Published:Updated:

வேதியியலில் அற்புதம் செய்த சித்தன் சட்டைமுனி! - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் 11

வேதியியலில் அற்புதம் செய்த சித்தன் சட்டைமுனி! - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் 11
வேதியியலில் அற்புதம் செய்த சித்தன் சட்டைமுனி! - சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள் 11

"அகண்ட பரிபூரணமா முமையாள் பாதம்

அப்புறத்தே நின்றதொரு அய்யர் பாதம்

புகன்று நின்று கணெசனொடு நாதன் பாதம்

புகழ்பெரிய வாக்குடைய வாணிபாதம்

நிகண்டெனவே எனையாண்ட குருவின் பாதம்

நிறைநிறையாய்ச் சொரூபத்தில் நின்றோர் பாதம்

முகன்றெனை ஈன்றெடுத்த சின்மயத்தின் பாதம்

மூவுலகும் மெச்சுதற்குக் காப்புத் தானே

-சட்டைமுனி-வாதகாவியம் - காப்புச் செய்யுள்

பொருள்

"எங்கும் நிறைந்திருக்கும் பார்வதிதேவியின் பாதம்

முப்புரம் எரித்து அப்புரம் நிற்கும் சிவபெருமானின் பாதம்

கணபதியும் அவனது நாதனின் பாதம்

வாக்குவன்மை கொண்ட சரஸ்வதியின் பாதம்

என் அகராதியாக இருக்கும் குருவின் பாதம்

நிறைந்த அறிவுடைய முன்னோர் பாதம்

என்னை ஈன்ற ஞானமயத்தின் பாதம்

சுவர்க்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகம்

மெச்சும் வகையில் இந்தக் காப்பைச் சொல்கிறேன்"

மஞ்சள் வெளிச்சம் குன்றி கொஞ்சம் கொஞ்சமாக கருமையேறிக் கொண்டிருந்த அந்திப்பொழுது. சீர்காழி சட்டைநாதர் ஆலயத்திற்குள் நுழைகிறோம். பிரம்மாண்டமான பிரம்ம தீர்த்தக் குளத்து நீரில் சூரிய அஸ்தமனம் ஒரு அழகான நீர்வண்ண ஓவியமாகக் காட்சியளிக்கிறது.

'தோடுடைய செவியன் விடையேறியோர்

தூவெண் மதி சூடிக்

காடுடைய சுடலைப் பொடி பூசியென்

உள்ளங்கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து

ஏத்த அருள்செய்த

பீடுடைய பிரமாபுரமேவிய'

என்னும் புகழ்பெற்ற திருஞான சம்பந்தரின் தேவாரம், பிரகாரச் சுவர்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் அவதரித்த திருவிடம் இந்த சீர்காழி.சிவபாத இருதயருக்கும் - பகவதி அம்மையாருக்கும் புதல்வனாக அவதரித்த திருஞானசம்பந்தரை முருகனின் அம்சம் என்றும் இளைய பிள்ளையார் என்றும் வர்ணிக்கும் மரபு உண்டு. அதற்கான காரணக் கதை இது.

ஞானசம்பந்தன் தன் மூன்றாவது வயதில் தந்தையுடன் சட்டைநாதர் கோயிலிலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்தார். குளக்கரையில் குழந்தை சம்பர்தனை உட்கார வைத்து விட்டு சிவபாதர் குளத்தில் இறங்கி நீராடிக் கொண்டிருந்தார்.

அப்போது சம்பந்தனுக்கு பசி எடுக்க, 'அம்மா' 'அம்மா' எனக் குரல் எழுப்பி அழத் தொடங்கினான். பசியால் அழும் பாலகனின் குரல் கேட்ட சிவபெருமான், பார்வதி தேவியிடம் ஞானசம்பந்தனுக்கு அழுதூட்டும்படி பணித்தார். அம்மை - அப்பனுடன் சம்பந்தன் முன் தோன்றி மெய்ஞானம் கலந்த பாலூட்டி பசி தீர்த்தாள்.

குளித்து விட்டு படி ஏறி வந்த சிவபாதர், சம்பந்தனின் வாயில் ஒழுகும் பால் துளிகளைப் பார்த்துத் திடுக்கிட்டார். ''யாரோ ஒருத்தியிடம் பாலருந்தி அபச்சாரம் இழைத்து விட்டாயே சம்பந்தா!" எனப் பதறினார். கோபத்தில் அவளை அடிக்கக் கைகளை ஓங்கினார்.

அப்போது சிவனும் - உமையும் சென்ற திக்கை நோக்கிப் பாடிய பாடல் தான் இந்த 'தோடுடைய செவியன்' பதிகம்.

பாடலின் பொருள் இது: தோடு என்னும் அணியை அணிந்தவன். உமையவளை இடப்பாகத்தில் உடைய சிவன் இடப வாகனத்தில் ஏறி, தூய வெண்மதியைச் சூடி, திருவெண்ணீறு பொலியும் திருமேனியில் என் உள்ளத்தைக் கவர்ந்த அருட்கள்வன். அவன் ஒரு காலத்தில் நான்முகனின் தவத்தை மெச்சி அருள் செய்தவன். எனக்குக் காட்சி தந்து அருளிய இவனே அவன் அல்லவா!

பெரிய நாயகி சமேத சட்டை நாதராக சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் இத்திருத்தலம் பல்வேறு புராண - வரலாற்றுச் சிறப்புகளைத் தாங்கி நிற்கும் சிறப்புடையது. சோழர் கால ஆலயங்களில் முக்கியமானது.

திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசலகவிராயர், மாரிமுத்தாபிள்ளை, முத்து தாண்டவர் ஆகிய தமிழிசை மூவர் ஆகியோர் பாடிய  திருக்கோயில் இது.

இத்தனை சிறப்பு வாய்ந்த சிவத்தலத்தில் தான் பதினெட்டு சித்தர்களில் முக்கியமான சட்டைமுனி சித்திபெற்றார் என்று எண்ணியபடியே பிரகாரத்தின் இடப்பக்கம் உள்ள சித்தர் சட்டைமுனியின் சமாதியை நோக்கி மெல்ல நடந்தோம்..

'பாலனாம் சிங்களவ தேவதாசி

பட்சமுடன் பயின்றெடுத்த புத்திரன்தான்

சீலமுடன் சட்டைமுனி என்று சொல்லி

சிறப்புடனே குவலயத்தில் பேருண்டாச்சு'

என போகர், தன் 'போகர் 7000' நூலில் (சத்தகாண்டம் - பாடல் எண்: 5875) சட்டைமுனியின் பிறப்பு பற்றிக் குறிப்பிடுகிறார்.

சிங்கள நாட்டு  பெண்ணுக்கு மகனாகப் பிறந்தவர் சட்டைமுனி என இப்பாடலிலிருந்து அறிய முடிகிறது. ஆவணி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரம், மூன்றாம் காலில் பிறந்தவர் எனவும்,  சட்டைமுனி பற்றி போகர் 7000 குறிப்பிடுகிறது.

சட்டைமுனியின் தாய் மகனோடு  கடல் மார்க்கமாக தமிழ்நாட்டுக்கு வந்ததாகவும் பிழைக்க வந்த இடத்தில் சட்டமுனி கோயில் வாசல்களில் யாசகம் பெற்று விவசாயக் கூலித் தொழிலாளர்களாகக் கஷ்டப்பட்ட தாய் தந்தையருக்கு உதவியதாகவும், சீர்காழி பகுதியில் அவர்கள் குடியேறியதால் சீர்காழி ஈசன் சட்டைநாதனின் பெயரை அவருக்கு வைத்ததாகவும் ஒரு ஐதீகம்.

சட்டைமுனி சேணியர் குலத்தில் பிறந்தவர் எனவும் நெய்தல் தொழில் புரிந்தவர் என்றும், தமிழ்க்கற்று, ஞானம் பெற்று சதுரகிரி சென்று சேர்ந்தார் என்றும் அநேக வேதியியல் விந்தைகள் புரிந்தார் என்றும் கருவூரார் தமது பாடல்களில் குறிப்பிடுகிறார்.

வேதியியலில் சட்டைமுனி மிக்க ஆற்றல் கொண்ட நிபுணராக விளங்கினார் என அறிய முடிகிறது. போகருடனும் கொங்கணவருடனும் கூடி வாழ்ந்ததால் அவர்களிடம் கற்றுக்கொண்ட வேதியியல் நுட்பங்களை மேலும் ஆராய்ச்சி செய்து அற்புதமான - ஆச்சர்யமான முடிவுகளை சோதித்து அறிந்தார் என்றும் கூறப்படுகிறது. சட்டைமுனி கண்டறிந்த சில வேதியியல் அதிசயங்கள், அடுத்த வாரம்...

-பயணம் தொடரும்