மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

கல்வியில் குரு பாரம்பரியம்... இனியும் அவசியமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? பெருகி வரும் மக்கள் தொகை, அதற்கேற்ப அதிகரிக்கும் கல்விக் கட்டணம், சில பள்ளி, கல்லூரிகளின் கடுமையான சட்ட திட்டங்கள்... எல்லா வற்றையும் பார்க்கும்போது, வீட்டிலேயே அமர்ந்து கணினி மூலம் கல்வி கற்பது மேல் என்கிறான் என் நண்பன். கணினி தொழில்நுட்பங்கள் ஒட்டுமொத்த உலகையும் நம் வீட்டுக்குள் கொண்டுவந்துவிடும் என்பது நிஜம்தான். என்றாலும், மனப் பக்குவத்தோடு கற்க வேண்டிய கல்வியை கணினி மூலம் பெறுவது சாத்தியமா?

- கீர்த்தனா ரகுநாதன், வள்ளியூர்


முதல் கோணம்

குரு சிஷ்ய முறையில் கல்வி கற்பது உண்டு. பாடத் திட்டத்தோடு பள்ளிக்கூடம் மூலம் கல்வி கற்பது உண்டு. உயர்கல்வியைக் கல்லூரியில் இணைந்து கற்பது உண்டு. குரு ஒருவரின் முன்னிலை யில் ஆராய்ச்சியை நடைமுறைப் படுத்துவது உண்டு. குழந்தைகளை வாசிக்க வைப்பதுண்டு. குரு ஒருவர், வார்த்தைகளைச் சொல்ல வைத்து, எழுத வைத்து கல்வி போதிப்பது உண்டு. கடவுள் வணக்கத்தோடும் குரு வந்தனத்தோடும் கல்வி ஆரம்பமாகும். குழந்தை களின் பரிணாம வளர்ச்சியின் அளவுக்கு உகந்த வகையில், சிறுகச் சிறுக கல்வியை மூளையில் பதியவைப்பார்கள். அதில் ஆன்மிகமும், உலக நடப்பும் இணைந்திருக்கும்.

கேள்வி - பதில்

? ஆனாலும், பழம் தானாகக் கனிவதற்கும் தள்ளிப் பழுக்க வைப்பதற்கும் வேறுபாடு உண்டல்லவா?

வாழ்க்கைப் பயணம் செம்மை பெறுவதற்கு உலகவியல் தேவை. மனம் தெளிவு பெறுவதற்கு ஆன்மிகம் தேவை. இரண்டிலும் நிறைவு பெற்றவன், வாழ்க்கையில் இன்னல்கள் இன்றி வாழ்ந்து, பிறவிப்பயனை அடைகிறான்.

முடியரசில், அரச பரம்பரை குருகுலவாசத்தை ஏற்றுக் கல்வி கற்று, அரசாட்சியில் வெற்றி பெற்றது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும் குசேலனும் குருகுல வாசத்தை ஏற்றுக் கல்வி கற்றார்கள் என்று வரலாறு உண்டு. அரச பரம்பரையும் ஆண்டி பரம்பரையும் குருகுல வாசத்தில் இணைவார்கள். பரசுராமனும் முருகனும் இணைந்து கல்வி கற்றார்கள். துருபதனும் துரோணரும் இணைந்து கல்வி கற்றார்கள். தனக்குக் கல்வியை ஊட்டிய குருவின் தகவலோடு அவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொள்வார்கள்.

ப்ரணவத்தை (ஓங்காரம்) குரு சிஷ்ய முறையில் முருகன் ஓதினான்; சிஷ்யன் காது கொடுத்து உள்வாங்கி, கருத்தை உணர்ந்து நிறைவு பெற்றான். நாரதன் குருவாக இருந்து வால்மீகிக்கு ராம நாமத்தை ஓதினார். இப்படிப் புராண உதாரணங்கள் ஏராளம் உண்டு.

? புராண உதாரணங்கள் எல்லாம் சரி! குரு மூலம் கல்வி கற்பதால் என்ன பலன்? சுயமாகக் கற்றுக்கொள்வதில் என்ன தவறு? அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்!

கல்வியை உள்வாங்கி மனதில் பதியவைத்துக் கொள்ளும் தகுதி சிஷ்யனிடம் இருப்பதை உணர்ந்த பிறகே கல்வியை போதிப்பார்கள் குருமார்கள். இல்லாத தகுதியை சிஷ்யர்களிடம் வரவழைக்க, அவர்களுக்குப் பல நடைமுறைகளை அளித்து, தகுதியை அடையச் செய்வார்கள். தம்மை அண்டிய உடனேயே சீடனாக ஏற்க மாட்டார்கள். அவனது உள்வாங்கும் திறமையை உறுதி செய்யும் பொருட்டு, தனது பணிவிடையில் இணைத்து, அவர்களை ஏங்கவைத்து, பிறகே போதிப்பார்கள். அவர்களின் மனம் கல்வியை உள்வாங்கும் பக்குவம் பெறும் வரை காத்திருப்பார்கள். உபமன்யு, கெளம்யர், ஆருணி போன்றவர்கள் குறித்த தகவல்கள் உபநிடதத்தில் உண்டு.

நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்களும் பள்ளிக்கூடம், கல்லூரி போன்ற அமைப்பை ஏற்படுத்தி குரு- சிஷ்ய முறையில் கல்வியை வளர்த்தார்கள். தற்போதும் உயர்கல்வியை பல்கலைக் கழகங்களில் இணைந்து, கற்றுணர வேண்டும். ஆனால், இடைப்பட்ட காலத்தில் இந்த நடைமுறைகள் சின்னாபின்னமாகிவிட்டன.

மானசிக குரு, கனவில் தோன்றிய குரு, த்ருஷ்டி தீக்ஷை, ஸ்பரிச தீக்ஷை அளித்த குரு, தனது மூளையில் தோன்றிய தத்துவ விளக்கங்கள் என்று விளக்கி, தன்னையே ஆதி குருவாகப் பிரகடனம் செய்துகொண்ட ஸ்வயமாசார்யர்கள்... இப்படி முறையாகக் கல்வி கற்காதவர்கள் சமுதாயத்தில் அங்கீகாரம் பெற்று விளங்குகிறார்கள்.

கேள்வி - பதில்

? அதனால்தான் சொல்கிறோம்... வேறொருவரிடம் இருந்து கற்பதைக் காட்டிலும் சுயமாகப் பெறுவது மேல் அல்லவா?

அப்படியல்ல! இன்றைக்கு நூலறிவு இல்லாத செயலறிவு மட்டுமே கற்றுத் தரப்படுகிறது; அந்தக் காலத்தில் கற்பவனும் பெறுபவனும் தகுதியானவர் களாக இருந்தார்கள் எனச் சொல்ல வருகிறோம்.
இப்போது, குருவை கடவுளைவிடவும் உயர்ந்தவனாக சுட்டிக்காட்டி, அவரது கடைக்கண் பார்வையில் ஆன்ம லாபம் கிடைக்கும் என்று சொல்லி, கல்வி கற்காமலேயே குருவாகவும் சிஷ்யனாகவும் தங்களை அறிமுகம் செய்து கொள்பவர்களும் உண்டு. ‘பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட நூலின் பெயரைக் கேட்டு அறியாதவர்கள் சிந்தனை வளம் குன்றியவர்கள். அவர்களில் ஒருவன் குரு ஸ்தானத்தில் இருந்து கல்வி போதிப்பதும், மற்றவன் சிஷ்ய ஸ்தானத் தில் இருந்து அறிவதும் வேடிக்கையாக இருக்கிறது’ என்று அன்றைய நாளில் கவி ஒருவர் குறிப்பிட்டு இருக்கிறார் (உபாவபி அச்ருத க்ரந்தெள உபாவிபிஜடாத்மகெள. அஹோ மெளர்க் கஸ்யமாஹாம்யம் தத்ரைக: சிஷ்யதாம் கத:). போர்க் களத்தில் அர்ஜுனன், குரு- சிஷ்ய முறையில் கீதாசார்யனின் தத்துவ விளக்கத்தை உள்வாங்கினான்.

இன்று அந்த முறை மறைந்துவிட்டது. தபால் வழிக் கல்வியிலும், கேட்டும் பார்த்தும் பெற்ற அறிவும் கொண்டவர்களும் கல்விமானாகத் தோற்றமளிக்கிறார்கள். ஆன்மிகப் புராணம், ஜோதிடம், சமையல், பக்தி, நாட்டு வைத்தியம் போன்றவை சொற்பொழிவு வாயிலாகக் கற்றுத் தரப்படுகிறது.

நூலறிவு இல்லாத செயல் அறிவு மட்டுமே போதிக்கப்படுகிறது. அன்றாடம் வாழ்க்கைப் பயணத் தேவைகளை நிறைவு செய்யவே நேரம் போதாத நிலையில், சாமானியர்களின் காதில் விழும் சொற்பொழிவு மனதில் பதியாது. ஆன்மிகச் சொற்பொழிவு, இன்னும் பல அரிய தகவல்களை திரட்டித் தரும் வேறு பல சொற்பொழ்வுகள் எதுவாக இருந்தாலும், அவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் பயனற்று போகும்.

? என்னதான் சொல்ல வருகிறீர்கள்? குருவாக ஒருவரை ஏற்பதா, வேண்டாமா?

மகான்கள் பலருடைய சொற்பொழிவுகள், தகவல்களை உள்வாங்கும் தகுதியைப் பெறாத பாமரர்களிடம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அப்பாவி மக்களுக்கு ஆன்மிக உபதேசம் நிகழும். படித்தவர்களின் குழாமில் ஆன்மிக உபதேசம் இடம் பெறாது. மக்களின் திறமைக்கு உகந்த வகையில், அவர்களைச் சுலபமாக ஏற்கவைக்கும் விதத்தில் ஆன்மிகச் சிந்தனைகள் உருமாறிவிடும்.  மருந்துக்குக்கூட அதில் ஆன்மிகம் தென்படாது.

திருவருள் கிடைக்க குருவருள் தேவை. குருவருள் கிடைத்தால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். இப்படியான தகவல்கள் ஆன்மிகம் சம்பந்தப்படாதவை. குருமார்களும் ஆன்மிகத்தைத் தவிர்த்து, தன்னம்பிக்கையை ஆழமாகப் பதியவைக்கவும், அன்றாடம் சந்திக்கும் இன்னல்களிலிருந்து விடுபடவும் வழி சொல்வார்கள். அது ஆன்மிகம் அல்ல. பொருளாதாரம், சுகாதாரம், வேலை வாய்ப்பு, பட்டம், பதவி, தேர்வில் வெற்றி போன்ற லோகாயத வாழ்க்கைக்குத் தேவையானவற்றை நிறைவு செய்ய குருவருளை நாடுவார்கள். வெகு அபூர்வமாக ஆன்மிக அறிவை விரும்பி குருவை நாடும் அன்பர்கள் சிலரும், அந்த குருவின் வாழ்க்கை முறையைக் கண்ணுற்று, அது ஆன்மிக சம்பந்தம் இல்லாமல் இருப்பதை உணர்ந்து திரும்பிய சம்பவங்களும் உண்டு.

கேள்வி - பதில்

ஜோதிடத்தை முறையாகக் கற்காமலேயே ஜோதிட பட்டிமன்றத்திலும், சொற்பொழிவிலும் கலந்துகொள்பவர்களும் இருக்கிறார்கள். எந்தச் சுவை எந்தச் சுவையோடு இணைந்தால் சுகாதாரம் சிறப்புப் பெறும் என்கிற ஆயுர்வேத பரிந்துரையை ஒதுக்கிவிட்டு, சமையல் தகுதியை அறிமுகம் செய்பவர்களும்  இருக்கிறார்கள்.

புராணங்களைப் படித்து அறிந்துகொள்ளாமல் கதாகாலக்ஷேபம் செய்பவர்களும் உண்டு. முறையான கல்வி அறிவு பெறாத இந்தத் துறைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. விழித்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

இரண்டாவது கோணம்...

கால மாற்றம் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும். பல பழைய நடைமுறைகளை இன்றைய சூழலில் கடைப் பிடிக்க முடியாது. பழைய பொக்கிஷங்களைப் புதுப்பித்து, அதை வேண்டாவெறுப்பாக
கட்டி அலைந்துகொண்டிருக்க முடியாது. நமது லட்சியம் சிறப்பான வாழ்க்கை. அதற்கு உகந்தவற்றை, அதிலும் தற்காலச் சூழலுக்குப் பொருந்தும் விஷயங்களையே ஏற்க இயலும்.மனம் அமைதி பெற அல்லது தெளிவு பெற, மண் மறைந்த கலாசாரத்தைப் புதுப்பிப்பதில் அர்த்தம் இல்லை. இன்று நமக்குக் கிடைக்கும் தகவலை வைத்துக் கொண்டு சிந்தையில் ஆராய்ந்து தெளிவு பெறவே இயலும். மற்றபடி, இயலாத ஒன்றை ஏற்க வைப்பது சிந்தனை வளம் பெறாதவனின் அடையாளம்.

விஞ்ஞான வளர்ச்சியில் ஏற்பட்ட தொழிநுட்ப அறிவானது, பல இன்னல்களைத் தோன்றவிடாமல் செய்து, வெற்றியை ஈட்டித் தரும். கல்வி கற்க பழைய குரு- சிஷ்ய பரம்பரையோ, பள்ளிக்
கூடமோ, கல்லூரியோ தேவையில்லை. இன்றைய தொழில் நுட்பம், இருந்த இடத்திலேயே தேவையான அத்தனை தகவல்களையும் ஒருங்கே அமைத்து, அதைப் பார்த்துப் படித்து அறிவை வளர்க்கும் சுலபமான வழிமுறைகளைத் தந்திருக்கிறது. வேத காலத்தில் இருந்து இந்த நிமிடம் வரையிலும் தோன்றிய அத்தனை கல்வித் தகவல்களும் கணினியில் சேமித்து பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து காலத்துக்கும் மன வளர்ச்சிக்கும் உகந்த வகையில் தகவல்களை ஆராய்ந்து ஏற்று, திறமையை வளர்த்து வெற்றி பெறலாம்.

கேள்வி - பதில்

? கணினி இல்லாத அந்தக் காலத்திலும் மிகச் சிறந்த சிந்தனையாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

அன்றைய நாளில் வாழ்க்கையின் தேவைகள் குறைவு. அதை ஈட்டுவதும் சுலபம். இன்று வாழ்க்கைத் தேவைகள் அதிகம். அதைப் பெற்று நிறைவு அடைவதற்கு இன்றைய தொழில் நுட்ப அறிவுதான் வழிகாட்டியாக இருக்கிறது. அன்றைக்கு முனிவர்களும், ரிஷிகளும் கல்வியறிவை மூளையில் சேமித்து சேவை செய்தார்கள். அவர்களை அண்டிக் கற்றுக்கொள்ள வேண்டிய
கட்டாயம் இருந்தது. ஆகவே, குரு-சிஷ்ய முறை முளைத்தது. இன்று இன்டர்நெட் தொழில்நுட்பம் பாகுபாடின்றி அத்தனை பேருக்கும் அறிவை வாரி வழங்குகிறது. நான்கு வேதங்கள், ஆறு தரிசனங்கள், காப்பியங்கள், நாடகங்கள், 64 கலைகள், சம்பிரதாயங்கள், நடைமுறைகள் ஆகிய அனைத்தையும் கணினி சேமித்துப் பாதுகாத்து, தேவைப்படுகிறவர்களுக்கு எந்நேரமும் வழங்கிக்கொண்டிருக்கிறது.

? கணினி இருப்பதைச் சேமித்து வைத்திருக்கும்; அவ்வளவுதான். அவற்றை, பழங்கால முனிவர்களைப் போன்று பக்குவமாக உங்களின் சிந்தனையில் ஏற்ற அதனால் இயலாது அல்லவா?

ஏன் இயலாது? பண்டைய முனிவர்களின் வேலையையே கணினி ஏற்றுக்கொண்டிருக்கிறது என்கிறோம். அதன் மூலம் தகவலைக் கண்ணுற்று, காலத்துக்கு உகந்தவற்றை ஏற்பதும் துறப்பதும் சாத்தியமாகியிருக்கிறது. தகவல்களைச் சேமித்து வைத்த ரிஷி பரம்பரை அற்றுப் போய்விட்டது. அந்த இழப்பை கணினிதான் நிரப்பியிருக்கிறது.

அன்றாட அலுவல்களை நிறைவேற்ற நேரமில்லாத இன்னாளில், நமது பழம்பெரும் பொக்கிஷத்தின் அறிவை ஊட்டி வளர்க்கிறது கணினி. ‘முடவனையும் மலையைத் தாண்டவைக்கும் குருவருள்’ என்று போற்றுவார்கள் (பங்கும் லஙகயதெகிரிம்). இன்று மாற்றுத் திறனாளிகளும் கணினித் தொழில்நுட்பத்தைக் கையாண்டு ஆகாய விமானத்தில் உலகை சுற்றி வருகின்றனர். ஆம்... கடலையும் உயர்ந்த பர்வதங்களையும் தாண்டிப் பல தேசங்களுக்குப் போய்விடுகிறார்கள். அதுமட்டுமா? உலகின் மூலை முடுக்குகளில் இருப்பவர்களோடு நொடிப் பொழுதில் உரையாடி, தகவல்களை ஆராய்ந்து, அறிவு முதிர்ச்சி பெற்று விளங்குகிறார்கள். கல்லூரிகளோ, பல்கலைக் கழகங்களோ செய்ய இயலாததை தொழில் நுட்பம் சாதித்துக் காட்டுகிறது.

அதேபோல், இன்றைய நாளில் ஆன்மிகத்தையும், கதா காலக்ஷேபத்தையும், சமையலையும் சொற்பொழிவு வாயிலாகத்தான் வெளியிட இயலும். திறமை படைத்த குருமார்கள் இல்லாத நிலையில், சொற்பொழிவுதான் துணை புரிகிறது. ருசிக்கும் சுகாதாரத்துக்கும் உகந்த வகையில் சமையல் கலை வளர்ந்திருக்கிறது. இன்றைய கோலாகலமான சூழலில் பார்த்தும் கேட்டும்தான் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, பழைய பெருமையைப் பேசிக்கொண்டிருக்காமல், புதுமையை நாடினால் வாழ்க்கையில் நிம்மதி உண்டு.

மூன்றாவது கோணம்

விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி வாழ்க்கைக்குத் தேவையான உபகரணங்களை அளித்து, ஒத்துழைக்கும். வேலையின் பளுவைக் குறைக்க, எந்தத் தேவைகளையும் நிறைவு செய்ய அது உதவும். ஆனால், மன அமைதிக்கு உதவும் சிந்தனை வளத்தை அது உருவாக்காது. தினம் தினம் புதுசு புதுசாக வளர்ந்து வரும் தேவைகளை சுலபமாக எட்டும் சிந்தனை வளம்தான் இருக்குமே தவிர, மனம் உயரவும் தெளிவு பெறவும் எந்தவொரு தொழில் நுட்பமும் உதவாது.

? நமக்கான வேலைகளை தொழில்நுட்பம் எளிதாக் கும்போது, மனதிலும் பளு குறையும் அல்லவா?

இன்று பொருளாதாரத்தில் நிறைவை எட்டிய வர்களில், மன அமைதியின்றி தவிப்பவர்கள் ஏராளம். தொழில்நுட்பம் லோகாயத வாழ்க் கையை நிறைவு செய்வதோடு நின்றுவிடும். லோகாயத வாழ்க்கையில் கிடைத்த தகவல்கள், சந்தர்ப்பங்கள் வெற்றி பெறவும் மனத்தெளிவு நிச்சயம் வேண்டும். ஆன்மிகச் சிந்தனைக்குத் தேவையான உபகரணங்களைச் சேமித்துத் தரும் தொழில்நுட்பம், ஆன்மிக அறிவை ஊட்டாது. அதை குருமுகமாகத்தான் பெற்று மனதில் பதியவைக்க வேண்டும்.

உடலைப் பாதுகாக்கவும், உடல் உருப்படிகளின் இழப்பைச் சரி செய்யவும் தொழில்நுட்பம் உதவலாம். ஆனால், மனதில் ஏற்படும் பயம், தாழ்வு மனப்பான்மையைத் தொழில்நுட்பம் அகற்றாது. உடலுக்கும் புலன்களுக்கும் ஊட்டமளிக்கும் வழிவகைகளைச் சுலபமாக்கும் தொழில் நுட்பமானது, மனதில் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை விதைக்க உதவாது. மனப்போக்கை தாறுமாறாக்கி திசை திருப்பும் தொழில்நுட்பம், சரியான வழியில் செயல்பட ஏதுவான வழிகாட்டியாக, குருவாகச் செயல்படாது. அது எந்த உபதேசமும் செய்யாது; வெறும் தகவல்களை மட்டுமே திரட்டித் தரும். தகவல்களின் ரகசியத்தை முனிவர்களின் சிந்தனை கள் வெளியிடும். அதையே கிளிப்பிள்ளை போல் திருப்பிச் சொல்லும் கணினி. அதற்குச் சிந்தனை வளம் இல்லை. முடிவான விஷயங்களை எடுத்துக் கூறும், முடிவை எட்டும் சிந்தனை வளத்தை அது அளிக்காது. பல சிந்தனைகளை சேமிக்கும் கிடங்கு கணினி. தானாகவே ஆராயும் திறன் அதற்கு இல்லை. எதை ஏற்க வேண்டும், எதைத் துறக்க வேண்டும் என்று அது ஆராய்ந்து சொல்லாது.

? பண்டைய சாஸ்திரங்களும் அதையொட்டிய குரு உபதேச முறையும் மட்டும் தெளிவான சிந்தனைத் திறனைப் பெற்றுத் தந்துவிடுமா?

‘மனதின் போக்கை வரையறுக்க இயலாது’ என்கிறது சாஸ்திரம் (அசின்த்யம் மனம்). ஜடமான மனம் ஆன்மாவின் இணைப்பில் செயல் படும். அந்த மனம் மலினமானால் உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளாது. மாசு படிந்த மனமானது ஒன்றை மற்றொன்றாகப் பார்க்கும் தெளிவு பெறாமல் தடுமாறும். ஆன்மாவின் செயல்பாடு, மனதின் செயல்பாடுகளைத் தெரியாத வரையிலும் கொந்தளிப்பில் ஆழ்ந்து தவிக்கும். ஆறு தரிசனங்களை மனம் விளக்கிக் கூறும். அதில் பற்றிய மாசுகளின் தரம், அவற்றை விலக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை விவரிக்கும். எல்லோரிடமும் மன மாற்றத்தை ஏற்படுத்த பொது நடைமுறை கிடையாது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மன மாற்றம் ஏற்பட, மாறுபட்ட நடைமுறைகள் இருக்கும். மனதின் போக்கு மனிதனுக்கு மனிதன் மாறுபட்டு இருக்கும். அந்த மாற்றத்தை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து வரையறுத்து கணினிக்கு ஊட்ட இயலாது. அந்த விஷயத்தில் கணினி செயலற்றுப்போகும்.

வேதம், சாஸ்திரம், புராணம், தரிசனம், சம்பிரதாயம் அத்தனையும், மாறுபட்ட மனங் களுக்கு உகந்த வகையில், மாசை அகற்றும் முறையை விளக்குகின்றன. இவை எல்லாமும் இணைந்து மனதின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருகின்றன. தகவல் அளிப்பவரில் நம்பிக்கை ஏற்பட, குரு அவசியம். நம்பிக்கை நிலைத்திருக்கும்போது, அவரது உபதேசம் சிந்தனையில் புகுந்துகொள்ள, அதை ஏற்பவன் ஆராய்ந்து தெளிவு பெறுவான்.முற்பிறவி வாசனையின் காரணமாக ஒவ்வொரு மனிதனிலும் மனம் மாறுபட்டு இருக்கும். பொது அறிவு பயன்படாது; சுய அறிவு தேவைப்படும். பொது அறிவைப் பகிர்ந்தளிக்கும் தொழில் நுட்பம், தனிப்பட்ட அறிவை அளிக்காது.

மனம் அமைதி அடைவது ஆரோக்கியத்துக்கு அறிகுறி. உடல் வளம் பெற்று இருந்தாலும், மனம் தடுமாறினால் பலவற்றை இழக்க நேரிடும். என்னதான் தொழில் நுட்பம் வளர்ந்தாலும், தனி மனிதனின் மனதின் உயர்வுக்கு குரு- சிஷ்ய முறையிலான கல்வியை ஏற்பதே சிறப்பு. குருவானவர், சீடனின் மனப்போக்கைப் புரிந்து கொண்டு உயரிய நடைமுறையைக் கையாண்டு, மாசுகளை அகற்ற உதவி செய்வார். ஆனால், தொழில் நுட்பம் உதவாது.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

மனம் கண்ணுக்குப் புலப்படாத ஒன்று. அதில் முளைக்கும் சிந்தனைக்குக் காரணம் ஆராய இயலாது. அப்படியிருக்க, மன வளத்தை ஒட்டுமொத்தமாகத் திரட்டி கணினிக்கு ஊட்டுவது இயலாத ஒன்று. எனவே, பண்டைய நடைமுறையே சாலச் சிறந்தது. குருமுகமாக தகவலை அறிந்து தெளிவு பெறுவது சிறப்பு.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.