மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 19

சத்தியப்பிரியன், ஒவியம்:ஸ்யாம்

33. இளைப்புவிடாய் தீர்த்தேனோ நம்பாடுவான்  போல?

தீண்டாமையை ஸ்ரீவைஷ்ணவம் எதிர்கொண்டதைப் போல வேறு எந்த சமயமும் எதிர்கொண்டிருக்குமா என்று தெரியவில்லை. ஸ்ரீமன்நாராயணனின் முன்னிலையில் சாதி பேதம் கிடையாது என்று ஓங்கி உரைத்த மதம் ஸ்ரீவைஷ்ணவம். இதற்காக உடையவர் ஸ்ரீராமாநுஜர் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். அப்படி ஒரு சாதிபேதத்தின் கதைதான் இந்த நம்பாடுவான் கதை.

முதலில் இந்தக் கதையை தெரிந்து கொள்ள பாண்டியநாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்குறுங்குடி நோக்கி பயணிப்போம். திருக்குறுங்குடி திருநெல்வேலியிலிருந்து 47 கி.மீ. தூரத்தில் உள்ளது. மகேந்திர மலை என்ற மலையின் அடுத்து அமைந்துள்ள இந்த திவ்யதேசம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்த பெருமை உடையது. திருமங்கையாழ்வார் பரமபதநாதனுடன் ஐக்கியமானதும் இந்தத் தலத்தில்தான். எம்பெருமான் நின்ற நம்பி, இருந்த நம்பி,  கிடந்த  நம்பி, திருப்பாற்கடல் நம்பி, மலைமேல் நம்பி  என்று ஐந்துவிதமாக எழுந்தருளியுள்ளார். வராக அவதாரமெடுத்து இங்கு வந்த பெருமான் தனது வடிவைக் குறுக்கிக் கொண்ட இடம் என்பதால் இதற்கு குறுங்குடி என்று பெயர் வழங்கலாயிற்று. ஏகாதசியின் பயனையும், குலம், ஜாதி  இவைகளைப் பாராமல் கருணை மழை பொழியும் எம்பெருமானின் கருணையையும் இந்த நம்பாடுவான் சரித்திரம் காலம் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கும்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 19

நம்பாடுவான் என்றொரு வைணவ பக்தர். பாணர் குலத்தில் பிறந்தவர். திருப்பாணாழ்வார் காவிரியின் வடகரையில் இருந்துகொண்டு அரங்கன் சந்நிதி நோக்கி பண்ணிசைத்துப் பாடியதுபோல, நம்பாடுவானும் எம்பெருமான் சந்நிதிக்குள் தன்னுடைய குலத்தின் காரணமாக உள்ளே நுழைய முடியாமல் வாயிலில் நின்று பாடிவிட்டுச் செல்வது வழக்கம். அவர் பண்ணில் மயங்கி எம்பெருமான் அவரை நம்பாடுவான் என்று அழைக்க அதுவே அவரது பெயரானது.

நம்பாடுவான் அருகில் இருக்கும் மகேந்திர மலையின் சாரலில் வசித்து வந்தவர். பல ஆண்டுகளாக எம்பெருமானுக்கு புதிய புதிய பண்ணிசைத்துப் பாடுவது வழக்கம். இவர் கைசிகப்பண் எனப்படும் பைரவி ராகத்தில் அமைந்தப் பண்களைக் கேட்டு உருகாதவர்களே இருக்க முடியாது. கார்த்திகை மாதத்தில் ஒருநாள் சுக்லபட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் எம்பெருமானை சேவிக்க சந்நிதி வாசல் நோக்கிச் செல்லும்போது ஒரு பிரம்ம ராக்ஷஸ் அவரை தடுத்து, “என் உணவாக உன்னை விழுங்கப் போகிறேன்’’ என்றது.

“இன்று ஏகாதசி.ஸ்ரீவைஷ்ணவனுக்கு  ஏகாதசியை விடச் சிறந்த விரதம் கிடையாது. நான் எம்பெருமானின் முன்பு பாடிவிட்டு என் விரதத்தை முடித்துக் கொண்டு வருகிறேன். அதுவரை பொறுத்திரு’’ என்றார்.

நம்பாடுவானின் வாக்குறுதியை நம்பி பிரம்ம ராக்ஷஸ் அவரைப் போக விட்டது.

பேரருளாளன் சந்நிதியிலிருந்து எப்போதும்போல விலகி நின்று கைசிகப்பண் பாடினார். அந்தப் பண்ணில் மனம் கசியும் எம்பெருமான் கொடிமரம், கருடன் போன்றவர்களை விலகிக் கொள்ளச் சொல்லிவிட்டு அங்கிருந்த வண்ணமே நம்பாடுவானுக்கு சேவை சாதித்தாராம்.

கொடுத்த வாக்கை நிறைவேற்ற நம்பாடுவான் பிரம்ம ராக்ஷசைத் தேடிச் சென்றார். வழியில் ஒரு வயோதிகர் உருவில் வந்த எம்பெருமான், “தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள பொய் சொல்லலாம் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. நீ அந்த பிரம்ம ராக்ஷஸ் பிடியில் சிக்காமல் ஓடிப்போய் விடு’’ என்கிறார். அதற்கு நம்பாடுவான் “கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டியது ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனின் தர்மம்” என்று மறுத்துவிட்டு நேரே அந்த பிரம்மராக்ஷஸ் முன்பு போய் நின்றார்.

பிரம்மராக்ஷஸ் இப்போது மிரண்டுவிட்டது. தன்னை உண்ணக் கொடுக்க ஒருவன் தன்  எதிரில் ஆனந்தமாக நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டது.

“நான் உன்னை உண்ணவில்லை. ஆனால் ஒரு நிபந்தனை’’ என்றது.

“என்ன?’’ என்றார் நம்பாடுவான்.

“இதுவரை நீ பாடிய பாடல்களின் பலனைக் கொடு. உன்னை விட்டுவிடுகிறேன்’’

நம்பாடுவான் மறுத்தார்.

“சரி ஒருநாள் பலனை மட்டுமாவது கொடு’’ என்றது பிரம்ம ராக்ஷஸ் அதற்கும் நம்பாடுவான் மறுத்தார்.

கிட்டத்தட்ட இரங்கும் நிலைக்கு பிரம்ம ராக்ஷஸ் தள்ளப்பட்டது.

“ஒரு சாபத்தினால் முன்ஜன்மத்தில் அந்தணனான நான் இப்போது இந்த பிரம்மராக்ஷஸ் உருவை அடைந்துள்ளேன். எனக்கு சாப விமோசனம் வேண்டுமென்றால் அது உன்னால்தான் முடியும் என்பதால் உன்னை பீடித்துள்ளேன். இன்று எம்பெருமான் முன் பாடிய கைசிக பண்ணின் பலனையாவது கொடு’’ என்று யாசிக்கவே, நம்பாடுவான் அந்தக் கைசிக ராக பலனை பிரம்ம ராக்ஷஸுக்கு  அளித்து அதன் இளைப்புவிடாய் தீர்க்கிறார்.

இந்தக் கைசிக ஏகாதசி திருக்குறுங்குடியில் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் மிகச் சிறப்பாக விடிய விடிய நம்பாடுவானின் புராணத்தைக் கூறும் நாடகமாக நடிக்கப்பட்டு வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

நாங்குநேரியைச் சேர்ந்த பேராசிரியர் இராமானுஜம் மற்றும் நடனமேதை அனிதா ரத்தினம் ( இவர் டி.வி.எஸ் குழுமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ) அவர்களும் இந்த கைசிக நாடகத்தை அதன் பழைய வடிவிலேயே மீட்டெடுத்தவர்கள் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

அப்படி நம்பாடுவான் வைணவநெறி பிறழாமல் பிரம்ம ராக்ஷஸின் இளைப்பின் தாகத்தைத் தீர்த்ததால் இளைப்புவிடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே ? என்ற கேள்வியுடன் அந்தத் திருக்கோளூர் பெண்பிள்ளை வெளியேறுகிறாள்.

-தொடரும்