Published:Updated:

``முருகன் என்னைப் படைத்தவன் அல்ல, என் பாட்டன்!'' - வைரல் படம் குறித்து விளக்குகிறார் சீமான்

``முருகன் என்னைப் படைத்தவன் அல்ல, என் பாட்டன்!'' - வைரல் படம் குறித்து விளக்குகிறார் சீமான்
``முருகன் என்னைப் படைத்தவன் அல்ல, என் பாட்டன்!'' - வைரல் படம் குறித்து விளக்குகிறார் சீமான்

திறந்தவெளி மேடை... கறுப்புச் சட்டை... ஊதா நிற ஜீன்ஸ்பேன்ட் சகிதம் மைக்குக்கு முன்னால் நின்று சீமான் பேசினால், இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை இமைக்காமல் கேட்டு ரசித்துக்கொண்டிருப்பார்கள். `நாம் தமிழர் கட்சி’யை ஆதரிக்காதவர்கள்கூட அவரின் பேச்சை ரசிப்பவர்களாகத்தான் இருப்பார்கள். பல வருடங்களாக அரசியல் களத்தில் இருப்பவர். ஆரம்பத்தில் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பெரியாரிய மேடைகளில் கடவுள் மறுப்பு, நாத்திகக் கருத்தியல்களை மிக வீரியமாகப் பேசியவர்.

மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், அம்பேத்கர், பெரியார், பிரபாகரன் ஆகியோரை முன்னிலைப்படுத்திப் பேசிவந்த சீமான், இப்போது `முருகன்...’, `சேயோன்...’, `மாயோன்...’ என்றெல்லாம் முழங்கத் தொடங்கியிருக்கிறார்.

`வீரத்தமிழர் முன்னணி’, `நாம் தமிழர் கட்சியின்’ ஓர் அமைப்பு. இதன் சார்பாக வருடந்தோறும் தைப்பூசத்துக்கு 'வேல் ஊர்வலம்' நடத்தப்படுகிறது. இந்த வருடம் திருச்செந்தூரில் வரும் பிப்ரவரி 11 -ம் தேதி திருமுருகப் பெருவிழாவாக நடைபெறவிருக்கிறது.

தைப்பூச நாளன்று சீமான் தன் வீட்டுக்கு முன்னால் உள்ள குடிலில் கையில் திருநீற்றுத் தட்டுடன் அனைவருக்கும் விபூதி வழங்கிக்கொண்டிருந்த படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்தன. அவரைச் சந்தித்தோம். தன்னுடைய இந்த மாற்றங்கள், அதற்கான காரணங்கள் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார்...

"கடவுள் மறுப்பாளராக இருந்த நீங்கள் தீபாராதனை, திருநீறுத் தட்டுடன் காட்சி தருகிறீர்களே..?"

"கடவுள்தான் என்னைப் படைத்தார் என்பதை நான் நம்பவில்லை. முருகனும் நம்மைப் படைத்தவன் அல்ல... நம் பாட்டன். அதனால் முருகனை வழிபடுகிறேன். தேசிய இன விடுதலையில் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, வழிபாடு என அனைத்தையும் மீட்டுருவாக்கம் செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. `கடவுள் மறுப்புதான் பகுத்தறிவு’ என்று தவறாகப் பிரசாரம் செய்யப்பட்டிருக்கிறது. கடவுள் மறுப்பு வேறு, பகுத்தறிவு என்பது வேறு. அப்துல்கலாம் கடவுளை வழிபட்டார்... அவர் பகுத்தறிவாளர் இல்லையா?"

"தைப்பூசத்தைக் கொண்டாடுவது, வேல் ஊர்வலம் நடத்துவது போன்றவற்றைச் செய்வதன் நோக்கம் என்ன?"

"புறக்கணிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட அடையாளங்களை மீட்கும் போராட்டம்தான் இது. முருகனை ஒரு கடவுளாகப் பார்த்து நாங்கள் இது போன்ற விழாக்களை எடுக்கவில்லை. எங்கள் குறிஞ்சி நிலத் தலைவனாகவும், தமிழ் இறைவனாகவும்தான் பார்க்கிறோம். வீழ்ந்த ஓர் இனம் வரலாற்றில் இருந்து, பண்பாட்டில் இருந்துதான் மீண்டெழ முடியும்.

ஐந்திணை நிலத்தைப் பகுத்து, வகுத்து வாழ்ந்த ஓர் இனம்தான் தமிழ் இனம். அதில் குறிஞ்சி நிலத்துக்கு முருகனும், முல்லை நிலத்துக்கு மாயோனும், மருத நிலத்துக்கு இந்திரனும், நெய்தல் நிலத்துக்கு வருணனும், பாலை நிலத்துக்கு கொற்றவையும் கடவுளாக இருந்தார்கள். அவர்களைத்தான் தமிழர்கள் வழிபட்டு வந்திருக்கிறோம். இந்திரப் பெருவிழா, கொற்றவைத் திருவிழா, மாயோன் பெருவிழா போன்ற விழாக்களும் நடைபெற்றிருக்கின்றன. ஆனால்,இப்போது இவையெல்லாம் கைவிடப்பட்டுவிட்டன. இவற்றை மீட்டெடுக்கும் முயற்சிகளைத்தான் நாங்கள் செய்துவருகிறோம்.’’

"இதுபோன்ற விழாக்களை நடத்துவதால் தமிழர்களுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மை?"

"தேசிய இன விடுதலை என்பது அந்த இனத்தின் வழிபாட்டையும் பண்பாட்டையும் உள்ளடக்கியது. அதன் காரணமாகத்தான் தமிழர் மெய்யியலை மீட்டெடுக்க விரும்புகிறோம். நாங்கள் இந்த விழாக்களை நடத்துவதால் யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படப்போவதில்லை."

"பண்பாட்டு, வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டிருந்தால் அதற்காகப் போராடலாம். காலம் காலமாகத் தமிழ்நாடு முழுவதும் மக்கள் தைப்பூசத்தில் முருகனை வழிபட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். பிறகு ஏன் தனியாக விழாக்கள்?"

"தமிழ்நாட்டில் குருநானக் ஜெயந்திக்கு, மகாவீர் ஜெயந்திக்கு, விநாயகர் சதுர்த்திக்கு, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைக்கெல்லாம் விடுமுறை இருக்கிறது. தமிழர்களின் விழாவான தமிழ் இன மூதாதையான முருகனின் தைப்பூசத்துக்குப் பொது விடுமுறை இல்லை. அதனால்தான் தனியாக இது போன்ற விழாக்கள் நடத்தவேண்டிய தேவை உருவாகிறது."

"வேல் ஊர்வலம் பற்றிச் சொல்லுங்கள்..."

"ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு படைவீட்டுக்கு வேல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இதுவரை திருப்பரங்குன்றம், திருத்தணி, பழனியில் ஊர்வலம் நடத்தியிருக்கிறோம். அந்த வகையில் இந்த வருடம் திருச்செந்தூர். தைப்பூசத்தன்றுதான் நடத்த இருந்தோம். காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டார்கள். விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி தருகிறார்கள்... எங்களுக்குத் தர மறுக்கிறார்கள்.

வரும் பிப்ரவரி 11-ம் தேதியன்று கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலையிலிருந்து வேல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருச்செந்தூரை வந்தடையும். அண்ணன் அறிவுமதி அதைத் தொடங்கிவைக்கிறார். அவர் 'முருகன் என் முப்பாட்டன்' என்று ஆய்வு செய்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதன் வெளியீடு நடைபெற இருக்கிறது. அதோடு காவடியாட்டம், மானாட்டம், மயிலாட்டம்,ஒயிலாட்டம், சிலம்பாட்டமும் நடைபெறும்."

"உங்கள் வீட்டில் உள்ள குடில் பற்றி..."

"ஆம், என் வீட்டில் நான்கு ஆண்டுகளாக இந்தத் திருமுருகன் குடில் இருக்கிறது. அதில், பன்னீர், மோர் எல்லாம் இருக்கும். வருவோர் போவோர் என எல்லோருமே மோர் அருந்துவார்கள். தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று தேன், தினைப்பொங்கல் , தேங்காய்ச்சில், மா, பலா, வாழை போன்றவற்றை அனைவருக்கும் வழங்கினோம்."

" `நாம் தமிழர் கட்சியிலிருக்கும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்களா... என்ன சொல்கிறார்கள்?"

"இஸ்லாமியர்களாக, கிறிஸ்துவர்களாக இருப்பதற்கும், `முருகன் எங்கள் மூதாதையர்’ என்று ஏற்றுக்கொள்வதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. `வீரத்தமிழர் முன்னணி’யின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அலாவுதீன் இஸ்லாமியர்தான். `வீரத்தமிழர் முன்னணி’யிலேயே ஏராளமான இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற தம்பிகள், கிறிஸ்துவத்தைப் பின்பற்றும் தம்பிகள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் புரிந்ததால்தான் எங்கள்கூட இருக்கிறார்கள். அவர்களைத் திருநீறு பூசச் சொல்லி யாரும் வற்புறுத்துவதில்லை."

"முருகனை வழிபடும்போதும், வேல் ஊர்வலத்தின்போதும் கலந்துகொள்கிறார்களா?"

"பட்டை அடித்து முருகனைக் கண்டிப்பாக வழிபட வேண்டும் என்று நாங்கள் யாரையும் வற்புறுத்துவதில்லை. இதிலெல்லாமல் கலந்துகொண்டால்தான் கட்சியில் இருக்க முடியும் என்கிற எந்த விதியும் இல்லை. அவர்களாக விருப்பப்பட்டு கலந்துகொள்கிறார்கள்."

"இதுபோன்ற செயல்பாடுகள் இந்துத்துவத்துக்கு வலு சேர்க்கும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே..."

"வேண்டுமென்றே வைக்கப்படும் விமர்சனம் அது. முருகனை எங்கள் மூதாதை என்றுதான் சொல்கிறோம். இந்து என்ற மதம் எப்போது வந்தது? கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பாக இந்து என்பது தமிழர்களின் மீது திட்டமிட்டுத் திணிக்கப்பட்ட ஒன்று. நாங்கள் சைவர்களாக, வைணவர்களாக, சமணர்களாக, பௌத்தர்களாகத்தான் இருந்தோம். எங்களுடைய மாயோன்தான் கிருஷ்ணராக வழிபடப்படுகிறார். எங்களுடைய சிவன்தான் பரமேஸ்வரனாக வழிபடப்படுகிறார். எங்களுடைய கொற்றவையைத்தான் பார்வதியாக வழிபடுகிறார்கள். எங்கள் வழிபாடுகளைஆரியர்கள் எடுத்துக்கொண்டார்கள். திராவிடர்கள் தடுத்து, கெடுத்தார்கள். "

"கோயில்களில் எல்லாம் சம்ஸ்கிருதத்தில்தானே வழிபாடு செய்யப்படுகிறது?"

"குலதெய்வக் கோயில்களில் உள்ள பூசாரிகளுக்குக்கூட தற்போது சம்ஸ்கிருத மந்திரத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இது போன்ற விழாக்களை முன்னெடுக்கிறோம். கண்டிப்பாக ஒருநாள் அனைத்துக் கோயில்களிலும் தமிழில் மட்டுமே பூஜை செய்யப்படும். அதற்கான முயற்சிகளைத்தான் நாங்கள் செய்துவருகிறோம்.

`பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது’ என்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சொல்கிறார். அவரின் கருத்துகளையே நாங்கள் `வீரத்தமிழர் முன்னணி’யின் முழக்கமாக வைத்து முன்னெடுத்துவருகிறோம்."