Published:Updated:

கலகல கடைசி பக்கம்

பட்டாம்பூச்சி பாடம்!தெனாலி , ஓவியம்: மகேஸ்

செல்ல மகள் வீட்டுப் பாடம் எழுதிக்கொண்டு இருந்தாள். “அம்மா, கை வலிக்குது! நீ கொஞ்சம் எழுதிக் கொடேன்!” என்று சிணுங்கினாள். “இல்லடா கண்ணு! பாடத்தை நீதான் எழுதணும்” என்று மறுத்துவிட்டாள் அம்மா.

தத்தித் தளர்நடை போட்டு வந்த குட்டிக் கண்ணன் தடுமாறி விழுந்தான். ஓடிப் போய்த் தூக்க நினைத்தாள் அக்கா. தடுத்துவிட்டாள் அம்மா. “வேணாம், விடு! அவனே எழுந்து வருவான்!” என்றாள்.

மகளுக்குப் புரியவில்லை. “என்னம்மா, எனக்குக் கை வலிக்குதுன்னாலும் எழுதிக் கொடுக்க மாட்டேங்குறே! பாப்பா கீழே விழுந்தாலும் தூக்கக் கூடாதுங்கறே! கஷ்டப்படறவங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்னு நீதானே சொல்லிக் கொடுத்தே? ஆனால், நீயே ஹெல்ப் பண்ண மாட்டேங்கறியே?” என்றாள் கொஞ்சம் கோபமாக.

மகளின் தலையை வருடினாள் அம்மா.

“ஒரு மரத்துல பட்டாம்பூச்சி முட்டையிட்டு இருந்ததைப் பார்த்தான் ஒரு பையன். எப்படா அந்த முட்டையிலிருந்து பட்டாம்பூச்சி வெளியே வரும்னு தினம் தினம் ஆர்வத்தோடு பார்த்துட்டே இருந்தான். கொஞ்ச நாள் கழிச்சு, உள்ளிருந்து அந்தக் கூட்டுப்புழு முட்டி முட்டி வெளியே வரத் துடிச்சிட்டிருந்ததைக் கவனிச்சான். அது உள்ளிருந்து வெளியே வரப் போராடிக்கிட்டு இருந்துதே தவிர, அதால வெளியே வர முடியலை. பார்த்தான் பையன். பட்டாம்பூச்சி வெளியே வர முடியாம தவிக்குதேன்னு அதும் மேல பரிதாபப்பட்டு, கூட்டை ஒரு சின்ன கத்தியால கிழிச்சு, அது வெளியே வர உதவி பண்ணினான். இப்போ அந்தக் கூட்டுப் புழு சுலபமா வெளியே வந்துடுச்சு. ஆனா, உடம்பு முழுக்கக் கொழகொழப்பா ஒரு பிசினோட அது வெளியே வந்து விழுந்துது. துடிச்சுது. சுலபமா வெளியே வந்துடுச்சே தவிர, அதால தன்னோட சின்ன றெக்கைகளை விரிச்சுப் பறக்க முடியலை. உடம்பைச் சுத்தியிருந்த அந்தப் பிசுபிசுப்பும் போகலை. அப்படியே கொஞ்ச நேரம் துடிச்சுட்டுச் செத்துப் போச்சு அந்தப் பட்டாம்பூச்சி.

கலகல கடைசி பக்கம்

பையனுக்கு வருத்தமா போயிடுச்சு. ஹெல்ப் பண்ணப் போய் இப்படி ஆயிடுச்சேன்னு ரொம்ப ஃபீல் பண்ணான்.

பட்டாம்பூச்சி தன் முயற்சியில கஷ்டப்பட்டுப் போராடி வெளியே வந்தாதான் அது முழு வளர்ச்சி அடைஞ்சிருக்கும்; அதால றெக்கையை விரிச்சுப் பறக்கவும் முடியும்கிறது பாவம், அந்தப் பையனுக்குத் தெரியலை. இப்பப் புரியுதா என் செல்லமே, கை வலிச்சாலும் நான் ஏன் உன்னையே வீட்டுப் பாடம் எழுதச் சொன்னேன்னு?” என்றாள் அம்மா.

“புரியுதும்மா. ஆனா, மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்னும் சொன்னீங்களே..?” என்றாள் மகள்.

“முடியாதவங்களுக்கு ஹெல்ப் பண்ணணும். அவங்களால எது முடியலையோ அதுக்கு நாம ஹெல்ப் பண்ணணும். உதாரணமா, நடக்க முடியாத ஒருத்தர் தாங்கு கட்டையைக் கீழே போட்டுட்டார்னா, அதை அவருக்குக் கட்டாயம் ஓடிப் போய் எடுத்துக் கொடுக்க ணும். அதை அவர் வசதியா பிடிச்சுக்கிட்டு நடக்கறதுக்கு ஹெல்ப் பண்ணணும். அதுக்காக அவரையே தோள்ல தூக்கிக்கிட்டு நடக்கணும்னு அர்த்தமில்லை.”

“ஆனா, அம்மா... எழுதிட்டே இருந்தா எனக்குக் கை வலிக்காதா? கீழே விழுந்தா தம்பிப் பாப்பாவுக்கு முட்டியில சிராய்ப்பு வராதா?”

“கை வலிச்சா ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அப்புறம் எழுது. சிராய்ச்சா தம்பிக்குத் தேங்காய் எண்ணெய் தடவி விடு. மத்தபடி அவங்கவங்க காரியங்களை அவங்கவங்களே பண்றதுதான் அவங்களுக்கு நல்லது!” என்று மகளைத் தட்டிக் கொடுத்த அம்மாவின் கண்களில், பூஜை அறையில் இருந்த அழகான கருங்கல் பிள்ளையார் சிலை கண்ணில் பட்டது. ‘உளி தன் உடம்பைக் கொத்திக் கொத்திப் புண்ணாக்குதேன்னு அந்தக் கருங்கல் நினைச்சிருந்தா, அது இப்போ அற்புதமான கடவுள் சிலையாகியிருக்குமா? அதுக்குத்தான் இத்தனை மாலை, மரியாதை, வழிபாடு, பூஜை, புனஸ்காரம் எல்லாம் கிடைச்சிருக்குமா?’ என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டாள்.