Published:Updated:

சிவமகுடம் - 8

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம் - 8

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:

வெண்பட்டும் விசித்திர சிரிப்பும்!

காலம் அலாதியானது. அதன் சிருஷ்டிப்பில் சில நிகழ்வுகள் கவிஞர்களின் கற்பனையைத் தூண்டும் சித்திரங்களாகத் திகழ்ந்தால், பல நிகழ்வுகள் அவர்களின் கற்பனைக்கும் எட்டாத விசித்திரங்களாகவே திகழும்.

சித்திரம் - விசித்திரம்! உச்சரிப்பில் இரண்டும் ஏறக்குறைய ஒன்றுபட்டாலும் பொருளில் பெரிதும் வேறுபடும்.

ஒழுங்குடனோ ஒழுங்கற்றோ ஏதேனும் ஒரு வரையறைக்குள் அடங்கிவிடுவது சித்திரம். எல்லைகள் ஏதுமின்றி எந்த வரையறைக்குள்ளும் அடங்கிவிடாத விஷயங்களைக் குறிப்பது விசித்திரம். இரண்டுக்கும் மூலம் காலம்தான் என்றாலும், காலத் தின் செயல்பாடுகள் பெரும்பாலும் விசித்திரமானவையே!

இல்லையென்றால், பாண்டிய தேசத்தின் போர் வியூகம் குறித்த சகல ரகசியங்களையும் அறிந்துகொண்ட கோச்செங்கணை அவர்களிடம் இருந்து தப்பவிட்டிருக்குமா? அல்லது உறையூரில் கொலை முயற்சி செய்தவன் தன் கூட்டாளியுடன் சிராப்பள்ளி குகைகளில் ஒளிந்து உறைவதை அறிந்து, கோச்செங்கணின் சகாக்களுடன் சென்று அவர்களைச் சிறைப் பிடிக்க பரமேசுவரப் பட்டர் முயற்சிக்க, அதைச் செய்யவிடாததுடன் அவரையே பாண்டிய முன்னோடிப் படைகளிடம்  சிறைப்படும் நிலைமைக்குத்தான் தள்ளிவிட்டிருக்குமா?!

இப்படியான காலத்தின் கோலங்கள் - சிருஷ்டிப்புகள் யாவும் வித்திரங்கள்தான் இல்லையா? அந்த வகையில் இதோ, ரிஷபகிரியின் அடிவாரத்தில் பாண்டியரின் பாசறைப் பயிற்சிக்  களத்தில், முகம் முதல் முழங்கால் வரையிலுமாக முழுக் கவசம் பூண்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இருவரில் அந்த ஒருவர், வெகு விசித்திரமானவர்தான்!

சிவமகுடம் - 8

வாளும் வேலுமாக எதிராளிப் பாய்ந்துவிட, தனது இடக்கையின் ஒற்றைக் குறுவாளால் அவனது வாள் வீச்சை எதிர்கொண்டதுடன், கண்ணிமைக்கும் நேரத்தில் வலக்கரத்தால் எதிராளியின் வேலைப் பற்றிப் பறித்து, அதையே ஆதாரக் கோலாக பூமியில் ஊன்றி, கால்களை மண்ணில் உந்தி காற்றில் எழுந்து சுழன்று, பாதங்களால் எதிராளியின் முகத்தில் அறைந்து வீழ்த்தும் அந்தப் போர் முறையும் விசித்திரமானதுதான்.

எதிராளி அந்தத் தாக்குதலை ஒருவாறு சமாளித்து எழுந்துவிட்டான் என்றாலும், அந்த மனிதர் தன் முகக்கவசத்தைக் கழற்றிய பிறகு, அவர் இன்னார் என்று அறிந்ததனால் உண்டான நடுக்கத்தில் உடல் தள்ளாட, மீண்டும் மண்ணில் சரிந்தேவிட்டான்; அவரை வணங்கவும் மறந்து!

அந்த மனிதரோ தன் வலக்கரத்தை நீட்டி அவனைத் தூக்கி நிறுத்தி அணைத்துக் கொண்டார். ‘‘பாண்டியர்களுக்கு வீரத்தில் பழுதில்லை. ஆனாலும், களத்தில் வேகமும் விவேகமும் இன்னும் அதிகம் வேண்டும்’’ என்று சிரித்தபடியே அவன் தோள்களில் தட்டிக் கொடுக்கவும் செய்தார்.

அப்போதும் அவனது நடுக்கம் குறைந்தபாடில்லை. இத்தனை நேரம் தான் போரிட்டதும், பயிற்சி ஏற்றதும்  மாமன்னர் மாறவர்மன் அரிகேசரியுடன் என்பதை அறிந்த பிறகு, எந்த பாண்டிய வீரனுக்குத்தான் உயிர்நடுக்கம் ஏற்படாமல் போகும்?!

அவனைச் சக வீரர்களிடம் ஒப்படைத்துவிட்டு, மாமன்னர்  பயிற்சிக்களத்தில் இருந்து வெளியேற முற்பட, ஓட்டமும் நடையுமாக வந்த தளபதி ஒருவர் மன்னரை தாள்பணிந்து வணங்கி எழுந்தார். பிறகு கூறினார்.

‘‘அனைத்துக் காரியங்களும் தங்கள் சித்தப் படியே  நடந்துகொண்டிருக்கின்றன”

சிறந்த மதியூகியும், எதிரில் இருப்பவரின் மனதில் இருப்பதை உள்ளது உள்ளபடி நொடியில் கணித்துவிடும் வல்லமை மிக்கவருமான  மன்னர் கூன்பாண்டியர், அந்தத் தளபதியை கூர்ந்து நோக்கினார். பிறகு மெள்ள தனது கேள்வியை வீசினார்.

‘‘தளபதியாருக்கு நடையிலும் செயலிலும் இருக்கும் உற்சாகம் மனதில் இல்லை போலும்?’’

‘‘அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை...’’ என்று இழுத்த தளபதி, மேற்கொண்டு வார்த்தைகள் எழாமல் போக, கைகளைப் பிசைந்தார்.

‘‘தளபதியாரே அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். உமது திருமுகத்தில் வழக்கமான பொலிவு இன்று இல்லை. எதுவாக இருந்தாலும் உள்ளதை உள்ளபடி என்னிடம் பகிரலாம். தயக்கம் தேவையில்லை’’

கண்டிப்பும் கட்டளையும் தொனித்த மாமன் னரின் சொல், தளபதியாரை மேற்கொண்டு பேசவைத்தது.  ‘‘அரசே... வேவு பார்க்க வந்த கோச்செங்கண் தப்பிவிட்டான்.’’
‘‘ஆமாம்... நாம்தான் தப்பவிட்டோம்’’

‘‘அஸ்திர வியூகம் முதலாக நமது வியூக ரகசியங்கள் எல்லாவற்றையும் சோழர்கள் தெரிந்துகொண்டுவிட்டார்கள்’’

‘‘ஆஹா... நன்றாகத் தெரிந்துகொள்ளட்டுமே’’

தளபதியின் உரையாடலுக்கு ஒற்றை வார்த்தை பதில்களை வெகு அலட்சியமாக உதிர்த்தவாறும்,, கரங்களை முதுகுக்குப் பின்னால் பிணைத்துக் கொண்டும் மாமன்னர் கூன்பாண்டியர் தனது பாசறைக் குகையை நோக்கி நகர, தளபதியாரும் அவரைப் பின்தொடர்ந்தார்.

‘‘எனில், தங்களின் திட்டம்...’’ என்று இழுத்த தளபதியாரை இடைமறித்துக்கேட்டார் கூன்பாண்டியர்.

‘‘எனது திட்டம் என்ன?’’

‘‘ஒருநாள் பகற்பொழுதுக்குள் புலியூரையும் உறையூரையும் கைப்பற்றுவது’’

‘‘ஆமாம்! அந்தத் திட்டத்துக்கு இப்போது என்ன பங்கம் ஏற்பட்டுவிட்டது?’’

அவர்கள் பேசிக்கொண்டே பாசறைக் குகையை அடைந்தார்கள். தளபதியிடம் கேள்விக்கணையை தொடுத்தவாறு உள்ளே நுழைந்த கூன்பாண்டியர், அங்கிருந்த மைய ஆசனத்தில் வசதியாக தான் அமர்ந்துகொண்டதுடன், அருகில் இருந்த இருக்கையை தளபதிக்கும் சுட்டிக்காட்டினார். அதன் நுனியிலேயே அமர்ந்துகொண்ட தளபதியார் மிகத் தயக்கத்துடன் பேச்சைத் தொடர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவமகுடம் - 8

‘‘மணிமுடிச்சோழர் நமது இலக்கை துல்லியமாகத் தெரிந்து கொண்டிருப்பதால், புலியூருக்கும் உறையூருக்கும் பாதுகாப்பை பலப்படுத்திவிட்டார். அவரது படையணிகள் வளையங்களாகவும், இடையிடையே அர்த்த சந்திரனாகவும் வியூகம் வகுத்து நிற்கின்றன. போதாக்குறைக்கு, சோழ இளவரசி மானி, நம் தென்பாண்டி நாட்டு பரதவர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டுவிட்டாள். அவர்கள் மூலம் நாம் நுழைந்துவிடாதபடி சோழத்தின் கடற்புறமும் அடைக்கப்பட்டுவிட்டது!’’

‘‘இதுபோன்ற ஏற்பாடுகளால் நமக்கு தோல்வி நிச்சயம் என்று  முடிவு செய்துவிட்டீரா தளபதியாரே?’’

‘‘இல்லை இல்லை...’’ அவசரமாக இடைமறித்த தளபதியார் மேற்கொண்டு பேச தயங்கினார்.

‘‘என்ன இல்லை.. கூற வந்ததை முழுவதுமாகக் கூறிவிடும்!’’

‘‘அரசே... அவர்கள் எப்படி வியூகம் அமைத் தாலும் நமது பெரும்படை அவர்களது நிலைகளை நிர்மூலப்படுத்திவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. என்றாலும், தங்கள் திட்டம்- ஒரே நாள் பகற்பொழுதுக்குள் சோழத்தை வசப்படுத்த வேண்டும் என்பதல்லவா? அது நிறைவேறுவதில்தான் சிக்கல் எனச் சொல்ல வருகிறேன். அவர்களது வியூகங்களை நோக்கும் போது, நமது வெற்றி ஒரு வார காலத்துக்கும் மேலாகத் தாமதப்படுமோ என அஞ்சுகிறேன். அதுமட்டுமல்ல...’’

‘‘வடக்கே தாமதம் ஏற்பட்டால், தேசத்தின் வேறு புறத்தில் சேரர்களால் எந்நேரமும் தொந்தரவு வரலாம் என்ற அச்சமும் உமக்கு எழுகிறது. சரிதானே?’’ என்று தளபதியாரைக் கேட்ட மாமன்னர், அவரின் பதிலை எதிர்பாராமல், தமது இடைக்கச்சையில் இருந்து வெள்ளிக் குழல் ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டினார்.

‘‘இதில் உமக்கும், ஏற்கெனவே இங்கிருந்து புறப்பட்டுவிட்ட அஸ்திரத்தின் முனைத் தலைவருக்கும் தகவல் இருக்கிறது. நிதானமாகப் படித்துப் புரிந்துகொள்ளும்’’ என்றவர், எழுந்து கவசங்களைக் களைந்து நீராடுவதற்கு ஆயத்தமானார். தளபதியும் வெள்ளிக் குழலுடன் எழுந்து வெளியேறினார்.

நேராக தனது பாசறைக் குடிலுக்கு வந்தவர், அதன் முனைப் பாகத்தைத் திருகிக் கழற்றி, உள்ளே சுருட்டிவைக்கப்பட்டிருந்த சிறிய வெண் பட்டு துணியை வெளியே எடுத்து விரித்தார்.
அந்த வெண்பட்டுத் துணி அளவில் சிறியதுதான் என்றாலும், அதில் கூன்பாண்டியர் சித்திரமாக எழுதியிருந்த வரைபடமும், சில குறிப்புகளும், வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த அந்த பாண்டிய தளபதிக்கு, இதுவரை அவர் கண்டிராத பெரியதொரு திட்டத்தைக் காட்டித் தந்தது!

அதைக் கண்டதும், ஏற்கெனவே அகன்று விரிந்திருக்கும் தமது பெரிய கண்களை இன்னும் அகலமாய் விரித்து, கண்டத்தில் நரம்புகள் புடைக்க வாய்விட்டு கத்திவிட்டார்.
‘‘அற்புதம் அற்புதம்! ஒரு நாளில் அல்ல, சிலநாழிகைப் பொழுதில் சோழத்தை வீழ்த்தும் பெருந்திட்டம்’’

வாய்விட்டு அரற்றியவர் மீண்டும் ஒருமுறை வெண்பட்டுத் துணியை கண்களால் ஆராய்ந்து விட்டு ‘‘வீழ்த்தபோவது சோழத்தை மட்டுமல்ல...’’ என்று இரைந்தவர் மேற்கொண்டு திட்டம் குறித்த  வாக்கியங்களைத் தொடராமல் விட்டுவைத்து, திட்டத்தைச் சிலாகிப்பதற்கு ஆட்பட்டு ‘‘ஆஹா... ஆஹா... பிரமாதம்’’ என்று  ஆர்ப்பரித்தார். அதன் முத்தாய்ப்பாக  பெருங்குரலெடுத்து சிரிக்கவும் செய்தார்.

அவர் மட்டுமல்ல, காலமும் சிரித்தது; நிகழப் போகும் விசித்திரங்களை எண்ணி!

* வாகீசர் தரிசனம்!

கச்சிஅநேகதங்காவதம் - அன்றைய பல்லவ தேசத்தின் ராஜதானியான காஞ்சிமாநகரின் ஒரு பகுதியாகத் திகழ்ந்த புண்ணிய க்ஷேத்திரம். அதன் எல்லைப்புறத்தில் இருந்து நகரின் மையத்தை நோக்கிச் செல்லும் ராஜபாட்டையின் துவக்கத்திலேயே அமைந்திருந்தது அந்த அன்னச்சத்திரம்.

பின்னிரவின் முற்பகுதியில் வானின் உச்சிக்கு ஏறியிருந்த பால் நிலவு, தன் தண்ணொளியால் ஊரைக் குளிர்வித்திருக்க, அதன் குளிரைப் பொருட்படுத்தாது சத்திரத்தின் திண்ணையில் சாய்ந்தான் அந்த வீரன். தலைநகருக்கு அருகில் இருந்ததால், அந்தச் சத்திரத்தில் யாத்ரீகர்களின் எண்ணிக்கையும் அதிகமிருந்தது. ஆகவே, திண்ணையில் தங்குவதற்கே அவனுக்கு இடம் கிடைத்தது. உண்ட களைப்புடன் பயணக் களைப்பும் சேர்ந்துகொள்ள, எந்தவித சிரமமும் இன்றி நித்திரை அவனை முழுமையாக ஆட் கொண்டது.

சிவமகுடம் - 8

சிறிது நேரம்தான் கழிந்திருக்கும். ‘ஐயனே... ஐயனே...’ என்று எவரோ அழைக்கும் குரல் அவனை அசைத்தது.

மிகச் சன்னமாக, கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பதுபோல் கேட்டாலும், அந்தக் குரல் அவனுள் புகுந்து அவனை உசுப்பவே செய்தது. மெள்ளக் கண் திறந்தான்.

அப்படிக் கண்விழித்தவன் வியந்தான்!

‘என்ன இது... கமலம் அலர்வது அதிகாலையில் அல்லவா? இப்போது நம் முன்னால் இதழ் விரித்து சிரிக்கிறது என்றால்... அதற்குள்ளாகவா விடிந்துவிட்டது?’ என்று தனக்குள் கேள்வி எழுப்பிக்கொண்டான். ஆனாலும் சூழ்ந்திருந்த நிசப்தமும், இரவு வண்டுகளின் ரீங்காரமும் பொழுது இன்னமும் புலரவில்லை என்பதை அவனுக்கு உணர்த்தின.
அப்படியென்றால் இந்தத் தாமரை மலர்?!

அது மலரல்ல மனித முகம்தான். அதன் மலர்ச்சியே அவன் கண்களுக்கு தாமரை மலராகக் காட்சிப்படுத்தியது!

முகம் மட்டுமா? வெண்ணீறு துலங்கிய அந்த முதியவரின் துவண்ட திருமேனி, அவனுக்கு மல்லிகையாய் பட்டது. தாமரை முகம் மீண்டும் சிரிக்க... அவரின் இதழ்கள் செண்பகப் பூவாய் தெரிந்தது! ‘திருச் சிற்றம்பலம்’ என்று அந்த இதழ்கள் முணுமுணுக்க, அந்தச் சிவநாமம் செவியில் தேனாகப் பாய்ந்ததுடன், தாழம்பூவின் நறுமணத்தையும் அவன் நாசி நுகர்ந்தது. மொத்தத் தில் எதிரில் தெரிந்த முதியவரின் திருவுருவை மலர்க் குவியலாகவே கண்டது வீரனின் கண்கள். வீரன், அவனையும் அறியாமல் எழுந்து கை கூப்பினான்.

‘‘ஐயனே, எனது பயண மூட்டையை திண் ணையில் வைத்திருந்தேன். தாங்கள் அதன் மீதே தலைவைத்து சயனித்துவிட்டீர்கள். வேறு வழியின்றி தங்கள் உறக்கத்துக்கு தொல்லை தர நேரிட்டுவிட்டது...’’ என்றார் முதியவர்.

வீரனோ அவரை முந்திக்கொண்டு, ‘‘தொல்லை எதுவும் இல்லை. நீங்கள் தங்கியிருப்பது தெரியாமல், திண்ணையில் படுத்துறங்கியது எனது தவறுதான். மன்னியுங்கள்’’ என்றான். உடன், ‘‘மன்னிப்பது இருக்கட்டும். நீங்கள் யார்? பார்த்தால் சாமானியராகத் தெரியவில்லையே...’’ என்று கேட்டார் முதியவர்.

‘‘ஆமாம் ஐயா. சோழ தேசத்தின் தூதன் நான். எங்கள் சோழர்பிரான் தந்த பெரும்பணியின் பொருட்டு காஞ்சிக்கு வந்தேன்’’

வீரனின் பதிலைக் கேட்டதும் மெள்ள புன்னகைத்த முதியவர், ‘‘அப்பனே! நீ சோழ வீரன் என்றால், இப்போதுள்ள சூழலில் உனக்கான பணி அங்குதானே அவசியத் தேவை!’’ என்றார், அர்த்தப்புஷ்டியோடு!

அதைக் கேட்டதும், முதியவர் சோழ தேசத்தின் போர்ச்சூழலை நன்கு அறிந்து வைத் திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட வீரன், சிவனடியாராகக் காட்சியளிக்கும் அவரிடம் பேச்சுக்கொடுத்தால், மன்னர் தனக்களித்த பணி எளிதில் முடிந்துவிடும் என்று முடிவுக்கு வந்தான்.

‘‘ஐயா, தாங்கள் சொல்வது சரிதான். போர் சூழ்ந் திருக்கிறது சோழத்தை. எனக்கான பெரும்பணி அங்கும் காத்திருக்கிறதுதான். ஆனாலும் அதற்கு முன்னோட்டமாக ஒரு பணியை நிறைவேற்றவே மன்னர் இங்கு அனுப்பியிருக்கிறார். இப்போது தங்களைத் தரிசித்ததும், அந்தப் பணியின் பொருட்டு தங்களிடமே ஓர் உதவி கேட்க லாம் எனத் தூண்டுகிறது என் மனம். அதைக் கேட்பதற்குமுன் தாங்கள் யாரென்று நான் தெரிந்துகொள்ளலாமா?’’

சிவமகுடம் - 8

அந்த வீரனின் பணிவையும் பண்பையும் கண்டு வியந்த முதியவர், அவனுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ‘‘அப்பனே... இளமையில் என்னை மருள்நீக்கியார் என
அழைப்பார்கள். சில காலம் சமணம் சார்ந்திருந்த போது ‘தருமசேனர்' என்று பெயர் ஏற்றிருந்தேன். இப்போதோ ‘வாகீசர்’ என்று அன்புடன் அழைக்கிறார்கள் மக்கள். அதையே ஏற்றுக் கொண்டேன்!’’
‘வாகீசர்' என்ற பெயரைக் கேட்டதும்தான் தாமதம், பற்றற்ற கொம்பு தரையில் வீழ்வது போன்று, நெடுஞ்சாண்கிடையாக அந்த முதியவரின் பாதகமலங்களில் வீழ்ந்து பணிந்தான், சோழதேசத்தின் தூதன்!

- மகுடம் சூடுவோம்...

* திருநாவுக்கரசரை ‘வாகீசர்’ எனச் சிறப்பிப்பர். இவரது இயற்பெயர் மருள்நீக்கியார். திருநாவுக்கரசர் எனும் திருப்பெயர் சிவபெருமானால் அருளப்பெற்றது. சமணம் சார்ந்திருந்தபோது ‘தருமசேனர்’ என்று பெயர் ஏற்றிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism