மந்த்ராலயத்தில்...ம.மாரிமுத்து
பக்த பிரகலாதனின் அம்சமாக அவதரித்தவர் ஸ்ரீராகவேந்திரர். தம்முடைய ஜீவித காலத்திலும் சரி, பிருந்தாவன பிரவேசத்துக்குப் பிறகும் சரி... எண்ணற்ற அதிசயங்களைத் தம்முடைய பக்தர்களின் வாழ்க்கையில் நிகழ்த்தி வருகிறார். தமது பிருந்தாவன பிரவேசத்துக்குப் பிறகு அவர் நிகழ்த்திய முதல் அதிசயம், அவருடைய சீடரான அப்பணாச்சார் என்பவர் முடிக்காமல் விட்ட ஒரு ஸ்லோகத்தை நிறைவு செய்ததுதான்!
ஸ்ரீராகவேந்திரர் தாம் ஜீவ சமாதி அடையத் திருவுள்ளம் கொண்டார். அவருடைய சீடரான அப்பண்ணாச்சார் அருகில் இருக்கும்போது தம்மால் அப்படி பிருந்தாவனப் பிரவேசம் செய்யமுடியாது என்பதால், தாம் ஜீவசமாதி அடைய இருப்பது பற்றி மற்றவர்களிடம் தெரிவித்து வருமாறு அவரை அனுப்பி விடுகிறார். தம் குருநாதர் இன்னும் சில காலத்தில் ஜீவசமாதி அடையப் போவதாக எண்ணிக்கொண்ட அப்பண்ணாச்சாரும் புறப்பட்டுச் சென்றுவிடுகிறார். அப்பண்ணாச்சார் சென்றதும் திவான் வெங்கண்ணாவிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு ராகவேந்திரர் ஜபம் செய்யத் தொடங்குகிறார்.இந்த விஷயம், துங்கபத்திரையின் மறுகரையில், பிச்சாலயா என்னும் ஊரில் இருந்த அப்பண்ணாச்சாருக்குத் தெரிய வருகிறது. தன் குருநாதர் பிருந்தாவன பிரவேசம் செய்வதற்கு முன்பாக அவரை தரிசிக்க வேகமாகப் புறப்பட்டபோது துங்கபத்திரையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எனவே, குருநாதரைப் போற்றும் ஸ்லோகங்களைப் பாடியபடியே ஆற்றைக் கடந்து செல்கிறார் வெங்கண்ணா. அதற்குள் பிருந்தாவனம் மூடப்பட்டு விடுகிறது. குருநாதரை தரிசிக்க முடியாத ஏக்கத்தில், கடைசி ஸ்லோகம் பூர்த்தி அடையாமல் பாதியிலேயே நின்றுவிடுகிறது.

சீடருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக பிருந்தா வனத்துக்குள் இருந்து, ‘ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹி’ என்று ஸ்ரீராகவேந்திரரின் அமுதக் குரல் ஒலித்தது. இதுவே, பிருந்தாவன பிரவேசத்துக்குப் பிறகு, ஸ்ரீராகவேந்திரர் நிகழ்த்திய முதல் அதிசயம்.
அதன் பின்பும், பல பக்தர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி வரும் ஸ்ரீராகவேந்திரரின் பிருந்தாவனம் அமைந்திருக்கும் புனித பூமியான மந்த்ராலயத்தில், திருவையாறு இசைவிழா போலவே ‘நாத ஹாரம்’ என்ற பெயரில் ஓர் இசை விழா, கடந்த 11 வருடங்களாக நடைபெற்று வருகிறது. அந்த உன்னத நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ‘ஸ்ரீராகவேந்திர நாதஹார சேவா’ அமைப்பினரை, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தக்ஷிண மந்த்ராலயத்தில், 5-வது நாம சங்கீர்த்தன நிகழ்ச்சியின் போது கிடைத்த இடைவெளியில் சந்தித்தோம்.

அந்த அமைப்பின் தலைவர் சுந்தர ராகவன் நம்மிடம், ‘‘சுமார் 12 வருஷத்துக்கு முன்பு, ராகவேந்திரர் பக்தர்கள் எல்லோரும் சேர்ந்து, மந்த்ராலயத்துல் இசை விழா எடுக்கணும்னு தீர்மானிச்சோம். உடனே, இப்ப இருக்கிற 10 டிரஸ்டி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாட்டுல இருக்கிற மற்ற மந்த்ராலய உறுப்பினர்கள் 108 பேர் சேர்ந்து, ராகவேந்திரரின் ஜன்ம நட்சத்திர நாளில் மந்த்ராலயத்துல ‘நாத ஹாரம்’ என்ற இசை நிகழ்ச்சி நடத்தத் தொடங்கினோம். 2005-ம் வருஷத்துல இருந்து இப்படி இசை நிகழ்ச்சி நடத்திட்டு வர்றோம். 250-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டு, ஸ்ரீராகவேந்திரருக்கு இசை சமர்ப்பணம் செய்வார்கள்.

2011-ம் வருஷத்துல இருந்து, இசை சமர்ப்பணத்துடன் எங்கள் குழு மற்றும் ராகவேந்திரரின் பக்தர்கள் சார்பில் மேலும் ஒரு சமர்ப்பணமும் செய்துட்டு வர்றோம். அப்படி இந்த வருஷம் மந்த்ராலயத்தின் பிரதானதெய்வமான ஸ்ரீமூலராமருக்கு ‘ஸ்வர்ண ஹஸ்தோதக பாத்ர சேவை’ அதாவது நைவேத்தியம் செய்ய தங்கத் தட்டு சமர்ப்பிக் கணும்னு மந்த்ராலய பீடாதிபதிகள் எங்களுக்கு உத்தரவு கொடுத்திருக்கார். அதை பக்தர்கள் எல்லோரும் சேர்ந்து சிறப்பா செய்யணும்னு ராகவேந்திரருடைய திருவுள்ளம்’’ என்றார். அமைப்பின் டிரஸ்டி கண்ணன் என்பவரிடம் பேசினோம்.

‘‘2011-ம் வருஷம் வெள்ளி வீணை சமர்ப்பணம் செஞ்சோம். அதற்கு நிதி திரட்டுறதுக்காக டாக்டர் ஆர்.கணேஷ் தலைமையில் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடத்தினோம். கடந்த ஆண்டு இசை சமர்ப்பணத் துடன், மாற்றுத் திறனாளி பக்தர் களுக்காக மந்த்ராலயத்தில் கட்டப்படும் விடுதிகளுக்கு நிதி திரட்டித் தர முயற்சி பண்ணினோம். ஆனால், போதுமான அளவுக்குப் பணம் சேரலை. கடைசியில்,ஸ்ரீராகவேந்திரரின் ஜன்ம நட்சத்திர தினத்துக்கு முதல் நாள்தான் தேவையான பணம் சேர்ந்தது. அதை ராகவேந்திரரின் கருணையாதான் எண்ணிச் சிலிர்க்கிறோம்.’’ என்றார். மந்த்ராலய மகானின் வழிபடு தெய்வமான ஸ்ரீமூலராமருக்கு நைவேத்தியம் செய்ய தங்கத்தட்டு சமர்ப்பணம் செய்யும் உன்னத சேவையில் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீராகவேந்திர நாத ஹார சேவை அமைப்பினரின் புனிதப் பணிக்கு, ஸ்ரீராகவேந்திரரின் பக்தர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்யலாம். ஸ்ரீராகவேந்திரரின் அருளால் அனைத்தும் இனிதே நிறைவேறும் என்பதில் சந்தேகமே இல்லை.
படங்கள்: ப.சரவணகுமார்