளூர் பொதுமக்கள், தொழிலதிபர்களின் உதவியுடன் கடந்த சில வருடங்களாக நடந்து வந்த திருப்பணிகள் தற்போது முடிவுற்று, வருகிற 20.1.16 புதன்கிழமை அன்று ஜீர்ணோத்தாரண மகா கும்பாபிஷேகம் வெகு கோலாகலமாக நடைபெற உள்ளது. பக்தர்கள் யாவரும் திரளாகக் கலந்துகொண்டு, ஆனைமுகனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்றுப் பலனடையலாம்.
- என்.முருகன், படங்கள்: எல்.ராஜேந்திரன்