Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்

முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்

பிறந்தவேளையில் (லக்னம்) - 12 கட்டங் களில் ஒருவனது பிறப்பில் கிடைக்கவேண்டிய அத்தனை விஷயங்களையும் வரையறுத்து சுட்டிக்காட்டிவிடும் ஜோதிடம்.

லக்னத்தில் அவனது தரம் மற்றும் தகுதி, 2-ல் பொருளாதார அளவு, குடும்ப சுகம், 3-ல் உடன்பிறப்பு, நண்பர்கள் ஒத்துழைப்பு, 4-ல் பிறந்த வீட்டிலிருந்து கிடைக்கும் ஆதாயம், வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்ச்சியின் அளவு, 5-ல் சிந்தனை வளம், குழந்தைச் செல்வம், முற்பிறவியில் சேமித்த புண்ணியத்தின் அளவு, 6-ல் பகைவர்கள், பிணி, வாழ்க்கையில் சந்திக்கும் எதிர்ப்புகள், 7-ல் மனைவி, சேமிக்கும் பொருளின் அளவு, 8-ல் ஆயுளின் அளவு, மரண பீதி, எதிர்பாராத இடையூறுகள், 9-ல் எதிர்பாராமல் கிடைக்கும் வெகுமதிகள் பொருளாதாரத்தின் செழிப்பு,இன்பத்தைச் சுவைக்கும் அனுபவம், பெரியோர்களது ஒத்துழைப்பு, 10-ல் வேலையின் தரம், தொழிலில் செழிப்பு, வாழ்வில் நிறைவை எட்டவைக்கும் பொருளாதாரத்தின் அளவு, 11-ல் வாழ்வில் எல்லா விஷயங்களிலும் கிடைக்கும் லாபம், 12-ல்  பொருளாதாரம், பெருமை முதலானவற்றில் வாழ்வில் ஏற்படும் இழப்புகள், எல்லாம் இருந்தும் அனுபவத்துக்கு இலக்காகாமல் போகும் நிலை... இப்படி, வாழ்க்கைப் பயணத்தைச் செழிப் பாக்கும் விஷயங்களில் கிடைக்கும் பலாபலன்களின் அளவை வரையறுத்துக் கூறும். அதேபோல் முற்பிறவி, இந்த பிறவி, வரும் பிறவி மூன்றையும் வரையறுக்கும்.

முன்னோர்கள் சொன்னார்கள்

முற்பிறவியின் புண்ணிய பாவங்கள் இந்தப் பிறவியில் அனுபவத்துக்கு வரும். இப்பிறவியில் செய்த நல்லதும் தீமையும் அடுத்து வரும் பிறவியின் தரத்தையும், இன்ப-துன்பங்களையும் சுட்டிக்காட்டும். இப்படி, மூன்று பிறவி பலன்களையும் ஜாதகம் வெளியிடும். முற்பிறவிகளில் சேமித்த புண்ணிய - பாவங்கள் (நல்லது - கெட்டது போன்றவை) நடப்பு பிறவியில் அனுபவத்துக்கு வரும் என்கிறது ஜோதிடம் (யதுபசிதமன்யஜன்மனி...). நடப்புப் பிறவியில் சேமித்த நல்லது கெட்டவை அடுத்த பிறவியில் அனுபவத்துக்கு வரும் என்றும் சொல்லும். ஒரு மனிதனின் பிறப்புக்குக் காரணம், அவனது முற்பிறவி பலனை அனுபவிப்பதற்காக ஏற்பட்டது என்று சொல்லும். ஜாதகத்தில் லக்னத்திலிருந்து பன்னிரண்டு கட்டங்களில் அமர்ந்த கிரகங்கள் அவனது முற்பிறவி அனுபவத்தைச் சுட்டிக் காட்டும் நிலையில் அமைந் திருக்கும். பிறந்தவன் தனது வாழ்க்கையில் சந்திக்கும் அத்தனை விஷயங்களையும் கட்டங்களில் அமைந்த கிரகங்கள் நிர்ணயித்துவிடும். அவனது சிந்தனை வளமும் முற்பிறவி புண்ணிய-பாவங்களை அனுபவிக்கும் வழியில் செயல்படும் (புத்தி: கர்மானுஸாரிணீ).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னோர்கள் சொன்னார்கள்

‘ஜோதிடம் பொய்; நாம் நமது சிந்தனை வளத்தால் இன்னல்களை அகற்றி மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை சுவைத்து மகிழலாம்’ என்பதெல்லாம் அலங்கார வார்த்தை. தனது முற்பிறவி புண்ணிய-பாவங்களின் பலனை ஏற்று சுவைக்கும் வகையிலேயே, மனிதன் ஒருவனது சிந்தனை வளம் செயல்படும். அதை எதிர்க்கும் வகையில் சிந்தனை வளம் திசை திரும்பாது. ‘ஜோதிடத்தில் கூறப்பட்ட பலனை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றேன்’ என்கிற நிலை ஒரு நாளும் உருவாகாது.

கூட்டு சேர்ந்த கட்சியில் ஒருவர் வெற்றி பெற்றார். கூட்டு அரசியலில் அவர் ஒருவருக்கு மந்திரி பதவி கிடைத்தது. அவர் சார்ந்திருக்கும் அந்தக் கட்சிக்கு இதுவரை சரித்திரம் எதுவும் இல்லை. மந்திரி பதவிக்குப் பிறகுதான் அதன் சரித்திரம் ஆரம்பமாகிறது. இந்த முயற்சி வெற்றிபெற அவரது பூர்வ புண்ணியம் (முன் ஜன்மத்தில் சேமித்த நல்லவை) அவருக்கு அனுபவத்துக்கு வந்தது. அவரது சிந்தனை வளம் கூட்டு சேர ஒத்துழைத்தது. ஆனால், மந்திரி பதவி அவர் எதிர்பார்த்ததல்ல. தற்செயலாக ஏற்பட்டது. அதேபோல், நூறு பேர் வெற்றி பெற்றும் எல்லோரும் எதிர்க்கட்சியில் அமரும் நிலையும் உண்டு. இங்கு மந்திரி பதவி எதிர்பார்த்து சிந்தனை வளம் செயல்பட்டது. ஆனால், பலனை உணர முடியவில்லை.  ஜாதகப்படி எதை அடைய முடியுமோ அதற்கு உகந்த வகையில் சிந்தனை வளம் செயல்படும்.

முன்னோர்கள் சொன்னார்கள்

படித்துப் பட்டம் பெற்றவன் வேலையின்றி ஏழ்மையைத் தழுவுகிறான். படிக்காதவன் அமைச்சராகி பெரும் செல்வந்தனாகத் திகழ்கிறான். எல்லாம் இருந்தும் குழந்தையின்மை யில் தவிக்கிறான் ஒருவன். காதலித்துத் திருமணத்தில் இணைந்து பின்னர் விவாகரத்தில் திருமண பந்தம் முடிவடைந்தவர்களும் ஏராளம் உண்டு. முற்பிறவி கர்மவினையின்படி விவாகரத்தைச் சந்திக்கவைக்க ஏதுவாக காதலிலும் திருமணத்திலும் அவனது சிந்தனை வளம் செயல்பட்டது எனலாம். ஆக, சிந்தனை வளம் கர்மவினையின் முடிவுக்கு உகந்தபடி செயல்படும்.

ஜோதிடம் பொய்யென்று சொல்பவர்கள் ஆராய்ந்து சொல்லவில்லை. ஜோதிடர்களில் ஏற்பட்ட காழ்ப்பு உணர்ச்சி, ஜோதிடத்தை எதிர்க்கும் சிந்தனையை ஊக்குவித்தது. சிந்தனையாளர்களின் மதிப்பீடுகள் அற்பாயுளுடன் முடிவதற்குக் காரணம் அவர்களது கர்மவினையே. மேல்தட்டு மக்கள் மேலும் மேலும் எதிர்ப்பைச் சந்தித்துத் துவண்டு போனாலும், அவர்களது இயல்பும் நாகரிகமும் குன்றாமல் இருப்பது உண்டு. அடித்தட்டு மக்கள் வானளாவ உயர்ந்தாலும் அவர்கள் இயல்பும் தரமும் மாறாமல் இருப்பது உண்டு. இங்கெல்லாம் அவர்களது பூர்வஜன்ம கர்மவினையைக் காரணமாக சொல்ல வேண்டிய கட்டாயம் உண்டு. உழைப்பில்லாமல் ஊதியம் பெற்று வாழ்பவர்களும் உண்டு. உழைத்து உழைத்து ஊதியம் கிடைத்தும் வாழ்க்கை பாலைவனமாக மாறுவதும் உண்டு. ரிஷிகள் பரிந்துரைத்த ஜோதிடம் எப்போதும் தப்புவது இல்லை.

பிறந்தவேளை (லக்னம்) அவனது வாழ்நாளின் வரைபடத்தை அளித்துவிடும். உடலின் இலக்கண அமைப்பு சுகாதாரம், உடல் வலிமை, அவனது முன்னேற்றம், புகழ், மகிழ்ச்சி இணைந்த அலுவல்களில் வெற்றி ஆகிய அத்தனையையும் அவன் பிறந்த லக்னம் சுட்டிக்காட்டிவிடும் என்கிறது ஜோதிடம் (தேஹஸ்ய ஸெளஷ்டவம்...). லக்னத்துக்கு உடையவன் - பன்னிரண்டு கட்டத்தில் எந்தக் கட்டத்தில் லக்னம் (பிறந்தவேளை) வந்தாலும், அதற்கு உடையவன் (அவன் சுப கிரகமானாலும் பாப கிரகமானாலும்) உயர்ந்த தரத்தில் தென்பட்டால், அவன் வாழ்வில் வெற்றி பெறுவான் என்கிறது ஜோதிடம் (லக்னே சேகேந்திர கோணே....). லக்னாதிபதி (பிறந்தவேளை) அமைந்த ராசியின் அதிபதி, லக்னம், முதல் வீடு, 4, 7, 10 ஆகிய வீடுகளில் அமைந்திருக்க வேண்டும். அல்லது லக்னம் (1), 5, 9-ம் வீடுகளில் அமைந்திருக்க வேண்டும். அதாவது லக்னத்துக்கு உடையவன் 1, 4, 5, 7, 9, 10 ஆகியவற்றில் ஏதாவது ஓரிடத்தில் இருக்க வேண்டும். அல்லது அவனது உச்ச வீடு அல்லது அந்த வீட்டின் அதிபதியாக இருக்கும் பெருமை பெற்றவனாகவும் (ஸ்வக்ஷேத்திரம்) அமைந்து இருக்க வேண்டும். அதே வேளையில், 8-க்கு உடையவன் லக்னத்தின் கேந்திரத்தில் அமையாமலும் இருக்க வேண்டும். அதாவது 8-க்கு உடையவன் லக்னம் (1), 4, 7, 10 ஆகிய வீடுகளில் தென்படாமல் இருக்க வேண்டும். லக்னத்துக்கு சுப கிரகச் சேர்க்கை, அல்லது பார்வை இருக்க வேண்டும். இப்படி அமைந்தால் அவனது வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். உடல் வளம் அமைப்பு, ஆரோக்கியம், புகழ், மகிழ்ச்சி ஆகியன நிறைவாக அமையும்.

முன்னோர்கள் சொன்னார்கள்

உலக சுகபோகங்கள் எல்லோருக்கும் பொது. அவற்றை அடைந்து மகிழும் தகுதி பிறந்தவனிடம் இருக்க வேண்டும்.அதை விளக்குகிறது லக்னம். இங்கு இரு விஷயங்கள் ஆராயப்படுகின்றன. ஒன்று லக்னத்தின் தகுதி நிர்ணயம். மற்றொன்று அந்தத் தகுதியை இழக்கவைக்கும் 8-ம் வீட்டு அதிபதி உடையவனின் குறுக்கீடு. லக்னத்துக்கு உடையவன் அதன் கேந்திரத்திலோ (1,4,7,10 வீடுகள்), த்ரிகோணத்திலோ (1,5,9 வீடுகள்) அமைந்திருப்பது, வாழ்க்கைக்குத் தேவையானவற்றை எந்த இடையூறும் இல்லாமல் அடையும் தகுதியை உறுதி செய்கிறது. அதை நிரந்தரமாக்க லக்னத்துக்கு சுபகிரகச் சேர்க்கை அல்லது பார்வை ஒத்துழைக்கிறது. 8-க்கு உடையவனின் இடையூறு இல்லை என்பதால், பலனை அனுபவிப்பது உறுதியாகிவிட்டது. 8-க்கு உடையவன் கேந்திரத்திலோ, த்ரிகோணத்திலோ (1,4,7,10,1,5,9) அமைந்தால் மகிழ்ச்சிக்கு இடையூறு இருக்கும். அதுவும் விலகியதால் எதிர்பார்த்த பலன் நிச்சயம் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையை உறுதி செய்கிறது.

அறத்தில் பற்று, குலத்தில் உயர்வு, பிறருக்கு உதவும் பாங்கு, ஏழைகளிடம் இரக்கம், எதிர்பார்ப்பு இல்லாத மனம், கிடைத்ததில் சந்தோஷப்படும் இயல்பு, எல்லோருடனும் கலந்து பகிர்ந்து உண்ணும் பக்குவம், அடக்கம், பொறுமை, பெருந்தன்மை ஆகிய அத்தனையும் அவனிடம் இருக்கும் என்கிறது ஜோதிடம். எதிர்பாராமல் ஏற்படும் இன்னல்களின் தாக்கம் அவனை நிலைகுலைய வைக்காது. பொறுமையும் பெருந்தன்மையும், அடக்கமும் மிகுந்திருக்கும்; இன்னலை எளிதில் வென்று மகிழ்ச்சியை சுவைப்பான் என்றும் விளக்கும் ஜோதிடம்.

லக்னத்துக்கு உடையவன், அவனது உச்ச வீட்டில் அம்சகத்தில் இருக்க வேண்டும். அல்லது லக்னாதிபனின் அம்சகம் ஸ்வக்ஷேத்திரத்திலோ, பந்துக்ஷேத்திரத்திலோ (அதாவது தனது வீட்டிலோ பந்து வீட்டிலோ) அமைய வேண்டும். இது, அவனது ஆரோக்கியம் நிரந்தரமாக இருக்கும். உடல் வளம், அதன் வலிவு நுகர் பொருளை அனுபவிக்கும் தகுதியை சுட்டிக்காட்டும். இதுவும் லக்னத்தின் தகுதியை வரையறுக்கிறது. குறிப்பாக உடல் வளத்தை உறுதி செய்கிறது.

லக்னாதிபன் அம்சகத்தில் உச்சம் பெற்று இருப்பது, தனது நவாம்சகத்தில் இருப்பது, பந்து கிரகத்தோடு இணைந்து இருப்பது, கேந்திராதிபதிகளோடு சேர்ந்து இருப்பது, அதாவது லக்னம் (1), நான்காம் வீடு அதிபதி, 7-ம் வீட்டின் அதிபதி, 10-ம் வீட்டின்  அதிபதி இவர்களோடு இணைந்திருப்பது... இந்த  அமைப்பும் பலனை உணரும் தகுதி முழுமையாக இருப்பதை ஊர்ஜிதம் செய்யும். எதிர்பாராமல் நல்லவை தானே வந்து அடையும்; புகழ் தேடி வரும்; நீண்ட ஆயுள் இருக்கும்; வாழ்க்கையும் இனிக்கும் என்று சொல்லும் ஜோதிடம் (லக்னாதி போதிபலவான்...).

இங்கு லக்னத்துக்கு உடையவனின் தகுதியை வரையறுக்க மாற்றுக்கோணங்களில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஒன்று, லக்னத்திற்கு உடையவன் 1,4,5,7,9,10 இந்த வீடுகளில் இடம் பிடித்திருக்க வேண்டும். அந்த லக்னத்தில் சுப கிரகம் இணைந்து இருக்க வேண்டும். அல்லது சுப கிரகத்தின் பார்வைப்பட வேண்டும்.

இரண்டு, லக்னத்துக்கு உடையவன் அம்சகத்தில் உச்ச வீட்டிலோ, பந்து வீட்டிலோ, தனது வீட்டிலோ, சுப கிரகங்களோடு இணைந்தோ, பார்வை பெற்றோ இருக்க வேண்டும்.
மூன்று லக்னாதிபதி உச்சம் பெற்று இருக்க வேண்டும். பந்து கிரகத்தோடு இணைந்து இருக்க வேண்டும். அல்லது தனது நவாம்சத்தில் இருக்கவேண்டும். அல்லது 1,4,7,10 இந்த வீடுகளின் அதிபதிகளோடு இணைந்து இருக்க வேண்டும்.
 
இந்த மூன்று நிலைகளில் பிறந்தவன் புகழோடும் மகிழ்ச்சியோடும் விளங்க வழி வகுக்கும். இதில் ஏதாவது ஒன்றில் இருந்தால், லக்னாதிபதி தனது தகுதியைப் பெற்றிருக்கிறான் என்று பொருள். தகுதி இல்லாதவனுக்கு பலனை ஒட்டவைத்தாலும், அனுபவம் இருக்காது. தகுதி இருப்பவனுக்கு, குறைந்த பலனும் நிறைவாகத் தோன்றிவிடும். கிரகங்களுடைய அமைப்பை வைத்து பல ராஜ யோகங்களை விளக்கும் ஜோதிடம், கெட்ட யோகங்களையும் சுட்டிக்காட்டும். அவை எல்லாம் நடைமுறைக்கு வர வேண்டும் எனில் லக்னாதிபதியின் (பிறந்தவனின்) தகுதி, அதாவது உணரும் தகுதி முழுமையாக இருக்கவேண்டும்.

முன்னோர்கள் சொன்னார்கள்

அறுசுவைகள் நன்றாக இருந்தால் போதாது. சுவைப்பவனின் தரம் அதை உணர உதவும். கிரகங்களுடைய அமைப்பில் சொல்லப்படும் யோகங்களை மட்டும் சுட்டிக்காட்டி, அவை அவனுக்கு அனுபவத்துக்கு வரும் என்று சொல்ல இயலாது. பிறந்தவனின் தகுதியை உறுதி செய்த பிறகு சொல்ல வேண்டும். ஜுரத்தில் ஆழ்ந்தவனுக்கு இனிப்பும் கசக்கும்; விஷம் தீண்டியவனுக்கு கசப்பும் இனிக்கும். கட்டத்தில் கிரகங்களைப் பார்த்து யோக ஜாதகம் என்று சொல்லி, பல ஜாதகங்களை இணைக்க சிபாரிசு செய்பவர்களாக ஜோதிட பிரபலங்கள் உருவாகக்கூடாது. எந்த யோகம் தென்பட்டாலும் அதை ஏற்று மகிழும் தகுதியானது லக்னாதிபதிக்கு இருந்தால் மட்டுமே யோகம் நடைமுறைக்கு வரும். யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள் உண்டு. அது, அதை உணரும் தகுதி இருப்பவனோடு சேரும்போது யோகமாகிறது. தகுதி உள்ளவனோடு இணைவது யோகமாகும் (சேர்க்கை). அதை அலட்சியப்படுத்தி, சந்திர கேந்திரத்தில் தென்படும் குருவை வைத்து (சந்திரன் இருக்குமிடம் 1,4,7,10), இவை பிறந்தவனோடு இணையுமா என்று பார்க்காமல், கஜகேசரி யோகம் இருக்கிறது அரசன் போல் பொருளாதாரத்தில் செழிப்புற்று வாழ்வான்... இவனுக்கு நீசபங்கராஜயோகம் இருக்கிறது பெருமையுடன் வாழ்வான்... இவனுக்கு காலசர்ப்ப யோகம் இருக்கிறது விளங்க மாட்டான் என்று பலன் சொல்வதெல்லாம் ஒருதலைப்பட்சமானது. பிறந்தவனின் தகுதியை (லக்னாதிபதி) ஆராயாமல், எந்த யோகமும் நடைமுறைக்கு வராது.

- தொடரும்...